Friday, July 26, 2019

மூன்று முக சுவாமி சங்கிலி பூதத்தார்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா சிங்கம்பட்டி கிராமம் மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மூன்று முக சுவாமி சங்கிலி பூதத்தார்.
ஆதிகாலத்தில் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமிர்தத்திற்காக திருப்பாற்கடலை கடையும்போது ஆலகால விஷத்தோடு பாரிஜாத மரம், காமதேனுப் பசு மற்றும் மேலும் பல அதிசயங்களும், அற்புதங்களும் வெளியே வந்தன. அப்படி அமிர்தத்தோடு பலதரப்பட்ட விஷயங்கள் வெளிவரும் நேரத்தில் விசித்திரமான, வீரியமான பல விதமான பூதகணங்களும், அந்த பூதகணங்களுக்கு எல்லாம் ராஜாவான சுவாமி சங்கிலி பூதத்தார் சங்கொலி முழங்க கையில் தண்டத்தை ஆயுதமாகவும், உடல் மேல் கனத்த இரும்புச்சங்கிலிகளை ஆபரணமாகவும் அணிந்தவாறு பார்த்தாலே பதற வைக்கும் பிரமாண்ட ஆங்கார, ஓங்கார உருவத்தோடும், ஆரவார சப்தத்தோடும் ஆக்ரோஷமாக, பாற்கடலில் இருந்து வெளியே வருவதைக் கண்ட தேவர்களும், அசுரர்களும் மற்ற முனிவர்கள், சித்தர்கள் அனைவரும் அஞ்சி நடுநடுங்கி ஓடிப்போய் ஒளிந்து கொண்டனர். அமிர்தத்தோடு பிறந்ததால் சங்கிலி பூதத்தாருக்கு ‘அமிர்த பாலன்’ என்றொரு பெயரும் உண்டு. கையில் குண்டாந்தடியான தண்டத்தை ஆயுதமாக ஏந்தியுள்ளதால் 'தண்டநாதன்' என்றும் கூறுவர். திருப்பாற்கடலில் பிரமாண்ட உருவத்தோடும், அனைவர் கண்ணையும் பறிக்கும் முத்து போன்ற பிரகாசத்தோடும் தோன்றியதால் 'ராக்‌சஷ முத்து' என்றும் அன்பர்களால் அழைக்கப்படுகிறார்.
அண்டமெல்லாம் நடுங்கச் செய்த அதிபயங்கர ஆலகாலவிஷத்தை விழுங்கி அனைத்துலக ஜீவராசிகளையும் அழிவில் இருந்து காப்பாற்றிய கைலாய நாயகரும், சித்தருக்கெல்லாம் சித்தரும், வித்தகருக்கெல்லாம் வித்தகரும், முக்கண் மூத்தவருமான எம்பெருமான் சிவபெருமான் பூதகணங்களையும், பூதகணங்களுக்கெல்லாம் ராஜாவான சங்கிலி பூதத்தாரையும் அமைதிப்படுத்தி, ஆசுவாசப்படுத்தி தன்னோட பிள்ளைகளாக பொறுப்பு ஏற்றுக்கொண்டு கைலாயத்தில் வைத்துக் கொண்டார்.
இப்படியாக சிவபெருமான் ஆணையின் பேரில் பூதராஜாவான நமது சங்கிலி பூதத்தார் சுவாமி மற்ற பூதகணங்கள் உதவியோடு மிகவும் சிறப்பாக கைலாய நிர்வாகம் செய்து கொண்டு இருந்தார். ஒருமுறை சிவபெருமான் சங்கிலி பூதத்தாரிடம் மொத்த கைலாய நிர்வாகப் பொறுப்பையும் கொடுத்து விட்டு ‘பூலோகப் பயணம் போய் வருகிறேன்’ என்று கூறிச் சென்றார்.அப்படி போன சிவன் திரும்பி வரவேயில்லை. நெடுங்காலமாக பொறுத்திருந்து பார்த்த பார்வதி அன்னை ஆனவர் பூதத்தாரை அழைத்து,‘அமிர்த பாலனே, பூமிக்கு போன உங்கள் தந்தையை வெகுநாட்களாக காணவில்லையே.விபரம் ஏதும் அறிவாயா…' என்று விசாரிக்க, 'இன்னும் சிறிது நாளில் வந்து விடுவார் அன்னையே’ என்று பூதத்தார் பதில் கூறினார். இப்படியாக பல நாள்கள் கழிந்தன.
