Saturday, February 28, 2015

அருள்மிகு சுவாமி சங்கிலி பூதத்தார் திருவரலாறு...

அருள் சுவாமி சங்கிலி பூதத்தார் திருவரலாறு


எல்லாம் அய்யன் அருள்.

சிவ மயம். விஷ்ணு சகாயம்.

எல்லோருக்கும் வணக்கம். 

திருநெல்வேலி மாவட்டம்,  என்றும் மங்காப்புகழ் கொண்டு நல்குணமும், வளமும் பொங்கும் எங்கள் ஜமீன்சிங்கம்பட்டி சமஸ்தான பொறுப்பில் உள்ள அகத்தியர் முதலான பல சித்தர்களும் வாழும் புண்ணிய பூமியும், தென்கைலாயமும் ஆன பொதிகைமலையில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றின் மூலநதியான காரையாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு சொரிமுத்தையனார் கோயிலில் குடிகொண்டுள்ள அமிர்த பாலன், பூதராஜா, சட்டநாதன், ஷேத்திரபாலன் என்றெல்லாம் வணங்கப்படும் எங்கள் குலதெய்வம் அருள் மிகு  சங்கிலிபூதத்தார் சுவாமி திருவரலாறு குறித்த எனக்கு தெரிந்த விபரங்களை இறைவன் இட்ட ஆணைப்படி எழுத முனைந்துள்ளேன்.


அகஸ்தியர் மாந்திரிக காவியத்தில் சங்கிலி பூதத்தாரைப் பற்றியும் அவருடைய பிரணவ மந்திரத்தை பற்றியும் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

மானான மகாதேவா சங்கிலிநாதா
மாசற்ற வூஞ்சலுடக் கதிகாரிவாயே
அதிகாரி அடவிவனக் காத்தாள்வாவா
ஐங்கரனே சங்கரனே சதாசிவமேவாவா
மதியுடைய தழைமரங் காய்கனிகள்
மகத்தான புஷ்பமலர் வாடைவாவா
பதியுடைய பழிகார பூசைகொள்ளும்
பால்முகத்தில் நின்றுவிளை யாடும்பூதா
மதியுடைய வண்ணல் சங்கிலியேவாடா
மாசற்ற குலதெய்வப் பூதம்வாயே.

இவ்வாறு பக்தர்கள் மனமுருகி வேண்டி வாவென்று அழைக்க சங்கிலிபூதத்தார் வந்து ஆசிர்வதிப்பார் என்றும் தாவென்ற சப்தமுடன் சாஷ்டங்கம் அளிப்பார் என்றும் அகத்தியர் கூறுகிறார்.


கோயில் கொடைவிழாக்களின் போது படிக்கப்படும் வில்லுப்பாட்டுகளில் கேட்டவற்றையும், எனது தந்தையார் மற்றும் குடும்பப் பெரியவர்கள்   மூலம் அறிந்த விபரங்களையும் எல்லோரும் அறிய இங்கு தொகுத்துள்ளேன்.ஆதிகாலத்தில் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமிர்தத்திற்காக திருப்பாற்கடலை கடையும்போது ஆலகால விஷத்தோடு பாரிஜாத மரம், காமதேனுப் பசு மற்றும் மேலும் பல அதிசயங்களும், அற்புதங்களும் வெளியே வந்தன. அப்படி அமிர்தத்தோடு பலதரப்பட்ட விஷயங்கள் வெளிவரும் நேரத்தில் சங்கொலி முழங்க விசித்திரமான, வீரியமான பலவிதமான பூதகணங்களும், அந்த பூதகணங்களுக்கு எல்லாம் ராஜாவான சுவாமி சங்கிலி பூதத்தார் கையில் தண்டத்தை ஆயுதமாகவும், உடல் மேல் கனத்த இரும்புச்சங்கிலிகளை ஆபரணமாகவும் அணிந்தவாறு பார்த்தாலே பதற வைக்கும் பிரமாண்ட ஆங்கார,ஓங்கார உருவத்தோடும், ஆரவார சப்தத்தோடும் ஆக்ரோஷமாக, பாற்கடலில் இருந்து வெளியே வருவதைக் கண்ட தேவர்களும், அசுரர்களும் மற்ற முனிவர்கள், சித்தர்கள் அனைவரும் அஞ்சி நடுநடுங்கி ஓடிப்போய் ஒளிந்து கொண்டனர். அமிர்தத்தோடு பிறந்ததால் சங்கிலி பூதத்தாருக்கு ‘அமிர்த பாலன்’ என்றொரு பெயரும் உண்டு. கையில் குண்டாந்தடியான தண்டத்தை ஆயுதமாக ஏந்தியுள்ளதால் 'தண்டநாதன்' என்றும் கூறுவர். திருப்பாற்கடலில் பிரமாண்ட உருவத்தோடும், அனைவர் கண்ணையும் பறிக்கும் முத்து போன்ற பிரகாசத்தோடும் தோன்றியதால் 'ராக்‌சஷ முத்து' என்றும் அன்பர்களால் அழைக்கப்படுகிறார். எங்கள் தாத்தா மற்றும் பல குடும்ப உறுப்பினர்களுக்கு 'ராக்‌ஷ முத்து' என்பதே பெயராகும். சென்ற தலைமுறையில் ராக்‌ஷச முத்து என்பதை 'ராமு' என்று சுருக்கியும் பெயராக இட்டு உள்ளார்கள்.

அண்டமெல்லாம் நடுங்கச் செய்த அதிபயங்கர ஆலகாலவிஷத்தை விழுங்கி அனைத்துலக ஜீவராசிகளையும் அழிவில் இருந்து காப்பாற்றிய கைலாய நாயகரும், சித்தருக்கெல்லாம் சித்தரும்,வித்தகருக்கெல்லாம் வித்தகரும்,முக்கண் மூத்தவருமான  எம்பெருமான் சிவபெருமான் பூதகணங்களையும், பூதகணங்களுக்கெல்லாம் ராஜாவான சங்கிலி பூதத்தாரையும் அமைதிப்படுத்தி, ஆசுவாசப்படுத்தி தன்னோட பிள்ளைகளாக பொறுப்பு ஏற்றுக்கொண்டு கைலாயத்தில் வைத்துக் கொண்டார். அதனால்தான்  தந்தையான முக்கண் மூர்த்தியின் நெல்லையப்பர் கோயில் மற்றும் பல சிவன் கோயில்களிலும், தாயான பார்வதியின் அம்மன் கோயில்களிலும், சகோதரர்களான முருகனது திருச்செந்தூர், வள்ளியூர் , ஐயப்ப சாஸ்தாவின் சொரிமுத்தையனார் கோயில் , மற்றும் மாமாவான பெருமாளின் நம்பி கோயில் போன்ற பல கோயில்களிலும் காவல் தெய்வமாக இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து பாதுகாத்து வருகிறார்.சிவபெருமானின் பூதகணங்களுக்கு எல்லாம் ராஜாவாகிய 'பூதராஜா' சங்கிலி பூதத்தார் சுவாமியின் பெயரினை அவரது பக்தர்களின் குடும்பத்தில் வாரிசாக வரும் ஆண் பிள்ளைகளுக்கு  ‘பூதராஜா’,'பூதராசு', ‘பூதத்தான்’ ,'பூதப்பாண்டி' என்றும் பெண்பிள்ளைகளுக்கு ‘பூதம்மாள்’, ‘பூதம்’ மற்றும் தற்போதைய நவீன காலத்திற்கேற்றார் போல் ‘பூதராஜா’வை சுருக்கி ‘பூஜா’ என்றும் பெயர் சூட்டி வருகிறார்கள்.

