Showing posts with label அனுபவம் / நட்பு / சமூகம். Show all posts
Showing posts with label அனுபவம் / நட்பு / சமூகம். Show all posts

Tuesday, November 15, 2011

பால் காய்ச்சும்.... பதிவர் சந்திப்பும்...

திடீரென முடிவு செய்தாலும் திருப்தியாக முடிந்த புதுமனை புகுவிழாவின் சில  புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...

விழா தினத்தன்று காலை வண்ண ஒளி விளக்குகள், அலங்காரப் பந்தல், பூ மாலை மற்றும் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வசந்த வீடு



கணபதி ஹோமம் ஏற்பாடுகள்



பூஜை முடிந்து ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம்


புதுப்பானையில்  தேங்காய் உடைப்பு


புதுப்பானையில் பால் விடும்  ராஜாவும், பூஜாவும்


வாழ்வெல்லாம் வளம் பொங்க வாழ்த்தி பால் விடும் எனது தாயும், தந்தையும்


 உற்றார்,உறவினர்களும், நண்பர்களும்  விழாவிற்கு வருகை தந்து வாழ்த்த மகிழ்ச்சியுடன்  இனிதே நிறைவடைந்தது.


விழாவிற்கு வரமுடியாத பதிவுலக நண்பர்கள் நேரில் சந்திக்க  வேண்டுமென்று  திரு.அ.ரா.சங்கரலிங்கம் மூலம் அன்பு அழைப்பு விடுக்க துணைவியாரோடு சென்று அனைவரையும் சந்தித்து வந்தேன்.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டல் ஜன்னத்தில் அருமையான சந்திப்பு.அன்றுதான் முதல்முறை சந்தித்தாலும் பலநாள் பிரிந்த உறவுகளை சந்தித்தது போன்ற உணர்வு. இரண்டரை மணி நேரம் போனதே தெரியவில்லை.

சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே பல துறைகளில் பிரகாசிப்பவர்கள் என்றாலும் நேரம் ஒதுக்கி சந்திப்பிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியையும்,நெகிழ்ச்சியையும் ஒருங்கே தந்தது.

சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்த அன்பு உள்ளங்கள்
திரு.ராமலிங்கம்
திரு. காளிமுத்து
ஹோட்டல் ஜன்னத் அதிபர் திரு.திவான்

நான், எனது துணைவி

ஆக மொத்தம் பன்னிரெண்டு பேர்.


திரு.ராமலிங்கம், உயர்திரு. சகாதேவன் ஐயா, திரு.ஜோதிராஜ்


அன்பும்,பண்பும், பாசமும், பணிவும் நிறைந்த திரு.ஞானேந்திரன்


மேலதிகப் படங்களுக்கும், தகவல்களுக்கும் திரு.அ.ரா.சங்கரலிங்கம் மற்றும் திரு.கே.ஆர்.விஜயன்  இருவர் பதிவுகளையும் பாருங்கள்.

நன்றி. வணக்கம்.

Monday, April 19, 2010

ஆப்பிரிக்காவின் ஆச்சரியம் - எகிப்து

எகிப்து- ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்து, ஆசிய கலாச்சாரத்தோடு , அரேபிய பழக்க வழக்கங்களோடு, ஐரோப்பிய நாகரிகமும் கலந்த ஆச்சரியமான நாடு. ஆசிய , ஐரோப்பிய, ஆப்பிரிக்க கண்டங்களின் நுழைவாயிலாகவும், அரேபி பேசும் நாடுகளில் பெரியதாகவும் எகிப்து உள்ளது.


ஆப்பிரிக்காக் கண்டத்தில் இருந்தாலும் எகிப்திய மக்கள் மற்ற ஆப்பிரிக்க நாட்டு மக்களைப் போன்ற தோற்றம் இல்லாமல் நமது காஷ்மீரிகளைப் போல் சிவந்த நிறமும் , அழகு தோற்றமும் கொண்டவர்கள். நாட்டின் பெரும்பான்மைப் பகுதி பாலைவனம் என்றாலும் வற்றாத ஜீவநதியான நைல்நதியை கால்வாய்கள் மூலம் பலபகுதிகளுக்கும் கொண்டு சென்று பசுமையாக்கி உள்ளனர்.


மாவீரன் அலெக்சாண்டரால் மத்திய தரைக்கடல் கரையில் அமைக்கப்பட்ட அலெக்சாண்டிரியா நகரம் எப்போதும் குளிர்ந்த காற்று வீசும் அழகான குளுகுளு நகரமாகும். உலக அளவில் முன்னோடி மாதிரி நகரங்கள் வரிசையில் அலெக்சாண்டிரியா தனி இடம் வகிக்கிறது. இங்கு வருடத்தில் இரண்டு மாதம் மட்டுமே மிதமான கோடைக்காலம். பத்து மாதங்கள் பனிக்கால ஆடைகள் அணிந்து திரியும் மக்கள், இரண்டு மாதக் கோடையில் இரவு , பகல் எப்போதும் கடலில் குளித்து மகிழ்வர்.


புராதான பிரமிடுகள் தலைநகர் கெய்ரோ அருகிலே அமைந்திருந்தாலும், பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களும், கோயில்களும் அப்பர் எகிப்து என அழைக்கப்படும் நைல்நதிக்கரையோரம் அமைந்துள்ள அஸ்வான் மற்றும் லோக்சூரிலே உள்ளன. சுற்றுலா பிரியர்களுக்கு ஏற்ற பல இடங்கள் எகிப்தில் உள்ளன. இங்கு வரும் முன் இணையத்தில் எல்லாத் தகவல்களையும் அறிந்து பின் வந்து சுற்றி பார்த்தால் இனிமையான பயணமாக இருக்கும்.



எகிப்தின் புராதன பெயர் மஸைர் என்பதாகும். எனவே அவர்கள் மஸ்ரிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். மற்ற அரேபிய நாடுகளை விட எகிப்தில் பேசப்படும் அரேபி மிகவும் இலக்கணச் சுத்தமுடையது. மென்மையான, இனிமையான உச்சரிப்பு கொண்டது. அமீரகத்தில் இருந்தபோது அங்குள்ளவர்களின் கடினமான உச்சரிப்பால் அரேபியை முரட்டு மொழி என்றுதான் நானும் நினைத்துகொண்டிருந்தேன். ஆனால் இங்கு வந்த பிறகு எகிப்தியர்கள் பேசும் இனிமையால் கவரப்பட்டு அரேபியை கற்றறிந்து சரளமாக பேசுகிறேன்.


இந்தியர்கள் என்றால் எகிப்தியர்களுக்கு மிகவும் பிடிக்கும். காந்திஜி, நேருஜி, இந்திராஜி என நமது தேசத்தலைவர்களை பிரியமாக அழைக்கிறார்கள். லண்டனுக்கு வட்டமேஜை மாநாடு செல்லும் வழியில் காந்தியடிகள் எகிப்து வந்து சென்றதை இப்போதும் பலரும் நினைவு கூறுகிறார்கள். வல்லரசுகளின் பனிப்போருக்கு எதிராக நமது அன்றைய பிரதமர் திரு. நேருவும், எகிப்திய அதிபர் திரு.நாசரும், இந்தோனேஷிய அதிபர் திரு.சுகர்த்தோவும் இணைந்து அணி சேரா இயக்கம் ஆரம்பித்தபின் இந்தியா எகிப்திற்கு பல உதவிகள் செய்துள்ளது என்று நன்றியோடு கூறுகிறார்கள்.



 விமான நிலையத்தில் வந்து இறங்குவது முதல் நாம் இங்கு எங்கு சென்றாலும் முதல் மரியாதைதான். இந்திப்படங்கள்தான் எல்லா வீடுகளிலும் 24 மணி நேரமும் டிவி சேனல்களில் ஓடும். ஏனென்றால் நமது கலாச்சாரமும், எகிப்திய கலாச்சாரமும் ஏறக்குறைய ஒன்றுதான். அமிதாப்பச்சன் எகிப்தியர்களின் ஆதர்சன ஹீரோ. எந்த நாட்டில் நீங்கள் எகிப்தியரை சந்தித்தாலும் அமிதாப்பச்சன் பற்றி பேசாமல் இருக்கமாட்டார். எகிப்தில் அமிதாப் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்த சூப்பர் ஹீரோவாக திகழ்கிறார். இப்போதும் வார இறுதிகளில் அவர் நடித்த பழைய ஆக்சன் இந்திப் படங்களே எல்லா டி.வி. சானல்களிலும். அதிபர் தேர்தலில் நின்றால் கூட அன்னபோஸ்ட்டாக ஜெயித்துவிடுவார். ஒருமுறை அவர் எகிப்து வந்திருந்த போது ஏர்போர்ட்டிலும், வழி நெடுங்கிலும் மக்கள் அலை அலையென கூடி உற்சாக வரவேற்பு அளித்தனராம். இந்திப்படங்களில் நடித்துள்ளதால் நமது ரஜினி, கமலுக்கு கூட இங்கு ரசிகர் உண்டு.


வளைகுடா நாடுகளில் இந்தியர்களோடு வேலை பார்த்த எகிப்தியர்கள் பலரும் சரளமாக இந்தி பேசி நம்மை ஆச்சரியப்படுத்துகின்றனர். ரொட்டி போன்று பெரும்பாலும் மிக எளிமையான உணவே உண்ணுகின்றனர். எகிப்து குளிர்ந்த நாடு என்பதால் வியர்ப்பதே இல்லை. எனவே கோடைக்காலத்தை தவிர மற்ற காலங்களில் மிக குறைவாகவே நீர் அருந்துகின்றனர். குளிருக்காக எப்போதும் சூடான தேநீர் அருந்திக்கொண்டே இருப்பர். குளிர் காரணமாக பெரும்பான்மையோருக்கு சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளது. ஆண்களோடு பெண்களும் சீசா எனப்படும் ஹூக்கா புகைப்பதில் வல்லுநராக உள்ளனர்.



பெரும்பாலும் அவரவர் துணையை அவரவரே தேடிக்கொள்கின்றனர். உடன் படிப்பவர்கள், நண்பனின் சகோதரி, உறவினர்கள் என குறுகிய வட்டத்தினுள்ளே காதல் மலர்கிறது. ஆண்கள் முதலில் குறிப்பிட்ட பெண்ணின் சம்மதம் பெற்ற பின் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கின்றனர். பின் நமது நாட்டைப் போலவே மணமகன் வீட்டார் பெண் வீட்டிற்கு சென்று பேசி திருமண நிச்சயார்த்தம் செய்கின்றனர். அதன்பின் எத்தனை ஆண்டானாலும் சொந்த வீடு, வசதியான வாழ்க்கைக்கு தேவையான பணம், நல்ல வேலை, திருமணத்திற்காக மணமகளுக்கு கொடுக்க வேண்டிய பரிசுகள் ஆகியவற்றை மணமகன் சேர்த்த பின்னரே திருமணம் என்பதால் தற்போதைய காலத்தில் எகிப்தில் திருமணம் ஆகாதவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


எகிப்திய மருத்துவர்களும், கட்டுமான பொறியாளர்களும் உலக அளவில் மிகவும் புகழ் பெற்றவர்கள். அவர்களது திறமைக்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தும் பார்ப்போரை வியக்க வைக்கும் பிரமிடுகளும், பதப்படுத்தப்பட்ட உடல்களான மம்மிகளுமே சாட்சி.




அலெக்சாண்டிரியா நகரம் -
1 ,

  2

3

கட்டுமானப்பணியில் பல நாடுகள் சென்று கொண்டிருந்தாலும் கடந்து ஒன்றரை ஆண்டுகளாக இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வை தந்த எகிப்தை விட்டு பிரிவது மனதிற்கு கஷ்டமே....