Monday, September 25, 2017

வண்டித் தடம் - பாகம் 6

பாகம் 6 - வண்டித் தடம்

சிறுவயதிலே தாய், தந்தை இழந்த முத்துசாமியின் தந்தை சொந்த அக்கா மாமாவான புலிமணியின் தாய், தந்தை அரவணைப்பிலே வளர்ந்தவர். மைத்துனருக்கு சொந்த தங்கையை கட்டிக் கொடுக்கும்போது தன்பங்கு சீராக அவரது வயலுக்கு கீழ்பக்கம் இருந்த வயலையும் கொடுத்தார் புலிமணியின் தந்தை. எல்லா ஊரையும் போல புலிப்பட்டியிலும் விவசாய காலங்களில் அவரவர் வயலுக்கு அடுத்தவர் வயல் வழியாகதான் ஏர், கலப்பை, விதை, சாணம், உரம், நாற்று போன்ற விவசாயத் தளவாடங்களையும் பின் அறுப்பு காலங்களில் அறுவடை செய்த நெல், வைக்கோல் போன்றவற்றையும் மாட்டு வண்டிகளில் ஏற்றிச் செல்வது வழக்கம். அப்படி தங்கள் பூர்வீக வயலுக்கு செல்லும் வழியாக, வண்டித்தடமாக இருந்த வயலைத்தான் தன் தங்கைக்கு சீராக கொடுத்தார் புலிமணியின் தந்தை.


சொத்து பிரிக்கும் போது புலிமணியின் பங்காக வந்த அந்த வயலை அவர் வெளியூரில் இருந்த காரணத்தால் மூத்த அண்ணன் ஆகிய புலியாண்டியின் தந்தையும், அவருக்குப்பின் அவர் மகன் புலியாண்டியுமாக மேற்பார்வை பார்த்து வந்தனர். காலம், காலமாக வழியாக இருந்த வண்டித்தடத்தையே அவர்களும் உபயோகித்து வந்தனர். முத்துசாமியின் தந்தையும், புலியாண்டியின் தந்தையும் இருந்த வரை எந்த பிரச்சினையும் இல்லை. முத்துசாமி ஏதாவது பிரச்சினை செய்ய முயன்ற போதெல்லாம் இருவரும் அதட்டி, அடக்கி வந்தனர். அவர்கள் மறைவிற்குப்பின் முத்துசாமி ஆட்டத்தை தொடங்கி விட்டார். அவர் வயல்வழியாக வண்டிகள் செல்வதை தடுத்தும், ஆட்களும், கால்நடைகளும் கூட செல்லக்கூடாது எனவும் முரண்டு செய்ததால் ஊராரால் அடிக்கடி கண்டிக்கப்பட்டார்.


இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஊராரால் ஒதுக்கி வைக்கப்பட்டவனும், புலிமணியை அறவே பிடிக்காதவனுமாகிய சுக்காண்டியிடம் தன் வயல் மேற்பார்வையை குத்தகை முறையில் ஒப்படைத்தார் முத்துசாமி. சுக்காண்டியும் அவனால் முடிந்த இடைஞ்சல்களை எல்லாம் செய்து வந்தான். அதில் ஒன்றுதான் இந்த ஓடைக்கரை சரிப்பு வேலை. ஓரிரு நாட்கள் புலியாண்டி ஊரில் இல்லாததும் அவனுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது. இரண்டு நாட்களுக்குப் பின் ஊர் திரும்பிய புலியாண்டி வயலுக்கு சென்ற போது கற்கள் நகர்த்தப்பட்டு, பாதி தூரம் ஓடைக்கரை சரித்து அளவு குறைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து அம்பை சென்று புலிமணியிடமும், அந்த நேரத்தில் விடுமுறையில் வந்து இருந்த புலிமுத்துவிடமும் முறை இட்டான்.  








