Saturday, October 15, 2011

பள்ளி பருவத்திலே…..

எல்லோருடைய வாழ்க்கையிலும் மாணவப்பருவம் என்பது படிப்பைத் தவிர எந்த ஒரு கவலையும் இல்லாத காலகட்டம் ஆகும். அடிப்படை வசதி இல்லாத ஏதோ ஒரு கிராமத்தின் ஆரம்பப்பள்ளி என்றாலும், அமெரிக்க பல்கலைகழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு என்றாலும் குறும்பும், குதூகலமே கூடி இருக்கும்.

 
பொதுவாக பல மாணவர்களும், ஆசிரியர்களும் பாடப்புத்தகத்தில் என்ன கொடுத்துள்ளதோ அதை மட்டுமே மனப்பாடமாக படித்தும்,நடத்தியும் விடுவர். ஆனால் சில ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே பாடத்தை விட்டு வெளியேயும், அல்லது பாடத்தையே வேறு கோணத்திலும் சிந்தித்து செயல்படுத்த முனைவர். அதனால் முந்திரிக்கொட்டை, அதிகப்பிரசங்கி என்ற பட்டப்பெயர்களோடு அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும், அடக்குமுறைகளும் ஆயிரமாயிரம்…. அப்படிப்பட்ட மாணவர்களைப் பற்றிய சில சுவாரசியப் பகிர்வுகளின் தொகுப்பே இந்த பதிவு. 

மாநிலமெங்கும் உள்ள அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளின் அடிப்படை வசதிகள், ஆசிரியர்களின் அணுகுமுறை,  பயிற்றுவிப்பு முறை, மாணவர்களின் புரியும் திறமை , ஆகியவற்றை சோதிப்பதற்காக மாநில அரசின் கல்வித்துறையின் மாவட்ட கல்வி அலுவலர்கள்  ( DEO – District Education Officer )  மூலம் அவ்வப்போது தணிக்கை ஆய்வுகள் நடத்தப்படுவது  நாம் அனைவரும் அறிந்ததே.

அவ்வாறான ஆய்விற்கு DEO வருவதை அறிந்தது முதல் ஆய்வு முடிந்து செல்லும்வரை சம்பந்தப்பட்ட பள்ளி முழுதுமே ஒரு அசாதரண, பரபரப்பான சூழ்நிலை தொற்றிக்கொள்ளும். பள்ளி கட்டிட பராமரிப்பு, வெள்ளையடிப்பது, மற்றும் பல மராமத்து பணிகளில் நிர்வாக அலுவலர்களும், மாணவர்களை தயார்படுத்துதல், பல்வேறு பாட சம்பந்தமான குறிப்புகள், படங்கள்  தயார் செய்து வகுப்பறை முழுதும் ஒட்டி அழகு செய்தல் என ஆசிரியர்களும் முழுவீச்சில் முயற்சிப்பார்கள். இந்த முயற்சிகளிலெல்லாம் சிக்கி, சின்னாபின்னாமாவது மாணவர்களே.

இப்படித்தான் ஒரு ஆரம்பப்பள்ளியிலும் DEO ஆய்விற்காக மாணவர்களை தயார் செய்த ஆசிரியர் ஆங்கிலப்பாடத்தை “ ஏ ஃபார் ஆப்பிள் “ , “ பி ஃபார் பிஸ்கட் “ , “ சி ஃபார் சாக்லெட் “ ….  என்று சொல்லிக் கொடுத்து சரியாக பதில் சொன்னவர்களுக்கு பரிசாக ஆப்பிள், பிஸ்கட், சாக்லேட் போன்றவற்றை கொடுத்து ஊக்கப்படுத்தியிருந்தார்.


ஆய்வு தினமும் வந்தது. ஆசிரியரும், மாணவர்களும் , தனித்தனி தட்டுகளில் ஆப்பிள்களும்,பிஸ்கட்டுகளும், சாக்லேட்டுகளும் தயாராயிருக்க மாவட்டக் கல்வி அதிகாரியும் வகுப்பினுள் வந்தார்.



ஆசிரியரிடமும், மாணவர்களிடமும் வழமையாக பேசிவிட்டு ஆங்கிலப்பாடத்திலிருந்து கேள்வி கேட்க ஆரம்பித்தார். “ ஏ ஃபார் …. “ என ஒரு மாணவனைப் பார்த்து கேட்க அவன் “ ஆப்பிள் “ என கூறவும் ஆசிரியர் பெருமிதத்துடன்  DEO கையாலே அந்த மாணவனுக்கு ஒரு ஆப்பிள் பரிசளிக்கச் செய்தார்.

அடுத்த மாணவனைப் பார்த்து “ பி ஃபார்….. “ என கேட்க அந்த  மாணவன் பதில் சொல்லாமல் நிற்பதை கண்ட DEO  சரியாக காதில் விழவில்லையோ என்றெண்ணி, சிறிது சத்தமாக “ பி ஃபார்….. “ என்று கேட்டார். அந்த மாணவனோ இன்னும் தீவிரமாய் யோசிக்க ஆரம்பிக்கவும், “ இதுதானா நீ பாடம் சொல்லிக்கொடுத்த லட்சணம் “ என்பது போல் DEO ஆசிரியரைப் பார்க்க ஆசிரியர் மாணவனை நாக்கை துருத்திக் கொண்டு மிரட்ட கொஞ்சமும் அசராத மாணவன் “ பி ஃபார்….. “, “ பி ஃபார்….. “ என்று இரண்டு முறை யோசனையோடு கூறி  மூன்றாவது முறை முகமலர்ச்சியுடன், பதில் கிடைத்த சந்தோஷத்தில் “ பி ஃபார்….. ஃபிக் ஆப்பிள் “. ( Big Apple ) என்று சத்தமாகச் சொன்னான்.

 ஆம்… பிஸ்கட்டும், சாக்லேட்டும் அவ்வப்போது சாப்பிட்ட அவனுக்கு ஆப்பிள்தான் அரிதான பொருள். அதனால்தான் பெரிய ஆப்பிளாக கேட்டான். அவனது சாமர்த்தியமான பதிலைக் கேட்டு சத்தமாக சிரித்த DEO அவனது கையில் இரண்டு ஆப்பிள்களை தூக்கி கொடுத்து ஆசிரியரையும் பாராட்டி சென்றார்.


இன்னொரு பள்ளி,இன்னொரு ஆய்வு, இன்னொரு DEO, மாணவர்களிடம் சில படங்களை காண்பித்து அது என்ன என்று கேட்டு கொண்டிருந்தார்.


மாணவர்களும்  வாழைப்பழம், மாமரம், ஆடு, மாடு, மணி, மணல் , சணல் அணில்…  என்று போட்டி போட்டுக் கொண்டு பதில்கள்  சொல்லிக் கொண்டிருந்தனர். இப்படியாக பலரிடம் கேட்டு பதில் பெற்றுக் கொண்டிருந்தவர் ஒரு மாணவன் மட்டும் மற்றவர்கள் பதில் சொல்லும் போதெல்லாம் உற்றுக்கவனித்து திருப்தி இல்லாத பாணியில் முகத்தை சுழித்துக் கொண்டிருப்பதை கண்டு அவனிடம் ஒரு படத்தை காண்பித்து கேட்க அவன் மிக தெளிவான முகத்துடன் “ யானையின் படம் “ என்றான்.

மேலும் அவனிடம் அடுத்தடுத்து படங்களை காண்பித்து பதில் கேட்க அவன் அசராமல்  வாழைப்பழத்தின் படம், மாமரத்தின் படம், ஆட்டின் படம், மாட்டின் படம், மணியின் படம் என்று தெளிவான குரலில் வரிசையாக சொன்னான்.  இப்போதுதான் DEO விற்கு அந்த மாணவன் முகம் சுழித்த காரணம் புரிந்தது. ஆம் மற்ற மாணவர்கள் படத்தை படமாக பார்க்காமல் அதில் உள்ளதை உள்ளபடி உருவகப்படுத்தி சொன்னார்கள். இந்த மாணவன் மட்டுமே அவை யாவும் படம் என்ற உண்மையை உணர்ந்து பதில் சொன்னான். 

