Tuesday, October 08, 2019

படப்புச் சோறு - பாகம் 2



பாகம் 2
அணைக்கரை அம்மன் கோவிலுக்கு உரிமையான அரசமுத்து குடும்பத்தார் கேரளாவிற்கு வேலைக்குச் சென்று அங்கேயே தங்கி விட்டதால் பொறுப்பெடுத்து பேணுவார் யாரும் இல்லாமல், வெகுநாட்களாக ஆள்வரத்தும் இல்லாமல் சுற்றுப்புறம் முழுதும் செடி, கொடி, புதர்கள் அடர்ந்து, குப்பையும், கூளமாக கோயில் இருந்தது. காலையில் கண் விழித்த ஆனைக்குட்டி தன் உயிர் காத்த அம்மனுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தவர் கையிலிருந்த அரிவாளால் கோயில் வளாகத்தில் இருந்த செடி, கொடி, புதர்களை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு, சிறு செடிகள் கொண்டு துடைப்பம் போல செய்து குப்பை, கூளங்களை பெருக்கி, அள்ளி தூரத்தில் கொண்டு போட்டு சுத்தம் செய்தார்.

கருவறை உள்ளேயும், ஒட்டடை அடித்து, முடித்தவர் கருவறையில் இருந்த குடம், தாம்பாளம், சூடத்தட்டு, மணி ஆகியவைகளை கோவிலுக்கு அருகில் ஓடிய ஆற்றுக்கு எடுத்துச் சென்று அழுக்கு போக கழுவி வெயிலில் வைத்தார். பின் அவரும் குளித்து விட்டு, குளத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு போய் அம்மனுக்கு அபிஷேகம் செய்த பின் பழைய பட்டுக்களை களைந்து விட்டு, டிரங்குப் பெட்டியில் இருந்த பட்டு ஒன்றை எடுத்துக் கட்டி திருநீர், சந்தனம், குங்குமம் கொண்டு அலங்காரம் செய்து, கோயில் வளாக செடிகளில் இருந்து பறித்து வந்த அரளி, செம்பருத்தி, நந்தியாவட்டை பூக்களால் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டார். 
   
அதன்பின் அனுதினமும் வேலைக்குச் செல்லும் போதும், திரும்பும் போதும் காலை, மாலை வேளைகளில் கோவிலைச் சுத்தப்படுத்தி அம்மனை வழிபடுவதை வழக்கமாக கொண்டார் ஆனைக்குட்டி. ஆலய வேலைகளில் அவருக்கு ஒத்தாசையாக வேறு சிலரும் அவ்வப்போது உதவுவதைப் பார்த்த எஸ்டேட்டுக்குகளுக்கு வேலைக்குச் செல்லும் பிற ஜனங்களும் கோவிலுக்கு வந்து வழிபடுவதோடு மட்டுமல்லாமல் தங்களால் ஆன உதவிகளையும் செய்ய ஆரம்பித்தனர்.

இப்படியாக எல்லோருடைய உதவியுடனும் அணைக்கரை அம்மன் கோவிலில் தினசரி இருவேளை பூஜைகளோடு தமிழ்மாதப் பிறப்பு, செவ்வாய் மற்றும் கடைசி வெள்ளி தினங்களில் பஞ்சாமிர்தம், சர்க்கரைப் பொங்கல் போன்ற நைவேத்தியங்களோடு சிறப்பு வழிபாடுகள் நடைபெற ஆரம்பித்ததால் அக்கம், பக்க ஊர் மக்களும் குழந்தை, குட்டிகள், குடும்பதோடு வந்து போக ஆரம்பித்தனர். எல்லா வேலைகளையும் பொறுப்பெடுத்து செய்து வந்த ஆனைகுட்டி கோவிலுக்கு மக்கள் அதிகமாக ஆரம்பித்த உடன் எஸ்டேட் வேலையை விட்டு விட்டு காலை முதல் மாலை வரை முழு நேரமும் கோவிலிலே இருப்பதை வழக்கமாக்கி கொண்டார்.

