Monday, October 01, 2012

காலை உடைத்த காஞ்சனா…. - பாகம் 2


கடந்த எட்டாண்டிற்கு முன் என் வாழ்வில் நடந்த இத்தனை காலமாக தைத்த முள்ளாய் என் மனதில் தழும்பேறியிருந்த இந்த நிகழ்ச்சியின் அனுபவப் பகிர்வே காலை உடைத்த காஞ்சனா….ஆகும்.


முதல் பாகமான  பாலாப்பூர் சாரஸ்தா படித்துவிட்டு பின் இரண்டாம் பாகமான இங்கு தொடரவும்.


பாகம் 2 ஆராய்ச்சி நிறுவனமும், அரசாங்க விதிகளும்….

என் அதிர்ச்சிக்கு காரணம் வரவேற்பறையில் இருந்த அதே பெண் கேமராவை சரிசெய்தவாறு புகைப்படம் எடுக்கத் தயாரானதே. ஆம். அந்தக் கடையில் அந்தப் பெண்தான் ஆல் இன் ஆல் அழகு ராணி. சுருக்கமாகச் சொன்னால் ஓனர் கம் ஊழியை.. “என்ன சார் எப்படி எடுக்கணும். கோட் போட்டா அல்லது சாதாரணமாகவா...” என்று இந்தியில் கேட்டவளிடம்,    ”சாதாரணமாத்தான்…” என பதில் கூறினேன். குறுகுறு சிரிப்புடன் கூடவே வந்து நின்ற பாண்டே என்னைப் பார்த்து கண்ணைச் சிமிட்டியவாறு  “எப்படி…” என்ற பாவனையில் தலையை அசைத்தான். போட்டோ எடுத்து முடித்து காப்பி வாங்குவதற்காக காத்திருந்த பத்து நிமிடமும் பாண்டே அவளைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தான். 

ஒரு வழியாக போட்டோ வாங்கிக் கொண்டு சாரஸ்தா வந்து ஷேர் ஆட்டோவில் ஏறி சுமார் பத்து கிலோமீட்டர் பயணம் செய்து இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு துறையின் அதிமுக்கிய ஆராய்ச்சி நிறுவனம் என்று அறிவிப்பு பலகை வைத்திருந்த இடத்தில் இறங்கினோம்.சரியான பொட்டல் காடு. கண்ணில் பட்டவரை ஆள் நடமாட்டமே இல்லை.ஆராய்ச்சி நிறுவனத்தின் கோட்டை போன்ற மதில் சுவரும் பிரமாண்டமான இரண்டு பெரிய இரும்புக் கதவுகளும் அந்த இடத்தின் முக்கியத்துவத்தை சொல்லாமல் சொல்லின. கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த போது “கோன் ஹை” என்ற மிரட்டலான குரல் மிரள வைத்தது.


காம்பவுண்ட் சுவரினுள் வெளியிலிருந்து பார்த்தால் தெரியாத வகையில் அமைந்திருந்த செக்யூரிட்டி அறையில் இருந்து எழுந்து வந்த இராணுவ வீரரொருவர் “நான்தான்” என்று கூறிய பாண்டேயிடம் “ஒருமணி நேரம் முன்னாடிதானே வேலை முடித்துச் சென்றாய்...ஏன் திரும்பி வந்தாய்… இவர் யார்... எங்கே அழைத்துச் செல்கிறாய்..” என கேள்வி மேல் கேள்வியாய் அடுக்கினார்.”இவர் புதிதாக வந்துள்ள பொறியாளர். இடம் தெரியாது என்பதால் கேட் பாஸ் போட்டு உள்ளே அழைத்துப் போக வந்தேன்” என்று பதறாமல் பாண்டேவும் பதில் கூற உள்ளே செல்ல அனுமதி தந்தார்.
காட்டு மரங்கள் அடர்ந்து சூழ்ந்திருந்த சாலையில் வழியில் இருந்த விருந்தினர் இல்லம் மற்றும் விளையாட்டு மைதானத்தைக் கடந்து ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற போது இன்னொரு காம்பவுண்ட் சுவரும் பசுமையான பின்னணியில் ஆராய்ச்சியகத்தின் பல கட்டடங்களும் கண்ணில் பட்டன. நுழைவு வாயிலின் அருகில் இருந்த செக்யூரிட்டி அலுவலகம் சென்று தற்காலிக நுழைவுச்சீட்டு எடுத்து மின்சாரத்துறையின் கட்டிடம் சென்றோம். அங்கு ஏற்கனவே காத்திருந்த மேலாளர் கவாண்டே மின்துறையின் உயரதிகாரியான திரு.மாதவராவிடம் நேர்முகத்தேர்விற்காக அழைத்துச் சென்றார்.ஆம்.ஏற்கனவே எங்கள் நிறுவனம் பலகட்டத்தேர்வுகள் முலம் என்னை தேர்வு செய்திருந்தாலும் ஆராய்ச்சியக விதிப்படி அவர்களுக்கு திருப்தி இருந்தால் மட்டுமே அங்கு பணியில் சேரமுடியும். 
 மாதவராவும் அவரது உதவியாளர் சீனிவாசராவும் எனது சான்றிதழ் நகல்களைப் பார்வையிட்டு அனுபவ ரீதியாகவும், சம்பிராதாயகமாகவும் பல கேள்விகள் கேட்டு திருப்தியடைந்தவர்களாய் கவாண்டேவைப் பார்த்து தலை அசைக்க உடனே அவரும் எனது புகைப்படம் ஒட்டிய நிரந்தர அனுமதி நுழைவுச்சீட்டில் கையொப்பமும், முத்திரையும் வாங்கிக்கொண்டார். பின் அங்கிருந்து வெளியே வந்ததும் “உணவு வேளை ஆகி விட்டது. நீங்கள் இருவரும் கேண்டீன் சென்று சாப்பிட்டுவிட்டு அப்படியே இவரை கொண்டு போய் டிபார்ட்மெண்டில் விட்டுவிட்டு நீ கிளம்பு. நான் வீட்டிற்குப் போய் சாப்பிட்டுவிட்டு வருகிறேன்” என்று கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் கவாண்டே கிளம்பிச் சென்றார். 
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பலரும் பணி புரியும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கேண்டின் என்பதால் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், விசாலமாகவும் இருந்தது. வரிசையில் நின்று உணவை வாங்கிக் கொண்டு எங்களைப் போன்ற தனியார் நிறுவன ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட மேல்மாடிக்கு பாண்டே அழைத்துச் சென்றான்.அந்த விரிந்து பரந்த அறையினுள் நுழைந்தவுடன் சுற்றும், முற்றும் பார்த்த பாண்டே எங்கள் நிறுவன சீருடை அணிந்து வலது கோடி சாப்பாட்டு மேஜைகளில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தோர் நோக்கி அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி விட்டு சாப்பிடத் தொடங்கினோம்.சாப்பிட்டு முடித்ததும் மணி, காந்தி,சாஜன்,மதி என்ற அந்த நால்வரிடமும் என்னை அலுவலகம் அழைத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டு பாண்டே கிளம்பிச் சென்றான். 