 இப்படியாக சிவபெருமான் ஆணையின் பேரில் பூதராஜாவான நமது சங்கிலி பூதத்தார் சுவாமி மற்ற பூதகணங்கள் உதவியோடு மிகவும் சிறப்பாக கைலாய நிர்வாகம் செய்து கொண்டு இருந்தார்.ஒருமுறை சிவபெருமான் சங்கிலி பூதத்தாரிடம் மொத்த கைலாய நிர்வாகப் பொறுப்பையும் கொடுத்து விட்டு ‘பூலோகப் பயணம் போய் வருகிறேன்’ என்று கூறிச் சென்றார்.அப்படி போன சிவன் திரும்பி வரவேயில்லை. நெடுங்காலமாக பொறுத்திருந்து பார்த்த பார்வதி அன்னை ஆனவர் பூதத்தாரை அழைத்து,‘அமிர்த பாலனே, பூமிக்கு போன உங்கள் தந்தையை வெகுநாட்களாக காணவில்லையே.விபரம் ஏதும் அறிவாயா…' என்று விசாரிக்க, 'இன்னும் சிறிது நாளில் வந்து விடுவார் அன்னையே’ என்று பூதத்தார் பதில் கூறினார். இப்படியாக பல நாள்கள் கழிந்தன.

 கேட்கும் போதெல்லாம் பூதத்தார் இதே பதிலை சொல்ல பார்வதி அன்னை ஒருநாள் கோபப்பட்டு, 'என்ன செய்வாய், ஏது செய்வாய், என்று நான் அறியேன். நீயே நேராக பூலோகம் சென்று உங்கள் தந்தையை கையோடு அழைத்து வா' என்று உத்திரவிட, மீறமுடியாத  பூதத்தாரும் தந்தையைத் தேடி பூலோகம் கிளம்பினார். அப்படி அவர் தேடி வரும்போது தூரத்தில் சிவனும் கைலாயத்துக்கு திரும்பி வருவதை பூதத்தார் பார்த்து விட்டார். ஆனால் பூதத்தார் வருவதை சிவபெருமான் கவனிக்கவில்லை. 'ஆஹா.., நாம் கைலாயம் விட்டு கீழிறங்கி வருவதை அப்பா பார்த்தால் கொடுத்த கைலாயப் பொறுப்பை கவனிக்காமல், ஊர் சுற்றுவதாக தவறாக நினைத்து, கோபப்பட்டு, சத்தம் போடுவாரே.., ஏன் இப்படி வந்தாய் என்று கேட்டால்  பார்வதி அன்னை ஆணை இட்ட விபரம் சொல்ல வேண்டி வருமே…, நாம் சாபம் வாங்கினாலும் பரவாயில்லை, நம்மால் அன்னை பார்வதி ஏச்சும், பேச்சும் வாங்கக்கூடாது, குடும்பத்தில் குழப்பம் வந்து விடக்கூடாது’ என்றெல்லாம் பலவாறு எண்ணிய பூதத்தார், பாதை ஓரத்தில் கிடந்த பாம்புச்சட்டையில் புகுந்து சிவபெருமான் கண்ணில் படாமல் மறைந்து கொண்டார். இதனால்தான் சங்கிலி பூதத்தாருக்கு 'சட்டநாதன்'  (சட்டைநாதன்)  என்றொரு பெயரும் உண்டு. மேலும் சங்கிலி பூதத்தார் சுவாமி இருக்கிற இடத்தில் எல்லாம் பாம்பு இருக்கும். சுவாமி பாம்பாகத்தான் பக்தர்கள் கண்ணில் படுவார். ஆனால் யாரையும், எந்த தொந்திரவும் செய்ய மாட்டார். தன்னை வேண்டி வழிபடுகிற பக்தர்களது கனவிலும் பாம்பாகத் தான் வருவார். ஆபத்து நேரங்களில் ‘ சட்டநாதா, சங்கிலிபூதம்’ என்று அபயக்குரல் கொடுத்தால் சரசரவென்று வந்து உதவிடுவார்.

‘தாய் அறியாத சூல் உண்டோ’, ‘தந்தை அறியாத பிள்ளை உண்டோ’ சங்கிலி பூதத்தார் தன் கண்ணில் படக்கூடாது என்பதற்காக பாம்புச்சட்டையில் புகுந்ததை ஞானதிருஷ்டியில் கண்ட சிவபெருமான் சங்கிலி பூதத்தாரை அழைத்து, ‘மகனே, சட்டநாதா, சங்கிலிபூதம், அமிர்த பாலா, கைலாயத்தில் சிறப்பாக காவல் நிர்வாகம் செய்து வரும் உனது பாதுகாப்பும், திருவருளும் பூலோக மக்களுக்கும் வேண்டும் என்பதற்காகவே யாம் இந்த திருவிளையாடல் புரிந்தோம். நீதி, நேர்மை, நியாயம், நிர்வாகங்களில் சிறந்த காக்கும் கடவுளான அன்பு மைந்தன் உனக்கு இப்போது எமது அன்பு பரிசுகளாக ஆக்கும் வரம், காக்கும் வரம், அழிக்கும் வரமும் தந்தோம். உன்னை வணங்குவோர் எந்தக் குறையுமின்றி அன்பிலும், அறத்திலும், செல்வத்திலும் சிறந்து விளங்குவார்கள். நீ பூலோகம் சென்று சிறப்பான திருவிளையாடல்கள் புரிந்து, மக்களுக்கு நன்மைகள் பல செய்து யாம் இருக்கும் தென்கைலாயமாம் பொதிகை மலை வந்து எம்மை  அடைவாய்.’ என்று ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.

இப்படியாக பூலோகம் வந்து சேர்ந்த பூதத்தார் ஒரு இடமென்று தங்காமல் பல புண்ணிய ஷேத்திரங்களுக்கும் பயணம் சென்றார். எனவேதான் அவருக்கு ‘ஷேத்திரபாலன்’ என்றொரு பெயரும் உண்டு.அப்படி சென்ற இடங்களில் எல்லாம் பல திருவிளையாடல்கள் செய்து மக்களினால் கோயில்கள் கட்டி கும்பிடப்படுகிறார். பக்தர்கள் மேல் பேரன்பு கொண்ட பூதத்தார் பெருங்கோபமும் கொண்டவர். பக்தர்கள் செய்யும் தவறுகளை பொறுமையோடு ஏற்று முதலில் குறிப்பால் உணர்த்துவார். அப்படி அய்யன் காட்டும் குறிப்புகளை உணராமல் மேலும் மேலும் தவறுகள் செய்யும் பட்சத்தில் கடுமையான தண்டனைகள் வழங்கிவிடுவார். ஆம். 'விதி மீறினால் விதி முடித்திடுவார்'.

பல இடங்கள் சுற்றி பர்வத மலைக்கு வந்த பூதத்தாருக்கு ஆள்நடமாட்டமில்லாத அந்த இடத்தின் அழகும், அமைதியும் பிடித்து போய் விட அந்த மலையிலே மிகவும் பிரமாண்டமாக, ஓங்கி, உயர்ந்து, வளர்ந்த சந்தன தேக்கு மரத்தில் குடி அமைத்து தியான நிஷ்டையில் இருந்து வந்தார். பர்வதமலையடிவார ஊரில் முத்து செட்டி, சீனி செட்டி, முத்துராக்கன் செட்டி என்ற மூன்று சகோதரர்கள் வியாபாரம் செய்து வந்தார்கள். திரைகடலோடி திரவியம் தேட எண்ணம் கொண்ட மூவரும் கடல் கடந்து பொருள்களை ஏற்றிக் கொண்டு செல்ல வல்லம் (கப்பல்) செய்ய முடிவெடுத்து மரம் தேடி பர்வத மலைக்கு வந்தனர்.

ஆள், அம்பு, ஆசாரிகள், கருவிகளோடு பல இடங்களில் சுற்றி அலைந்தும் பொருத்தமான மரம் கிடைக்காத செட்டி சகோதரர்களின் கண்ணில் சங்கிலி பூதத்தார் குடியிருக்கும் வானளாவ ஓங்கி, உயர்ந்த பிரமாண்டமான சந்தன தேக்கு மரம் பட்டது. அழைத்து வந்த ஆசாரிகளும் வல்லம் செய்ய அனைத்து அம்சங்களும் கொண்ட மரம், இந்த மரம்தான் என உறுதி செய்ய மரத்தை வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட ஆரவாரக்கூச்சல்களினால் நிஷ்டை கலைந்த பூதத்தார் காட்டிய குறிப்புகளை உணராத செட்டி சகோதரர்கள் மரத்தை வெட்ட ஆரம்பிக்க, கடுங்கோபம் கொண்ட பூதத்தாரின் திருவிளையாடலால் மரத்தின் மீது முதல் வெட்டு விழும் முன்பே கோடாரிக் காம்பு உடைந்து, தெறித்து கோடாரியானது மரவெட்டியின் தலையை துண்டாக்கி தலை வேறு, முண்டம் வேறாக்கியது. 

ஆனால் எடுத்த காரியத்தில் பிடிவாதம் கொண்ட அந்த அகங்கார, ஆணவ செட்டி சகோதரர்கள் மந்திரவாதியை அழைத்து மேற்கொண்டு இடையூறுகள் ஏற்படாமல் இருக்க மாந்திரீகம் செய்து, கருங்கிடா வெட்டி பலியிட்டு தந்திர பூஜைகள் செய்ய சுத்த வீர சைவரான சங்கிலி பூதத்தார் இரத்தத்தீட்டு பட்டதால் மரத்தை விட்டு இறங்கி வெளியேறினார். பின் மரமானது வெட்டப் பட்டு, வல்லம் கட்டப்பட்டு கடலில் இறக்கி வெள்ளோட்டமும் விடப்பட்டது.பின் முறையான ஹோமங்கள் வளர்த்து, பூஜைகள் செய்து தீட்டெல்லாம் கழிக்கப்பட்டு பொருள்களை ஏற்றி புறப்பட்ட கப்பலில் பெருங்கோபத்தோடும், ஆவேசத்தோடும் ஏறிய பூதத்தார் நடுக்கடலில் கடும்புயலாய், பெருமழையாய், கொடும் சூறாவளியாய் உருமாறி, சங்கிலியால் ஓங்கி அடித்து, கப்பலை தாக்கி, சிதைத்து, பல துண்டு, துண்டுகளாக்கி   ஆணவ செட்டி சகோதரர்களையும் கடலில் மூழ்கடித்து அழித்து விட்டு திருச்செந்தூரில் கரை ஏறினார்.

அடக்க முடியாத ஆவேசத்தோடும், ஆக்ரோஷத்தோடும் திருச்செந்தூர் வந்த பூதத்தாரை அமைதிப்படுத்திய சகோதரரான சுப்பிரமணிய சுவாமி திருச்செந்தூர் கோயில் மூலஸ்தானத்திலும், கோபுர வாசலிலும், பக்தர்கள் தங்கும் மடங்களிலும் , கடற்கரையில் நாழிக்கிணற்றிலும், மற்றும் ஊருக்கு உள்ளேயும், வெளியேயுமாக இருபத்தி ஒன்று நிலையங்களை உருவாக்கி கோவிலுக்கும், வரும் பக்தர்களுக்கும், காவல் தெய்வமாக பூதத்தாரை இருக்கச் செய்தார்.திருச்செந்தூர் சென்றால் தவறாமல் பாருங்கள். மூடி வைக்கப்பட்டிருக்கும் ராஜகோபுரக் கதவின் இடது பக்கத்தில்  சங்கிலி பூதத்தாருக்கு துடியான  நிலையம் (பெரிய சிலை கொண்ட சிறிய கோயில்) இருக்கும். 

கைலாயத்திலும்,பர்வத மலையிலும் குளுமையாக இருந்த பூதத்தாருக்கு கடற்கரை சூடு பிடிக்காமலும், நியாய தர்மத்தில் சிறந்த வீரபாகுத் தேவருக்குப் பின் புதிதாக வந்த ஊழல் தர்மகர்த்தாவான பழனியாப்பிள்ளை போட்ட கல், மண் கலந்த நைவேத்தியங்களாலும் வயிற்றுவலி வந்துவிட முருகரிடம் தகவல் கூறிவிட்டு, தவறு செய்த தர்மகர்த்தாவையும் தண்டித்து விட்டு குளுமையான இடமான களக்காடு மலைக்கு வந்து, சலசலத்து ஓடும் நம்பியாற்றில் மூழ்கி குளித்து, உடல் சூட்டை தணிக்க வசதியாக, ஆற்றங்கரை மேலிருந்த பாறையில் சங்கிலியால் ஓங்கி அடித்து ஒரு கசத்தை (ஆற்றுக்குள் இருக்கும் ஆழம் அறியமுடியா இடம் ) உருவாக்கி நம்பியாற்றின் கரையில் மூன்று நிலையங்கள் அமைத்து  அமர்கிறார்.

சங்கிலியால்  ஓங்கி அடிக்கும் சத்தமும், கடும்பாறையானது பொடிபட்டு கசத்தில் நீர் பொங்கிப் பிராவாகமாய் பெருக்கெடுக்கும் சப்தமும் கேட்டு, கோயிலுக்கு வெளியே வந்து பார்த்த மலை நம்பி பெருமாள் ' யார், என்ன'வென்று விசாரிக்க, பூதத்தாரும், ‘நான் சிவனின் பிள்ளை. நீங்கள் என் மாமா, நான் உங்களது மருமகன்’ என்று எல்லா விபரமும் சொல்ல பெருமாளும், தாயாரும் பூதத்தாரின் வயிற்றுவலி நோயை குணமாக்கி, ஆசிர்வாதம் செய்து, திருக்குறுங்குடியில் உள்ள கீழ்நம்பி கோயிலுக்கும், ஊருக்கும் காவலாக  இருக்கச்சொல்லி அனுப்பினார்கள். அன்போடு அழைத்து, ஆரத்தழுவி ஏற்றுக்கொண்ட கீழ்நம்பி பெருமாளும் பூதத்தாருக்கு திருக்குறுங்குடி கோயிலையும், ஊரையும் சுற்றி ஏழு நிலையங்கள் அமைத்து கொடுத்து நித்யபூஜைகளுக்கும் ஏற்பாடு பண்ணி கொடுத்தார்.

இப்படியாக திருக்குறுங்குடியில் பூதத்தார் காவல் நிர்வாகம் செய்து வரும் நேரத்தில்  கிட்டுநாபுரத்தில் வசித்து வந்த தொழுநம்பி என்னும் பூசாரி கீழ்நம்பி கோயில் பெருமாளுக்கும், மற்ற தெய்வங்களுக்கும் பூஜை, புனஸ்காரங்களை பொறுப்பாக செய்து  வந்தார். அவரது மனைவி ருக்மிணியம்மாளும் சிறந்த பக்தை.பதிவிரதை. ஆச்சி, ஐயர் இருவருக்கும் எல்லா வளங்களையும் கொடுத்த இறைவன் குழந்தை வரம் மட்டும் கொடுக்கவில்லை. மந்திர, தந்திரங்களில் தேர்ந்த தொழுநம்பி தவமாய், தவமிருந்து, குழந்தை வரம் வாங்கினார். பிறந்த குழந்தைக்கு காதில் சிறுவெட்டு போன்ற குறை இருந்ததால் 'குண்டல வாசகம்' என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தனர். பள்ளி செல்லும் வயது வந்ததும் திண்ணைப்பள்ளியிலும் சேர்த்துவிட்டனர். அந்த காலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்த கோயிலுக்கு காலையில் செல்லும் தொழுநம்பியானவர் நடையை திறந்து மூன்று கால பூஜைகளையும் முறையாக நைவேத்தியங்களோடு செய்து விட்டு அந்தி பூஜை முடித்தபின் கோயில் நடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்.அதன்பின் கோவில் காவல் தெய்வமான சங்கிலி பூதமானவர் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு மறுநாள் காலையில் பெருமாள், தாயாரின் திருப்பள்ளி எழுச்சிக்குப் பின் கதவின் உள்பூட்டு,தாழ்பாள்களை விலக்கி விடுவார்.

ஒருநாள் குழந்தை குண்டலவாசகத்திற்கு பள்ளி விடுமுறை. தெருவில் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையானவன் தூரத்தில் தொழுநம்பி கோயிலுக்கு புறப்பட்டு செல்வதை கண்டு அவனும் தொடர்ந்து ஓடினான். ‘அப்பா,அப்பா’ என்று அழைத்தவாறு அன்பு மகன் ஓடி வருவதை பாதி வழி தூரம் தாண்டியபின் தான் தொழுநம்பி கவனித்தார். ’ஆஹா,இவனை மறுபடியும் கொண்டு போய் வீட்டுக்கு வந்தால் பூஜை நேரம் தப்பி விடுமே. அப்படிச் செய்தால் அது பெரும் குற்றமாயிற்றே… ஆண்டவனுக்கு அறிந்தே செய்யும் இழுக்காயிற்றே...‘ என்றெல்லாம் குழம்பி பின் தெளிந்தவனாக குழந்தையையும் அழைத்துக்கொண்டு கோயில் நோக்கி சென்றான்.

கோயில்நடை திறந்து குழந்தையை ஒரு ஓரமாக உட்கார்ந்து விளையாடச் சொல்லிவிட்டு ஆயத்த வேலைகளில் இறங்கினான் தொழுநம்பி. வெகுதூரம் நடந்து வந்ததால் தாகத்தால் பீடிக்கப்பட்ட குழந்தையானவன் ‘அப்பா,குடிக்க ஏதாவது கொடு’ என்று கேட்க நம்பியும் சுவாமிகளின் அபிஷேகத்திற்கு வைத்திருந்த பாலை மகனுக்கு கொடுக்க முனைந்தான். கோவிலின் காவல் பொறுப்பான பூதத்தார் எவ்வளவோ குறிப்புகள் காட்டியும் உணராமல்  மகனுக்கு பாலை புகட்டியும் விட்டான். சிறிது நேரம் கழித்து குழந்தை 'பசிக்கிறது' எனக் கேட்க மீண்டும் பூதத்தாரின் குறிப்புகளையும், கோயிலின் ஆகமவிதிகளையும் மீறி பூஜைக்கு வைத்திருந்த பழத்தினை குழந்தை குடித்து மீதி வைத்திருந்த பாலுடன் பிசைந்து பஞ்சாமிர்தமாக்கி ஊட்டி விட்டான். அதன்பின் சிறிதுநேரம் அங்குமிங்கும் ஓடியாடி விளையாடிய குழந்தை குண்டலவாசகமானவன் நடந்து வந்த களைப்பாலும், பால், பஞ்சாமிர்தம் உண்ட அலுப்பினாலும் ஓரமாய் படுத்து தூங்கி விட்டான். வழக்கம்போல செய்யும் முறையான பூஜை போல் அல்லாமல் பால், பழமின்றி பெருமாளுக்கும், தாயாருக்கும், பூதத்தார் உள்ளிட்ட ஏனைய பரிவார தெய்வங்களுக்கும்,தேவதைகளுக்கும்  ஏனோ,தானோ என்று ஒப்பிற்கு பூஜை செய்த தொழுநம்பியானவன் குழந்தை கூட வந்ததையும், கோயிலினுள் தூங்கி கொண்டிருப்பதையும் மறந்து கதவை பூட்டிவிட்டு வழக்கமான பாதையில் நடந்து வீட்டை அடைந்தான்.

வீட்டிற்கு வந்து கை, கால், முகம் கழுவி ஆசனப்பலகையில் அமர்ந்து ருக்மிணியம்மாள் எடுத்து வைத்த உணவை பிசைந்து முதல் கவளத்தை வாயில் வைக்கப்போனவன், ‘குழந்தை குண்டலவாசகனையும் சாப்பிடக் கூப்பிடேன்.சேர்ந்து சாப்பிடுகிறேன்’ என்று கூற,  ‘காலையில் நீங்கள் கோயிலுக்குச் செல்லும்போது உங்கள் கூட வந்ததாகத்தானே அவனது நண்பர்களும், செல்லும் வழியில் கண்டவர்களும் கூறினார்கள். எங்கே மறுபடியும் வந்து தெருவில் விளையாடிக் கொன்டிருக்கிறானா’ என்று ருக்மிணி ஆச்சியானவள் எதிர் கேள்வி எழுப்பினாள்.

அதன்பின்னரே கோயிலிலேயே குழந்தையை விட்டு வந்தது நினைவிற்கு வர மனைவியிடம் மெதுவாக விபரம் கூறி ‘ பயப்படாதே, குழந்தையை பெருமாளும், தாயாரும் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள். விடிந்ததும் சென்று அழைத்து வந்து விடுகிறேன்.’ என்று கூற  கொதித்து எழுந்த  அந்த தாயோ ‘தவமாய்,தவமிருந்து பெற்ற குழந்தையை கொடிய மிருகங்கள் வாழும் காட்டில் விட்டு வந்து விட்டு காலையில் சென்று அழைத்து வருகிறேன் என்று கூறி பெற்றவள் என் வயிறு துடிக்கச் செய்கிறாயே. நீயெல்லாம் ஒரு தகப்பனா.. நீ இப்போதே சென்று என் குழந்தையை அழைத்து வரவில்லை என்றால் நானே செல்வேன். அல்லது உடனே என் உயிர் துறப்பேன்…’ என்று மேலும் பல கடுஞ்சொற்கள் பேசி நம்பியை கலங்க அடித்தாள்.

சரி இவளிடம் இதற்கு மேல் பேசி எந்த பிரயோஜனமும்  இல்லை என்று முடிவெடுத்த நம்பியும் மேலும் தாமதியாமல் வீட்டை விட்டு உடனே கிளம்பி கொடும் மிருகங்களான புலி,சிறுத்தை,கரடி,நரி தாக்காதவாறு அந்தக் கடும்காட்டில் வாழும் மொத்த மிருகங்களின் வாயையையும் கட்டும் மந்திர உச்சாடனம் ஜபித்து வசிய மைகளோடும், மருந்துகளோடும் களக்காடு வனம் புகுந்.து கோயிலை அடைந்தான்.

 கோயிலுக்கு மீண்டும் நம்பி வந்த காரணம் அறிந்த காவல் தெய்வமான சங்கிலி பூதத்தாரும் ‘ நம்பி , நீ வந்த காரணம் யாம் அறிவோம்..காலையில் உன் மகனை உன்னிடமே ஒப்படைப்பேன். கவலையின்றி திரும்பிச் செல்’ என்று கூறினார்.

நம்பியும் ‘சங்கிலி பூதத்தாரே இப்போது என் மகனை நான் அழைத்துச் செல்லவில்லை என்றால் என் மனைவி உடன் உயிர் துறப்பாள். அதன் பின் நானும், என் மகனும் மிகவும் கஷ்டப்படுவோம். உன்னத தாயும், உண்மையான பத்தினியுமான அவளது சாபமும் என்னையும், எனது பரம்பரையையும் பீடிக்கும். எனவே கருணை கொண்டு, தயவு செய்து கதவு திறந்து விடுங்கள்.’ என்று வேண்டினான்.

‘நம்பியே, உன் நிலை அறிவோம். ஆனால் ஆகம விதிப்படி கோயில் கதவைப் பூட்டி, பெருமாளும், தாயாரும் பள்ளியறைக்கு சென்ற பின் மறுநாள் காலை திருப்பள்ளி எழுச்சிக்கு பின் தானே கோயில் கதவை திறக்க முடியும். விதிமுறை அறிந்த நாம் இருவருமே அதனை மீறுவது தர்மம் அல்ல. உன் மகனை இப்போது இருப்பதை விட இரண்டு பிடி சேர்த்து வளர்த்து நிறைந்த கல்வியோடும், குறையாத செல்வத்தோடும் அவன் பெருவாழ்வு வாழும் வகையில் ஆசி வழங்கி நாளை காலையில் திருப்பி தருகிறேன்.வீடு சென்று இல்லாளை ஆறுதல் கூறி சமாதானப்படுத்து.’  என்று தேறுதல் வார்த்தைகள் கூறினார்.

ஆனால் பூதத்தாரின் வார்த்தைகளில் சமாதானமடையாத நம்பியானவன் தன்னிடமிருந்த சாவி கொண்டு கோயில் நடை திறக்க முனைந்தான்.

‘நம்பியே… இன்று காலையில் இருந்தே பல விதிமீறல்கள் செய்து வந்தாய். உன் மகன் பொருட்டு அனைத்தையும் மன்னித்தோம்.ஆனால் இப்போது நீ செய்ய முயல்வது மன்னிக்கமுடியாத தவறு. மேல்கொண்டு என் கோபம் கிளப்பாமல் உடனே இவ்விடம் விட்டு புறப்படு.இல்லையென்றால் நடப்பவை நல்லவைகளாக இருக்காது’ என்று பூதத்தார் எச்சரித்தார்.

மனம்பிறழ்ந்த நம்பியோ,’ஏ பூதமே, என்னையே எச்சரிக்கிறாயா… என்னை விட ஆகம விதிகளும், வேதங்களும் அறிந்தவனோ நீ… உன்னை என்ன செய்கிறேன் பார். நான் படித்த மந்திரங்களினால் உன்னைக் கட்டி, கோயில் கதவைத் திறந்து, என் மகனை இப்போதே அழைத்துச் செல்வேன். உன்னால் முடிந்ததை செய்.’ என்று பூதத்தாரிடம் சவால்  விட்டு மந்திரத்தினால் கோயில் கதவின் உள்ளிருந்த மேல்தாழ்ப்பாளை விலக்க, பூதத்தாரோ கீழ்தாழ்ப்பாள் போட்டார். அவன் கீழ்தாழ்ப்பாள் விலக்கும்போது பூதத்தார் தந்திரமாக மேல்தாழ்ப்பாள் போட்டார்.
 
இப்படி மாறி, மாறி தடுத்தும் தொழுநம்பியானவன் மந்திர வேலைகளின் மூலம் மீண்டும், மீண்டும் கோயில் கதவைத் திறக்க முயற்சிக்க கடும்கோபமும், ஆக்ரோஷமும் கொண்ட சங்கிலி பூதத்தார், ‘சரி நம்பி. கதவருகே வந்து உனது மேல் துண்டை விரித்து நில். உன் மகனைத் தருகிறேன். உன் விருப்பப்படியே வாங்கிச் செல்’. என்று கூறி எப்படி நம்பியானவன் பாலிலே, பழத்தை பிசைந்து பஞ்சாமிர்தம் ஆக்கினானோ அதுபோல பூதத்தாரும் தூங்கிக் கொண்டு இருந்த அந்த பச்சிளம் பாலகனை, பால் மணம் மாறா குழந்தையை, கை வேறு, கால் வேறாக பிய்த்து,ரத்தமும், சதையுமாக  பிசைந்து கதவு சாவித்துவாரம் வழியாக கோவிலுக்கு வெளியே வீசினார்.

‘ஆஹா பூதமே…என்ன காரியம் செய்தாய்..என்னை பழிவாங்க என் மகனையா கொன்றாய்.. பொழுது விடிவதற்குள் உன்னை மந்திர மை, மருந்துப் புகை போட்டு பிடித்து பாதாளக் குகையில் அடைத்து என் அடிமை ஆக்குகிறேன் பார்’ என்று சூளுரைத்து சபதம் செய்தான் தலைக்கனத்தால் தன் மகனை இழந்த தொழுநம்பி.

‘அடோய் நம்பி. யாரிடம் சபதம் செய்கிறாய்.இப்போது கூறுகிறேன் கேள். உன் கண் முன்னே இந்த ஊர் நீங்கிச் செல்வேன். அதற்கு ஆதாரமாக ஆலயத்தின் அணையாவிளக்கு அணைந்திருக்கும். மேலும் கோயில் விருட்சமான மருதமரத்தின் வலது பக்கத்தையும், கோயில் கோட்டை மதில் சுவரில் உள்ள ஏழு வரிசைக்கற்களையும், சிதைத்து, சரித்து செல்வேன். அடையாளத்தை வந்து சரி பார்த்து கொள்.’என்று கூறி திருக்குறுங்குடியிலிருந்து கிளம்பி பூதத்தான் குடியிருப்பு வழியாக களக்காடுமலை தாண்டி தென்பொதிகை மலை ஏறி காரையாற்றங்கரையில் உள்ள அருள்மிகு சொரிமுத்தையனார் கோயில் மூலவரும், தானே சுயம்பாக அவதரித்த சர்வேஸ்வரருமான மகாலிங்க சுவாமிகளின் அனுமதியோடு மணி முழுங்கி மரத்தடியில் வந்து குடியேறினார்.

 இவ்வாறாக அருள்மிகு சுவாமி சங்கிலி பூதத்தாரானவர், கைலாயத்தில் இருந்து கிளம்பும் போது சிவபெருமான் இட்ட ஆணைப்படி பல ஷேத்திரங்கள் பயணம் செய்து தென்கைலாயமான பொதிகை மலை சொரிமுத்தையனார் கோயில் வந்து மணிமுழுங்கி மரத்தடி, மேற்கு வாசல், மூலஸ்தானம், மடப்பள்ளி மற்றும் வனத்தினுள்ளாக ஐந்து நிலையங்கள் அமைத்து சுயம்புலிங்கமாக அமைந்துள்ள தந்தை சிவனான மகாலிங்க சுவாமி, மூத்த சகோதரரும், முழுமுதற் கடவுளுமான விநாயகர், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம் மற்றும் சபரிமலை சாஸ்தாவுக்கெல்லாம் மூலசாஸ்தாவான பொன் சொரிமுத்து ஐயனார் மற்றும் கும்பாமுனி  ( அகத்தியர்), பாதாளமுனி, சுடலை மாடசுவாமி, தளவாய் மாடசுவாமி, தூசி மாடசுவாமி, தூண்டில் மாடசுவாமி, கரையடி மாடசுவாமி, பொம்மக்கா, திம்மக்கா சமேத பட்டவராயன், பிரம்மரட்சதை அம்மன், பேச்சி அம்மன்  போன்ற பரிவார தெய்வங்கள் மற்றும் தேவதைகளோடு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

எல்லாம் அய்யன் அருள். சிவமயம். விஷ்ணு சகாயம்.

நன்றி. வணக்கம்.


அருள்மிகு சங்கிலி பூதத்தார் சுவாமி சம்பந்தப்பட்ட அதிசயங்களும் ஆதாரங்களும்...

1.திருக்குறுங்குடி கோயிலில் பூதத்தாரால் சிதைக்கப்பட்ட கோவில் கோட்டை மதில் சுவரின் ஏழு வரிசைக் கற்களை  கோவில் நிர்வாகத்தினர் பல்வேறு கால கட்டங்களில் சீரமைக்க முயற்சித்தும் இன்று வரை முடியாமலே இருக்கிறது.

2. களக்காடு திருக்குறுங்குடி மலைநம்பி கோயில் சங்கிலி பூதத்தார் ஆலய திருவிழாவின் போது சாமி கொண்டாடிகள் நம்பியாற்றில் சுவாமி சங்கிலிபூதத்தாரால் உருவாக்கப்பட்ட ஆழம் அறிய முடியாத கசத்தில் குதித்து சங்கிலி எடுத்து வருவர். சொரிமுத்தையனார் கோயிலிலிலும் இதே போன்று ஆழமான கசம் உள்ளது.

3.சுத்த சைவரான பூதத்தாருக்கு பிரியமானவற்றில் முக்கியமானவை வடை மாலை,  எலுமிச்சை மாலை, வாழைப்பழக்குலை, பானகரம், வார்ப்புப் பாயாசம், முற்றிலும் காய்கறிகளான ஆசாரப்படைப்பு  மற்றும் பச்சரிசியை ஊறவைத்து கையால் இடித்து மாவாக்கி வெல்லம் கலந்து உருண்டையாக செய்து பின் நடுவில்  குழி ஏற்படுத்தி எண்ணெய் விட்டு திரிபோட்டு சுவாமி முன் தீபம் ஏற்றப்படும் வேண்டுதல் மாவிளக்கு.  

4. பூதத்தார் சுத்த சைவமாக இருந்தாலும் அவர் குடி கொண்டுள்ள கோயில்களில் மற்ற தெய்வங்களுக்காக நடக்கும் உயிர்ப்பலிகள் மற்றும் அசைவப்படைப்புகளை கண்டு  கொள்வதில்லை. அவரது பக்தர்கள் புலால் உண்ணுவதையும் தடுப்பதில்லை. விழாக்காலங்களில் அவரது பக்தர்களே அசைவம் தவிர்த்து தீவிர விரதம் மேற்கொள்கின்றனர்.

5.வள்ளியூர் முருகன் கோவில்,  திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவிலும் பல கோயில்களில் பூதத்தார் இருக்கிறார். எல்லா இடத்திற்கும் அவர் எப்படி  சென்றார் என்பது போன்ற அனைத்து நிகழ்ச்சிகளுக்கும்  ஆதாரங்கள் திருத்தமாகவும், தெளிவாகவும் உள்ளன. அவரது பெயரிலே 'பூதப்பாண்டி', பூதத்தான் குடியிருப்பு போன்ற ஊர்களும் உள்ளன. சொரிமுத்தையனார் கோயிலில் பூதத்தாரை ஆதாரமாக வைத்து கட்டப்பட்ட அனைத்து கோயில்களுக்கும் திருவிழாவின் போது சொரிமுத்தையனார் கோயிலில் இருந்தே சங்கிலி அல்லது தீர்த்தக்குடம் எடுத்து செல்லப்படுகிறது.  

6. அவரது எல்லாக் கோயில்களிலும் பீடத்தின் கீழ் இரும்புச் சங்கிலி வைக்கப்பட்டிருக்கும். அருள் வந்து ஆடும் பக்தர்கள் அந்த சங்கிலிகளால் நெஞ்சில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டாலும் வலிப்பதுமில்லை. கண்ணிப்போவதோ, இரத்தக்காயங்களோ ஏற்படுவதுமில்லை.

7.அடர்ந்த வனப்பகுதியும், களக்காடு - முண்டன்துறை புலிகள் சரணாலயமும் ஆகிய சொரிமுத்தையனார் கோயிலுக்கு ஆண்டு முழுதும் மக்கள் சென்று வருகின்றனர். வருடாவருடம் விமரிசையாக நடக்கும் ஆடிஅமாவாசை திருவிழாவின் போது லட்சக்கணக்கான மக்கள், குடும்பத்தோடு சென்று தற்காலிக குடில்கள் அமைத்து பத்து நாள்களுக்கும் மேல் தங்கி வருகின்றனர்.ஆனால் இதுவரை எவரையுமே மிருகங்கள் தாக்கியது இல்லை. காவல் தெய்வமான சங்கிலி பூதத்தாரே பக்தர்கள் கண்ணில் படாமல் கொடிய மிருகங்களை தடுத்தாண்டு வருகிறார்.

8. கோயிலுக்குச் செல்லும் தற்போதைய பாபநாசம் வழியான மலைப்பாதையானது போடப்படுவதற்கு முன் அனைத்து ஊர் மக்களும், சிங்கம்பட்டி ஜமீனால் காட்டுபகுதியில் அமைக்கப்பட்ட காட்டுப்பாதை வழியாகவே சென்று வந்தனர். இப்போதும் சிங்கம்பட்டி மற்றும் அக்கம்பக்க கிராம மக்கள் வனத்துறையினர் அனுமதியோடு இந்த வழியை பயன்படுத்தி கோயிலுக்கு சென்று வருகின்றனர்.  பூதத்தார் பொதிகை மலை வந்த காட்டுப்பாதை வழியாகவே வருடாவருடம் ஆடிஅமாவாசைதோறும் நடைபயணமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆரல்வாய்மொழி அருகே உள்ள கிராமத்தில் இருந்து சொரிமுத்தையனார் கோவிலுக்கு சாமிகொண்டாடிகளால் வல்லயம் ( வெண்கல மணிகள் பிணைக்கப்பட்டு பூண் இடப்பட்ட குத்தீட்டி / வேல்கம்பு ) கொண்டு வரப்படுகிறது. இன்று வரை எவர் கண்ணிலும் எந்த மிருகமும் பட்டதில்லை.

9.சிங்கம்பட்டி அருள்மிகு சுவாமி சங்கிலி பூதத்தார் கோயிலில் பல நூற்றாண்டுகளாய் மூன்றுநாள் திருவிழாவாக சிறப்பாக நடந்து வரும் மாசி மாத சிவராத்திரி திருவிழாவிற்காக இந்த காட்டு வழியாகவே சங்கிலி எடுத்து வரப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு அவ்வாறு சங்கிலி எடுக்கச்சென்ற 90 வயதான முதிய சாமிகொண்டாடி இரவு நேரமாகியும் திரும்பாததால் காட்டினுள் சென்று தேடிப் பார்க்கலாம் என்று கோயில் நிவாகத்தினர் முடிவெடுத்து புறப்பட முயன்ற போது காட்டில் வழி தெரியாமல் சென்றுவிட்ட அந்த பெரியவரை ஆடு ஒன்று  வழிகாட்டி கோயிலுக்கு அழைத்து வந்தது. பின் திருவிழா முடியும் வரை கோயிலில் சங்கிலி பூதத்தாரின் பிரமாண்ட பீடத்தின் அருகிலே இருந்த அந்த ஆடு பின் யார் கண்ணிலும் படாமல் மறைந்து போனது. சங்கிலி பூதத்தாரே ஆடு வடிவில் வந்து சென்றதாக அனைத்து நெல்லை மாவட்ட பத்திரிக்கை பதிப்புகளிலும் பரபரப்புச் செய்தியாக வந்தது. வேட்டையாடும் கொடும் மிருகங்கள் வாழும் கடும்காட்டில்  ஆடு அலைவது என்பது ஆச்சரியமான அதிசயமாகும். 


10. திருவரலாற்றின் படி திருக்கைலாயத்தில் இருந்து கிளம்பி திருச்செந்தூர் வழியாக திருக்குறுங்குடி வரும்வரை சிவனின் சைவசின்னமான திருநீறு அணிந்திருந்தார். வைணவத்தலமான பெருமாளின் திருக்குறுங்குடி நம்பி கோயிலில் வைணவ அடையாளமான திருநாமம் ஏந்தினார். திருக்குறுங்குடியில் இருந்து சொரிமுத்தையனார் கோயில் வந்ததால் அங்கும், சொரிமுத்தையனார் கோயிலை ஆதாரமாக கொண்ட மற்ற கோயில்களிலும் திருநாமத்தோடே பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

11.வரும் காலங்களில் எல்லாம் வல்ல இறைவன் திருவருளோடு கீழ்க்கண்ட பதிவுகளை எழுத எண்ணியுள்ளேன்.
அ) சுவாமி சங்கிலி பூதத்தார் தென்கைலாயமாம் பொதிகை மலையில் இருந்து இறங்கி        திருநெல்வேலி மாநகரம் வந்த கதை.
ஆ) குலதெய்வமானது முதல் இன்று வரை எங்கள் குடும்பத்திலும்,ஊரிலும் செய்து வரும் பல அதிசயங்கள் .
இ) அண்டை மாநிலமான கேரளா உள்பட  கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் மற்றும் பல  இடங்களுக்கும் சென்ற கதை.
ஈ) மற்ற பரிவார தெய்வங்களும், தேவதைகளுமான கும்பாமுனி (அகத்தியர்), பாதாளமுனி, சுடலை மாடசுவாமி, தளவாய் மாடசுவாமி, தூசி மாடசுவாமி, தூண்டில் மாடசுவாமி, கரையடி மாடசுவாமி, பொம்மக்கா, திம்மக்கா சமேத பட்டவராயன், பிரம்மரட்சதை அம்மன், பேச்சி அம்மன் கதைகள்.


எல்லாம் அய்யன் அருள்.

சிவ மயம். விஷ்ணு சகாயம்.


நன்றி. வணக்கம்.சுவாமி சங்குலி பூதத்தார் குறித்த கீழே உள்ள பதிவுகளின் மீதும் சொடுக்கி படிக்கவும்.

சுவாமி சங்கிலி பூதத்தார் தென்கைலாயமாம் பொதிகை மலையில் இருந்து இறங்கி திருநெல்வேலி மாநகரம் வந்த கதை
20 comments:

K.P.SAIKRISHIKAA said...

Raja Sir, Vankkam!
Ungalukku Kodanu Kodi Nandrikal.

Baktha Vatsalan (Beloved of the devotees),Adiyaarkku Meyyan (Truefriend of devotees),
Nambhuvorkku Upakaari (Helper of true believers --- SRI SWAMY SANGILI BOOTHATHAR Story Publish Panniyatharukku Nandri.

Sri Swamy Sangili Boothathar Arul Ungalukku Eppothum Undu.

Thodarattum Ungal Pani.
VAZHA VALAMUDAN,NARBHAVE.

S.PITCHUMANI
PALAYAPEETAI
TIRUNELVELI,TAMILNADU,INDIA

ஆடுமாடு said...

அருமை.

எங்கள் மந்திரமூர்த்தி கோயிலுக்கு எப்படி வந்தார் என்ற விவரம் எனக்கு கொஞ்சம்தான் தெரியும். பெரிய ஆட்களிடம் இன்னும் கேட்க வேன்டும்.

கல்லிடைகுறிச்சி பப்பு பாடிய வில்லுபாட்டு கேசட் இருக்கிறது. கேட்க நேரமில்லை.

நல்ல முயற்சி. தளவாய் மாடசாமி உள்ளிட்ட தெய்வங்கள் பற்றி எழுதுங்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்

துபாய் ராஜா said...

அன்புள்ள திரு பிச்சுமணி மற்றும் ஆடுமாடு திரு.ஏக்நாத் அவர்களுக்கு வணக்கம். அருள்மிகு சுவாமி சங்கிலி பூதத்தார் திருவரலாற்றினை எழுத கருவியாக என்னை தொடர்ந்து தூண்டியமைக்கு நன்றிகள் பல. என்றும் ஈசன் விதி மீறாமல் இறைவழி வாழ்வோம்.

Anonymous said...

raja anna,
தங்கள் ஆக்கம் பாராட்டுக்குரியது .வாழ்த்துக்கள்

துபாய் ராஜா said...

தளம் வந்து வாசித்தமைக்கும், கருத்திட்டமைக்கும் நன்றி Rakshamuthu M.

துபாய் ராஜா said...


அன்புள்ளஅனானி அவர்களுக்கு, வணக்கம்.நலமறிய அவா. தாங்கள்தான் ஆடுமாடு அண்ணாச்சியின் கொடை 19ஆம் பாகத்தில் (http://aadumaadu.blogspot.com/2015/02/19.html) வந்து கீழ்க்கண்ட கருத்திட்டவரா என்று தெரியவில்லை.

// Anonymous said...
பூதத்தார் சைவம் என்கிறீர்கள்..ஆனால் மலை நம்பி கோவில் சங்கிலி பூதத்தார் சன்னதியில் சனிக்கு அடுத்த ஞாயிறன்று கிடா வெட்டுகிறார்களே.... சாஸ்தா மாதிரி அவரும் சைவம் என்பது ஒரு புது தகவல்...
February 16, 2015 at 2:34 AM //

ஆடுமாடு ஏக்நாத்ராஜ் அண்ணாச்சியின் வலைப்பதிவில் எழுதிவரும் கொடை 13ஆம் பாகத்தில் (http://aadumaadu.blogspot.com/2015/01/13.html) நான் இட்ட சுவாமி சங்கிலி பூதத்தார் குறித்த இரண்டு கருத்துரைகளை படித்து முழுக்கதையை எழுதச்சொல்லி கேட்ட திரு.பிச்சுமணி என்ற முகம்தெரியாத அன்பர் எனக்கு தனி மடலிட்டும் கதை எழுத கோரிக்கை வைத்தார். அவரது அலைபேசி எண்ணை கேட்டு வாங்கி அவரை அழைத்துப் பேசினேன். பிறகு துடியான சுவாமி கதையாச்சே... எழுதலாமா, வேண்டாமா என்று யோசித்து, மிகுந்த தயக்கத்திற்கு பின்னே சிறு வயதில் நான் கேட்ட விவரங்களை வைத்து கதை எழுத தொடங்கினேன்.ஏதாவது தடை வந்தால் விட்டு விடலாம் என முடிவு செய்து எழுத ஆரம்பித்தது முதல் வேறு எதிலும் கவனம் செல்லவில்லை. இரவிலும் நேரத்திற்கு தூங்க முடியவில்லை. ஐயன் அருளால் நல்லபடியாக எழுதி முடித்த பிறகே ஊருக்கு போன் செய்து புலவரிடமும், மற்ற சொந்தக்காரர்களிடமும் விசாரித்தேன். ஏனென்றால் நான் இந்தக் கதைகளை கேட்டதெல்லாம் ஏறத்தாழ இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன். நான் எழுதியதும் அவர்கள் கூறியதும் கூடுமான வரை சரியாகவே இருந்தது. எல்லாம் அய்யன் அருள்.

இன்னொரு முக்கியமான விஷயம் அனானி அவர்களே, நம்பி கோயில் உள்பட பூதத்தார் இருக்கும் பெரும்பாலான தலங்களுக்கு சென்று, உரியவர்களிடம் விசாரித்து தகவல்கள் அறிந்ததால் அறுதியிட்டு கூறுகிறேன். பூதத்தாருக்கு நம்பி கோயிலிலும் சரி. மற்ற எங்கேயுமே ஆடு,கோழி பலி கிடையாது. அவருடன் இருக்கும் மற்ற பரிவார தெய்வங்களுக்கு இடப்படும் உயிர்ப்பலியை உங்களைப் போலவே பலரும் தவறாக புரிந்து கொள்கின்றனர். அடுத்தமுறை நம்பி கோயில் சென்றால் கவனித்து பாருங்கள். பலிகள் இடப்படுவதும், படையல் இடப்படுவதும் அவர் பீடத்தின் முன் கிடையாது. வெகு தூரம் தள்ளித்தான். சுத்த சைவரான பூதத்தாருக்கு பிரியமானவற்றில் முக்கியமானவை வடை மாலை, எலுமிச்சை மாலை, பானகரம், வார்ப்புப் பாயாசம், மாவிளக்கு (பச்சரிசியை ஊறவைத்து கையால் இடித்து மாவாக்கி வெல்லம் கலந்து உருண்டையாக செய்து பின் நடுவில் குழி ஏற்படுத்தி எண்ணெய் விட்டு திரிபோட்டு சுவாமி முன் தீபம் ஏற்றப்படும் வேண்டுதல் விளக்கு ) வாழைப்பழக்குலை மற்றும் முற்றிலும் காய்கறிகளான ஆசாரப்படைப்பு.

பூதத்தார் சுத்த சைவமாக இருந்தாலும் அவர் குடி கொண்டுள்ள கோயில்களில் மற்ற தெய்வங்களுக்காக நடக்கும் உயிர்ப்பலிகள் மற்றும் அசைவப்படைப்புகளை கண்டு கொள்வதில்லை. அவரது பக்தர்கள் புலால் உண்ணுவதையும் தடுப்பதில்லை. விழாக்காலங்களில் அவரது பக்தர்களே அசைவம் தவிர்த்து தீவிர விரதம் மேற்கொள்கின்றனர்.

சொரிமுத்தையனார் கோயிலுக்கு கிடா செய்யப் போகிறோம் என்று பேச்சு வழக்கில் கூறுவார்கள். ஆனால் அசைவப்படையல் இடுவது சொரிமுத்து ஐயனாருக்கோ, மகாலிங்கத்திற்கோ, சங்கிலி பூதத்தாருக்கோ, சுடலைமாடசுவாமி, கரையடி மாடசுவாமி, பேச்சி மற்றும் பிரம்மரட்சதை அம்மன்களுக்கு கிடையாது. தளவாய் மாடசுவாமி, மற்றும் பட்டவராயன் வகையறாக்களுக்கே அசைவப்படைப்பு.கோயில் சென்றால் பாருங்கள். தளவாய் மாடசுவாமி கோயில் செல்வதற்கும், அம்மன் கோயில் முன்பும் காட்டாற்றின் மேல் பாலங்கள் உள்ளன. தளவாய் மற்றும் பட்டவராயன் கோயிலில் அசைவப் படைப்பு இட்டு சாப்பிட்டு வருபவர்கள் குளித்த பின்னே சொரிமுத்து ஐய்யனார் வகையறாக்கள் இருக்கும் இந்தப்பக்கம் வரவேண்டும் என்பதற்காகத்தான் அந்தக்காட்டாறு ஓடுவதாக தலவரலாறு கூறுகிறது. முப்பது ஆண்டுகள் முன் வரை அதைக் கடைபிடித்தும் வந்தனர். ஆனால் கோவில்கள் எல்லாம் சுற்றுலாத்தளங்கள் ஆகிவிட்ட இந்தக் காலத்தில் விதிமுறைகள் பின்பற்றுவார் யாருமில்லை.

உங்கள் கருத்து போல் இந்து மதம் உள்பட எல்லா மதங்களிலுமே சிறுதெய்வங்களுக்கான தெளிவான வரலாறு இல்லை. அதற்கான சிறுமுயற்சியையே நான் எடுத்துள்ளேன்.மேலும் நீங்கள் கூறியிருப்பது போல் மாடு மேய்க்கச் சென்று இறந்து தெய்வமானது பட்டவராயன் ஆவார். இன்னொருவரின் இறைநம்பிக்கைக்காக எழுதிய பதிவில் தங்களது எதிர்மறையான கருத்துக்களை இட என் மனம் ஒப்பவில்லை. எனது இணைய முகவரிக்கு (thubairaja@gmail.com) தங்கள் அலைபேசி எண்ணை தெரியப்படுத்துங்கள். அழைக்கிறேன். விரிவாகப் பேசலாம். பழகலாம். கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். நன்றி. வணக்கம்.

ஆடுமாடு said...

நண்பர் ஒருவர் பூதத்தாரைப் பற்றி சமீபத்தில் ஆய்வு செய்திருக்கிறார். அவர் சைவம்தாம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தினகரன், ஆன்மீகமலரில் இன்னும் சில வாரங்களில் அவர் அதை தொடராக எழுத உள்ளார். அப்போது தெரிவிக்கிறேன் ராஜா சார்.

நன்றி.

துபாய் ராஜா said...

தங்கள் கருத்து ஊக்கத்திற்கு நன்றி ஆடுமாடு அண்ணாச்சி...

HHH said...

அருள்மிகு சுவாமி சங்கிலிபூத்தார், சைவம், சிவ மைந்தன்.....
அனால் சொரிமுத்து ஐய்யன் கோவிலில் வைணவர் போல நெற்றியில் திரு நாமம் அணிந்து அருள்கிறார்.....
ஆனால் பிரசாதம் திருநீறு தான்..... :)

Million thanks for writing about swami Sri Sangili boodathar sir...

துபாய் ராஜா said...

அன்புள்ள திரு.HHH,

தங்கள் கருத்துரைக்கு நன்றி.

சொரிமுத்தையனார் கோவில் நிர்வாகம் எங்களது சிங்கம்பட்டி ஜமீனை சேர்ந்ததாகும். எங்கள் குல தெய்வம் அருள்மிகு சங்கிலி பூதத்தார் ஆவார். இன்றளவும் எங்கள் குடும்பத்தில் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்து வருகிறார்.

திருவரலாற்றின் படி திருக்கைலாயத்தில் இருந்து கிளம்பி திருச்செந்தூர் வழியாக திருக்குறுங்குடி வரும்வரை சிவனின் சைவசின்னமான திருநீறு அணிந்திருந்தார். வைணவத்தலமான பெருமாளின் திருக்குறுங்குடி நம்பி கோயிலில் வைணவ அடையாளமான திருநாமம் ஏந்தினார். திருக்குறுங்குடியில் இருந்து சொரிமுத்தையனார் கோயில் வந்த்தால் அங்கும் திருநாமத்தோடே பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

சங்கிலி பூதத்தார் பற்றி மேலும் எழுத பல விபரங்களை தொகுத்து வைத்து உள்ளேன். ஆதார பூர்வமாக எழுத அய்யன் அருளோடு அனைத்து திருத்தலங்களுக்கும் ஆன்மீக பயணம் செல்லவும் எண்ணி உள்ளேன்.

நன்றி.வணக்கம்.

ssvasu.2008 said...

Vanakkan

Unknown said...

ராஜா சார் அவர்களுக்கு வணக்கம். நம் குல தெய்வமாம் சங்கிலி பூதத்தார் அய்யா திருநாள்விழாவான இன்று 02.08.2016 அவரின் திருத்தல வரலாற்றை படித்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.என்ன புண்ணியம் செய்தேனோ என் இறைவனின் திருவரலாற்றை படிப்பதற்கு. அவருடைய திருவரலாற்றை அறிந்து கொள்ள பெரும் உதவியாக இருந்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

Unknown said...

அன்பர் துபாய் ராஜா அவர்களுக்கு வணக்கம்.

நம் குல தெய்வமாம் அருள்மிகு. சங்கிலி பூதத்தாருடைய திருவரலாற்றை படித்ததில் பேரின்பம் அடைந்தேன். இத்திருவரலாற்றை அறிந்து கொள்ள பெரிதும் உதவிய தங்களின் இந்த பதிவுக்கு கோடான கோடி நன்றிகள். தங்களின் இந்த திருப்பணி மென்மேலும் சிறக்க அய்யன் அருள்புரிய வேண்டும்.

Unknown said...

Poothathar patri melum therinthal gooravum nantri annachi

Anonymous said...

Can somebody please translate the story of Sangili Bhoothathar in English.

SAMY said...

தளவாய் மாடசுவாமி, மற்றும் பட்டவராயன் வகையறா PATHI UNGALUKU THARI YUMA THARINJA SOLLUNGA ILANA THARINJUKA Yatava VALI SOLLUNGA

SAMY said...

தளவாய் மாடசுவாமி, மற்றும் பட்டவராயன் வகையறா PATHI UNGALUKU THARI YUMA THARINJA SOLLUNGA

krishna said...

Biramma Ratchai kadhai sollunga please

துபாய் ராஜா said...

// Anonymous said...
Can somebody please translate the story of Sangili Bhoothathar in English.//

Please use Google Tamil to English translator and copy Paste in a Separate word file to read.

துபாய் ராஜா said...

// SAMY said...
தளவாய் மாடசுவாமி, மற்றும் பட்டவராயன் வகையறா PATHI UNGALUKU THARI YUMA THARINJA SOLLUNGA ILANA THARINJUKA Yatava VALI SOLLUNGA //

// krishna said...
Biramma Ratchai kadhai sollunga please //

அன்பர்களுக்கு வணக்கம்.எல்லாம் வல்ல இறைவன் அருளோடு விரைவில் மற்ற பரிவார தெய்வங்களும், தேவதைகளுமான கும்பாமுனி (அகத்தியர்), பாதாளமுனி, சுடலை மாடசுவாமி, தளவாய் மாடசுவாமி, தூசி மாடசுவாமி, தூண்டில் மாடசுவாமி, கரையடி மாடசுவாமி, பொம்மக்கா, திம்மக்கா சமேத பட்டவராயன், பிரம்மரட்சதை அம்மன், பேச்சி அம்மன் கதைகள் எழுத முயற்சிக்கிறேன்.