உயிர் வாழ உணவு அவசியம் என்றாலும்
நாகரிக வளர்ச்சி அடைந்த இந்த நவீன காலத்தில் கூட உணவின்றி போராடும் உயிரினங்கள் எத்தனையோ…
எத்தனையோ… ஆதி காலத்தில் இலை, தழை, காய், கனி, கிழங்குகள் உண்ணுதல், வேட்டையாடுதல்
என உணவுத் தேவைக்காக போராடிய மனித சமுதாயம் பின் விவசாயம், கால்நடை வளர்த்தல் என உணவு
பழக்க, வழக்க முறையை நெறிப்படுத்தியது. நாகரிக வளர்ச்சி காரணமாக ஆற்றங்கரைகளில் குடியிருப்புகள்
அமைக்கப்பட்டு, கிராமங்கள், நகரங்கள் உருவாக்கப்பட்டு சமூக கட்டமைப்பு உருப்பெற்றது..
ஆண்டி முதல் அரசர் வரை அனைவருக்கும் உணவு வழங்க அன்ன சத்திரங்களும், ஆகம கூடங்களும்
ஏற்படுத்தப்பட்டன.
ஆலயங்கள் தோறும் பூஜை, புனஸ்காரங்களோடு
நைவேத்தியப் பிரசாதங்களும் படைக்கப் பட்டு பிரசாதங்களாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டதும்,
அனைவருக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே. தேவாலயங்களில் பொதுஜனப் பந்திகள்,
மசூதிகளில் நோன்பு காலங்களில் கஞ்சி விநியோகம், புத்த விகாரைகள், குருத்துவாராக்களில்
அன்னதானங்கள் என அனைத்து மதங்களும் ஊராருக்கு உணவு வழங்குவதை ஒரு கடமையாக கொண்டு செயல்பட்டு
வருகின்றன.
கோடை காலங்களில் மழை இன்றி, விவசாயம்
செய்ய முடியாமல் உணவு உற்பத்தி குறைந்து மக்கள் அல்லல்படும் காலங்களில் கிராமங்கள்தோறும்
கோவில்களில் கோடைவிழாக்கள் நடத்தப்பட்டு அன்னதானமாக நீராகாராங்களும், சித்திரான்னங்களும்
பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவது காலம், காலமாக இருந்து வரும் பழக்கம். மேலும் கிராம
தேவதைகளுக்கு ஆடுகள், கோழிகள் பலியிடப் பட்டு சமைத்து படைக்கப் பட்டு அசைவ உணவு விருந்துகளும்
மக்கள் மனம் குளிர வழங்கப்பட்டு வருகின்றன. கால ஓட்டத்தில் மாற்றம் பெற்ற நடைமுறைகளால்
கருத்து வேறுபாடுகளும், கண்டனங்களும் எழுவது மட்டுமல்லாமல் கலகங்களும், கலவரங்களும்
எழுவதன் காரணமே இக்கதையின் களமாகும்.
பாகம் 1
சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் ஆளுகைக்கு கீழ் உட்பட்டிருந்த ஜமீன் சொத்துக்களான பொதிகை மலைப்பிரதேசங்கள் சுதந்திரமடைந்த பின் நாட்டுடைமையாக்கப்பட்டு விட்டாலும், பூர்வபந்த பழக்கமாக மணிமுத்தாறு மலைப்பகுதியில் அமைந்துள்ள கோவில்களின் திருவிழாக்கள் வனத்துறையினரின் சிறப்பு அனுமதி பெற்று வருடா வருடம் நடத்தப்பட்டு வருகின்றன. மழை வரம் மற்றும் குழந்தை வரம் அருளும் பிரசித்தி பெற்ற மணிமுத்தாறு அருவிக்கரையில் சங்கிலி பூதத்தார், தளவாய் மாடசாமி, பட்டவராயர், கும்பாமுனி போன்ற பல சுவாமிகள் சமேதமாக அமைந்துள்ள அம்மன் கோவிலுக்கு வாரம் தோறும் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் சிங்கம்பட்டியில் இருந்து தவறாமல் சென்று வழிபடுவோர் உண்டு. வருடாந்திர கொடை விழாவின் போது பலரும் தங்கள் குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காது குத்துவர். சிங்கம்பட்டி ஊர் அம்மன் கோயில் நிர்வாகம் சார்பாக ஊர் மக்களிடம் வரி பிரித்து, பல நூறு எண்ணிக்கையிலான ஆடுகள், கோழிகள் வாங்கி, பலியிட்டு, அசைவப் படையல் போட்டு சுவாமிகளுக்குப் படைத்த பின்னர் கோயிலுக்கு வரும் உள்ளூர், வெளியூர் அனைத்து பக்தர்களுக்கும் பந்தி போட்டு, அன்னதானம் பரிமாறுவது பல தலைமுறைகளாக இருந்து வரும் பழக்கம் ஆகும்.
மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவில்
போன்றே அணைக்கரை ஒட்டிய காட்டுப்பகுதியில் புலிப்பட்டி ஊர் மக்களுக்கு பாத்தியப்பட்ட
அணைக்கரை அம்மன் கோவில் உள்ளது. மணிமுத்தாறு அணை கட்டப்படுவதற்கு முன் தற்போது நீர்
தேக்கப்பகுதியாக உள்ள அனைத்து இடங்களுமே வயலும், தோப்பும், தோட்டங்களுமாக இருந்தன.
அங்கு வீடுகள் கட்டி வசித்து வந்தவர்கள் அடிக்கடி வரும் காட்டாற்று வெள்ளத்திற்கும்,
மலையிலிருந்து இறங்கி வந்து வளர்ப்பு மிருகங்களையும், சில நேரம் மனிதர்களையும் தாக்கும்
வன விலங்குகளுக்குப் பயந்தும் தங்கள் குடியிருப்புகளை காலப்போக்கில் புலிப்பட்டி கிராமத்திற்கு
மாற்றிக் கொண்டனர். ஆனாலும் காட்டாற்று ஓரமாய்
பாறைகள் மேல் முன்னோர்கள் கட்டி வழிபட்டு வந்த கோயில்கள் இன்றளவும் அங்கே இருந்து வருகின்றன.
அகத்தியர் உருவாக்கிய பழைய பொதிகை
மலைப்பாதையான சொரிமுத்தையனார் கோவில் செல்லும் வழியில் தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட்டுகள்
பல உள்ளன. அணைக்கரை அம்மன் கோவில் வழியாகத் தான் அந்த தனியார் எஸ்டேட்டுகளுக்கு செல்லும்
பாதை உள்ளது. நாடு விடுதலை அடையும் முன் காடுகளில் வேட்டைக்கு செல்லும் போது தங்குவதற்காக,
ஜமீன்தார்களிடம் கேட்டு வாங்கிய இடங்களில், அரசாங்க அனுமதியுடன் பட்டாவும் வாங்கி எஸ்டேட்டுகள்
அமைத்து பல வெள்ளைக்காரர்கள் வாழ்ந்து வந்தனர் சுதந்திரம் வழங்கிய பின் சொந்த ஊர்களுக்கு
திரும்பி செல்லும் போது, தங்களிடம் பணியாற்றிய திவான்கள், கணக்குப் பிள்ளைகளுக்கு அன்பளிப்பாக
பட்டா பெயர் மாற்றி கொடுத்து விட்டு சென்றனர். பட்டா நிலம் என்பதால் இன்றளவும் மேற்கு
தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பல எஸ்டேட்டுகள் தனியார் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன.
புலிப்பட்டி ஊரில் இருந்து பலரும்
அணைக்கரை பகுதிகளில் அமைந்துள்ள எஸ்டேட்டுகளில் வேலை பார்த்து வந்தனர். ஆனைக்குட்டியும்
அதில் ஒருவர். அதிக உயரம் இல்லாமல் தொந்தியும், தொப்பையுமாக இருப்பதால் அவர் இயற்பெயர்
மறைந்து ஆனைக்குட்டி என்ற பெயர் நிலைத்து விட்டது. வெகுகாலம் முன் ஒரு நாள் மாலை எஸ்டேட்
வேலைக்குச் சென்று திரும்பும் போது ஒற்றை யானை துரத்த உயிர் பிழைக்க ஒடியவர் அணைக்கரை
அம்மன் கோவிலுக்குள் சென்று, பூட்டு இல்லாமல் கம்பியால் முறுக்கி மூடப்பட்டிருந்த கருவறையின்
மரக்கதவுகளை திறந்து, அம்மன் சிலைக்குப் பின் ஒளிந்து கொண்டார். யானை போய் விட்டதா,
இல்லையா என்று தெரியாததாலும் இருட்டி விட்டதாலும் அன்று இரவு கோயிலிலே தங்கியவர் பையிலிருந்த
பழங்களை சாப்பிட்டு விட்டு அப்படியே படுத்து தூங்கி விட்டார்.
( தொடரும் )
No comments:
Post a Comment