பாகம் 16 – துபாய் உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறது…..
முதல் பதினைந்து பாகங்களைப் படித்து விட்டு பின் இங்கே தொடரவும்.
பாகம் 16
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பேருந்து
நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோ எடுத்து பண்டாரவிளை வைத்தியர் இருக்கும் நெல்லை ஈரடுக்கு
மேம்பாலத்திற்கு கீழ் இருக்கும் பழைய பாலஸ் தியேட்டர் சென்ற போது அந்த அதிகாலை வேளையிலும்
அவ்வளவு கூட்டம் காத்திருந்தது. வைத்தியர் குடும்பத்தில் பெரியவரும், அவரது தம்பிகள்,
மகன்கள் என அனைவரும் ஒரு அறையில் வரிசையாக அமர்ந்திருப்பர். வழக்கமாக முதலில் பெரியவர் நோயாளிகளின்
நாடி பார்த்து என்ன பிரச்சினை என்று கேட்டறிந்து, அவரே பிரச்சினைக்குரிய இடத்தில் மருந்து எண்ணெய் போட்டு தடவி, கட்டுப் போடுவதற்கு தம்பிகள்,
மகன்களிடம் அனுப்பி விட்டு உடனடியாக அடுத்த ஆளைப் பார்க்க ஆரம்பித்து விடுவார். எனவே
எவ்வளவு கூட்டம் இருந்தாலும் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியிராது.
என்
முறை வந்ததும் எப்போது, எப்படி அடிபட்டது என்று பிரச்சினையை முழுதாக கேட்டறிந்தவர், எக்ஸ்ரே வாங்கிப் பார்த்து விட்டு ‘ஏர் கிராக்’
என்னும் எலும்பில் கீறல் போன்ற முறிவுதான். இரண்டு நாட்களுக்கு ஒரு முறையென பத்து அல்லது பனிரெண்டு முறை ‘முட்டைப்
பத்து’ போட்டால் சரியாகி விடும் என்று கூறி நம்பிக்கை அளித்தார்.
‘முட்டைப் பத்து’ ( பற்று ) என்பது முட்டையின்
வெள்ளைக் கருவோடு, ஊற வைத்து அரைத்த புளியங்கொட்டையை சேர்த்து பசை போல் ஆக்கி பருத்தியிலான
வேட்டித்துணியை உள்ளங்கை அளவில் தேவைக்கேற்ப இரண்டு, மூன்றடி நீளத்திற்கு கிழித்து முட்டை மருந்துப் பசையை நன்றாக தடவி பின் பிரச்சினைக்குரிய இடத்தில் எண்ணெய் போட்டு உருவி,
உடைந்து விலகி இருக்கும் சவ்வு மற்றும் எலும்புகளை பழைய நிலைக்கு கொண்டு வந்து மருந்துப் பசை துணியால் இறுக்கமாக
கட்டப்படும் கட்டு. மருந்துப் பசையின் ஈரம் காய காய கட்டு மேலும் இறுகி உடைந்த எலும்பு
சீக்கிரம் கூடி விடும். சற்று பெரிய முறிவென்றால் எலும்பு முறிந்த இடத்திற்கு ஏற்றார்
போல் மூங்கில் மட்டைகளை அடுக்கி வைத்து அதன்
மேல் கட்டுப் போடுவர். அதனை மட்டை வைத்து கட்டுதல் என்பர்.
காலை, மாலை மற்றும் தூங்கும் முன்
கட்டின் மீது நல்ல எண்ணெய், விளக்கெண்ணைய் அல்லது அவர்கள் தரும் மருந்து எண்ணெயை விடச்
சொல்வார்கள். சில வைத்தியர்கள் புளியங்கொட்டைக்குப்
பதில் உளுந்து மாவு, மற்றும் கொட்டைப் பாக்கு ஊற வைத்து அரைத்தும் சேர்ப்பர். எல்லா
வைத்தியரிடமுமே முதல் நாள் மட்டும்தான் துணியும், முட்டையும், கொட்டைப் பசையும் இலவசமாக
கிடைக்கும். இரண்டாவது முறை முதல் வைத்தியம் முடியும் வரை வெள்ளை வேட்டித்துணி, முட்டை,
உளுந்து மாவு, ஊற வைத்து அரைத்த புளியங்கொட்டை அல்லது கொட்டைப் பாக்கு பசை ஆகியவற்றை
நாம்தான் கொண்டு செல்ல வேண்டும்.
மருத்துவமனையில் போடப்படும் மாவுக்கட்டு
ஒரிரு மாதங்கள் கழித்தே பிரிக்கப்படுவதால் சில சமயம் எலும்புகள் சரியாக சேராமல் இடம்
மாறி அறுவைச் சிகிச்சை செய்யும் நிலை ஆகி விடும். ஆனால் பாரம்பர்யமான ‘முட்டைப் பத்து’
வைத்திய முறையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கட்டு பிரிக்கப்பட்டு வைத்தியர் கையால்
முறிந்த எலும்பின் நிலைமை பரிசோதிக்கப் படுவதால் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் எலும்பு
சேர்ந்து விடும். இயற்கையான பொருட்கள் கொண்ட வைத்தியம் என்பதால் பாதிக்கப்பட்ட பகுதியும்
பலம் பெறும் என்பதால் நெல்லை வட்டாரப் பகுதிகளில் எலும்பு முறிவிற்கு ‘முட்டைப் பத்து’
மிகவும் பிரபலமான வைத்திய முறையாகும்.
பெரியவர் காலில் எண்ணெய் போட்டு
தடவும் போதும். உடைந்திருந்த எலும்புகளை அழுத்தி தேய்க்கும் போதும் வலியில் உயிர் போனது.
பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டேன். நவீன வைத்தியத்தில் கொடுக்கும் மருந்துகள்
அந்த நேரத்தில் தற்காலிகமாக வலி தீர்க்கும்.
ஆனால் வலியை தூண்டி நிரந்தரமான தீர்வு தரும் வைத்தியம் செய்வதுதானே பாரம்பரிய முறை.
ஒரு வழியாக கட்டு கட்டிக் கொண்டு, நெல்லை புதிய பேருந்து நிலையம் அடைந்து பாபநாசம்
செல்லும் பேருந்தில் ஏறி அம்பாசமுத்திரத்தில் இறங்கி வீட்டை அடைந்தேன். ஏற்கனெவே துபாய்க்கு
செல்லும் முன் ஊருக்கு வர உள்ளேன் என்று சொல்லும் போது காலில் சிறிய அடி பட்டிருக்கிறது
என்று குறிப்பிட்டிருந்தாலும், காலில் போட்டிருந்த கட்டைப் பார்த்து தாய், தந்தையர்
மனம் பதறத்தான் செய்தனர்.
பத்து நாட்கள் வீட்டை விட்டு எங்கும்
வெளியே செல்லவில்லை. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நெல்லை சென்று பண்டாரவிளை வைத்தியரிடம்
கட்டு போட்டு வந்தேன். ஒவ்வொரு தடவை கட்டு மாற்றும் போது எண்ணெய் போட்டு தடவும் போது
வலி குறைந்து கொண்டே வந்தது. ஊருக்கு வந்த ஒரு வாரத்திலே சென்னை அலுவலகத்தில் இருந்து அவ்வப்போது அழைத்து சீக்கிரம் வரச் சொல்லி
துபாய் கிளையிலிருந்து அழுத்தம் வர ஆரம்பித்து விட்டதால் எப்போது ஊரிலிருந்து கிளம்பி சென்னைக்கு
வரப்போகிறீர்கள் என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
No comments:
Post a Comment