கேட்கும் போதெல்லாம் பூதத்தார் இதே பதிலை சொல்ல பார்வதி அன்னை ஒருநாள் கோபப்பட்டு, 'என்ன செய்வாய், ஏது செய்வாய், என்று நான் அறியேன். நீயே நேராக பூலோகம் சென்று உங்கள் தந்தையை கையோடு அழைத்து வா' என்று உத்திரவிட, மீறமுடியாத பூதத்தாரும் தந்தையைத் தேடி பூலோகம் கிளம்பினார். அப்படி அவர் தேடி வரும்போது தூரத்தில் சிவனும் கைலாயத்துக்கு திரும்பி வருவதை பூதத்தார் பார்த்து விட்டார். ஆனால் பூதத்தார் வருவதை சிவபெருமான் கவனிக்கவில்லை.
'ஆஹா.., நாம் கைலாயம் விட்டு கீழிறங்கி வருவதை அப்பா பார்த்தால் கொடுத்த கைலாயப் பொறுப்பை கவனிக்காமல், ஊர் சுற்றுவதாக தவறாக நினைத்து, கோபப்பட்டு, சத்தம் போடுவாரே.., ஏன் இப்படி வந்தாய் என்று கேட்டால் பார்வதி அன்னை ஆணை இட்ட விபரம் சொல்ல வேண்டி வருமே…, நாம் சாபம் வாங்கினாலும் பரவாயில்லை, நம்மால் அன்னை பார்வதி ஏச்சும், பேச்சும் வாங்கக்கூடாது, குடும்பத்தில் குழப்பம் வந்து விடக்கூடாது’ என்றெல்லாம் பலவாறு எண்ணிய பூதத்தார், பாதை ஓரத்தில் கிடந்த பாம்புச்சட்டையில் புகுந்து சிவபெருமான் கண்ணில் படாமல் மறைந்து கொண்டார். இதனால்தான் சங்கிலி பூதத்தாருக்கு 'சட்டநாதன்' (சட்டைநாதன்) என்றொரு பெயரும் உண்டு. மேலும் சங்கிலி பூதத்தார் சுவாமி இருக்கிற இடத்தில் எல்லாம் பாம்பு இருக்கும். சுவாமி பாம்பாகத்தான் பக்தர்கள் கண்ணில் படுவார். ஆனால் யாரையும், எந்த தொந்திரவும் செய்ய மாட்டார். தன்னை வேண்டி வழிபடுகிற பக்தர்களது கனவிலும் பாம்பாகத் தான் வருவார். ஆபத்து நேரங்களில் ‘ சட்டநாதா, சங்கிலிபூதம்’ என்று அபயக்குரல் கொடுத்தால் சரசரவென்று வந்து உதவிடுவார்.
‘தாய் அறியாத சூல் உண்டோ’, ‘தந்தை அறியாத பிள்ளை உண்டோ’ சங்கிலி பூதத்தார் தன் கண்ணில் படக்கூடாது என்பதற்காக பாம்புச்சட்டையில் புகுந்ததை ஞானதிருஷ்டியில் கண்ட சிவபெருமான் சங்கிலி பூதத்தாரை அழைத்து, ‘மகனே, சட்டநாதா, சங்கிலிபூதம், அமிர்த பாலா, கைலாயத்தில் சிறப்பாக காவல் நிர்வாகம் செய்து வரும் உனது பாதுகாப்பும், திருவருளும் பூலோக மக்களுக்கும் வேண்டும் என்பதற்காகவே யாம் இந்த திருவிளையாடல் புரிந்தோம். நீதி, நேர்மை, நியாயம், நிர்வாகங்களில் சிறந்த காக்கும் கடவுளான அன்பு மைந்தன் உனக்கு இப்போது எமது அன்பு பரிசுகளாக ஆக்கும் வரம், காக்கும் வரம், அழிக்கும் வரமும் தந்தோம். உன்னை வணங்குவோர் எந்தக் குறையுமின்றி அன்பிலும், அறத்திலும், செல்வத்திலும் சிறந்து விளங்குவார்கள். நீ பூலோகம் சென்று சிறப்பான திருவிளையாடல்கள் புரிந்து, மக்களுக்கு நன்மைகள் பல செய்து யாம் இருக்கும் தென்கைலாயமாம் பொதிகை மலை வந்து எம்மை அடைவாய்.’ என்று ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.
இப்படியாக பூலோகம் வந்து சேர்ந்த பூதத்தார் ஒரு இடமென்று தங்காமல் பல புண்ணிய ஷேத்திரங்களுக்கும் பயணம் சென்றார். எனவேதான் அவருக்கு ‘ஷேத்திரபாலன்’ என்றொரு பெயரும் உண்டு.அப்படி சென்ற இடங்களில் எல்லாம் பல திருவிளையாடல்கள் செய்து மக்களினால் கோயில்கள் கட்டி கும்பிடப்படுகிறார்.
இவ்வாறு அய்யன் சிவபெருமானிடம் ஆக்கும் வரம், காக்கும் வரம், அழிக்கும் வரம் பெற்றதையே மூன்று முகமாக கொண்டு மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவிலில் தன்னை வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் அருள்பாலித்து வருகிறார் சுவாமி சங்கிலி பூதத்தார்.

No comments: