Wednesday, December 14, 2011

நண்பனே… என் நண்பனே…



உலகப்பந்தெங்கும்
உருண்டு  கொண்டிருந்தாலும்
கண்டம் விட்டு பல கண்டம்
பறந்து கொண்டிருந்தாலும்
ஏற்றம் இறக்கம்
எத்தனை நான் கண்டாலும்...

என் நண்பனே….

வாழ்வின்
பல தருணங்களில்
நீ என்னை
வாழ்த்தும் போதெல்லாம்
வருத்தப்படவைக்கிறாய்...

நான் உன்னை எப்போதும்
வாழ்த்தியதில்லையென….


சூழ்நிலைகள் என்னை
சுற்ற விட்டிருக்கலாம்...
சுகதுக்கங்களில் நான்
சுழன்றிருக்கலாம்…

அல்லது

என் நண்பனே….

சுத்தமாக உன்னை 
நான் மறந்து கூட
போயிருக்கலாம்….


எது எப்படி ஆனாலும்
என் வாழ்வில் வந்த
ஓராயிரம் உறவுகளில்
ஒன்றாய்
உன்னை நான்
நினைத்திருந்தாலும்….


நண்பனே… என் நண்பனே…

உன் உடலொட்டிய
உயிராய்தான்
என்னை நினைக்கிறாய்…
உணர்வால் நனைக்கிறாய்…

Wednesday, December 07, 2011

சிங்கப்பூர் சாங்கி விமானநிலையம்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் பல திரைப்படங்களிலும் பார்த்து வியந்திருக்கிறோம்.  பரந்து விரிந்திருந்தாலும் அதன் சுத்தமும்,  பராமரிப்பும், பாதுகாப்பும் உலக அளவில் பாராட்டப்படுபவை. விழாக்காலங்களில் செய்யப்படும் விதவிதமான அலங்காரங்கள் கண்ணையும், கருத்தையும் கவரக்கூடியவை.

நமது நாட்டு விமானநிலையங்களில் வழியனுப்பச் செல்பவர்கள் விமானநிலைய வாசல் வரைதான் செல்லமுடியும். உள்ளே செல்ல தனியாக கட்டணம் செலுத்தினாலும் குறிப்பிட்ட தூரம் மட்டுமே செல்ல முடியும். பயணம் செய்பவர்கள் கொண்டு சென்ற பொருட்கள் எடை சரியாக இருந்ததா, பாஸ்போர்ட், டிக்கெட் மற்றும் விசாவில் பிரச்சினையில்லாமல்  குடியுரிமை சோதனை முடிந்ததா என பலவிதமான குழப்பங்களோடு வழியனுப்பச் சென்ற குடும்பத்தார் காத்திருப்பது மிகவும் கொடுமையானது. பயணம் செல்பவர்களும் எல்லா சோதனைகளும் முடிந்து  உள்ளே சென்று அதிகபடசமாக இரண்டு மணி நேரம் வரையாவது வெட்டியாக, வேண்டாத யோசனைகளோடு காத்திருக்க வேண்டியிருக்கும்.

ஆனால் சிங்கப்பூரிலோ பயணம் செய்பவர்களோடு வழியனுப்பச்  செல்பவர்கள்  விமானம் புறப்படும் பகுதியைத் தவிர விமானநிலையம் முழுதும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். புகைப்படங்கள் எடுக்கலாம். பயணம் செய்பவர்களும் நண்பர்கள், உறவினர்களோடு கலகலப்பாக பேசிக்கொண்டே பாஸ்போர்ட், டிக்கெட், விசா  குடியுரிமை சோதனைப் பகுதிகளை கடக்கலாம். எல்லா சோதனைகளும் முடிந்தபின் விமானம் புறப்படும் அறிவிப்பு வரும்வரை உணவகம் சென்று உரையாடிக் கொண்டிருக்கலாம். அடுத்தவரை தொந்திரவு செய்யாதவரை எந்த விதமான இடர்பாடும் இருக்காது.

இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக இந்தியா சென்ற பழைய நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக கடந்த வாரம் சாங்கி விமானநிலையத்தின் டெர்மினல் 2 சென்றபோது  ஆங்கிலப்புத்தாண்டிற்காக செய்யப்பட்டிருந்த அலங்காரங்களும், வண்ண ஒளி விளக்குகளும் மிகவும் கவர்ந்தன. அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. புகைப்படங்களில் நானும், நண்பர் கணேஷும்...

மாய மான்கள்..... மயக்கும் மான்கள்


நுணுக்கமான மின் அலங்காரத்தில் உயிர் பெற்று
உயரம் துள்ளும் ஒளி மான்கள்



பகட்டான பசுமைக்குடில்... பக்கத்தில் ஒய்யார அலங்காரங்கள்....


பகட்டான பசுமைக்குடில்...



சுற்றி வந்து சுண்டி இழுக்கும் சுறா மீன் அலங்காரம்...

பளபளப்பான பலூன் அலங்காரம்...







Tuesday, November 15, 2011

பால் காய்ச்சும்.... பதிவர் சந்திப்பும்...

திடீரென முடிவு செய்தாலும் திருப்தியாக முடிந்த புதுமனை புகுவிழாவின் சில  புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...

விழா தினத்தன்று காலை வண்ண ஒளி விளக்குகள், அலங்காரப் பந்தல், பூ மாலை மற்றும் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வசந்த வீடு



கணபதி ஹோமம் ஏற்பாடுகள்



பூஜை முடிந்து ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம்


புதுப்பானையில்  தேங்காய் உடைப்பு


புதுப்பானையில் பால் விடும்  ராஜாவும், பூஜாவும்


வாழ்வெல்லாம் வளம் பொங்க வாழ்த்தி பால் விடும் எனது தாயும், தந்தையும்


 உற்றார்,உறவினர்களும், நண்பர்களும்  விழாவிற்கு வருகை தந்து வாழ்த்த மகிழ்ச்சியுடன்  இனிதே நிறைவடைந்தது.


விழாவிற்கு வரமுடியாத பதிவுலக நண்பர்கள் நேரில் சந்திக்க  வேண்டுமென்று  திரு.அ.ரா.சங்கரலிங்கம் மூலம் அன்பு அழைப்பு விடுக்க துணைவியாரோடு சென்று அனைவரையும் சந்தித்து வந்தேன்.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டல் ஜன்னத்தில் அருமையான சந்திப்பு.அன்றுதான் முதல்முறை சந்தித்தாலும் பலநாள் பிரிந்த உறவுகளை சந்தித்தது போன்ற உணர்வு. இரண்டரை மணி நேரம் போனதே தெரியவில்லை.

சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே பல துறைகளில் பிரகாசிப்பவர்கள் என்றாலும் நேரம் ஒதுக்கி சந்திப்பிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியையும்,நெகிழ்ச்சியையும் ஒருங்கே தந்தது.

சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்த அன்பு உள்ளங்கள்
திரு.ராமலிங்கம்
திரு. காளிமுத்து
ஹோட்டல் ஜன்னத் அதிபர் திரு.திவான்

நான், எனது துணைவி

ஆக மொத்தம் பன்னிரெண்டு பேர்.


திரு.ராமலிங்கம், உயர்திரு. சகாதேவன் ஐயா, திரு.ஜோதிராஜ்


அன்பும்,பண்பும், பாசமும், பணிவும் நிறைந்த திரு.ஞானேந்திரன்


மேலதிகப் படங்களுக்கும், தகவல்களுக்கும் திரு.அ.ரா.சங்கரலிங்கம் மற்றும் திரு.கே.ஆர்.விஜயன்  இருவர் பதிவுகளையும் பாருங்கள்.

நன்றி. வணக்கம்.

Tuesday, October 25, 2011

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.



           சிங்கப்பூரில் கொண்டாடிய தீபாவளி விருந்தின் சில படங்கள்                உங்கள் பார்வைக்கு....


         இலை எல்லோருக்கும் போட்டாச்சா... 



நம்ம வேகத்துக்கு சப்ளை இல்லையே....


நம்ம ரெண்டு பேரும் சாப்பிட்டு... சாப்பிட்டு விளையாடுவோமா....


எப்பா...பேரர்... எல்லா தட்டும் காலி...

 


இன்னும் ஏதாவது வருதா.....


சாப்பிட்டு முடிச்ச பிறகு குரூப் போட்டோ எடுத்தா தொப்பை தெரியாம இருக்க எப்படியெல்லாம் தம் கட்ட வேண்டியிருக்கு....


 விருந்துக்கு பின் ஒரு விளையாட்டு....


