Monday, July 22, 2019

மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவில் கொடைவிழா

மழை மற்றும் குழந்தை வரம் அருளும் பிரசித்தி பெற்ற மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவில் கொடைவிழா 23.07.19, செவ்வாய் கிழமை.


திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா சிங்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அணை கட்டப்படுவதற்கு முன் தற்போது நீர் தேக்கப் பகுதியாக உள்ள அனைத்து இடங்களுமே சிங்கம்பட்டி மக்களுக்கு சொந்தமான வயலும், தோப்பும், தோட்டங்களுமாக இருந்தன. அங்கு வீடுகள் கட்டி வசித்து வந்தவர்கள் அடிக்கடி வரும் காட்டாற்று வெள்ளம் மற்றும் மலையிலிருந்து இறங்கி வந்து ஆடு, மாடு போன்ற வளர்ப்பு மிருகங்களையும், சில நேரம் மனிதர்களையும் தாக்கும் வன விலங்குகளிடம் இருந்து காத்துக் கொள்ள தங்கள் குடியிருப்புகளை காலப்போக்கில் சிங்கம்பட்டி கிராமத்திற்கு மாற்றிக் கொண்டனர். ஆனாலும் காட்டாற்று ஓரமாய் பாறைகள் மேல் முன்னோர்கள் கட்டி வழிபட்டு வந்த கோயில்கள் இன்றளவும் அங்கே இருந்து வருகின்றன.

சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் ஆளுகைக்கு கீழ் உட்பட்டிருந்த ஜமீன் சொத்துக்களான பொதிகை மலைப்பிரதேசங்கள் சுதந்திரமடைந்த பின் நாட்டுடைமையாக்கப்பட்டு விட்டாலும், பூர்வபந்த பழக்கமாக மணிமுத்தாறு மலைப்பகுதியில் அமைந்துள்ள கோவில்களின் திருவிழாக்கள் வனத்துறையினரின் சிறப்பு அனுமதி பெற்று வருடா வருடம் நடத்தப்பட்டு வருகின்றன.

மணிமுத்தாறு அருவிக்கரையில் சங்கிலி பூதத்தார், தளவாய் மாடசாமி, பட்டவராயர், கும்பாமுனி போன்ற இருபத்தியொன்று மாட தெய்வங்கள் மற்றும் பல சுவாமிகள் சமேதமாக அமைந்துள்ள அம்மன் கோவிலுக்கு வாரம் தோறும் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் சிங்கம்பட்டியில் இருந்து தவறாமல் சென்று வழிபடுவோர் உண்டு. வருடாந்திர கொடை விழாவின் போது பலரும் தங்கள் குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காது குத்துவர். சிங்கம்பட்டி ஊர் அம்மன் கோயில் நிர்வாகம் சார்பாக ஊர் மக்களிடம் வரி பிரித்து ஆடுகள் வாங்கி பலியிட்டு, அசைவப் படையல் போட்டு சுவாமிகளுக்குப் படைத்த பின்னர் கோயிலுக்கு வரும் உள்ளூர், வெளியூர் அனைத்து பக்தர்களுக்கும் பந்தி போட்டு, அன்னதானம் பரிமாறுவது பல தலைமுறைகளாக இருந்து வரும் பழக்கம் ஆகும்.

சிங்கம்பட்டி ஊர் மக்கள் மட்டுமல்லாமல் ஏர்மாள்புரம், பாப்பான்குளம், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் அக்கம்பக்க கிராம மக்கள் மற்றும் மணிமுத்தாறில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படை மூன்றாம் மற்றும் ஒன்பதாம் அணியினர், பொதுப்பணித்துறை, மீன்வளத்துறை, வனத்துறை, கோதையாறு மின்சாரத்துறை மற்றும் மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு எஸ்டேட் ஊழியர்கள் பலரும் குடும்பங்களோடு கலந்து கொள்வர். மேலும் தங்களால் முடிந்த காணிக்கைகளை வரிப்பணமாகவோ அல்லது அன்னதான சமையலுக்கான பொருட்களாகவோ கோவில் நிர்வாகத்திடம் கொடுத்து விடுவர்.


கோவில் நிர்வாகம் சார்பாக பக்தர்கள் அனைவருக்கும் செவ்வாய் மதியம் முதல் தனிப்பந்தலில் பந்தி போட்டு அன்னதானம் நடந்து கொண்டே இருக்கும். புதன்கிழமை அதிகாலை பூஜை முடிந்தவுடன் அசைவப்படையலைப் பிரித்து, கொடை காண வந்திருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் பந்தி போட்டு பரிமாறி விடுவார்கள். படையல் சோறு, கறி மற்றும் அன்னதானப் பிரசாதங்கள் அனைத்தையும் மலையை விட்டு கீழே எடுத்து வரும் பழக்கம் கிடையாது என்பதால் கோவிலிலே விநியோகித்து முடித்து விடுவது வழக்கம்.

பொதுவாக மற்ற நாட்களில் மாலை ஐந்து மணிக்குள் மணிமுத்தாறு அருவி, எஸ்டேட் செல்லும் வண்டிகள் கீழே வந்து விடவேண்டும். யாருக்கும் மலைமேல் தங்கும் அனுமதி கிடையாது. ஆனால் அருவிக்கரை அம்மன் கோவில் கொடையான செவ்வாய் இரவு மட்டும் கோவிலில் பக்தர்கள் தங்க சிறப்பு அனுமதி உண்டு. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துறை பாபநாசம் பணிமனையின் சார்பாக கொடை தினமான செவ்வாய் கிழமை காலை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மணிமுத்தாறு சென்று விட்டால் அங்கிருந்து தனியார் வேன்களிலும் டிக்கெட் போட்டு அழைத்துச் செல்வர். செவ்வாய் இரவு முழுதும் வாகனங்களில் பக்தர்கள் சென்று அம்மனையும், பிறதெய்வங்களையும் வழிபட்டு வருவார்கள்.


மழை மற்றும் குழந்தை வரம் அருளும் பிரசித்தி பெற்ற மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவில் கொடை விழா காண அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறோம்,

No comments: