Friday, October 02, 2009

மகான் காந்தி எமகான்....


காந்திஜியை பற்றி நினைத்தவுடன் முதலில் நினைவிற்கு வருவது “மகான் காந்தி எமகான்” பாடல்தான்.சிறுவயதில் ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டை ஒட்டிய வெள்ளியன்று இந்தபாடல்தான் ஒளியும் ஓலியும் நிகழ்ச்சியில் தவறாமல் இடம்பெறும்.ஏ.வி.எம்.மின் ‘நாம் இருவர்’ திரைப்படம் என நினைக்கிறேன். குமாரி கமலா அழகாக வளைந்து வளைந்து ஆடுவார்.

எனது தாத்தா அந்தகால காங்கிரஸ்காரர். எனவே எங்கள் அம்மா வீட்டின் வரவேற்பறையில் பெரிய சைஸ் காங்கிரஸ் தலைவர்கள் படங்கள் அழகாக பிரேம் செய்து மாட்டப்பட்டிருக்கும். அவற்றில் காந்திஜியின் முழு உருவப்படமும் முக்கியமான ஒன்று. காந்தி,நேரு போன்ற பெரிய தலைவரையெல்லாம் நேரில் சந்தித்த தொன்னூறு வயதை தாண்டிய என் தாத்தா இன்றும் கதராடைதான் அணிகிறார்.

“காந்தி” படம் ரிலீசானது எண்பத்தி மூன்றாம் ஆண்டு என நினைக்கிறேன். மூன்றாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் இருந்து வகுப்புவாரியாக நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழேயுள்ள பூர்ணகலா திரையரங்கிற்கு “காந்தி” படம் பார்க்க அழைத்து சென்றனர். தென்னாப்பிரிக்காவில் இனவெறியர்களால் புகைவண்டியில் இருந்து தள்ளப்பட்டதும், உப்புசத்தியாகிரகத்தின்போது தொண்டர்கள் அனைவரும் போலிசாரின் குண்டாந்தடி அடிகளுக்கு பயப்படாமல் சாரைசாரையாக சென்று எதிர்ப்பு காட்டாமல் அடிபட்டு மண்டை உடைந்து கீழே வீழ்வதும் இன்னும் நினைவில் நிற்கிறது.

விபரம் அறிந்தபின் வாசிப்பு கூட கூட காந்தி குறித்து எதிர்மறையான கருத்துக்களும் நிறைய படிக்க நேர்ந்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்தது, பகத்சிங்,ராஜகுரு,சுகதேவ் மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை எதிர்க்காதது போன்றவை குறிப்பிடத்தகுந்தவை.

அவரது கருத்துக்களில் பிடிவாதம் கொண்டவர் என்றாலும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். தொலைதொடர்பு கருவிகள் இல்லாத அந்த காலத்திலேயே மக்கள் சக்தியை திரட்டி எழுச்சி கொள்ளச்செய்தவர்.எல்லா நாடுகளிலும் விடுதலைப்போராட்டங்களை முன்னெடுத்தவர்களே அதிபர்களாக இருந்த காலத்தில் சுதந்திர இந்தியாவின் எந்த ஒரு பதவிக்கும் ஆசைப்படாதவர். அவருக்குப்பின் குடும்ப உறுப்பினர் எவரையும் முன்னிலைப்படுத்தாதவர். என அவரைப்பற்றி பாராட்டி கூற இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.

என்றென்றும் நினைவில் நிற்கும் மகான் காந்தி எமகான்......

6 comments:

கலகலப்ரியா said...

ஆஹா.. நிறைய இருக்கே இவர பத்தி தெரிஞ்சுக்கறதுக்கு.. ரொம்ப நன்றிங்கோ..

தங்க முகுந்தன் said...

அருமையான தொகுப்பு! வாழ்த்துக்கள்!

பிரபாகர் said...

காந்தியினை பற்றி படிக்க படிக்க ஆனந்தமாய் இருக்கிறதே,அதுதான் தேசப்பிதாவின் ரகசியமோ?

1982 ல் வெளியானது, ஆறாவது படிக்கும் போது. பார்த்தது 83ல் தான். எல்லோரையும் அழைத்து சென்றார்கள்.

நினைவு கூர்ந்தமைக்கு நன்றி ராஜ.

சகாதேவன் said...

//எனது தாத்தா அந்தகால காங்கிரஸ்காரர். இன்றும் கதராடைதான் அணிகிறார்//
காங்கிரஸும் மாறி விட்டது. கதராடையையும் காணோம். உங்கள் தாத்தாவுக்கு வணக்கம்
சகாதேவன்

லோகு said...

நல்ல இடுகை... வாழ்த்துக்கள்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

காந்தியை பத்தி சுவையான தகவலும் உங்க அனுபவமும் ரொம்ப சூப்பர் .