Monday, October 08, 2012

காலை உடைத்த காஞ்சனா…. - பாகம் 3


காலை உடைத்த காஞ்சனா….


பாகம் 3 - பாதியில் திரும்ப வேண்டியதுதானா பாலாப்பூரிலிருந்து….

படுக்கையறையின் வெளியே பரபரப்பான பேச்சுக்குரல் கேட்டு திடுக்கிட்டு கண் விழித்த நான் கைக்கடிகாரத்தில் நேரம் பார்க்க இரவு மணி பத்து என அது காட்டியது. படுக்கையில் இருந்து எழுந்தவன் வெளியில் சென்று பார்க்க மணி,சிங், சாஜன் மூவரும் ஹாலில் அமர்ந்து கலகலப்பாக பேசிக் கொண்டு டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர்.என்னைப் பார்த்ததும் பேச்சை நிறுத்திய சிங் எழுந்து சமையலறைக்குள் சென்று விட்டார். சாஜனும் அவர் பின்னாலே சமையலறைக்குள் நுழைந்தான். முகத்தைக் கழுவி விட்டு துண்டால் துடைத்துக் கொண்டே ஹாலில் வந்தமர்ந்த என்னிடம் ”என்ன சார், நல்ல தூக்கமா..” என்று மணி கேட்க “ஆமா மணி. நேற்று ராத்திரி டிரெயினில் தூக்கமேயில்லை. அதான் அசதியில் தூங்கிவிட்டேன்” என்றேன்.”சரியான பசி மணி.. பக்கத்தில நல்ல ஹோட்டல் எங்கே இருக்கு சொல்லு. போய் சாப்பிட்டு வரலாம்.” என நான் கேட்க “ஏன் சார்… ஹோட்டல்லாம் போய்க்கிட்டு… சிங் சார் சிக்கன் பிரியாணி பண்ணிட்டு இருக்கார். சூப்பரா இருக்கும்.இங்கேயே சாப்பிட்டுடலாம்” என்றான் மணி.

”ஏன் மணி சிங் மூஞ்சி கொடுத்தே எதுவும் பேச மாட்டேன்கிறார். என்கிட்டே மட்டும்தானா… இல்லை எல்லோர்ட்டேயும் இப்படித்தானா..” என்று மதியத்திலிருந்தே என் மனதில் உறுத்திக் கொண்டிருந்த கேள்வியை மணியிடம் நான் கேட்டவுடன் “இல்லை சார்..அவர் நல்ல டைப். ரொம்ப வருஷமா இங்கே இருக்கார். திடீர்ன்னு வேற ஊருக்கு மாற்றல்ன்னதும் டல்லாயிட்டாரு. நீங்க வேற வந்துட்டீங்களா..அதான் ரொம்ப வருத்தாமாயிருக்கார்…” என அவன்  கூறினான். “என்னப்பா நான் வந்ததுனாலேயா…” என நான் குழப்பத்துடன் கேட்க,”ஆமா சார்…நீங்கதானே அவரை மாற்ற வந்த ஆளு அதான் உங்ககிட்டே எதுவும் பேசமாட்டேன்கிறார்.” என்று காரணத்தை மணி போட்டுடைத்தான்.

இந்த பிரச்சினையை இதற்கு மேல் விட்டால் தேவையில்லாத குழப்பம்தான் என முடிவெடுத்த நான் கிச்சனுக்கு சென்று,”சிங்,கொஞ்சம் ஹாலுக்கு வாங்க. உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்” என்றேன்.அவர் ஹாலுக்கு வந்ததும்,”தோ பாருங்க சிங்.நான் புதுசா இந்த கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருக்கேன். என்னை இந்த சைட்டுக்கு போங்கன்னு சொன்னதாலே இங்கே வந்தேன். என்னாலே உங்களுக்கு மனக்கஷ்டம் வேண்டாம்.நான் இப்பவே சென்னை ஆபிஸ் பிராஜெக்ட் மேனேஜர்ட்ட பேசி இந்த சைட் பிடிக்கலை.வேற சைட்டுக்கு மாத்திக் கொடுங்கன்னு கேட்கிறேன்.நீங்க இங்கேயயே கண்டினியூ பண்ணுங்க” எனவும்,” இல்லை சார்.இது மேலிடத்துல நாலைந்து மாசம் முன்னாடியே முடிவு பண்ணது தான். நீங்க  இல்லைன்னாலும் வேற யாராவது வந்தா நான் போக வேண்டியதுதான். உங்க மேலே எனக்கு எந்த வருத்தமும் இல்லை.ரொம்ப நாள் பழகின இடத்தை விட்டுப்போறதனாலே மனசு சரியில்லை. அதான் உங்ககிட்டே மட்டுமில்லை… ரெண்டு மூணு நாளா யார்ட்டயுமே  நான் சரியா பேசலை. மணியும், சாஜனும் கூட அதனால்தான் அவங்க ரூம்ல இருந்து என்னைப் பார்க்க இந்த நேரத்தில் வந்திருக்காங்க.. வேறெந்த காரணமும் இல்லை.” எனத் தெளிவாகக் கூறி “பிரியாணி ரெடியாயிடுச்சு. வாங்க எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோம்.” என அன்புடன் அழைத்தார். சாப்பிட்டு முடித்தவுடன் “ சார் நீங்க ரெஸ்ட் எடுங்க.நாளைக்கு காலைல நான் கிளம்பறதனோலே லோக்கல் ஃபிரெண்ட்ஸ் எல்லோரையும் பார்த்து சொல்லிட்டு வந்துடுறேன்” என்று கூறி விட்டு மணி மற்றும் சாஜனுடன் வெளியே கிளம்பிச் சென்றார்.

சிறிது நேரம் டி.வி பார்த்து விட்டு நானும் உறங்கச் சென்றேன்.காலையில் ஒன்பது மணிக்கு சென்றால் போதும் என்பதால் கொஞ்சம் மெதுவாக எழுந்து குளித்து கிளம்பினேன். அதற்குள் இரவு வேலைக்குச் சென்ற பாண்டேவும், தேசிங்கும் வந்து குளித்து கிளம்பி ராஜேஷ் சிங்கை வழியனுப்ப அவருடன் இரயில் நிலையம் செல்ல தயாராய் இருந்தனர். எல்லோரும் கிளம்பி சாரஸ்தா வர அங்கு பணிக்கு செல்ல நின்று கொண்டிருந்த மணியும்,சாஜனும் எங்களை நோக்கி வந்து ராஜேஷ் சிங்கை கைகுலுக்கி வழியனுப்பினர். அந்த நேரம் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேருந்தும் வந்து விட பணிக்குச் செல்ல வேண்டிய நாங்கள் மூவரும் ஓடிச்சென்று ஏறினோம்.கடைசி இருக்கையில் சென்று அமர்ந்து திரும்பி பார்த்த போது கவாண்டே பைக்கை நிறுத்தி சிங்குடன் பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது.

நாங்கள் அலுவலகம் சென்ற சிறிது நேரத்தில் கவாண்டேவும் வந்து விட நான் செய்ய வேண்டிய பணிகள் பற்றி விளக்கி கூறி பின் அன்று முழுதும் அனைத்து டிபார்ட்மெண்டுகளுக்கும் அழைத்துச் சென்று முக்கிய அலுவலர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தினார். ஆராய்ச்சிகத்தில் மின்சாரம் பெறும் சப் ஸ்டேசன் முதல் மின்சார விநியோகம் மற்றும் எல்லா டிபார்ட்மெண்டிலும் இருந்த ஃபர்னஸ்,ஓவன், பலதரப்பட்ட மோட்டார்கள் போன்ற மின் இயந்திரங்கள், ஜெனரேட்டர், மின் விசிறிகள், விளக்குகள் போன்ற மின்சாரம் சம்பந்தப்பட்ட மின்சாதனங்கள் பராமரிப்பு அனைத்தும் எங்கள் நிறுவனத்தின் பொறுப்பு என்பதால் அந்த வாரம் முழுதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டிபார்ட்மெண்டாக மணியை உடன் அழைத்துச்சென்று அங்குள்ள மின் சாதனங்கள், இயந்திரங்கள், விளக்குகளின் இணைப்புகள் வரைபடத்தில் குறிப்பிட்டது போன்று இருக்கிறதா, அல்லது யாராவது ஏதாவது மாற்றம் செய்துள்ளார்களா என சரிபார்த்தேன். மதியம் கேண்டினில் உணவு, காலை,மாலை ஆராய்ச்சி நிறுவன பேருந்தில் சென்று திரும்புதல் என அந்த வாரம் கழிந்தது.

 சனி, ஞாயிறு ஆராய்ச்சியகம் விடுமுறை என்பதால் உள்ளே நாங்களும், பாதுகாப்புபணியில் இருந்த இராணுவ வீரர்களும் மட்டுமே இருந்தோம். கவாண்டேவும் பத்து மணியளவில் வந்து அரைமணி நேரம் இருந்து விட்டு போய் விட்டார். மதியம் மூன்று மணியளவில் சப்ஸ்டேசன் பக்கமாக பாரா வந்த செக்யூரிட்டி இராணுவ வீரரொருவர் “ என்ன மணி, கிரிக்கெட் விளையாடப் போகலாமா…” என அழைக்க உடன் பணிக்கு இருந்த உள்ளூர்க்காரரிடம், “நீ இங்கிருந்து பார்த்துக் கொள். ஏதாவது பிரச்சினை என்றால் என் செல்லில் கூப்பிடு.உடனே வந்து விடுவோம்.” என்று கூறி விட்டு “ சார். வாங்க கிரிக்கெட் விளையாடப் போகலாம்” என்று என்னையும் அழைத்தான்.”இல்லை மணி. நீன்னா போ. நான் இங்கேயே இருக்கேன் என்றவனிடம்,” சார், இப்பவே மூணு மணி தாண்டியாச்சு. போய் ஒரு மணி நேரம் விளையாடிட்டு அப்படியே கிளம்ப சரியா இருக்கும். நீங்க விளையாட வராட்டாலும் சும்மா உட்கார்ந்து வேடிக்கையாவது பாருங்க.வாங்க..வாங்க….” என்று மணி தொடர்ந்து வற்புறுத்த நானும் அவனுடன் கிளம்பி வெளிச்சுற்று சுவருக்கு அருகே இருந்த விளையாட்டு மைதானம் வந்தோம்.

மணி அவர்களுடன் இறங்கி விளையாட நான் மைதானத்தின் ஒரு பக்க எல்லையில் இருந்த மரத்தின் அடியில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பத்து பேர் மட்டுமே விளையாடுவதால் ஆளுக்கு இரண்டு ஓவர் பேட்டிங். மற்றவர்கள் பவுலிங், ஃபீல்டிங். இரண்டு ஓவருக்குள் அவுட்டாகாமல் அதிக ரன் எடுப்பவரே வின்னர். மற்ற விதிமுறைகள் வழக்கம் போல.ஆட்டம் கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருந்த நேரத்தில் நான் அமர்ந்திருந்த திசையை நோக்கி ஒருவர் ஓங்கி அடித்த பந்து என்னைத் தாண்டி வெகுதூரம் செல்ல என்னை எடுத்துத் தருமாறு கேட்டுக்கொண்டு அவர்களிடமிருந்த மற்றொரு பந்தை வைத்து விளையாட்டைத் தொடர்ந்தனர்.

பந்து விழுந்த இடத்தை நான் பார்க்காததால் உத்தேசமாக தேடிக்கொண்டு சுற்றுச்சுவரின் உள்பக்க எல்லை வரை வந்துவிட்டாலும் புற்களும், புதர்களும், சிறுகுறு செடி, கொடிகளுமாய் அடர்ந்திருந்ததால் பந்து கன்ணில் படவேயில்லை.அப்போது சற்றுத்தள்ளி சடசட,சரசரவென வித்தியாசமான சத்தம் ஒன்று கேட்க நரியோ, பாம்போ அல்லது வேறெதுவும் காட்டுவிலங்கோ என பதட்டமடைந்து மைதானம் நோக்கி திரும்பி நடக்கத்தொடங்கியவனை மேலும் பயந்து பதறவைத்தாள் திடீரென என்முன் வந்து வழிமறித்து நின்ற காஞ்சனா.

                                                            ( தொடரும் )
                                        
                                   பாகம் 4

1 comment:

'பரிவை' சே.குமார் said...

படித்தேன்...
அருமை. ஏன் தொடரவில்லை..