Sunday, February 21, 2010

குழியில் தள்ளிய குட்டிச்சாத்தான்.... – பாகம் 3



வந்த வேகத்தில் சடாரென பாலத்தில் இறங்கியதால் வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் அந்த கருப்பு உருவத்தின் மீது ஏறி சிறு பள்ளத்தில் இறங்கிய பைக்கை எப்படியோ பேலன்ஸ் செய்து இரண்டடி தூரம் தள்ளி வந்தவன் அந்த கருப்பு உருவம் மீண்டும் பைக் முன் கொஞ்சம் பெரிதாக தெரிந்ததால் அதிர்ந்து போனேன். எப்படி மறுபடியும் அந்த உருவம் முன்னால் வந்திருக்கும் என்ற எண்ணமே எனது அதிர்ச்சிக்கு காரணம்.

நொடிப்பொழுதிற்குள் இவையனைத்தும் நிகழ்ந்ததால் வேறு எதையும் யோசிக்க முடியாமலும் பைக்கை நிறுத்த முடியாமலும் அந்த கருப்பு உருவத்தின் மேல் நேராக விட்டு விட்டேன். என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ‘’டமால்” “ டிமீல்” “கடமுடா” “அய்யோ, அம்மா,அப்பா” என ஏதேதா சத்தம். அத்தோடு நான் நினைவிழந்து விட்டேன்.

சில நிமிடங்கள் கழித்த பின், “ஏ... இன்னைக்கு மூணுல்லா கெடக்கு... நிக்காதே...நிக்காதே... வெரசாப் போ... வெரசாப் போ...” என பலரது பேச்சுக்குரல் கேட்கவும் மயங்கி கிடந்த நான் கண்விழித்தேன். தரையிலே நான் கிடக்க என்னைக் கடந்து ஒரு லோடு ஆட்டோ சென்று கொண்டிருந்தது.

தொட்டி வண்டி என்று சொல்லப்படும் அந்த லோடு ஆட்டோவில் ஏதோ தோட்டத்தில் வேலைபார்த்து விட்டு செல்லும் ஆண்களும், பெண்களுமாக ஏழெட்டு பேர் நின்று கொண்டு பரபரப்பாக பேசிக்கொண்டு “த்தூ... த்தூ... த்தூ... “ என காறித் துப்பிக்கொண்டு சென்றனர்.

கை,கால்,உடலெல்லாம் ஒரே வலி. எப்படியோ தட்டுத் தடுமாறி எழுந்தவன் சுற்றும் முற்றும் பார்த்தேன். பாலத்தின் மையத்தில் இருந்த ஒரு பெரிய குழிக்குள் பைக் கிடந்தது. அதற்கு இடப்பக்கமாக கணேஷ் “அய்யோ, அம்மா” என முணங்கி கொண்டு தரையில் கிடந்தான். அந்த கருப்பு உருவம் இப்போது கண்ணில் படவில்லை.

என்ன நடந்திருக்கும் என யோசித்து யோசித்து பார்த்தேன். இரண்டாவது முறை அந்த கருப்பு உருவத்தில் ஏறி இறங்கிய பின் எதிர்பாராமல் சடாரென பெரிய குழிக்குள் இறங்கிய அதிர்ச்சியில் நான் பைக் ஹேண்டில்பாரை விட்டுவிட்டதால் வண்டி கட்டுபாடிழந்து நான் ஒருபுறமும், கணேஷ் ஒருபுறமும் தூக்கி வீசப்பட்டிருக்கிறோம் என்பது தெளிவானது.

“கணேஷ், கணேஷ்... ஏய்.. எந்திரிப்பா...” என எதிர்பாராமல் விழுந்த அதிர்ச்சியில் முணங்கி கொண்டிருந்த கணேஷை எழுப்பினேன். அவன் எழமுடியாமல் “சார் முட்டில நல்லா அடிபட்டிருக்கு. பயங்கரமா வலிக்குது. எந்திரிக்க முடியலை” என்றான். நான் மண்டியிட்டு அமர்ந்து அவன் கால் முட்டிகளை என் கால்மேல் எடுத்து வைத்து லேசாக வலிக்காமல் தேய்த்து விட்டேன்.

வலியினால் கண்மூடியிருந்தவன் சிறிது நேரத்திற்கு பின் “சார், போதும். இப்போ பரவாயில்லை” என்றவாறு எழுந்தான். கை, கால்களை உதறியவாறு சிறிது தூரம் நடந்து விட்டு பின் திரும்பி என்னருகே வந்தவன் என்னைப் பார்த்து “சார்......” என அலறினான்.

( தொடரும் )


10 comments:

பிரபாகர் said...

என்ன ராஜா! பயங்கர டரியலா இருக்கு! சான்ஸே இல்லை. அடுத்தத பட்டுனு போடுங்க!

பிரபாகர்.

பிரபாகர் said...

தலைப்பே இல்லாம போட்டிருக்கீரு? இன்னும் பயத்த அதிகப்படுத்தவா?

பிரபாகர்.

vasu balaji said...

superb flow.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப விருவிருப்பா செல்கிறது குட்டிச்சாத்தான்

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப விருவிருப்பா செல்கிறது குட்டிச்சாத்தான் .

ஹேமா said...

இப்போதான் 2 ம் 3 ம் சேர்த்துப் படிச்ச்சேன்.அடுத்து உடன போடுங்க.

அ. நம்பி said...

பிறகு என்ன ஆயிற்று?

விரைவில் தொடருங்கள் ஐயா.

Anonymous said...

சீக்கிரம் அடுத்த பாகத்தை எழுதுங்கள் பாஸ்

Ananya Mahadevan said...

இது அடுக்குமா? இது நியாயமா? இதெல்லாம் ஒரு பகுதின்னு போட்டு எங்கள ஏமாத்தி உங்களுக்கு என்ன புண்ணியம்? இது ஒரு பகுதியின் பகுதி இல்லையா? ப்ளீஸ் அடுத்த பகுதி போடுங்க சார். த்ரில் தாங்க முடியல.

சிநேகிதன் அக்பர் said...

ஆரம்பிக்கிறதுக்குள்ளே முடிஞ்சிடுச்சு.

பாஸ் அடுத்ததை படிச்சிட்டு வாரேன்.