அகத்தியர் உருவாக்கிய பழைய பொதிகை மலைப்பாதையான சொரிமுத்தையனார் கோவில் செல்லும் வழியில் சுப்பாமணி அய்யருக்கு சொந்தமான 30 ஏக்கர் எஸ்டேட்டு இருந்தது. அய்யரின் தாத்தா வெள்ளைக்கார துரையிடம் வாங்கிய அந்த எஸ்டேட்டில் ஏலக்காய் மரங்களே பிரதானமாக இருந்தன. அய்யரின் தாத்தா, அப்பா எல்லாம் அவர்கள் பூர்வீக ஊரான ஆழ்வார்குறிச்சியில் இருந்து வாரம் நான்கைந்து முறை மாட்டு வண்டியில் வந்து சென்றும், ஏலக்காய் அறுவடை காலங்களில் மட்டும் எஸ்டேட்டிலே தங்கியுமாக பராமரித்து வந்தனர். ஆனால் தனிமை விரும்பியான சுப்பாமணி அய்யர் படித்து, முடித்து பொறுப்பிற்கு வந்தவுடன் எஸ்டேட்டிலேயே வசதியான ஒரு வீடு கட்டி தனது மனைவியான சுந்தரவள்ளி ஆச்சியுடன் வசித்து வந்தார்.

சுப்பாமணி அய்யருக்கும், சுந்தரவள்ளி ஆச்சிக்கும் எல்லாவிதமான செல்வங்களையும் வாரி வழங்கிய இறைவன் குழந்தைச் செல்வத்தில் மட்டும் குறை வைத்து விட்டார். அய்யரும், ஆச்சியும் வேண்டாத தெய்வமில்லை. போகாத கோயில் இல்லை. ஆனால் புத்திர பாக்கியம் மட்டும் கிடைக்க வில்லை. எந்த ஒரு மருத்துவமனை சென்றாலும் பலவிதமான பரிசோதனைகள் செய்து இருவரிடமும் எந்த ஒரு குறையும் இல்லை என்றே கூறினர். இப்படியாக இருவருக்கும் திருமணம் ஆகி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அய்யருக்கு ஐம்பது வயதும், ஆச்சிக்கு நாற்பது வயதும் கடந்து விட்டாலும் தவறாமல் நம்பிக்கையோடு கோவில்களுக்கு சென்று வந்தனர்.

எஸ்டேட்டில் வேலை செய்யும் சில பெண்கள் ஆச்சியிடம் அணைக்கரை அம்மன் கோவிலின் புராதனப் பெருமை கூறி ஒரு கடைசி வெள்ளியன்று காலை பூஜைக்கும் அழைத்து சென்றனர். அணைக்கரை அம்மன் கோவிலில் குடிகொண்டுள்ள பிரம்மசக்தி அம்மனுடன் துணையம்மனாக பேச்சியம்மனும், மேலும் விநாயகர், சிவலிங்கம், சாஸ்தாக்களுடன் இருபத்தியொரு மாட தேவதைகளும், தெய்வங்களும் இருந்து அருள்பாலித்து வந்தனர். ஆச்சி வழிபட சென்ற அன்று எல்லா தெய்வங்களையும் வணங்கி விட்டு உடனே வீடு திரும்பாமல் உடன் வந்த மற்ற பெண்களோடு சேர்ந்து அபிஷேகத்திற்கும், நைவேத்தியப் பிரசாதங்கள் செய்வதற்கும் தேவையான நீரை ஆற்றில் இருந்து எடுத்து வந்து கொடுப்பது, பூ மாலைகள் கட்ட உதவுவது, பிரசாதங்கள் செய்ய மடப்பள்ளி வேலைகளில் உதவுவது என எல்லா  வேலைகளிலும் முழுமனதுடன், ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார்.

அம்மன்கள் உள்பட எல்லா தெய்வங்களுக்கும் அபிஷேக, அலங்காரங்கள் செய்து, பட்டு சார்த்தி, பல வண்ண மாலைகள் அணிவித்து, ஆரத்தி காட்டும் நேரம் உச்சி பொழுது ஆகிவிட்டது. கோவிலுக்கு வந்திருந்த அனைவரும் கண்குளிர, மனம் குளிர அம்மன்கள் உள்பட அனைத்து தெய்வங்களையும் தரிசித்து விட்டு, வரிசையாக சென்று தீபாராதனையை கண்ணில் ஒற்றிக் கொண்டு, விபூதி, குங்கும, சந்தனப் பிரசாதங்களை ஆனைமுத்து பூசாரியிடம் வாங்கி நெற்றியில் பூசிக் கொண்டு சென்றனர். சுந்தரவள்ளி ஆச்சி அம்மன் பீடம் அருகே வந்து தீபாராதனையை கண்ணில் ஒற்றிக் கொண்டு, பூசாரியிடம் விபூதி, குங்கும் பிரசாதங்கள் வாங்க கை நீட்டிய பொழுது ஆனைகுட்டி அருள் வந்து ஆடத் தொடங்கினார்.

( தொடரும் )

No comments: