Tuesday, August 08, 2017

அருள்தரும் அன்னை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருவரலாறு


அங்காளபரமேஸ்வரி
உலகம் பிறக்கும் முன் ஒரு நாழி முன் பிறந்தாள்
கலியுகம் பிறக்கும் முன் கால் நாழி முன் பிறந்தாள்
சூரியன் சந்திரன் இல்லாத நாட்டிலே முந்தி பிறந்தாள்

மூவரை ஈன்று எடுத்தாள்,செத்து பிழைத்தாள்,
சிவனுக்கே பாரியானாள்
மாண்டு பிழைத்து மறு ரூபம் ஆனா
மாய சக்தி எங்கள் ஆதி சக்தி

அங்காளபரமேஸ்வரிஸ்ரீ அங்காள பரமேஸ்வரி காயத்ரி
ஓம் ஆதி சக்தி ச வித்மஹே
அங்காளபரமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத். "
ஓம் மஹா சக்தியைச்ச வித்மஹே
சிவ பத்னிச தீமஹி
தன்னோ அங்காள பரமேஸ்வரி ப்ரசோதயாத்
ஓம் காளிகாயை வித்மஹே
மாதாஸ்வரூபாயை தீமஹி
தன்னோ அங்காளி ப்ரசோதயாத்
--------------------------------------------------

அங்காளபரமேஸ்வரி வழிபாடு துதி மந்திரம்
ஸ்ரீ அங்காளி, அங்காளம்மன்,
அங்காள பரமேசுவரி பக்தி துதி.
ஏகவக்த்ராம் த்ரிநேத்ராம் ச ஜடாமகுட மண்டிதாம்
ஜ்வாலாகேசாம் கராளம் ச தக்ஷிணே நகர குண்டலாம் |
வாமகர்ணே பத்ரபூஷாம் ஸர்வாபரண பூஷிதாம்
பாசசூல கபாலோக்ர டங்க ஹேதி விராஜிதாம்
பீதாம்பராம் வ்ருஷாரூடாம் அங்காள பரமேஸ்வரீம்
வந்தே சதுர்புஜாம் உக்ராம் குங்குமாபாம் சுபப்ரதாம் ||

ஒரு முகமும் மூன்று கண்களும் நான்கு கைகளும் உடையவள்; அக்கினிச் ஜ்வாலை போன்று சிவந்த கூந்தலை மகுடமாகக் கொண்டவள்; பயங்கரி; வலது செவியில் முதலை வடிவில் அமைந்த குண்டலத்தையும், இடது செவியில் தாமரை போன்ற பத்ர குண்டலத்தையும் அணிந்தவள்; எல்லா அணிகலன்களும் பூண்டவள்; பாசக் கயிறு, சூலம், கபாலம், உளி அல்லது கோடாரி, ஹேதி என்ற கூர்மையான ஆயுதம் தாங்கியவள்; வெண்பட்டாடை உடுத்தியவள்; காளை மேல் வீற்றிருப்பவள்; குங்குமப்பூ நிறத்தினள்; நலன்களை வழங்குபவள் - ஆகிய அங்காள பரமேஸ்வரியை வணங்குகிறேன்.அருள்மிகு அங்காள பரமேஸ்வரி ஸ்லோகம்,
ஸ்ரீ அங்காளி, அங்காள ஈசுவரி வழிபாடு சுலோகம்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நமோபகவதி
அங்காளபரமேஸ்வரி ஏஹியேஹி
ஸகல சௌபாக்யம் மே தேஹி தேஹி
சகல கார்ய ஸித்திம்
குரு குரு ஓம் நமஹ் ஸ்வாஹா.

செவ்வாய்க்கிழமை தோறும் ஒரு மனதுடன் அங்காளியை மேலே உள்ள சுலோகத்தை 18 முறை கூறி,பானகத்தை நிவேதித்து மனதார வழிபடுங்கள். வாழ்வில் சுபிட்சம் அடைவீர்கள். ஜெய் அங்காளி!!!


அங்காளபரமேஸ்வரி ஸ்லோகம்
ஓங்கார உருவினளே ஓம் சக்தி ஆனவளே
ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே
பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே
அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே

இந்த அம்மன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
------------------------------------------------------------

ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி துதி.

ஓம் சக்தி! ஸ்ரீ அங்காளம்மா!
அங்காளம்மா! ஓம் சக்தி!
அம்மா தாயே! அருள் புரிவாயே!
ஓம் ஓம் சக்தியே!
அங்காளம்மா சக்தியே!
அங்காளம்மா சக்தியே!
ஓம் ஓம் சக்தியே!
ஜெய ஓம் ஜெயம்!
அங்காளியே ஜெயம்!
ஜெயமே ஜெயம்!
அங்காளியே ஜெயம்!
தாயே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி
அருள் புரிவாய் அம்மா!!!
----------------------------------------------------------------------
----------------------------------------------------------------
அருள்தரும் அன்னை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருவரலாறு

சதுர்யுகத்தில் ஆதி கிரேதாயுகத்திற்கு முன் சரஸ்வதியின் சாபத்தால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. அந்த தோஷத்தை நீக்கும் பொருட்டும், உலக மக்களுக்கு அருள்பாலிக்கும் பொருட்டும் அன்னை அங்காள பரமேஸ்வரி எழுந்தருளிய தலம் தான் மேல்மலையனூர். இந்த அருள் தரும் அங்காள பரமேஸ்வரிக்கு தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆலயங்கள் உள்ளன. அப்படிப்பட்ட ஆலயம் ஒன்று நாகப்பட்டினம் மாவட்டம் வரகடை என்ற ஊரில் உள்ளது. அங்காள பரமேஸ்வரியின் கதை என்ன?அருள்தரும்  ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அன்னையின் கதை

தனக்கு ஐந்து தலை வேண்டுமென சிவபெருமானிடம் வரம் பெற்றார் பிரம்மன். ஒரு முறை பிரம்மன் கயிலாயம் சென்ற போது பார்வதி அவரைத் தொலைவில் இருந்து பார்த்தாள். சிவபெருமான்தான் வருகிறார் எனத் தவறாக நினைத்தாள். அவருக்கு பாத பூஜை செய்தாள் பார்வதி. அந்த நேரம் பார்த்து சிவபெருமான் அங்கு வரவே பார்வதிக்கு குழப்பம் ஏற்பட்டது. கோபம் கொண்டாள் பார்வதி. பிரம்மனுக்கு ஐந்து தலை இருப்பதால்தானே இந்தக் குழப்பம் என்றெண்ணினாள் பார்வதி. பிரம்மனின் ஐந்தாவது தலையை அகற்றிவிடுங்கள் என சிவபெருமானிடம் முறையிட்டாள் பார்வதி. சிவபெருமானும் பிரம்மாவின் ஐந்தாவது தலையை கொய்து எறிந்துவிட்டார்.

இதையறிந்த சரஸ்வதிக்கு கோபமேற்பட்டது. இந்த செயலுக்குக் காரணமான சிவபெருமான் மீதும் பார்வதி மீதும் அளவிலா சினம் கொண்டாள்.

‘‘நீர் பிரம்மஹத்தி தோஷம் பிடித்து மயானம் தோறும் அலைந்து திரிவீராக’’ என சிவபெருமானுக்குச் சாபமிட்ட சரஸ்வதி ‘‘இதற்கு காரணமான நீ அகோர உருவம் கொண்டு, செடி கொடிகளை அணிந்து கொண்டு பூத கணங்களுடன் காடு மேடெல்லாம் அலைவாயாக’’ என பார்வதிக்கு சாபமிட்டாள். அதன்படி இருவரும் மயானத்திலும் காடுமேடுகளிலும் அலையத் தொடங்கினர். இவர்களின் நிலைமையை உணர்ந்த மகாவிஷ்ணு மோகினி உருவம் எடுத்து சரஸ்வதியிடம் சென்றார். இவர்களது சாப விமோசனம் பற்றி தெரிந்து கொண்டு அதை இருவரிடமும் தெரிவித்தார். சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்க பார்வதி அங்காள பரமேஸ்வரியாக உருவெடுத்தாள். மகாலட்சுமி உதவியுடன் பிரம்மாவின் கபாலத்தை தனது காலால் மிதித்து தன்னிடம் வைத்துக் கொண்டாள். சிவபெருமானின் தோஷம் நீங்கியது.
-------------------------------------------------------------------------
அங்காள பரமேஸ்வரி பற்றிய இன்னொரு வரலாறும் உண்டு.

மாபெரும் யாகம் ஒன்றை நடத்தத் தொடங்கினான் தட்சன். அனைவருக்கும் அழைப்பு அனுப்பிய தட்சன், சிவபெருமானுக்கு மட்டும் அழைப்பு அனுப்பவில்லை.

தன் தந்தையான தட்சனின் செயலைக் கண்டு கோபமடைந்த பார்வதி நேரே தட்சனிடம் சென்றாள். தாட்சாயணியான தனக்கும் தன் கணவரான சிவபெருமானுக்கும் உரிய பங்கை தர வேண்டும் என தந்தையிடம் போராடினாள். தாட்சாயணிக்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் தர மறுத்தான் தட்சன். சினம் கொண்ட பார்வதிதேவி, தட்சனை சபித்தாள். அதே வேள்வித் தீயில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டாள்.

நடந்ததை அறிந்த சிவபெருமான் கோபம் கொண்டார். அவரது நெற்றிக் கண்ணில் இருந்து வீரபத்ரரும், பார்வதியிடமிருந்து அங்காள பரமேஸ்வரியும் தோன்றினார்கள். அவர்கள் இருவரும் தட்சன் யாகத்திற்காக தயார் செய்திருந்த யாக குண்டத்தை துவம்சம் செய்தார்கள்.

அங்காள பரமேஸ்வரி
எங்கு அநீதி நடந்தாலும் முதலில் அங்கு போய் நீதி கிடைக்கச் செய்வது அங்காள பரமேஸ்வரியின் குணம். அதனால்தான் பெரும்பாலும் அங்காளப் பரமேஸ்வரியின் ஆலயம் ஊரின் எல்லையில் அமைந்திருக்கிறது
அங்காளம்மனிடம் எப்படி வேண்டிக்கொள்வது? குடும்பத்தில் குழப்பம், நோய், நொடிகள், பேய் பிசாசு, பில்லி,சூன்யம், வைப்பு, ஏவல், காட்டேரி போன்ற பிணிகள் பிடித்து இருந்தால் அங்காளபரமேசுவரியை மனதில் நினைத்தாலே போதும், அவள் வந்து துன்பத்தைத் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர். பொதுவாக எந்த பாதிப்பு வந்தாலும் அம்மா தாயே எங்கள் குடும்ப கஷ்டங்கள், தொல்லைகள், துயரங்கள் போன்றவற்றை எல்லாம் விலக்கி விடு என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

வெற்றி தரும் அங்காள பரமேஸ்வரி வழிபாடு

சிலர் எதில் இறங்கினாலும் தோல்வியே வரும். தொட்டது துலங்காது. மேலும், வேலை வாய்ப்புகளும் அமையாது. பணமும் பாழாகும். இத்தகைய தோல்விகளால் பலரும் துவண்டு போய் விடுவார்கள். இதற்கெல்லாம காரணம் அவர்களின் ஜாதக அமைப்பே!. எப்படிப்பட்ட ஜாதக அமைப்பையும் மாற்றிவிடக்கூடிய சக்தி அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் செய்யப்படும் பரிகாரத்துக்கு உண்டு. ஈஸ்வரி பட்டம் உள்ள அம்மன் தெய்வங்கள் கஷ்டப்படுகிறவர்களுக்கெல்லாம் இரக்க உணர்வோடு வெற்றியைத் தரும் சிறப்பு வாய்ந்தவள் என்று கருதப்படுகிறாள். குறிப்பாக அங்காள பரமேஸ்வரி அனைவருக்கும் வெற்றிக்குத் துணை நிற்கும் தெய்வமாவாள். தொடர்ந்து 27 வெள்ளிக்கிழமை அங்காள பரமேஸ்வரி ஆலயத்துக்கு சென்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் அதாவது சனி ஹோரையில் , 18 எலுமிச்சம்பழங்களால் ஆன மாலையிட்டு, 9 எலுமிச்சம்பழங்களை இரண்டாக வெட்டி மஞ்சள் குங்குமம் இட்டு, 18 தீபமிட்டு வழிபட்டு வந்தால், தோல்வியைத் தரும் தோஷம் விலகி ஓடும். வெற்றி மேல் வெற்றி கிட்டும். நினைத்த காரியம் கைகூடும்.

இந்த பரிகார பூஜை செய்யும் போது தீபமேற்றி `அங்காள பரமேஸ்வரி தாயே! எனக்கு வெற்றியை நீ மட்டுமே தர முடியும். என் வாழ்வில் ஒளியேற்று!' என மனமுருகி வேண்டி கொள்ள வேண்டும். இதனால் தோல்வி தோஷம் அடியோடு நீங்கி , வெற்றி மேல் வெற்றிகள் குவியும்

எங்கள் குலதெய்வமான  அருள்மிகு சுவாமி சங்கிலி பூதத்தார் திருவரலாறு  எழுத என்னைத் தூண்டியவரும், அகிலம் காக்கும் அன்னை அருள்தரும்  ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருவரலாறு கதையையும், தேவையான படங்களையும் தந்து உதவியவருமான பழைய பேட்டையைச் சேர்ந்த அன்பர் திரு. பிச்சுமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும், நமஸ்காரங்களும் .

நன்றி. வணக்கம்.

Tuesday, August 01, 2017

அருள்தரும் அன்னை ஶ்ரீ முப்பிடாதி அம்மன் திருவரலாறு

அனைவருக்கும் வணக்கம்.

 மக்களை காப்பவன் மன்னன். மழை, வெள்ளம், புயல், வெயில் மற்றும் நோய், நொடி என அனைத்து ஆபத்துகளில் இருந்தும் காத்து மனமகிழ்ச்சியோடு வைத்து இருந்து அழகு பார்ப்பவள் அனைத்துலகிற்கும் அன்னையான அம்மன்.

மண்ணுலக மக்கள் வணங்கும் அம்மன் அவதாரங்கள் எத்தனையோ என்றாலும் நெல்லைச் சீமையில் 'முப்பிடாதி’ என்ற பெயர் மிகப் பிரசித்தம். எண்ணற்றோருக்கு குலதெய்வமாகத் திகழும் இந்த அம்மன், அசுரர்கள் மூவருக்கு காவல் தெய்வமாக திகழ்ந்தவள். அந்த மூன்று  அசுரர்களின் இரும்பு, பொன், வெள்ளியாலான மூன்று கோட்டைகளுக்கும் காவலாக இருந்தவள் இந்த அம்மன் என்கிற ஒரு தகவல் உண்டு. முப்புரங்களையும் காத்ததால், முப்புராரி என்று பெயர். அதுவே பிறகு முப்புடாதி, முப்பிடாரி என்றும் மாறியதாகச் சொல்வர். இது தவிர, நெல்லைச் சீமையில் பல்வேறு பகுதியில் கோயில் கொண்டிருக்கும் இந்த அம்மனுக்கு, அந்தந்த பகுதிகளுக்கே உரிய தனிக்கதைகளும் உண்டு.முப்பெரும் சக்தி அன்னைகளான சரஸ்வதி, இலட்சுமி, பார்வதி எனும் தெய்வங்களை திருநெல்வேலி பகுதி மக்கள், தங்களுடைய பண்பாட்டிற்கு ஏற்ப முப்பிடாரி என்று பெயரிட்டு வணங்கி வருகிறார்கள் என்றும் கூறுவது உண்டு. நெல்லை வட்டார பகுதிகளில் முப்பிடாரி, முப்பிடாத்தி, முப்புடாதி என்கிற பெயர்கள் ஆண்-பெண் இரு பாலருக்கும் பொதுப்பெயராகி இன்றும் வழங்கி வருகிறது.ஸ்ரீ முப்பிடாதி அம்மன்  காயத்ரி மந்திரம்
“ஓம் த்ரிவதனாயை ச வித்மஹே
த்ரிஸூல ஹஸ்தாயை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்”


அருள்மிகு ஶ்ரீ முப்பிடாதி அம்மன் திருவரலாறு

அஷ்ட காளியரில் மூன்றாவதாக மூன்று தலைகளுடன் அவதரித்தவள் முப்பிடாதி. பிடரி என்றால் தலை என்று பொருள். மூன்று தலைகள் இருந்தமையால்  முப்பிடரி என்று அழைக்கப்பட்ட இந்த அம்மன் பின்னர் முப்பிடாரி என்று அழைக்கப்படலானார். இதுவே மருவி முப்பிடாதி என்றானது. இந்த அம்மனுக்கான  கோயில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் அமைந்துள்ளன. கயிலாயம் விட்டு வந்த அஷ்ட காளியர்கள் பொதிகை மலைக்கு வந்து  சேர்ந்தனர். அங்கிருந்து ஒவ்வொருவரும் பூலோகத்தில் பல்வேறு இடங்களுக்குப் பெயர்ந்தனர். விரும்பிய இடத்தில் அமர்ந்துகொண்டு தான் வந்ததை அப்பகுதி  மக்களுக்கு உணர்த்தி கோயில் கொண்டு அருள்பாலித்து வருகின்றனர். மகிசாசுரனை அழிக்க அம்பிகை எட்டு பெண் குழந்தைகளாக நாகலோகத்தில் பிறந்தாள். அவர்களில் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தைதான் முப்பிடாதி.


அசுரர் குலத்துப் பெண் தானாவதி தனக்கொரு ஆண் வாரிசு வேண்டும் என்று பிரம்மனை நோக்கித் தவம் இருந்தாள்.தானாவதியின் கடும் தவத்தினை கண்ட பிரம்மதேவன் அவள் முன் தோன்றி, தானாவதி கேட்ட வரத்தைக் கொடுத்தார். வரத்தின் பயனாக தானாவதிக்கு மகனாக மகிஷாசுரன் பிறந்தான். வேதங்களையும், அனைத்து கலைகளையும் கற்றுணர்ந்த மகிஷாசுரன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். மகிஷாசுரனின் தவத்தைக்கண்டு சிவபெருமான் அவன் கேட்ட வரங்களையெல்லாம் கொடுத்தார். வரங்களைபெற்ற மகிஷாசுரன், " ஊர்வன, பறப்பன உள்ளிட்ட எந்த இனத்தாலும் எனக்கு மரணம் வரக்கூடாது. பெண் வயிற்றில் பிறக்காத பெண்ணால் மட்டுமே எனக்கு மரணம் நேர வேண்டும் " என்று வரம் கேட்டான். அதனைக் கேட்ட சிவபெருமான், " அப்படியே ஆகட்டும் " என்றார்.


வரங்களை பெற்ற மகிஷாசுரன் தனக்கு மரணம் நேர வாய்ப்பே இல்லை. என்ற ஆணவத்தில் தான் ஆண்டு வந்த மகேந்திர கிரிபர்வதம் (தற்போதைய மைசூர், மகிஷன் ஆண்டு வந்த ஊர் என்பதால் மகிஷா ஊர் என்று அழைக்கப்பட்டது. அது மருவி மைசூர் என்றானது) பகுதியில் தான் எண்ணியபடி ஆட்சி புரிந்தான். தனது சுயநலத்திற்காக கொடுஞ் செயல்கள் புரிந்து வந்தான். தேவர்களை துன்புறுத்தினான். மகிஷாசுரனின் கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியாத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். 


இதனிடையே ஒருநாள் கயிலாய மலையில் பார்வதிதேவி, விநாயகர், முருகன் சகிதமாக வந்தபோது சிவபெருமான் இருகண்களும் திறந்திருந்த நிலையில் ஆழ்ந்த தியானநிஷ்டையில் இருந்ததைக் கண்ட விநாயகப் பெருமான், அன்னை சக்தியிடம், “ தாயே, தந்தை ஏன் கண்களை திறந்தபடி தியானம் செய்கிறார்.  தியானம் என்றாலே கண்களை மூடித்தானே செய்ய வேண்டும் என்று வினா தொடுத்தார்.” அதற்கு பார்வதி தேவி, “தந்தையின் கண் ஒளியினால் தான் அண்ட சராசரங்கள் இயங்குகிறது. அவர் கண்களை மூடினால் அகிலமும் இருட்டாகும்” என்றார். 


அப்போது குறுக்கிட்ட முருகன், “தாயே, அப்படியென்றால் தந்தை ஒரு முறை கண்களை மூடிக்காட்டட்டும் பார்ப்போம்” என்றார். “இதை எப்படி தந்தையிடம் கூற, என்று விநாயகர் கேட்க, அவரிடம் சொல்ல வேண்டாம், அதை நானே செய்கிறேன் என்று கூறியபடி, பார்வதி தேவி, சிவபெருமானின் கண்களை, தனது கரங்களால் மூடினார். மறு கணமே அகிலமும் இருளில் மூழ்கியது. உடனே சக்தியின் கரங்களை விலக்கிக் கொண்டு கண்ணை திறந்தார் சிவன். “என்ன விளையாட்டு இது” சினம் கொண்டார், சிவன். பணிந்தார் பார்வதிதேவி, “சுவாமி, பிள்ளைகள் கேட்டதற்காக செய்தேன். தாங்கள் பொறுத்தருள வேண்டும்.” என்றார். 


இந்த செயலுக்காக நீ வருந்தியே ஆக வேண்டும் என்ற சிவன்,  " நாகக்கன்னியின் வயிற்றில் அஷ்ட காளியாக பிறக்க வேண்டும் " என்று சபித்தார். " இந்தச் சிறிய தவறுக்கு மானிடப் பிறப்பா, அதுவும் நாகத்தின் வழியாகவா " என்று வருத்தமுற்ற பார்வதி தேவி, அவ்விடத்திலிருந்து எழுந்து நகர முற்பட்டார். அப்போது சிவபெருமான் கடுஞ்சினம் கொண்டு நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து வெளியான தீப்பிழம்புகள் பார்வதிதேவியின் மேனியை எட்டு பிண்டங்களாக்கின. அந்த எட்டு பிண்டங்களையும் கையில் எடுத்துக்கொண்டார் சிவன். பாதாள லோகத்தில் நாகக்கன்னி பிள்ளை வரம் வேண்டி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தாள். அவள் முன் தோன்றிய சிவன், தன்னிடமிருந்த எட்டுப்பிண்டங்களையும் சாப்பிடுமாறு கொடுத்தார். அதை உண்ட நாகக்கன்னியின் வயிற்றில் அது எட்டு முட்டைக்களாக உருமாறி வெளி வந்தன. நாகக்கன்னி அந்த எட்டு முட்டைகளையும் அடைகாத்து வந்தாள்.


நான்காவது நாள் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எட்டு முட்டையிலிருந்து எட்டு பெண் குழந்தைகள் பிறந்தன. முதலாவதாக பிறந்தாள் முத்துமாரி என்ற மாரிமுத்தாரம்மன், இவளை முத்தாரம்மன் என்றும் பக்தர்கள் அழைப்பதுண்டு. இரண்டாவதாக பிறந்தாள் மாகாளி என்ற பத்திரகாளி, மூன்றாவதாக மூன்று முகத்துடன் பிறந்தாள் முப்பிடாதி (பிடாரி, பிடதி - என்றால் தலை என்று பொருள்). மூன்று தலைகள் இருந்ததால் முப்பிடதி, முப்பிடரி என்று அழைக்கப்பட்டது, இதுவும் மருவி முப்பிடாரி என்றும் முப்பிடாதி என்றும் அழைக்கப்படலாயிற்று. நான்காவதாக பிறந்தாள் உலகளந்தாள் என்ற உலகமாதா, இவளை உலகநாயகி என்றும் அழைப்பதுண்டு. ஐந்தாவதாக பிறந்தாள் அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி, அன்னை இவளே நாகாத்தம்மனாகவும், நாகவல்லியாகவும் அழைக்கப்படுகிறாள். ஆறாவதாக பிறந்தாள் செண்பகவல்லி என்ற வடக்கு வாசல் செல்வி, இவள் செல்லியம்மன் என்றும் அழைக்கப்படுகிறாள். ஏழாவதாக பிறந்தாள் சந்தனமாரி. இவளே சடைமாரி, ஆகாசமாரி என அழைக்கப்படுகிறாள். கடைசியாக பிறந்தாள் காந்தாரி.


பிள்ளைகள் எட்டுபேரையும் நாகக்கன்னி, அன்போடும், அரவணைப்போடும் வளர்த்து வந்தாள். வளர்ந்து வந்த பிள்ளைகள் கன்னியர் ஆகினர். " அம்மா, எங்கள் முகமும் உங்க முகமும் வேறுபட்டு உள்ளதே " என்று கேள்வி எழுப்ப, " எல்லாம் அந்த சிவனார் செயல் " என்றாள் நாகக்கன்னி. உடனே, " நம்மை  ஏன், தாயைப்போல் நாககன்னிகளாக படைக்காமல் மனிதகுல பெண்களாக படைக்க வேண்டும். இந்த நாகலோகத்தில் மனித பிறப்பு எடுத்து என்ன பயனைப் பெறப் போகிறோம். அதை அந்த சிவனிடமே கேட்போம் " என்று கூறி, அக்காள் தங்கை எட்டு பேரும் சிவலிங்கத்தை வைத்து பூஜித்து சிவனை நோக்கி தவமிருந்தனர். 


அவர்களின் தவத்தைக் கண்ட சிவன் அவர்கள் முன் தோன்றினார். அஷ்ட காளிகள் சிவனிடம் தங்களின் பிறப்பு குறித்து கேட்க, " மகேந்திரகிரி பர்வதத்தை ஆண்டு வரும் மகிஷாசுரனை வதம் செய்யவே உங்கள் படைப்பு " என்று சிவனும் பதில் கூறினார்.  அஷ்டகாளிகளும், " தங்களின் வேண்டுகோளை ஏற்று மகிஷாசுரனை நாங்கள் அழித்து வந்த பின் எங்கள் எட்டு பேரையும் நீங்கள் மணமுடிக்க வேண்டும் " என்றனர். அதற்கு சிவனும் ஒப்புதல் அளித்தார். மேலும் மகிஷாசுரனை அழிக்கும் வகையில் அனைத்து வரங்களையும் நல்கினார் சிவபெருமான்.


சிவபெருமான் ஆணைப்படி மகேந்திரகிரி பர்வத மலைக்கு வந்த அஷ்டகாளிகளுக்கும், மகிஷாசுரனுக்கும் இடையே கடுமையான யுத்தம் நடக்கிறது. தனித்தனியாக நிற்பதை விட, ஒரு சேர நின்றால் தனது வலிமை அதிகம் என்பதை உணர்ந்து அஷ்ட காளிகள் எட்டுபேரும் ஒருசேர அமைந்து சாமுண்டீஸ்வரியாக மாறி மகிஷாசுரனை வதம் செய்தனர். இறக்கும் தருவாயில் அரக்கன் மகிஷாசுரன், " தாயே என்னை மன்னித்து விடுங்கள். வாழும் வரை மனித குலத்தில் ராஜாவாக இருந்தேன். இனி கானகத்தில் வாழும் உயிர்களுக்கு ராஜாவான சிங்கமாக மாறி, தாயே உம்மை சுமக்கும் பாக்கியம் தந்தருள வேண்டும் " என்றான். ஆங்கார ரூபினியாக இருந்த அன்னை சாமுண்டீஸ்வரி, சாந்த ரூபினியாக மாறினாள். மகிஷாசுரனை மன்னித்து சிங்கமாக்கி, தனது வாகனமாக்கிக் கொண்டாள். அன்றிலிருந்து அஷ்டகாளிகள் எட்டு பேரும் ஒரு சேர நின்ற கோலத்தில் உள்ள தேவி மகிஷாசுரமர்த்தினி என்ற நாமத்தில் அழைக்கப்பட்டாள். 


  
எழுத என்னைத் தூண்டியவரும்,  என் அன்னை வழி  தெய்வமான இந்த அருள்மிகு ஶ்ரீ முப்பிடாதி அம்மன் திருவரலாறு கதையையும், தேவையான படங்களையும் தந்து உதவியவருமான பழைய பேட்டையைச் சேர்ந்த அன்பர் திரு. பிச்சுமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும், நமஸ்காரங்களும் .

நன்றி. வணக்கம்.

Monday, April 03, 2017

வண்டித் தடம் - பாகம் 3
பாகம் 3 - சுக்காண்டி

 எம்ஜியாரின் ஆட்டுக்குட்டி அன்று ஒரு வக்கணைக்கு இரையானதை நினைத்து வருத்தப்பட்டவாறு சிறிது நேரம்  களத்துமேடு மரநிழல் மற்றும் தெரிந்தவர் வயல்களில் அமைக்கப்பட்டுள்ள குடில்கள் என அங்கே, இங்கே நின்று, அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தவர்கள் மதியப்பொழுது தாண்டும் நேரமானவுடன் உணவு மற்றும் பண்ணைகளில் மாடுகளை கொண்டு சென்று பால் கறக்க வேண்டும் என்பதற்காக அவரவர் கால்நடைகளை திரட்டி, அழைத்துக் கொண்டு வீடு திரும்பலானார்கள். ஆடு, மாடுகள் ஏதும் இல்லாத காரணத்தால் வயல்களில் பயிர்க்காவலுக்கு இருந்தவர்களும் நாய்களை அவிழ்த்து விட்டு விட்டு வேலிப் படல்களையும் சாத்தி விட்டு கிளம்பலானார்கள்.

ஒரு வழியாக கிழக்கு, மேற்கு வடக்குப் பகுதி  வயல் பிரதேசங்கள் அனைத்தும் ஆளரவமற்று அமைதியாக தென்பக்கம், பொத்தையின் கீழ் அடையாமடையின் வழியில் அமைந்துள்ள தள்ளுநீர் ஓடையில் ஒரு உருவம் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தது. ஓடைக்கரைமண்ணை நீர் அரித்துச் செல்லாமல் இருப்பதற்காகவும், ஓடையின் அகலம் தெரியும் வகையில் வயல் எல்லை அளவிற்காகவும் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த கற்களை கடப்பாரையால் நெட்டித் தள்ளி, அதன் மேல் வரப்பு மண்ணை வெட்டிச் சரித்து ஓடை அளவைக் குறைக்கும் திருட்டு வேலை செய்து கொண்டிருப்பவன்தான்தான் சுக்காண்டி.

தள்ளுநீர் ஓடை பாசனக்கால் அல்ல, கிழக்கில் இருந்து மேற்காக செல்லும் அடையாமடையில் வெள்ளம் வரும்போது கரை உடைந்து வயலில் மண் சாடி பாதிக்கக்கூடாது என்பதற்காக பக்கத்து வயல்காரர் புலிமணி அவரது வயலுக்குள்ளே தென்வடலாக அமைத்துள்ள வெள்ளவடிகால் ஓடையே தள்ளுநீர் ஓடையாகும். அதைத் தான் கல், மண் சரித்து, அகலத்தைக் குறைத்து அவனது வயல் அளவை கூட்டும் குள்ளநரி வேலையை செய்து கொண்டிருந்தான் சுக்காண்டி. இதற்கும் அது சுக்காண்டியின் சொந்த வயல் கிடையாது. புலிமணியின் தாய்வழி  மாமன் மகனான முத்துசாமியின் வயலைத்தான் சுக்காண்டி குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறான்.

இந்த இடத்தில் சுக்காண்டியையும், முத்துசாமியையும் பற்றி கொஞ்சம் விரிவாக தெரிந்து கொள்வோம்சுக்காண்டியின் தாத்தா புலிப்பட்டி ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்து அப்படியே தங்கிவிட்டவர் ஆவார். சுக்காண்டியின் தந்தை வண்டி, மாடுகள் வைத்து வயல்வேலைகளுக்கு மற்றும், சந்தைகளுக்கு சாமான் ஏற்றிச் செல்வது என வாடகைக்கு வண்டி ஓட்டி வந்தார். சிறுவயது முதலே சுக்காண்டியும் அவரோடு சேர்ந்து  விவசாயம் சம்பந்தப்பட்ட கூலி வேலைகளே செய்து வந்தான்.

சிறு வயதில் ஊர் மாடுகளை மேய்த்து வந்தவன், பதின்ம வயது முதல் ஓடை வெட்டுவது, உழுவது, வரப்பு வெட்டுவது, மரம் அடித்தல், நாற்று பாவுதல், பிடுங்கி நடுதல், களை எடுப்பது, உரம் இடுதல், பயிர்களுக்கு பூச்சி மருந்து அடித்தல்,       மற்றும்  விளைந்த நெற்பயிரை அறுத்து, களம் சேர்த்து, கதிர் அடித்து, தூசி, தும்பு போக சொழவடித்து, மூட்டை பிடித்து, வண்டி ஏற்றி உரியோர் வீடு கொண்டு சேர்ப்பது வரை எல்லா வேலைகளையும் திறம்பட கற்று தேர்ந்தான். மிளகாய், வாழை, கடலை, காய்கறிகள் என அனைத்து பயிர்வகை வேலைகளையும் ஈடுபாட்டோடு செய்து தெரிந்து கொண்டான்.

அறுவடை முடிந்து வயல்களை ஆறப்போட்டிருக்கும் காலங்களில்   வீடுகளின் பின்னால் உள்ள தொழுவங்களின்  எருக்குழிகளில் குவிக்கப்பட்டு கரும்பாறையாக இருகி இருக்கும் மாட்டுச்சாணத்தை மண்வெட்டி கொண்டு வெட்டி, கூடைகளில் அள்ளி, தலைச்சுமையாக சுமந்து சென்று, தெருவில் நிற்கும் வண்டியில் தட்டி, வண்டி நிரம்பியதும் மாடுகளைப் பூட்டி வயல்களில் கொண்டு   உரமாகத் தட்டுவது, கோடை காலங்களில் மணிமுத்தாறு மீன்பண்ணைத் துறையின் நீர் வற்றிய  மீன் வளர்ப்பு குட்டைகளில் படிந்துள்ள சிறந்த மீன்கழிவு உரமான கரம்பை மண்ணை குத்தகை எடுத்து வண்டியில் அள்ளிக் கொண்டு  போய் வயல்களில் உரமாகத் தட்டுவது போன்ற கடின வேலைகளையும் செய்து   வந்தான்.

 எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறானோ அந்த அளவிற்கு சாப்பிடவும் செய்வான். சாப்பாடு என்றால் அறுசுவை உணவெல்லாம் கிடையாது. கூலிவேலை செய்யப்போகும் வீடுகளில் கொடுக்கும் நீர் விட்ட சாதமும், சுண்ட வைத்த பழைய கறியும்தான். ஆனால் எவ்வளவு சாப்பிட்டாலும் அவன் வயிறு புடைக்கவே செய்யாது. சுக்குபோல காய்ந்துதான் இருக்கும். அதனால்தான் சுகுமாறன் என்ற அவன் இயற்பெயர் மறைந்து சுக்காண்டி என்ற பெயரே நிலைத்துவிட்டது.

பருவவயது வந்ததும் அவன் தாத்தா வழி பூர்வீக ஊரில் இருந்து  சொந்தத்தில் பெண் எடுத்து திருமணம் செய்து வைத்தார்கள். மங்கம்மா என்ற பெயர் கொண்ட அவளும் சாதாரணப் பட்டவள் அல்ல. தண்ணீர் செழிப்பு இல்லாத ஊர்ப்பக்கம் இருந்தவள் ஆதலால் வயல்வேலைகள் தெரியாது என்றாலும் சிறு வயது முதலே பீடி சுற்றுவதில் கை தேர்ந்தவள். மற்றவர் ஒரு நாளைக்கு நூறு கட்டு சுற்றினால் இவள் நூற்றம்பது கட்டு சுற்றுவாள். வேகமானவள். விவரமானவளும் கூட. 

திருமணம் ஆகி, மூன்று பிள்ளைகள் பெற்று எடுத்தவள், புலிப்பட்டி ஊர் குமரிப்பெண்களுக்கு பீடி சுற்ற கற்றுக்கொடுத்து முக்கூடல் ஊரில் உள்ள பீடிக்கம்பெனியில் ஏஜெண்ட் வேலை எடுத்து,  பீடி இலை, தூள், நூல் போன்ற மூலப்பொருள்களை வாங்கி, ஊர்ப்பெண்களுக்கு விநியோகம் செய்து, அவர்கள் சுற்றித்தரும் பீடிக்கட்டுகளை  கணக்கு வைத்து சேகரித்து வாராவாரம் வரும் பீடிக்கம்பெனி வண்டியில்   ஏற்றிய கையோடு உண்டான பணத்தையும், ஏஜெண்ட் கமிஷனோடு சேர்த்து உடனே வாங்கி விடுவாள்.

ஆனால் பீடி சுற்றித்தரும் பெண்களுக்கு வாரக்கூலி தராமல் மாதம் ஒரு முறையே பணம் தருவாள். அதையும் மொத்தமாக கொடுக்காமல் இழுத்தடித்துதான் கொடுப்பாள். எப்படியும்   அனைத்துப் பெண்களின் இரண்டு, மூன்று மாத பாக்கிப்பணம் அவள் கைவசமே இருக்கும். அந்தப்பணத்தையும் வட்டிக்கு கொடுப்பது, பாத்திர, பண்டங்கள், நகை, நட்டுகள் அடகு பிடிப்பது என்று பலமடங்காக்கி விடுவாள். அதிகவட்டி என்றாலும் ஆத்திர, அவசரத்திற்கு பணம் கொடுப்பவள் என்பதால் பீடி சுற்றும் பெண்கள் முதல் அனைத்து ஊர் மக்களும் அவளிடம் கொஞ்சம் அடக்கமாகத்தான் நடந்து கொள்வார்கள்.


பணத்தின் மீது மோகம் ஏற, ஏற கணவன் மீது அவளின் காதல் குறைந்து விட்டது. சேர்க்கும் பணத்தையும் சுக்காண்டியிடம் கொடுக்காமல் அவளே தனியாக வங்கிக்கணக்குகள் தொடங்கி வரவு, செலவு பார்த்துக் கொண்டாள். வங்கிக்கணக்குப் புத்தகங்களைக் கூட வீட்டில் வைத்தால் சுக்காண்டி பார்த்து விடுவான் என்பதால்  நியாய, தர்மப்படி நடக்கும் நேர்மையான ஊர்ப்பெரிய மனிதரான புலிமணியிடமே கொடுத்து வைத்து இருந்தாள். அதுகூட புலிமணியின் மீதான சுக்காண்டியின் கோபத்திற்கு ஒரு காரணமாய் இருந்தது.

                                  ( தொடரும் )