இரண்டு வருடங்களுக்கு முன்னொரு முறை இப்படித்தான் புலிமுத்து விடுமுறையில் வந்திருந்த பொழுது, புலிமணியின் வயலுக்கு அறுப்பு இயந்திரம் முத்துசாமியின் வயல்வழியாக செல்லக்கூடாது என தடுத்து புலியாண்டியிடம் தகராறு செய்தான் சுக்காண்டி. தகவல் தெரிந்தவுடன் புலிமுத்து தந்தை புலிமணியையும் அழைத்துக் கொண்டு அம்பை ரயில்நிலையம் அருகே வசித்து வந்த முத்துசாமியின் வீட்டிற்கு புகார் கூறச் சென்றான். வீடு தேடி வந்தவர்களை மரியாதைக்கு கூட வீட்டிற்குள் அழைக்காமல் வாசலிலே நிறுத்திப் பேசிய முத்துசாமி, “ அவன் பாடு… உங்கள் பாடு.. “ என்று அலட்சியமாக கூறிவிட்டு அவசர வேலையாக வெளியே போவதாக சென்றுவிட்டார். கொதிப்பு அடைந்த புலிமுத்துவை புலிமணிதான் சமாதானப்படுத்தி அழைத்து வந்தார். அந்த முறை வேறுவயல் வழியாக அறுப்பு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டு அறுவடை செய்யப்பட்டு, நெல்லும் வியாபாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.


சுக்காண்டியும், முத்துசாமியும் மேலும் திருட்டுவேலை செய்யமுடியாமல் ஊரார் முன்னிலையில் ஓடையை மறுபடியும் அளந்து, மீதி இருக்கும் ஓடைக்கரை அளவான பழைய அளவிற்கே முழு ஓடைக்கும் குழாய் பதித்து சரிக்க முடியாமல்  செய்து விடலாம் என புலிமணி அறிவுரை கூற புலிமுத்துவும், புலியாண்டியும் ஒத்துக்கொண்டனர். முத்துசாமி ஏற்கனவே உங்கள் பாடு… அவன்பாடு என ஒதுங்கிக் கொண்டதால் புலிமுத்துவே நேராக புலிப்பட்டி சென்று சுக்காண்டியிடம், “ நாளை மறுநாள் ஒடையை அளந்து குழாய் பதிக்கப்போகிறோம். நீயும் வந்து சரிபார்த்துக் கொள் “ என்று கூற பதிலே சொல்லாமல் சென்றுவிட்டான் சதிகாரன் சுக்காண்டி.


மறுநாள் காலையிலே புலிமுத்து புலியாண்டியையும், கொத்தனாரையும் அழைத்துக்கொண்டு அம்பை முழுதும் சுற்றி இரண்டடி விட்டம், ஆறடி நீள அளவில் சிமெண்ட் குழாய்களையும், தேவையான செங்கல், மணல், ஜல்லி, சிமெண்ட் ஆகியவற்றை வாங்கி டிராக்டரில் ஏற்றி வயலிற்கு கொண்டு சென்று இறக்கி விட்டார்கள்.  அதற்கு மறுநாள் காலையிலே வீட்டில் இருந்து கிளம்பிய புலிமுத்து புலியாண்டி, கொத்தனார், கையாள்கள், அக்கம்பக்க வயல் உரிமையாளர்கள் மற்றும் ஊர்ப் பெரியவர்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு வயலை அடைந்தான். உடனே கொத்தனாரின் கையாள்கள்  ஜல்லி, மணல், சிமெண்ட் கலந்து கலவை தயார் செய்ய ஆரம்பித்தார்கள்.


வெகுநேரமாகியும் சுக்காண்டி வராத காரணத்தால்  கையோடு அழைத்து வரச்சொல்லி அனுப்பப்பட்ட ஆள் அவனும், ரெங்கம்மாவும்  வீட்டைப் பூட்டி விட்டு அதிகாலை முதல் பேருந்திலே எங்கோ கிளம்பி சென்று விட்டதாக கூறவே கடும்கோபம் கொண்ட காத்திருந்த ஊர்ப்பெரியவர்களும், அக்கம்பக்க வயல்காரர்கள் அனைவரும், “ இவ்வளவு பேரு இங்கே காத்துகிட்டு இருக்கோம். வேணும்கிட்டே இவன் இப்படி பண்றான். நம்ம ஓடையை அளந்து, குழாய் பதிக்கிற வேலையை முடிப்போம். அவன் வந்து ஏதும் பிரச்சினை பண்ணா பார்த்துக்கலாம். நீங்க வேலையை ஆரம்பிங்கப்பா… “ என உறுதி கொடுக்க, சரிக்கப்பட்ட ஓடை ஒழுங்காக அளக்கப்பட்டு, கரை வெட்டி திருத்தப்பட்டு, கலந்து வைத்திருந்த ஜல்லிக்கலவை ஓடை முழுதும் தண்ணீர் தேங்காமல் செல்லும்படி வாட்டச்சரிவோடு விரிக்கப்பட்டு, குழாய்களும் வரிசையாக பொருத்தி, பதிக்கப்பட்டு கல் கொண்டு அசையாமல் அடை கொடுக்கப்பட்டு , குழாய்களின் மீதும் செங்கல் அடுக்கி சிமெண்டுக் கலவை கொண்டு பூசப்பட்டு மண் கொண்டு மூடப்பட்டன.








ஓடைக்கரை அளந்து அளவுக்கற்கள் நடப்பட்டு, இருபுறமும் ஒழுங்குக்கயிறு கட்டப்பட்டு வேலை ஜரூராக நடந்து கொண்டு இருக்கும் போதே உச்சிப்பொழுது ஆகிவிட்டதால் ஊர்ப்பெரியவர்களும், அக்கம்பக்க வயல்காரர்களும் மதிய உணவிற்கு வீடு சென்று பின் காபி, டீ குடித்து விட்டு வெயில்தாழ சிலர் மட்டுமே திரும்பி வந்து பார்த்து சென்றனர். புலிமுத்துவும், புலியாண்டியும் கொத்தனார், கையாள்களுக்கு ஏற்பாடு செய்திருந்த காபி, டீ உணவையே சாப்பிட்டு விட்டு அங்கேயே இருந்துவிட்டனர். ஒருவழியாக வேலை முடியும் போது மாலை நேரம் முடிந்து இருளும் கவியத் தொடங்கி விட்டது. பின் அங்கிருந்த கொத்தனார் சாமான்கள் மற்றும் வேலை ஆட்களை ஏற்றவந்த டிராக்டரிலே புலிப்பட்டி ஊருக்குள் வந்து தன் இருசக்கர வாகனத்தில் ஏறி அம்பாசமுத்திரம் அடைந்து, குளித்து, இரவு உணவு அருந்தி, தந்தையான புலிமணியிடம் விபரங்களை கூறிவிட்டு, அலுப்பில் அயர்ந்து தூங்கிய புலிமுத்துவை மறுநாள் காலை ஏழு மணி அளவில் தலைமாட்டில் வைத்திருந்த அலைபேசிதான் இடைவிடாது அடித்து எழுப்பியது.


 ( தொடரும் )



Sunday, September 10, 2017

வண்டித் தடம் - பாகம் 5










பாகம் 5 - சுக்காண்டியும், முத்துசாமியும்…


சனிக்கிழமைதோறும் காலையில் நீராகரம் மட்டும் அருந்திவிட்டு கல்லிடைக்குறிச்சி   வாரச்சந்தைக்கு வண்டி கட்டி, வாடகைக்கு சாமான்கள் ஏற்றி செல்லும் சுக்காண்டி, சந்தை வாசலில் இருக்கும்  அடர்ந்த வாகைமர நிழலில் வண்டியை நிறுத்தி, உரிமையாளர்கள் உதவியோடு சரக்குகளை இறக்கி, சம்பந்தப்பட்ட கடைகளில் சேர்த்துவிட்டு, மாடுகளையும் அவிழ்த்து, தண்ணீர் காட்டி, வைக்கோல் போட்டு இளைப்பாற விட்டு, விட்டு கிடைத்த கூலிக்கு வயிறு புடைக்க பாய்க்டையில் ரொட்டி சால்னா, மட்டன் பிரியாணி, சிக்கன் சாப்ஸ், ஆம்லேட், அவிச்சமுட்டை என ஏழெட்டு வகையறாக்களை ஒருங்கே உள்ளே தள்ளிவிட்டு, உண்ட களைப்பு தீர மாட்டுவண்டிக்கு அடியில் துண்டை விரித்து படுத்துவிட்டு, வெயில் தாழத்தான் ஊர் திரும்புவான்.

சுக்காண்டி வண்டிவிட்டு உறங்கும்  வாகை மரத்தடியில் மண்பாண்டங்கள், மரஅகப்பை, தார்க்குச்சி, மூக்கணாங்கயிறு, சரடு போன்ற விற்பனைக் கடை வைத்திருந்தவர் பக்கத்து ஊரைச் சேர்ந்த சுடலையாண்டி.  உறங்கிய பொழுது போக ஓய்வு நேரங்களில் அவரோடுதான் பேசிக்கொண்டு இருப்பான் சுக்காண்டி. தாயில்லாத சுடலையாண்டி மகள் ரெங்கம்மாவை பேசிய நகை போடாததால், “கறுப்பாக இருக்கிறாள். பல் நீண்டு லட்சணமாக இல்லை” என்று கூறி கட்டிக் கொடுத்தவன், தட்டிக் கழித்துச் சென்று விட்டான். அப்பாவிற்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துவிட்டு, அப்படியே கடை வேலைகளில் ஒத்தாசையாக இருந்த ரெங்கம்மாவிற்கும், மனைவியால் புறக்கணிக்கப்பட்ட சுக்காண்டிக்கும் பேசிப் பழகி, ஈர்ப்பாகிவிட்டது.

சுடலையாண்டிக்கும் வேறு ஆதரவு இல்லாததாலும், சுக்காண்டி கதை அறிந்தவர் என்பதாலும், அடுத்தவர் அசிங்கமாக பேச இடம் கொடுக்காமல்,“பிடித்திருந்தால் இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள்” என அனுமதி கொடுத்துவிட்டார். ஒரு சனியன்று சந்தை முடித்து செல்லும்போது ரெங்கம்மாவையும், வண்டியில் ஏற்றிக்கொண்டு இரவோடு, இரவாக அவன் அம்மாவின் மறைவிற்குப் பின் பூட்டியே கிடந்த வீட்டில் கொண்டு வந்து குடிவைத்து விட்டான் சுக்காண்டி.

விடியற்காலையில் விஷயம் அறிந்த மங்கம்மா பஞ்சாயத்து கூட்டி விட சுக்காண்டியும், ரெங்கம்மாவும் வலுக்கட்டாயமாக ஊர்மந்தைக்கு அழைத்து வரப்பட்டனர். ஆளாளுக்கு மங்கம்மாவோடு சேர்ந்து, “அடிக்கணும், பிடிக்கணும். ரெண்டு பேரையும் மொட்டை அடிச்சு, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மேல ஏத்தி ஊரைவிட்டே அடிச்சு விரட்டணும் இதை இப்படியே விட்டா ஊர்ல எல்லாவனும் இப்படி எவளையாவது இழுத்துட்டு வந்துருவான்.” என  ஆவேசமாகப் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது மங்கம்மாவின் அழைப்பின் பேரில் அங்கு வந்த புலிமணி, ரெங்கம்மாவை முழுமையாக விசாரித்து, விபரம் அறிந்து கொண்ட பின், “ இதோ பாரு மங்கம்மா. உன் புருஷன் செஞ்சது தப்புன்னாலும், இந்தப் புள்ளை அவ அப்பன் அனுமதியோடுதான் வந்துருக்கா. நம்பி வந்தவளை அவமானப்படுத்தி அனுப்பறதுல எனக்கு உடன்பாடு இல்லை. அவ சாபம் உனக்கும் வேண்டாம். நம்ம ஊருக்கும் வேண்டாம். உன் புருஷனுக்கு என்ன தண்டனை குடுக்கணும்ன்னு சொல்லு. பஞ்சாயத்துல பேசி முடிவெடுப்போம்.” என்று கூறினார்.  

புலிமணி பேச்சிற்கு கட்டுப்பட்ட மங்கம்மாவும், “இனிமே அந்த ஆளு என் வீட்டுப் படி ஏறக்கூடாது. எந்த சொத்துலயும் பங்கு கேட்கக்கூடாது. இவ்வளவு பிரச்சினைக்கும் காரணமான வண்டியையும், மாடுவளையும் உடனே வித்து அந்தப்பணத்தையும் என் பிள்ளைவ பேருல பேங்குல போட்டுடணும். இப்பவும் சரி. எப்பவும் சரி.  எனக்கோ, என் பிள்ளைவளுக்கோ  இவராலயும், அவளாலயும் எந்தப்பிரச்சினையும் வரக்கூடாது.“ என்று அடுக்கடுக்காக அவள்தரப்பு வாதங்களை எடுத்து வைத்தாள்.

மங்கம்மா குணம் அறிந்த சுக்காண்டியும், “ ஏதாவது எதிர்த்து பேசினால் மங்கம்மா மேலும் எகிறுவாள். அனைவர் முன்னும் முகத்தில் காறி உமிழ்ந்து, அடித்து, அவமானப்படுத்தி பிறந்து, வளர்ந்த ஊரை விட்டே விரட்டி விடுவாள். இதுமட்டும் விட்டதே பெரும்பாடு. “ என்று அவள் கூறிய அனைத்திற்கும் ஒத்துக்கொண்டு விட்டான். எல்லாமே எழுத்து வடிவில் பத்திரத்தில் எழுதப்பட்டு, சுக்காண்டி, ரெங்கம்மா, மங்கம்மா, அவள் பிள்ளைகள் மற்றும் சாட்சிகளாக பஞ்சாயத்து பெரிய மனிதர்கள் என அனைவரிடமும் கையெழுத்து வாங்கப்பட்டது. அதே பஞ்சாயத்திலே அவனது வண்டியும், மாடுகளும் ஏலம் விடப்பட்டு பணமும், பத்திரமும் மங்கம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே இடத்தில் உடனே அவளும் “பணத்தை பிள்ளைகள் பேரில் உள்ள வங்கிக்கணக்குகளில்  பிரித்துப் போட்டு விடுங்கள். பத்திரத்தையும் லாக்கரில் வைத்து விடுங்கள்.” என அவற்றை புலிமணியிடம் கொடுக்க, அதைப் பார்த்துக் கொண்டு இருந்த சுக்காண்டியின் அனைத்து கோபமும் புலிமணி மீது திரும்பி விட்டது.

அந்தப் பஞ்சாயத்திற்குப் பின் ஊரே சுக்காண்டியையும், ரெங்கம்மாவையும் ஒதுக்கி வைத்து விட அவன் நேராக சென்று நின்றது முத்துசாமியிடம்தான். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. முத்துசாமியின் தாயாரானவள் புலிமணியின் தந்தையார் உடன்பிறந்த அத்தையாவாள். புலிமணியின் தாயும், தந்தையும், தமையர்களோடு அதிகாலையில் வயல்வேலைகளுக்குச் சென்றால் பொழுதுசாயத்தான் வீடு திரும்புவார்கள். அப்போது புலிமணியை வளர்த்தது திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்த அத்தைதான் என்பதால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகப்பாசமாக இருப்பார்கள். பின் அவள் புலிமணியின் தாயின் உடன்பிறந்த தம்பிக்கே மணம் முடித்து வைக்கப்பட அந்தப் பாசம் மேலும் கூடிவிட்டது.


என்னதான் முத்துசாமிக்கு புலிமணியை பிடிக்காது என்றாலும், கிழவி எப்போது புலிமணி ஊருக்கு வந்தாலும் ஓடோடிச் சென்று பார்த்து வந்து விடுவாள். முத்துசாமி போக்க்கூடாது என எத்தனை முறை கண்டித்தாலும் காதிலே வாங்கிக் கொள்ள மாட்டாள். அப்படித்தான் ஒருமுறை புலிமணியை பார்த்துவிட்டு புழக்கடை தொழுவாசல் வழியாக வந்தவளை மறித்து வாதம் செய்த முத்துசாமியை மீறி கிழவி வீட்டிற்குள் நுழைய முயன்றதால் ஆத்திரத்தில் பிடித்து முத்துசாமி வேகமாக தள்ளிவிட கீழே குப்புற விழுந்த கிழவி பொருத்தில் அடிபட்டு உடனே உயிரை விட்டுவிட்டாள். தொழுவத்தில் வைக்கோல் அடைந்து கொண்டிருந்த சுக்காண்டிதான் அந்த சம்பவத்திற்கு சாட்சி என்றாலும் யாரிடமும் அதைப்பற்றி கூறாததால் முத்துசாமிக்கு அவன்மீது தனிப்பிரியம். அவனுக்கு அவ்வப்போது பணமும் மற்றும் வேண்டிய பல உதவிகளும் செய்துவந்தார். சுக்காண்டியிடம் புலிமணியைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லி வெறுப்பு வளர்த்த்தில் முத்துசாமியின் பங்கு மிகமிக அதிகம்.

 ( தொடரும் )


Saturday, August 26, 2017

வண்டித் தடம் - பாகம் 4





பாகம் 4 - முத்துசாமி

புலிமணியின் தாயாருக்கு ஐந்தும் ஆண்மக்கள். ஒவ்வொருவருக்கும் முறையே ஐந்தாறு வயது வித்தியாசம் என்பதால் குடும்பத்தில் மூத்த சகோதரருக்கும்,  கடைக்குட்டியான புலிமணிக்கும் ஏறத்தாழ இருபத்தைந்து வித்தியாசம்.  ஐவரில் புலிமணி மட்டுமே உள்ளூர் பள்ளியில் ஒழுங்காக படித்து கல்லிடைக்குறிச்சி திலகர் வித்தியாலயத்தில் உயர்நிலைக்கல்வியும், பேட்டை மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரியில் அந்த கால பி.யூ.சியும் முடித்தவர். மூத்தவர் நால்வரும் தொடக்கக்கல்வி கூட முடிக்காமல் விவசாயவேலை பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

புலிப்பட்டி மலையடிவார ஊர் என்பதால் பண்டையகாலம் முதலே காட்டுக்குள் வேட்டைக்குச் சென்று மான், மிளா, உடும்பு, காட்டுப்பன்றி போன்ற மிருகங்களை வேட்டையாடி, உணவிற்காக சமைத்தவை போக மீதியாகும் கறியை மழைக்கால உபயோகத்திற்காகவும், வெளியூரில் இருந்து வரும் உறவினர்களுக்கு கொடுப்பதற்காகவும் கொடிக்கறியாக உப்புக்கண்டம்  போட்டு  வைத்திருந்து பயன்படுத்தும் பழக்கம் ஊர் முழுதுமே இருந்ததுஉடன்பிறந்தவர்கள் எல்லாம் ஒரு அண்டா கறி தின்பவர்களாக இருந்தும், புலிமணி மட்டும் ஒரு துண்டு கறி கூட தின்னாமல், வள்ளலார் வழியில் தூய சைவராக வளர்ந்தார்.

புலிமணி பிறந்த மறுவருடமே அவரது மூத்த சகோதரருக்கு திருமணம் ஆகிவிட்டது. அடுத்தடுத்த சகோதரர்களுக்கும் வரிசையாக திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் வைக்கப்பட்டனர்.  புலிமணியின் தாயாரானவர்  பெண் வாரிசு இல்லாத காரணத்தாலும், பேச்சுத்துணைக்காகவும்  முத்துசாமியின் அக்காவை தன் மகளாகவே வளர்த்து வந்தார். புலிமணியை  விட பனிரெண்டு வயது இளையவரான புலிமணியின் தாய்மாமன் மகனான  முத்துசாமியும், அவருக்கு ஏழெட்டு வயது மூத்த அவரது அக்காவோடு சிறுவயது முதலே புலிமணியின் வீட்டில் வளர்ந்து வந்தார். தொடக்ககல்வியை உள்ளூரிலே முடித்த முத்துசாமி, மேல்நிலைப்பள்ளி சென்று படித்தது எல்லாம் புலிமணியுடன் சைக்கிளில் சென்றே.

