Monday, July 06, 2015

சுவாமி சங்கிலி பூதத்தார் சைவமா… அசைவமா….




சுவாமி சங்கிலி பூதத்தார் சைவமா… அசைவமா…. என்ற சந்தேகம்  பல பக்தர்களுக்கு இருக்கிறது. ஏனென்றால் அவரை வணங்கும் பல பக்தர்களும் அசைவ உணவு உண்பவர்களாக இருப்பது  இந்த சந்தேகத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. என்னிடம் கூட பல நண்பர்கள் திருக்குறுங்குடி மலை நம்பி கோயிலில் சங்கிலி பூதத்தாருக்கு ஆடு வெட்டுவதாக கூறி இருக்கிறார்கள். நம்பி கோயில் உள்பட பூதத்தார் இருக்கும் பெரும்பாலான தலங்களுக்கு சென்று, உரியவர்களிடம் விசாரித்து தகவல்கள் அறிந்ததால் அறுதியிட்டு கூறுகிறேன்.  பூதத்தாருக்கு நம்பி கோயிலிலும் சரி. மற்ற எங்கேயுமே ஆடு,கோழி பலி கிடையாது. சில குறிப்பிட்ட கோயில்களைத் தவிர மற்ற எல்லாக் கோயில்களிலுமே பூதத்தாரனவர் பேச்சி அம்மன், சுடலை மாடசுவாமி, பட்டவராயன் போன்ற 21 வகையான பரிவார தெய்வங்கள் மற்றும் தேவதைகளோடு தான்  இருப்பார்.  அவருடன் இருக்கும் மற்ற பரிவார தெய்வங்களுக்கு இடப்படும் உயிர்ப்பலியை சங்கிலி பூதத்தாருக்கு இடுவதாக பலரும் தவறாக புரிந்து கொள்கின்றனர். அடுத்தமுறை நம்பி கோயில் சென்றால் கவனித்து பாருங்கள். பலிகள் இடப்படுவதும், படையல் இடப்படுவதும் அவர் பீடத்தின் முன் கிடையாது. வெகு தூரம் தள்ளித்தான்.


எங்கள் ஜமீன் சிங்கம்பட்டி ஊர் அம்மன் கோயிலில் சங்கிலி பூதத்தார் மற்ற பரிவார தெய்வங்கள், தேவதைகளோடு அருள் பாலித்து வருகிறார்.வருடா வருடம் சித்திரை மாதம் கொடை விழா நடை பெறும் போது அம்மன் மற்றும் மற்ற தெய்வங்களுக்கு ஆடுகள், கோழிகள், துள்ளு மறி என்னும் பிறந்த குட்டிகளை பலியாக இடும்போது வெட்டப்படும் ஆடுகளும், கோழிகளும் துடித்து, துள்ளி சங்கிலி பூதத்தார் பீடம் அருகில் கூட சில நேரம் வந்து விடும். புதிதாக கொடை  பார்க்க வந்த மற்ற ஊர்க்காரர்கள் ஜமீன்சிங்கம்பட்டி அம்மன் கோயிலில் பூதத்தாருக்கு ஆடு வெட்டுகிறார்கள் என்று கூற  வாய்ப்பிருக்கிறது என்றாலும் உள்ளூர்காரர்களுக்கு தான் உண்மை நிலை தெரியும்.


 சுத்த சைவரான பூதத்தாருக்கு பிரியமானவற்றில் முக்கியமானவை பல விதமான பூக்களால்  செய்யப்படும் புஷ்பாஞ்சலி அர்ச்சனைபல வண்ண மலர்கள் கொண்டு தொடுக்கப்பட்ட பூமாலைகள், வடை மாலை,  எலுமிச்சை மாலை, பானகரம், வார்ப்புப் பாயாசம்,  பச்சரிசியை ஊறவைத்து கையால் இடித்து மாவாக்கி வெல்லம் கலந்து உருண்டையாக செய்து பின் நடுவில்  குழி ஏற்படுத்தி எண்ணெய் விட்டு திரிபோட்டு சுவாமி முன் தீபம் ஏற்றப்படும் வேண்டுதல் மாவிளக்கு, வாழைப்பழக்குலை மற்றும் முற்றிலும் சைவப்படையலான பச்சரிசிச்சோறு மற்றும்  காய்கறிகளால் செய்யப்பட்ட குழம்பு, கறிகளோடு படைக்கப்படும் ஆசாரப்படைப்பு. 


பூதத்தார் சுத்த சைவமாக இருந்தாலும் அவர் குடி கொண்டுள்ள கோயில்களில் மற்ற தெய்வங்களுக்காக நடக்கும் உயிர்ப்பலிகள் மற்றும் அசைவப்படைப்புகளை கண்டு  கொள்வதில்லை. அவரது பக்தர்கள் புலால் உண்ணுவதையும் தடுப்பதில்லை. விழாக்காலங்களில் அவரது பக்தர்களே அசைவம் தவிர்த்து தீவிர விரதம் மேற்கொள்கின்றனர்.
 

சொரிமுத்தையனார் கோயிலுக்கு கிடா செய்யப் போகிறோம் என்று பேச்சு வழக்கில் கூறுவார்கள். ஆனால் அசைவப்படையல் இடுவது சொரிமுத்து ஐயனாருக்கோ, மகாலிங்கத்திற்கோ, சங்கிலி பூதத்தாருக்கோ, சுடலைமாடசுவாமி, கரையடி மாடசுவாமி, பேச்சி மற்றும் பிரம்மரட்சதை அம்மன்களுக்கு கிடையாது. தளவாய் மாடசுவாமி, மற்றும் பட்டவராயன் வகையறாக்களுக்கே அசைவப்படைப்பு. கோயில் சென்றால் பாருங்கள். 
சொரிமுத்து ஐயனார்,மகாலிங்க சுவாமி, சங்கிலி பூதத்தார், சுடலைமாடசுவாமி, கரையடி மாடசுவாமி, பேச்சி மற்றும் பிரம்மரட்சதை அம்மன்கள் இருக்கும் பகுதிக்கும், தளவாய் மாடசுவாமி, பட்டவராயன் கோயில்கள் இருக்கும் பகுதிக்கும் நடுவில் ஓடும் காட்டாறு மணிமுழுங்கி மரம் பக்கமாக ஓடும் காரையாற்றில் வந்து சேரும். தளவாய் மற்றும் பட்டவராயன் கோயிலில் அசைவப் படைப்பு இட்டு சாப்பிட்டு வருபவர்கள் குளித்த பின்னே சொரிமுத்து ஐய்யனார் வகையறாக்கள் இருக்கும் இந்தப்பக்கம் வரவேண்டும் என்பதற்காகத்தான் அந்தக்காட்டாறு ஓடுவதாக தலவரலாறு கூறுகிறது. முப்பது ஆண்டுகள் முன் வரை தளவாய் மாடசுவாமி மற்றும் பட்டவராயன் கோயிலில் அசைவம் சாப்பிட்டு வந்தவர்கள் காட்டாற்றில் அல்லது காரையாற்றில் குளித்த பின்தான் சொரிமுத்தையனார் வகையறாக்கள் இருக்கும் பகுதிக்கு  வந்தனர். தற்போது தளவாய் மாடசுவாமி, பட்டவராயன் கோயில்கள் செல்வதற்கும், அம்மன் கோயில் முன்பும் காட்டாற்றின் மேல் பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன.  பாலங்கள் கட்டப்பட்டு, பாதைகள் சீரமைக்கப்பட்டு, பொழுதுபோக்கிற்காக செல்வது போல் கோவில்கள் எல்லாம் சுற்றுலாத்தளங்கள் ஆகிவிட்ட இந்தக் காலத்தில் கோயில் நியதிகள், ஆலய   விதிமுறைகள் கடைபிடிப்போர், பின்பற்றுவார் யாருமில்லை.

14 comments:

HHH said...

Arumai.... :)

HHH said...

Arumaiyana Padivu...Nandri

துபாய் ராஜா said...

தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.HHH.

துபாய் ராஜா said...

தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.HHH.

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு... பெரும்பாலான முனியய்யா கோவில்களில் கூட அவருக்கு கிடாய் வெட்டுவதில்லை. அங்கிருக்கும் காளிக்கோ மற்ற தெய்வத்துக்கோதான் வெட்டுகிறார்கள்...
எங்கள் ஊர் முனியய்யாவுக்கு எப்பவும் சைவம்தான்....

துபாய் ராஜா said...

தொடர் வருகைக்கும், முனியய்யா குறித்த தகவலுக்கும் நன்றி நண்பர் குமார்.

Anonymous said...

Arumaiyana Padivu .anna

துபாய் ராஜா said...

தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி தம்பி ராக்‌ஷ முத்து.

Unknown said...

Good...... innum poothathar pathi therincha share pannunga friends

tank said...

அருமையான பதிவு

Unknown said...

MARIMUTHU said...
en kula theivam theriyavillai en ammavin kula theivam sangili boothathar
nan avarai kumpittal ayyanudaya arul kidaikkuma,,,,

துபாய் ராஜா said...

// ARUL SELVAN said...
Good...... innum poothathar pathi therincha share pannunga friends //

தொடர்ந்து பதிவுகளை படித்து வாருங்கள் நண்பரே...

துபாய் ராஜா said...

// tank said...
அருமையான பதிவு //

தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

துபாய் ராஜா said...

// MARIMUTHU said...

en kula theivam theriyavillai en ammavin kula theivam sangili boothathar
nan avarai kumpittal ayyanudaya arul kidaikkuma,,,,//

குலதெய்வம் தெரியாத அனைத்து பக்தர்களும் செல்ல வேண்டிய திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மலை மேல் காரையாரில் அமைந்துள்ள சொரிமுத்து ஐயனார் கோவில் ஆகும். சொரிமுத்து ஐயனார் கோவிலின் மூலஸ்தானத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர் ஐயன் சங்கிலி பூதத்தார் ஆவார். எனவே தங்கள் அன்னை வழி குலதெய்வமான சங்கிலி பூதத்தாரை தாராளமாக வணங்கலாம்.