மற்ற மூவரும் அவரவர் பணிக்கு சென்றுவிட மணி மட்டும் என்னை அழைத்துக்கொண்டு சிறுகுன்று போல மேடான இடத்திலிருந்த மொத்த ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் மின்சாரம்  விநியோகிக்கும் சப்ஸ்டேசனுடன் இணைந்த எங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான்.அந்த இடத்தில் இருந்து பார்த்தால் ஆராய்ச்சி நிறுவனத்தின் எல்லா இடமும் தெரியும் என்பதால் சப்ஸ்டேசனுக்குப் பின்னே உயரமான வாட்சிங் டவரும் இருந்தது.சப்ஸ்டேசன் உள்ளே பேனல் அறையில் அமர்ந்து லாக் புக் எழுதிக்கொண்டிருந்த 35 வயது மதிக்கத்தக்கவரிடம் “சிங் சார், இவர்தான் புதிதாக வந்திருக்கும் இன்சார்ஜ்…” என மணி என்னை அறிமுகப்படுத்த நிமிர்ந்து கூட பார்க்காமல் முகத்தில் எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாமல் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருந்தார். மணியோ என்னை அங்கேயிருந்த இருக்கையில் அமரச்சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த அறைக்குள் சென்றுவிட்டான். அப்படியே அமைதியாக அரைமணி நேரம் கழிய திடீரென பக்கத்து அறையைப் பார்த்து “மணி. நான் கிளம்பறேன்..” என்று சொல்லிவிட்டு இருக்கையை விட்டு எழுந்து சென்றார் அவர்.அவருடன் வெளியே சென்று பேசி வழியனுப்பி விட்டு வந்த மணி “அவர்தான் ராஜேஷ் சிங். கவாண்டே சாருக்கு அடுத்த இன்சார்ஜ்” என்றான்.அந்த நேரம் வெளியே மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்க எட்டிப் பார்த்த மணி “கவாண்டே சார் வந்துட்டாரு..” என்றபடி எழுந்து நின்றான்.உள்ளே வந்த கவாண்டே “மணி, ஜூலை மாத டைம் சீட்டை எடுத்துக்கொண்டு போய் எல்லா டிபார்ட்மெண்ட் H.O.D.ட்டேயும் போய் கையெழுத்து வாங்கிட்டு வந்துடு.போறதுக்கு முன்னாடி நம்ம எல்லா சப்ஸ்டேசன் டிராயிங்ஸ், புது பிராஜெக்ட் ஃபைல் எல்லாம் இவர்ட்ட ஸ்டடி பண்ண எடுத்துக் கொடுத்திடு.” என்று சொல்லி விட்டு அவரது அறையினுள் சென்றார். அவர் சொன்ன எல்லாவற்றையும் எடுத்துக் கொடுத்துவிட்டு மணி வெளியே சென்றுவிட நானும் அவற்றைப் பார்த்து குறிப்பெடுப்பதில் மூழ்கிவிட்டேன்.  
சுமார் ஐந்து மணியளவில் மணி திரும்பி வந்ததும் கிளம்பிய கவாண்டே “நீயும் என்னுடன் மோட்டார் சைக்கிளில் வா. அறையில் விட்டுச்செல்கிறேன்”. என்று கூறி அழைத்துச் சென்றார். காலையில் ஆட்டோ வந்த பாதையில் செல்லாமல் ஆராய்ச்சி நிறுவன வெளிச்சுற்றுச் சுவரின் பக்கவாட்டில் அமைந்திருந்த மண் குறுக்குச்சாலை வழியாக பாலாப்பூர் சாரஸ்தா வந்து தங்குமில்லத்தின் வெளியில் விட்டுவிட்டு கவாண்டே புறப்பட்டுச் சென்றார்.


நான் உள்ளே நுழையும் நேரம் இரவு வேலைக்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்த பாண்டேவும், தேசிங்கும் உள்ளே இருந்த படுக்கை அறையை கூட்டிச் சென்று காட்டி “நீங்கள் இந்த அறை மற்றும் அலமாரிகளை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறிச் சென்றனர். அவர்கள் சென்ற பின் காலையில் கொண்டு வந்து வைத்திருந்த பயணப்பெட்டி மற்றும் பைகளை படுக்கை அறைக்கு எடுத்துச் சென்று பிரித்து உடைகள் மற்றும் தேவையான பொருட்களை அடுக்கி வைத்துவிட்டு படுக்கையில் படுத்தவன் முந்தைய இரவின் நெடிய இரயில் பயண அலுப்பினாலும் பகலில் ஓய்வு எடுக்காத காரணத்தினாலும் அப்படியே கண்ணயர்ந்து தூங்கிவிட்டேன். திடீரென படுக்கை அறைக்கு வெளியில் பரபரப்பான பேச்சுக்குரல் கேட்கவே திடுக்கிட்டு உறக்கம் கலைந்து கண் விழித்தேன்.
(தொடரும்)

பாகம் 3 

1 comment:

Unknown said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் !!