புலிமணி சிறுபிராயம் முதற்கொண்டே தனித்துவமான குணம் கொண்டவர். யாரிடமும் அனாவசியமாக பேசமாட்டார். வீட்டிலிருந்து பள்ளி, பள்ளி விட்டால் வீட்டிற்கு வந்து பாடம் படிப்பது என்ற வழக்கத்தை கல்லூரி முடிக்கும் வரை கடைப்பிடித்தவர். கல்லூரி முடித்ததும் ஊரில் சும்மா இருக்காமல் சென்னை சென்று தானாகவே வேலை தேடி பணியிலும் சேர்ந்து விட்டார். அவரை ஒப்பிட்டுப் பேசியே புலிப்பட்டி ஊர்மக்கள் தங்கள் பிள்ளைகளை திட்டி வளர்த்து வந்தார்கள். அதிலும் முத்துசாமி புலிமணியின் வீட்டிலே வளர்ந்தவர் என்பதாலும், அவருடனே சென்று படித்தவர் என்பதாலும் வீட்டார் மட்டுமல்லாமல் உற்றார், உறவினர், ஊர்மக்கள் என அனைவரும் முத்துசாமி சேட்டைகள், குறும்புகள் என்ன செய்தாலும், “ பூவோடு சேர்ந்து இருந்தாலும் நார் குணம் மாறுமா ” என்றும், “ நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது நக்கித்தானே திங்கும் என்று கூடிக்கூடிப் பேசி குமுறிவிடுவார்கள். இதனால் சின்னவயதில் இருந்தே முத்துசாமி மனதில் புலிமணி மீது பொறாமையும், வெறுப்பும் உண்டாகி விட்டது.

புலிமணி சென்னை சென்றது முதல் முத்துசாமியின் பெற்றோரும், மற்றோரும், “  நீயும் ஒழுங்காகப் படித்தால்தான் சென்னை செல்லமுடியும்என்று கூறிபடி, படிஎன பாடாய் படுத்தியதும் முத்துசாமியின் மனக்கடுப்பிற்கு ஒரு காரணம். இதற்கெல்லாம் முத்தாய்ப்பிற்காக முறைப்பெண்ணான முத்துசாமியின் அக்காவை  புலிமணிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என பெரியவர்கள் பேசியபோது, “ ஒரே வீட்டில் ஒருதாய் மக்களாக உடன்வளர்ந்த சகோதரிக்கு ஒப்பான பெண்ணை மணந்து கொள்ளமுடியாது என்று புலிமணி மறுத்து விட்ட்தும் முத்துசாமி மனதில் மாறாத கோபமாகி தீராத வடுவானாதால் புலிமணியுடன் பேசுவதையும், அவர் வீட்டிற்கு வருவதையும் அடியோடு நிறுத்திவிட்டார்.

புலிமணி முத்துசாமியை சிறுவயது முதலே அறிந்தவர் என்பதாலும், ஊருக்கும் அடிக்கடி வருபவர் இல்லை என்பதாலும் எதையும் கண்டுகொள்வதில்லை.  முத்துசாமியின் அக்காவை புலிமணியின் சித்திவழி அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.அசலில் திருமணம் முடித்த புலிமணிக்கு இரண்டும் ஆண்மக்கள். முத்துசாமி உயர்நிலைக்கல்வி தேர்வு ஆகாமல் போனதால் அம்பாசமுத்திரம் அரசு சேமிப்புக்கிட்டங்கியில் ஒப்பந்தப்பணிக்குச் சென்று அப்படியே ஆளைப்பிடித்து ஐந்தாண்டுக்குள் நிரந்தரப்பணி நியமனமும் வாங்கிவிட்டார். ஒரே மகன் என்பதால் உள்ளூரிலே சொந்தத்தில் பெண்பார்த்து  இருபத்தி மூன்று வயதிற்குள் திருமணம் செய்து வைக்கப்பட்ட முத்துசாமிக்கு ஒரே பெண். சரி அந்தப்பெண்ணையாவது புலிமணியின் இரண்டு மகன்களின் ஒருவருக்கு பெண்கேட்பார் என்று கர்வத்தோடு எதிர்பார்த்து கவுரவம் கருதி தன்பக்கம் இருந்து ஏதும் பேசாமல் காத்திருந்த முத்துசாமிக்கு இறுதியில் ஏமாற்றமே. புலிமணி தன்னைப் போலவே இரண்டு மகன்களுக்கும் அசலிலே பெண் எடுத்துவிட்டதால் முத்துசாமியின் வன்மம் வரையறை இல்லாமல், வங்கிக்கடன் போல் கூட்டுவட்டி போட்டு கூடிவிட்டது.

 ( தொடரும் )


பாகம் 5