அவன் அதிகப்பிரசங்கித்தனமாக பேசியதாக எண்ணாத DEO வும் அவனை வியந்து பாராட்டி சென்றார்.
 
மற்றுமொரு  நடுநிலைப் பள்ளியில் நடந்த சுவாரசியமான சம்பவம். பள்ளி தலைமையாசிரியர், கரெஸ்பாண்டட் புடைசூழ ஒரு வகுப்பினுள் நுழைந்த DEO மாணவர்களின் பொது அறிவுத்திறனை சோதிக்கும் விதமாக          “ இராமாயணத்தில் இருந்து கேள்வி கேட்கப்போகிறேன் “ என்று கூறி ஒரு மாணவனை நோக்கி “ ஜனகனின் வில்லை உடைத்தது யார் “ என்று கேட்டார்.

அவரது திடீர் கேள்வியால் அதிர்ச்சியடைந்த மாணவன் ஏதோ ஒரு ஞாபகத்தில் “ நான் இல்லை சார் “ என்றான். அவனது பதிலால் துணுக்குற்ற DEO  இன்னொரு மாணவனை எழுப்பி அதே கேள்வியை கேட்க  “ ஆமாம் சார். அவன் உடைக்கலை சார் “. என்று அவன் கூற வகுப்பிலிருந்த அனைவரையும் வரிசையாக எழுப்பி கேட்டபோதும் எல்லோரும் இதே பதிலை சொல்ல குழப்பமடைந்த DEO வகுப்பாசிரியரைப் பார்க்க அவரும், “ ஆமாம் சார். பசங்க சொல்றது சரிதான். அந்த வில்லை அவன் உடைக்கலை சார் “ என்றார்.

இப்போது கொஞ்சம் கோபமடைந்த DEO தலைமையாசிரியரைப் பார்க்க, அவரும், “ ஆமாம் சார். அப்படி சேட்டை பண்ற  பசங்க யாரும் நம்ம பள்ளியிலே கிடையாது சார். “ என்றார். DEO மேலும் கோபமாகி முகம் சிவந்து நிற்பதை கண்ட கரெஸ்பாண்டன்ட் அவரை தனியே அழைத்துச் சென்று, “ சார். வேணும்ன்னா அந்த உடைந்த வில்லுக்குண்டான பணத்தை பள்ளி நிர்வாகத்திலிருந்து கொடுத்து விடுகிறோம். பெரிய மனது பண்ணி  இந்த பிரச்சினையை மேலும் பெரிதாக்காமல் இத்தோடு விட்டுவிட்டால் ரொம்ப புண்ணியமாப் போகும் “ என்று கெஞ்சிய குரலில் கேட்க மயக்கமடைந்து விழுந்தார் அந்த DEO.









6 comments:

உணவு உலகம் said...

”பள்ளிப்பருவ நினைவலைகள்”. திரும்பிப்பார்க்க வைத்துவிட்டது. நன்றி, ராஜா.

மாதேவி said...

"நான் வில்லை உடைக்கவில்லை......" சுவாரஸ்யம்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல நகைச்சுவையுடன் கூடிய மலரும் நினைவுகள். சுவாரசியமாக இருந்தது. அருமையான இடுகை ராஜா.

துபாய் ராஜா said...

வரவிற்கும், கருத்திற்கும் நன்றி
"Food' சித்தப்பா சார்
சகோதரி மாதவி &
நண்பர் ஸ்டார்ஜன்.

'பரிவை' சே.குமார் said...

திரும்பிப்பார்க்க வைத்துவிட்டது.

துபாய் ராஜா said...

// சே.குமார்said...

திரும்பிப்பார்க்க வைத்துவிட்டது.//

வரவிற்கும், கருத்திற்கும் நன்றி
நண்பரே...