Sunday, September 06, 2015

காலை உடைத்த காஞ்சனா - பாகம் 10


பாகம் 10 – மகிழ்ச்சியும், துக்கமும் இணைந்ததே மானுட வாழ்க்கை……

முதல் ஒன்பது பாகங்களைப் படித்து விட்டு பின் இங்கே தொடரவும்.



பாகம் 4 - காணாமல் போன காஞ்சனா….










பாகம் 9  - விருந்தும் விடுமுறை சுற்றுலாக்களும்….


பாகம் 10


ராமகிருஷ்ணன் வந்து ஏறக்குறைய ஒரு மாதம் ஆனபின் ஒரு வெள்ளியன்று மதியம் அலுவலகத்தில் இருந்த போது அலைபேசியில் ஊரில் இருந்து அழைத்து அவரது மனைவியை இரண்டாம் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தகவல் வந்தது. அவரது வீட்டில் வயதான தாயும், மூன்று வயது மகளையும் தவிர வேறு யாரும் இல்லாத காரணத்தால் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் ஊருக்கு சென்று பார்த்துவிட்டு திங்கள் காலை வந்து விடுவதாக கூறிவிட்டு உடனே கிளம்பிச் சென்றார். நான் வேலைகளுக்கு பொறுப்பேற்று இருக்க மணியும், ஜானும் ஜீப்பில் செகந்திராபாத் தனியார் பேருந்து நிலையம் அழைத்துச் சென்று வழியனுப்பி வந்தனர்.


மறுநாள் சனியன்று பகல் முழுதும் பணி சரியாக இருந்தது. மதிய வேலைக்கு ஆள்கள் வந்த பின் கொஞ்சம் ஓய்வாக அமர்ந்திருந்த போது  புதிதாக வேலைக்கு வந்த எங்கள் நிறுவன ஊழியர்களையும், என்னையும் பாதுகாவலர்களோடு கிரிக்கெட் விளையாட அன்பாக வற்புறுத்தி அழைத்துச் சென்றான் மணி. ஆட்கள் அதிகமாக இருந்ததால் இரண்டு அணியாக பிரிக்க நானும் ஒரு அணியில் சேர்ந்து ஆடினேன். மதியம் மூன்று மணிக்கு மேல் ஆரம்பித்த ஆட்டம் விறுவிறுப்பாக இருட்டிய பின்னும் விளக்குகளின் வெளிச்சத்தில் தொடர்ந்தது. அப்போது திடீரென காட்டுப்பகுதியில் இருந்து கிளம்பிய சூறாவளி சுழல் காற்று குப்பை, கூளங்களை அள்ளிக் கொண்டு ஆக்ரோஷமாக சுழன்றபடி நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த பக்கமாக வந்தது.


அன்று அமாவாசை தினமானதால் நிலவு வெளிச்சம் இன்றி இருட்டாக இருந்ததாலும், மேலும் விளையாட்டில் அனைவரும் மும்முரமாக இருந்ததாலும் சூறாவளி காற்றை கவனிக்காத நாங்கள் மைதானக் கடைசியில் காட்டின் எல்லை அருகில் ஃபோர் லைனில் ஃபீல்டிங்கிற்காக இருந்த செக்யூரிட்டி அலறல் சத்தம் கேட்டு அவர் இருந்த இடம் நோக்கினால் தெளிவான காட்சி ஏதும் தெரியாமல் ஒரே புழுதி மயமாக இருந்தது. அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று சுழல் காற்றின் நடுவில் சிக்கி மயக்கமாக இருந்தவரை போராடி மீட்டனர். ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான அவரை எல்லோரும் சேர்ந்து ஒருவாறு அங்கிருந்து வெளிவாசல் அருகே தூக்கி வந்து முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தியபின் கண் விழித்தவர் முகம் வியர்த்து, வெளிறிப் போய் இருந்தது. அந்த காட்டுப்பகுதியில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்த அனைவரும் எவ்வளவு சீக்கிரம் மைதானத்தில் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்பி தங்குமில்லம் வந்தடைந்தோம்.