விருந்துக்குப் பின் எல்லோரும் வித்தியாசமாய் போட்டோ எடுக்க இடம் தேடித் திரிய.... அம்மையப்பனே உலகம்... உலகமே அம்மையப்பன்...  என    ஓரமாய் கிடந்த சோபாவில் ஒய்யாரமாய் அமர்ந்து எடுத்த                     மங்காத்தா போஸ் படங்கள்...

 


 
இன்று இரவு சிங்கப்பூரில் இருந்து கிளம்பி திருவனந்தபுரம் வந்து நாளை தீபாவளி காலை வீட்டை அடையுமாறு பயணத்திட்டம்.


நன்றி. வணக்கம்.

Saturday, October 22, 2011

புதுமனை புகுவிழா அழைப்பிதழ்...



அன்புடையீர்,
வணக்கம்.
நலம். நலமறிய அவா.
வீட்டைக் கட்டிப் பார். கல்யாணம் பண்ணி பார் என்பது முதுமொழி. கல்யாணம் செய்து விட்டு பெருமுயற்சியால் வீட்டைக் கட்டியுள்ளேன். தங்களையும், குடும்பத்தார், உற்றார், உறவினர், சுற்றார் அனைவரையும் நவம்பர் மாதம் இரண்டாம் நாள் புதன்கிழமை ( 02.11.2011 ) திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி, மருதம் நகரில் அடியேன் கட்டியுள்ள இல்லத்தின் புதுமனை புகுவிழாவிற்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நன்றி.வணக்கம்.
அன்பன் 
(துபாய்) ராஜா
&
குடும்பத்தார்



புகைப்படத்தில் உள்ள வீடு பழைய குற்றாலம் செல்லும் பாதையில் உள்ளது. நண்பர் பலாபட்டறை ஷங்கரோடு சென்றபோது எடுத்தது. நான் தற்போது கட்டி விழா நடக்க இருக்கும் வீடும் இதுபோன்றுதான்.

Wednesday, October 19, 2011

வெளிநாட்டு வேலைக்கு செல்லுபவர்களே...

சிங்கப்பூர் அரசாங்க விதிமுறைப்படி  மேலாளர் பணி முதல் அடிமட்ட ஊழியர் வரை பணிக்காக வரும் அனைவரும் மனிதவள மேம்பாட்டு துறையால் நடத்தப்படும் பணியிடப் பாதுகாப்பு குறித்த கட்டாய வகுப்புகளில் சேர்ந்து, படித்து, தேர்வு பெற்றால் மட்டுமே பணிக்கு சேரமுடியும். அந்த வகுப்புகளுக்கு சென்றிருந்த போது சந்தித்த பலரின் கதையும் மிக உருக்கமானது.



ஏஜெண்டுகளை நம்பி ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை கொடுத்து  இவர்கள் வருவது இருப்பதிலே கடைமட்ட ஊழியர் பணி ஆகும். அதற்கான  சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக ஒன்று  முதல் ஒன்றரை  சிங்கப்பூர் டாலர் பணமாகும்.  எட்டு மணி நேர வேலைக்கு ஒரு நாள்  சம்பளம் சராசரியாக  பத்து சிங்கப்பூர் டாலர்.  எட்டு மணி  நேரத்திற்கு  மேல்  செய்யும் பணிக்கு ஒன்றரை மடங்கு, விடுமுறை நாள் பணிக்கு இரண்டு மடங்கு சம்பளம் என்பதால் ஏஜெண்டுகளிடம் 
கொடுத்த பணத்தை எடுப்பதற்காக உண்ணாமல், உறங்காமல் உயிரை கொடுத்து உழைப்பவர்கள் ஏராளம்.ஏராளம்.


நான் சென்ற வகுப்பு முடிந்து தேர்வு எழுதும் நேரம் வினாத்தாள் கொடுத்தவுடன்  விறுவிறுவென்று விடைகளை எழுதிவிட்டு நிமிர்ந்த நான் எனது அருகில் இருந்தவர் திருதிருவென்று விழித்துக் கொண்டிருப்பது கண்டு என்ன, ஏது என்று கேட்க  எழுதப்படிக்க தெரியாது என்று அவர் கூறிய பதிலால் மிக்க அதிர்ச்சியடைந்தேன். என் அதிர்ச்சிக்கு காரணம் அன்று வகுப்பில் தமிழர்கள் அதிகம் இருந்ததால் தமிழில் தான் பயிற்சி நடந்தது.வினாத்தாளும் தமிழிலேதான் இருந்தது.அன்று  வந்திருந்த வகுப்பாசிரியரும் தமிழர் என்பதால் அவரை அழைத்து விபரம் கூறினேன். இதுபோன்று அன்று பலர் வந்திருப்பதாக கூறி என்னை மேலும் அதிச்சிக்குள்ளாக்கினார் அவர்.


