பாகம் 11 - விடைகொடு
வேலையே….
முதல் பத்து பாகங்களைப் படித்து விட்டு பின் இங்கே தொடரவும்.
பாகம் 4 - காணாமல் போன காஞ்சனா….
பாகம் 9 - விருந்தும் விடுமுறை சுற்றுலாக்களும்….
பாகம் 11
ஒருவழியாக கவாண்டேவும் வந்துவிட
அவரிடம் பணிகள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டு கிளம்ப ராமகிருஷ்ணன் ஆயத்தமானார். அடுத்து
அவர் செல்ல வேண்டிய புதிய பிராஜக்ட் ஆபிஸில் ஓரிரு வாரங்களுக்குப் பின்னே பணிகள் தொடங்க
இருந்ததால் அதுவரை ஊருக்குச் சென்று குழந்தைகளுடனும், குடும்பத்தாரோடும் தங்கி இருக்கலாம்
என முடிவு செய்து இரண்டு நாட்களுக்குப் பின் கிளம்ப இருப்பதாக எல்லோரிடமும் தெரிவித்தார்.
நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பிரிவுபாசார விருந்து கொடுத்து ரயில் நிலையம் சென்று அவரை
வழி அனுப்பியும் வந்தோம்.
அதற்குப்பின் ஒருவாரம் கழித்து சென்னை
நண்பரின் உயரதிகாரி என்னை அலைபேசியில் அழைத்து டெலிபோன் இண்டர்வியூ செய்தார். எனது
பதில்களில் திருப்தி அடைந்ததால் விசா ஏற்பாடு செய்வதற்காக பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்து
அனுப்பச் சொன்னவர் ஓரிரு வாரங்களில் விசா வந்தவுடன் துபாய்க்கு கிளம்பி விடலாம் என்பதையும்
தெரிவித்தார். அங்கிருந்து சீக்கிரம் கிளம்புவது உறுதியாகிவிட்டதால் வந்ததில் இருந்து
போகாமலிருந்த ஹைதராபாத், செகந்திராபாத் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கும் சென்று
வந்தேன்.
சரியாக பதினைந்து நாள் கழித்து ஒரு
பதனன்று மாலை மீண்டும் அழைத்த சென்னை நண்பர் விசா வந்து விட்டதாகவும், விசா காப்பியை
ஸ்கேன் செய்து மெயில் ஐ.டிக்கு அனுப்பியிருப்பதாகவும், பார்த்து விட்டு உடனே சென்னை
கிளம்பி வருமாறும், ஒரு வாரத்திற்குள் துபாய் கிளம்ப வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.
அன்று வேலை முடிந்து நேராக மெயில் சென்டர் சென்று விசா காப்பியை பிரிண்ட் எடுத்துக்
கொண்ட நான், மணியிடமும், ஜானிடமும் மட்டும் புதிய வேலை கிடைத்த தகவல் கூறினேன். ‘கவாண்டேவிடம்
எப்படி கூற, என்ன நினப்பாரோ’ என தயங்க மணியோ, ‘அவர் அப்படியெல்லாம் கிடையாது. இந்த
மாதிரி வேறு வேலை கிடைத்து சென்றவர்களுக்கு நல்ல விதமாக உதவியிருக்கிறார்’ என்று கூறினான்.
இரவு எட்டு மணி அளவில் மிகுந்த தயக்கத்துடன் கவாண்டேயின் வீட்டுக்கு மணியையும் உடன்
அழைத்துக் கொண்டு சென்றேன்.
எங்களை வரவேற்று தேநீர் கொடுத்து
உபசரித்தவரிடம் தயங்கி, தயங்கி தகவலைக் கூறி விசா காப்பியை காண்பித்தேன். வாங்கிப்
பார்த்தவர் கை குலுக்கி, ‘நல்ல வாய்ப்பு. வெளிநாடு செல்வதற்கேற்ற வயது. திருமணத்திற்கு
முன் சென்று வருவது மிகச் சிறந்தது. எப்போது கிளம்பப் போகிறாய். என்ன உதவி வேண்டுமானாலும்
கேள். நான் செய்கிறேன்’ என்று உறுதியளித்தார். அந்த வார ஞாயிற்றுக் கிழமை அங்கிருந்து கிளம்பினால் திங்கள் காலை சென்னை சென்று அலுவலகத்தில் விமான டிக்கெட் புக் செய்வதற்காக பாஸ்போர்ட்
மற்றும் சான்றிதழ்களை கொடுத்து விட்டு ஒரு வாரம் ஊருக்கு சென்று வந்து விட்டு துபாய்
கிளம்பலாம் என்பது திட்டம்’ என்று அவரிடம் கூறினேன்.
‘ சரி. அப்படியென்றால் நாளை காலை
ரயில்வே ஸ்டேஷன் சென்று உன் திட்டப்படியே ஞாயிறன்று சென்னைக்கு கிளம்புமாறு டிக்கெட்
போட்டு வந்து விடு. நானும் நாளை காலையே தலைமை அலுவலகத்தில் பேசி உடனடியாக உனக்குப்
பதில் வேறு ஒருவரை இங்கு அனுப்ப ஏற்பாடு செய்து விடுகிறேன். ‘ என்று கூற மணியும், நானும்
தங்குமில்லம் திரும்பினோம். அங்கு இருந்த பாண்டே, தேசிங்கு, சின்ன காந்தி அனைவரிடமும்
வேறு வேலை கிடைத்த விபரமும், ஞாயிறன்று அங்கிருந்து
கிளம்பப் போகதாகவும் கூறினேன்.
மறுநாள் காலை ஆறு மணிக்கே பாலாப்பூரில்
இருந்து கிளம்பி செகந்திராபாத் ரயில் நிலையம் சென்று டிக்கெட் புக் செய்து விட்டு பத்து
மணி அளவில் அலுவலகம் சென்றேன். அதற்குள் எங்கள் நிறுவன ஊழியர்கள் மட்டுமில்லாமல் ஆராய்சியக
நண்பர்கள், செக்யூரிட்டிகள் எல்லோருக்குமே தகவல் தெரிந்து விட்டது. வாழ்த்து தெரிவித்தவர்கள்
பார்ட்டி வேண்டும் என்று கூறியதால் என் செலவில் சனி இரவு விருந்து ஏற்பாடு செய்வதாக உறுதி கூறினேன்.
மதிய உணவிற்குப் பின் அழைத்த கவாண்டே
தலைமையகத்தில் பேசிவிட்டதாகவும், ஏற்கனவே இங்கிருந்த சென்ற ராஜேஷ் சிங்கே எனக்குப்பதிலாக மறுபடியும் வர இருப்பதாகவும், மறுநாள் வெள்ளிக்கிழமையை கடைசி வேலை நாளாகக் கருதி,
அனைத்துப் பணிகளிலும் இருந்து விடுவிக்குமாறு ராஜினாமா கடிதம் எழுதித் தருமாறும் கூறினார்.
அன்றும், மறுநாளும் நான் பார்த்து வந்த அனைத்து வேலைகள் சம்பந்தமான ரிப்போர்ட்டுகளை
தயாரித்து கவாண்டேவிடம் ஒப்படைத்தேன். அவரும் தலைமையக உத்தரவுப்படி எனக்கு வரவேண்டிய
அந்த மாத சம்பளம், விடுமுறை, மற்றும் செட்டில்மெண்ட் பணம் அனைத்தையும் கணக்குப் பார்த்து
கையில் கொடுத்து விட்டார்.
No comments:
Post a Comment