அறைக்குச் சென்று குளித்து அருகிலிருந்த கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து குழம்பியிருந்த மனதை அமைதிப்படுத்தி இனி நேரங்கெட்ட நேரத்தில் மைதானத்திற்கு விளையாடவோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும் செல்லக்கூடாது என்றும், பணிக்கும் செல்லும் போதும், திரும்பும் போதும் தனியாக செல்லாமல் மூன்று, நான்கு பேராக சேர்ந்துதான் செல்லவேண்டும் என்றும் முடிவெடுத்தோம். மறுநாள் ஞாயிறு விடுமுறை என்றாலும் சில முக்கியமான இயந்திரங்களை பழுது பார்க்க வேண்டிய அவசர வேலைகள் இருந்ததால் மணியும், நானும் மற்றும் சிலர் மட்டும் பணிக்குச் சென்றோம்.


காலை பத்து மணி அளவில் என்னை அலைபேசியில் அழைத்த சென்னை நண்பர் ஒருவர் துபாயில் ஒரு நல்ல வேலை வாய்ப்பு இருப்பதாகவும், விருப்பம் என்றால் பயோடேட்டாவை அனுப்பும் படியும் கூறினார். எப்போது சொல்லி வைத்தது இப்போது நியாபகம் வந்து அழைத்திருக்கிறார். ஓய்வு நேரத்தில் பயோடேட்டாவை அப்டேட் செய்து பிளாப்பியில் காப்பி செய்து வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் பிரவுசிங் சென்டர் சென்று நண்பரின் இணைய முகவரிக்கு அனுப்பி விட்டேன்.


மறுநாள் காலை நாங்கள் அனைவரும் வழக்கம்போல காலையிலே பணிக்கு சென்று விட பத்து மணி அளவில் அலுவலகம் வந்த ராமகிருஷ்ணன் மகன் பிறந்த மகிழ்ச்சி செய்தியை இனிப்பு கொடுத்து எல்லோருடமும் பகிர்ந்து கொண்டார். வெறும் மிட்டாய் மட்டும் போதாது விருந்தும் வேண்டும் என்று பலரும் கேட்டதால் ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். அதன்படியே அந்த வார சனிக்கிழமை இரவு தங்குமில்லத்தில் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டது. மறுநாள் ஞாயிறு எல்லோரும் கிளம்பி நாகார்ஜூனா சாகர் ஏரி சென்று வந்தோம். சென்னை நகரில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் பீச் போல ஹைதராபாத் மக்களுக்கு இந்த ஏரி. அதற்கடுத்த வாரங்களில் உடன் பணி புரியும் உள்ளூர் நண்பர்களின் தம்பி, தங்கைகள் திருமணம் போன்ற இல்ல விசேஷங்களுக்கு சென்று வந்தோம். சம்பந்தப்பட்டவர்கள் வாராவாரம் சனியன்று தங்குமில்லத்தில் தனி விருந்தும் தந்தார்கள். இப்படியாக பணியும், பயணங்களுமாக எங்களுக்கும் நாளும், பொழுதும் இனிமையாகவும், உல்லாசமாகவும் கழிந்து கொண்டிருந்தது.



அவ்வப்போது கவாண்டேக்கும் யாராவது ஆள் மாற்றி ஆள் போன் செய்து அவரது தந்தையின் உடல்நிலை குறித்து விசாரித்து தகவல்களை எங்களுக்குள் பகிர்ந்து கொள்வோம். அவரது தந்தையின் இதய அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து வீடு திரும்பி வழக்கமான வாழ்விற்கு வர ஏறக்குறைய இரண்டு மாதத்திற்கும் மேலாகி விட்டது. விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் நாளும் உறுதி செய்யப்பட நண்பரைப் போல் நெருங்கிப் பழகிய ராமகிருஷ்ணனை பிரியப்போகிறோமே என்ற எண்ணம் என்னைப் போலவே எல்லோருக்கும் எழுந்தது. 


( தொடரும் )


பாகம் 11






2 comments:

'பரிவை' சே.குமார் said...

நெருக்கமான ஒருவரைப் பிரிவதென்பது வருத்தமான விஷயம்தான்... என்னாச்சுன்னு அறிய ஆவல்...

துபாய் ராஜா said...

ஆம் நண்பரே. மகிழ்ச்சியும், துக்கமும் இணைந்ததே மானுட வாழ்க்கை என்பதை சில சமயம் நம் மனம் ஏற்க மறுக்கிறது.