 எனது அருகிலிருந்த எழுதப்படிக்க தெரியாதவர்  எங்கெங்கோ கடன் வாங்கி இந்தியப்பணம் இரண்டு லட்சம் கொடுத்து அந்த பணிக்கு வந்துள்ளார். அந்த பணத்திற்கு ஊரில் ஒரு காய்கறிக்கடையோ, டீக்கடையோ, பெட்டிக்கடையோ
வைத்திருந்தால் கூட குடும்பத்தோடு நிம்மதியாக ஊரில் காலம் கழிக்கலாம்.


உலகின் 180 நாடுகளில் மூன்று கோடிக்கு மேல் இந்தியர்கள் உள்ளனர். இதில், சுமார் இரண்டு கோடி பேர் அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர். வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்பவர்கள் போலி ஏஜன்டுகளிடம் சிக்கி தவிக்கும் நிலையும், படிக்கச் செல்லும் மாணவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதும், குடியுரிமை பெற்றுள்ள இந்தியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் முக்கியத்துவம் கிடைக்க போராட வேண்டிய நிலையும் தற்போது தலை தூக்கி வருகிறது.


இந்தியாவிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, கனடாவுக்கும், சவுதி அரேபியா, துபாய், குவைத் உட்பட வளைகுடா நாடுகளுக்கும் வேலைக்காக செல்பவர்கள், போலி ஏஜன்டுகளால் ஏமாற்றப்படுவது அதிகரித்துள்ளது. வளைகுடா நாடுகளில், பல்வேறு நகரங்களில், பல ஆயிரம் தமிழர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டு, இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகங்கள் மூலம் அவர்களின் நிலை விசாரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் உள்ளன. மத்திய அரசும் அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.


சென்ற ஆண்டு மும்பை போலி ஏஜன்டுகளை நம்பி மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற 80 பேர் அங்கு கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டு, உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில்  தமிழகம் வந்தடைந்தனர். பஞ்சாபிலிருந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு வேலைக்கு சென்ற 63 பேர் ஏமாற்றப்பட்டு தாயகம் திரும்ப வழியின்றி, ஆறு வருடங்களாக வீதிகளில் தவித்ததாகவும், அதில் ஐந்து பேர் அங்கு இறந்து போனதாகவும் தகவல்கள் வெளியாகின.


வெளிநாடுகளுக்கு அரசு மூலம் அனுப்பப்படுபவர்கள் மற்றும் படித்தவர்களுக்கு அவ்வளவாக பிரச்னையில் சிக்குவதில்லை. "எல்லாரும் வெளிநாடு போய் சம்பாதிக்கின்றனர்; நாமும் போவோம்' என்று, படிக்காதவர்கள் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையால் அங்கு என்ன சம்பளம், என்ன வேலை, பாதுகாப்பு உத்தரவாதம் பற்றிய அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்ளாமல், போலி ஏஜன்டுகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். போலி ஏஜன்டுகளிடம் ஏமாறாமல் இருக்கவும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் உள்ள கஷ்ட, நஷ்டங்கள் குறித்தும், நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் மூலம் மக்கள் மத்தியில் குறிப்பாக கிராமப்புறங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.


துபாய், சவுதி அரேபியா உட்பட 17 வெளிநாடுகளில் பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களை மீட்க, "இந்தியர்கள் நல நிதி'க்காக மத்திய அரசு நான்கு கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. இத்துடன் விழிப்புணர்வு பிரசாரத்திற்கும் சேர்த்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். விழிப்புணர்வு பிரசாரத்திற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சமூக சேவை அமைப்புகளும் உறுதுணையாக இருக்க வேண்டும். ஏமாற்றும் ஏஜன்டுகளை தண்டிக்க போதுமான அளவில் தற்போதைய சட்டத்தில் இடமில்லை. ஏமாற்றும் ஏஜன்டுகளைத் தண்டிக்க, அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளைத் தண்டிக்க, குடியேற்றச் சட்டத்தில் மாற்றம் செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள், அங்கு இனவெறி தாக்குதலுக்கு உள்ளாவதும் தொடர்கிறது.


முன்னர் வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய மாணவர்களில் 71 சதவீதம் பேர் அமெரிக்காவுக்கும், 8 சதவீதம் பேர் பிரிட்டனுக்கும், 7.6 சதவீதம் பேர் ஆஸ்திரேலியாவுக்கும் சென்றனர். அமெரிக்கா செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 56 சதவீதமாகக் குறைந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் நாடுகளுக்குச் செல்வது அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் படிப்பு உதவி வசதி, படிக்கும் போதே வேலையும் தேடிக்கொள்ளும் நிலையும் உள்ளதால், இந்தியாவைச் சேர்ந்த லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் தற்போது அங்கு படித்து வருகின்றனர்.


இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்திய மாணவர்கள் மீது கிட்டத்தட்ட இரண்டாயிரம் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. பல இடங்களில் இனவெறி தாக்குதலும் நடத்தப்பட்ட போதும் கூட, அந்நாட்டு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இனவெறி தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்திய மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்காக வழங்கப்பட்ட விசாக்களுக்கான விதிமுறைகளை அந்நாடு, கடந்த ஆண்டு  மார்ச் மாதம் முதல் மிகவும் கடுமையாக்கியுள்ளதால், அறுபது சதவீதம் இந்திய மாணவர்களின் விசா நிராகரிக்கப்பட்டுள்ளது.


வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் இந்தியர்களுக்கு, இந்தியர்களாலேயே பிரச்னை ஏற்படும் நிலையும் தலை தூக்கியுள்ளது. மலேசியாவில் இந்துக்களுக்கு சம உரிமை கோரியும், இந்து கோவில்கள் இடிக்கப்படுவதை தடுக்கவும் அங்குள்ள இந்தியர்கள் ஒன்றிணைந்து, "இன்ட்ராப்' என்ற அமைப்பு மூலம்  நான்காண்டுகளுக்கு முன் கோலாலம்பூரில் போராட்டம் நடத்தினர். இதில், 15 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 17 மாதங்கள் சிறையிலிருந்து வெளியே வந்த இன்ட்ராப் தலைவர்களின் ஒருவரான உதயகுமார், "மனித உரிமை கட்சி'யை  துவங்கினார்.


"ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இந்தியர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு குறைகளை தீர்த்து வைக்க முயற்சிக்கவில்லை. மலேசியாவில் உள்ள இந்தியர்களின் உரிமைக்காக போராடுவதே கட்சியின் வேலையாக இருக்கும்' என்று, உதயகுமார் அறிவித்தார். இது, வரவேற்கப்படக் கூடிய முடிவு என்றாலும் ஆளும் கட்சி அதிருப்தியில் உள்ளதால், இந்தியர்களின் ஒற்றுமை பலத்தை மறைமுகமாகக் குறைக்கும் நோக்கில் தனேந்திரன் தலைமையில், "மலேசிய மக்கள் சக்தி' என்ற பெயரில் புதிய கட்சியை அந்நாட்டு பிரதமர் துவங்கி வைத்துள்ளதாகவும் மக்கள் குறைபட்டுக் கொள்கின்றனர்.


பல கட்சி கூட்டணி ஆட்சி நடக்கும் மலேசியாவில், இந்தியர்கள் 20 லட்சம் பேர் உள்ளனர். இது, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8 சதவீதம். அரசியல் மூலம் தனித்து ஆட்சியைப் பிடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இந்திய வம்சாவளியினருக்கு இல்லை. ஆளும் அரசை அனுசரித்தே காரியம் சாதித்துக் கொள்ள வேண்டிய நிலையே உள்ளது. எனவே, வெளிநாடுகளுக்கு பிழைக்கச் செல்பவர்கள் எப்போதும் உஷாராக இருப்பது நல்லது.

இதே கருத்து குறித்த எனது முந்தைய பதிவுகள்....






புதிதாக வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் சம்பளம், விடுமுறைகள், தங்கும் வசதி, சாப்பாடு போன்ற வசதிகள் குறித்து நன்றாக விசாரித்தறிந்த பின் வெளிநாடு  செல்வது பற்றி சிந்தித்து, செயல்படுவதே சிறந்தது என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மையும், அறிவுரையாகும்.

நன்றி. வணக்கம்.