Wednesday, January 20, 2010

சந்திரமுகியை சந்தித்தேன்.... - பாகம் 2


திருநெல்வேலியில் காற்றாலையில் வேலை பார்த்து கொண்டிருந்த பொழுது மலையோர காட்டுப்பகுதியில் அமைந்திருந்த ஒரு இயந்திரத்தில் பழுதை சரிசெய்ய தனியாக சென்றிருந்த பொழுது நடந்த அமானுஷ்ய சம்பவம்.

பைக்கினருகே ஒரு இளம்பெண் நின்று கொண்டிருந்தாள். இருபத்தைந்து வயதிருக்கும். கருப்பு என்றாலும் களையான முகம்.நல்ல கட்டுமஸ்தான உடல்வாகு. சேலையை வித்தியாசமாக நாட்டுடையாக உடுத்தியிருந்தாள். ஆண்களே வர அஞ்சும் ஆள்நடமாட்டமில்லாத காட்டுப்பகுதியில் ஒரு இளம்பெண்ணை திடீரென கண்டதே எனது அதிர்ச்சிக்கு காரணம். என் எண்ணத்தில் ஏதேதோ ஓடினாலும் என்னை பார்த்து சிரித்தவாறு நின்ற அந்த பெண்ணைக் கண்டு அதிர்ச்சியில் பேச்சு வராமல் நின்றேன்.


“என்ன சார் தனியாதான் வந்தீங்களா,கூட யாரும் வரலையா” என்று கிண்டலாக கேட்டவளிடம், ஒட்டி உலர்ந்திருந்த நாக்கை ஈரப்படுத்தி கொண்டு “யார் நீங்க, என்ன வேணும், மாடு ஏதும் தேடி வந்தீங்களா...” என்று கேள்விகளாக எழுப்பினேன்.


“இல்லை சார் எங்க தோட்டம் பக்கத்துலதான். எங்களுக்கு பனை நிறைய இருக்கு. தினமும் பதனி இறக்கி பக்கத்து ஊருங்கல்ல கொண்டு போய் விப்போம். காத்தாடிக்காரங்க பெரும்பாலும் வெளியூர்காரங்களான்னாலே பதனி ஆசைப்பட்டு குடிப்பாங்க. சில நேரம் மொத்தமா பானையோட வாங்கிட்டு போயிடுவாங்க. எங்களுக்கும் விக்கிறதுக்கு ஊர் ஊரா போய் அலைய வேண்டாம். அதான் உங்க பைக் நிக்கிறதைப் பார்த்தவுடன் கேட்டுப்போகலான்னு வந்தேன்” என்றாள்.

என்ன பதில் சொல்ல என யோசித்து கொண்டிருந்தவனிடம் “எங்க மரத்து பதனி நல்ல டேஸ்ட்டா இருக்கும் சார்.ஒரு கிளாஸ் குடிச்சுப் பாருங்க. புடிச்சிருந்தா வாங்கிட்டு போங்க” என்றாள்.

“கார்ன்னா பானையை வச்சு கொண்டு போயிடலாம். பைக்ல வச்சு கொண்டு போக முடியாது.இன்னொரு தடவை கார்ல வரும்போது வாங்கிட்டு போறேன்” என்றவாறு கிளம்ப தயாரேனேன்.

“சார் எங்ககிட்டே அஞ்சு லிட்டர்,பத்து லிட்டர் கேன் நிறைய இருக்கு. இரண்டு பத்து லிட்டர் கேன்ல பதனியை ஊத்தி கட்டையா கட்டி பைக் பின்னாடி ரெண்டு பக்கமா போட்டு தர்றேன்.ஈஸியா கொண்டு போயிடலாம். விலையும்  அதிகமில்லை. மொத்தமா வாங்கினிங்கன்னா குறைச்சு தர்றேன்” கைதேர்ந்த மார்க்கெட்டிங் பிரதிநிதி போல் பேசினாள்.

எங்கள் பணியில் இதுபோல அடிக்கடி மொத்தமாக யாராவது, ஏதாவது வாங்கி கொண்டு வருவதை பகிர்ந்து உண்ணுவது பழக்கம் என்பதால் பதனீர் நல்லா இருந்தா வாங்கி கொண்டு போகலாம் என்ற எண்ணத்தில் “சரி,உங்க தோட்டம் எங்கே,பக்கமா,தூரமா” என்றேன்.

“பக்கம் தான். இந்த ஒத்தையடிப்பாதையில நடந்து போனா அஞ்சு நிமிசம்தான் சார்.” என்று கூறியவாறு புல் அடர்ந்த பாதையில் நடக்க தொடங்கியவளை பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தேன்.

‘’நீங்க மொத்தமா வாங்கிட்டிங்கன்னா ஊர் ஊரா போய் அலைய வேண்டாம். இன்னிக்காவது சீக்கிரம் வீட்டுக்கு போயிடுவேன்.’’ பேசிக்கொண்டே ஒரு அசாத்திய வேகத்தில் நடந்து கொண்டிருந்த அந்த பெண்ணை பின் தொடர்ந்த என்னை “சார்,சார்” என்ற முரட்டு ஆண்குரலும் கைதட்டலும் தடுத்து நிறுத்தியது.

(தொடரும்)


5 comments:

லோகு said...

கதை நல்ல விறுவிறுப்பா போகுதுங்க.. ஆனா இப்படி உடனுக்குடன் பிரேக் போடறீங்களே.. நூறு வாரம், இருநூறு வாரம்னு ஏதாவது லட்சியம் இருக்கா பாஸ்???

Raju said...

எந்த இடத்துல ”தொடரும்” போடனும்ற சூட்சுமம் உங்களுக்கு நல்லாவே கைவருது தல.

போலாம் ரை..ரை.!

துபாய் ராஜா said...

//லோகு said...
கதை நல்ல விறுவிறுப்பா போகுதுங்க.. ஆனா இப்படி உடனுக்குடன் பிரேக் போடறீங்களே.. நூறு வாரம், இருநூறு வாரம்னு ஏதாவது லட்சியம் இருக்கா பாஸ்???//

அன்பு லோகு, வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.அடுத்த பாகத்தில் முடிந்து விடும் என நினைக்கிறேன்.

பதிவர்களில் நேரம் கிடைக்கிறதே என்று எழுதுவர்களும் இருக்கிறார்கள். கிடைக்கிற நேரத்தில் எழுதுபவர்களும் இருக்கிறார்கள். நான் இரண்டாவது ரகம்.

பணிப்பளுவின் கடுமையை குறைக்கும் வடிகாலாகவும், தாய்மொழியில் பேச முடியாத மனக்குறை நீங்கவும் எழுதுபவர்களில் நானும் ஒருவன்.எழுத ஆரம்பித்தால் எழுத்தின் வேகம் என்னை இழுத்து சென்று விடுகிறது. அந்த வேகத்தை குறைக்கவே அடிக்கடி பிரேக் போடவில்லை.நேரமின்மையே காரணம்.

தொடர்ந்து வாருங்கள். ஆதரவு தாருங்கள்.

நன்றி.

துபாய் ராஜா said...

// ♠ ராஜு ♠ said...
எந்த இடத்துல ”தொடரும்” போடனும்ற சூட்சுமம் உங்களுக்கு நல்லாவே கைவருது தல.

போலாம் ரை..ரை.!//

அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி தம்பி ராஜூ... :))

அ. நம்பி said...

முழுதும் படித்துவிட்டுக் கருத்துச் சொல்லட்டுமா ஐயா?