Saturday, September 12, 2015

காலை உடைத்த காஞ்சனா - பாகம் 13


நண்பர்களே... இது எனது 225 வது பதிவு



பாகம் 13 - காலை உடைத்த காஞ்சனா….

முதல் பனிரெண்டு பாகங்களைப் படித்து விட்டு பின் இங்கே தொடரவும்.











பாகம் 13 - காலை உடைத்த காஞ்சனா….

அமாவாசை தினமாதலால் இருட்டு, இருட்டு என எங்கெங்கும் காணினும் இருள் அப்பி மிரட்டிக் கொண்டிருக்க தட்டுத்தடுமாறி சென்று கொண்டிருந்த பாதையில் தொலை தூரத்தில் இருந்த ஆராய்ச்சியக வளாகத்தின் உயரமான வெளிசுற்றுச் சுவர்களில் பொருத்தப் பட்டிருந்த விளக்குகளின் வெளிச்சம் மட்டுமே புள்ளிகளாகத் தெரிந்தது. எப்படியும் இன்னும் மெயின் ரோட்டில் இரண்டு கிலோ மீட்டர் அதன் பின் ஆராய்ச்சியகத்தின் உள்ளே மூன்று கிலோ மீட்டர் போக வேண்டுமே என்ற எண்ணமே மலைப்பைத் தந்தது. நாங்கள் அனைவருமே பகல்வேலை முடிந்து சில நாட்கள் காலதாமதாக வந்திருந்தாலும் அந்திவானம் கறுக்கும் முன் தங்குமில்லம் வந்து சேர்ந்து விடுவோம். ஜானும், சின்ன காந்தியும் அடிக்கடி இரவுப்பணிக்கு வருபவர்கள் என்றாலும் இது போல் இருட்டில் இது வரை வந்ததில்லை என்று கூறினார்கள்.

தூரத்தில் எங்கோ காட்டுக்குள் மழை பெய்வது போல மண் வாசனையோடு கூடிய குளிர்ந்த காற்று திடீரென அடித்தது. பளீர் பளீரென நான்கைந்து முறை மின்னலும் வெட்டியது. காற்றின் வேகம் கூடி லேசாக மழையும் பெய்ய ஆரம்பிக்க அந்த அத்துவானக் காட்டில் ஒதுங்கி நிற்க ஓரிடமும் இல்லாததால் ஸ்கூட்டரின் ஆக்சிலேட்டரை முறுக்கி வேகத்தைக் கூட்டினான் ஜான். பிடிமானத்திற்கு எதையும் பிடிக்க முடியாத படி இரண்டு கைகளிலும் பைகள் வைத்திருந்ததால் நானும், சின்னக் காந்தியும் அவ்வப்போது குலுங்கி குலுங்கி அமர்ந்தோம்.

ஸ்கூட்டர்  ஓட்டுபவர்கள் கால் வைக்கும் இடத்தில் வைத்திருந்த சாப்பாட்டு பாத்திரப் பைகள் கீழே விழுந்து விடாமல் பாதுகாப்பாக கால்களை வைத்திருந்தான் ஜான். சின்னக்காந்தி பின்னால் அமர்பவர்கள் கால் வைக்க இரண்டு பக்கமும் இருக்கும் மடக்கி, விரியும் சின்னப் பலகைகளில் கால் வைத்திருந்தான். நான் நடுவில் அமர்ந்திருந்ததால் காலை எங்கும் வைக்க வசதியில்லாமல் இரண்டு கால்களையும் தொங்க விட்டே அமர்ந்திருந்தேன். ஸ்கூட்டர் பள்ளத்தில் விழும்போதெல்லாம் வண்டியின் அதிர்வில் என் கால்கள் அனிச்சையாக ஆடிக்கொண்டே வந்தன. ஆராய்ச்சியகத்தை நெருங்க, நெருங்க மழையின் வேகமும் கூடியது.

ஆராய்ச்சியகத்தின் வெளிப்புற நுழைவாயில் கதவிற்கு மெயின் ரோட்டின் இடது பக்கத்தில் திரும்ப வேண்டும் என்பதால் வாசல் அருகில் வந்ததும் வண்டியை வந்த வேகத்தில் சடாரென திருப்பினான் ஜான். கோட்டை போன்ற மதில் சுவரின் பிரமாண்டமான இரண்டு பெரிய இரும்புக் கதவுகளில் இடது பக்க கதவு முழுதும் மூடி வைக்கப்பட்டு கீழே தாழும் இடப்பட்டிருந்தது. வலது பக்க கதவு பாதியளவு திறந்த நிலையில் மூடிவைக்கப்பட்டிருந்தது. 

வந்த வேகத்தில் முழுதும் மூடியிருந்த இடது பக்க கதவு மற்றும் பாதி அளவு மூடியிருந்த வலது பக்க கதவு இரண்டிற்கும் இடையில் இருந்த இடைவெளி வழியாக சென்று விடலாம் என எண்ணி ஜான் வண்டியை செலுத்திய போது யாரோ பலம் கொண்டு தள்ளியது போல் வலது பக்க கதவு பலத்த சத்தத்துடன் ஆடிக்கொண்டே வேகமாக நெருங்கி வர ஜான் வண்டியை மேலும் வளைத்து இரண்டு கதவுகளுக்கும் இடையில் இருந்த குறுகிய இடைவெளியில் நுழைத்தான். அவ்வளவு பெரிய கதவு ஆடிக் கொண்டே வந்ததைப் பார்த்த அதிர்ச்சியிலும் திடீரென வண்டியை வளைத்ததாலும் தொங்க விட்டிருந்த கால்களை மேலும் நான் விரிக்க என் வலது கால் பெருவிரல் பாதப்பகுதி வேகமாக கதவில் மோதியது. படாரென என் கால் கதவில் மோதிய வேகத்தில் செருப்பு நழுவி கீழே விழுந்து விட இரும்புக் கதவில் என் வலது கால் பெருவிரலை ஒட்டிய பகுதி நேரிடையாக மோதி சடசட,படபடவென சத்தத்தோடு பாதப்பகுதியும், கால் விரல்கள் அனைத்தும் வளைந்து வலியில் உயிர் போனது.

ஜானும், சின்னக் காந்தியும் கால்களை பாதுகாப்பாக வைத்திருந்த இடங்களில் கால்களை ஊன்றி பேலன்ஸ் செய்து கதவில் இடிபடாமல் தப்பிக் கொண்டார்கள். தொங்க விட்டிருந்ததாலே பேலன்ஸ் செய்ய முடியாமல் நொடிப்பொழுதில் என் வலது கால் பெருவிரல் பாதப்பகுதி பலமாக கதவில் மோதிவிட்டது. என்ன நடந்தது என்று உணரும் முன்பே எதிர்பாராத விதமான விபத்து. திடீரென அடித்த காற்றில் கதவு அசைந்து ஆடி மூடியதால் கண் மூடி கண் திறக்கும் வேகத்திற்குள் எல்லாம் நடந்து விட்டது. கதவு இடைவெளியில் ஸ்கூட்டர் நுழைந்து கடந்த கணப்பொழுதிற்குள் கால் கதவில் மோதி விட்டது.

அடிபட்ட அதிர்ச்சியில் நான் ‘ஆ..ஐயோ’ என்று அலறியதை கேட்ட ஜான் கதவை கடந்த உடனே வண்டியை நிறுத்தி விட்டான். பின்னால் அமர்ந்திருந்த சின்னக்காந்தி வண்டியிலிருந்து இறங்கி அவன் கையிலிருந்த பைகளை கீழே வைத்துவிட்டு என் கையிலிருந்த பைகளையும் வாங்க நானும் மெதுவாக இறங்கினேன், வலது காலை தரையில் ஊன்ற முடியாதபடி சரியான வலி. அப்படியே இறங்கி தரையில் உடகார்ந்து விட்டேன். ஜான் ஸ்கூட்டரை ஸ்டாண்ட் போட்டு நிறுத்த சின்னக்காந்தி ஓடிச் சென்று என் வலதுகாலில் இருந்து கழண்டு விழுந்திருந்த செருப்பை தேடி எடுத்து வந்தான். அதற்குள் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக மழையும், காற்றும் சுத்தமாக நின்று விட்டன.

இரண்டு பெரிய பிரமாண்டமான வெளிவாசல் இரும்புக் கதவுகளும் பொருத்தப்பட்டிருந்த காம்பவுண்ட் சுவரினை ஒட்டி வெளியிலிருந்து பார்த்தால் தெரியாத வகையில் அமைந்திருந்த செக்யூரிட்டி அறையில் விளக்கு எரியும் வெளிச்சம் தெரியவே ஜான், சின்னக் காந்தி இருவரும் என் இருபக்கமாக பிடித்துக் கொள்ள மெதுவாக எழுந்து நடந்து செக்யூரிட்டி அறையை அடைந்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமே இல்லை. வழக்கமாக இரவு நேரத்தில் ஏழு மணி முதல் மறுநாள் காலை ஏழு மணி வரை இரண்டு செக்யூரிட்டிகள் எப்போதும் இருப்பார்கள். பூட்டாமல் வெளித்தாழ் மட்டும் இடப்பட்டு சாத்தி வைக்கப்பட்டிருந்த அறைக்கதவை திறந்து உள்ளே சுவரை ஒட்டி இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து காலை நீட்டி மடக்கி பரிசோதித்து பார்த்தேன். பெரிதான இரத்தக் காயங்கள் ஏதும் இல்லை. இலேசான சிராய்ப்புக் காயங்களே.ஆனால் வலது கால் பாதப்பகுதியை தரையில் ஊன்ற முடியாமலும், வலது கால் விரல்களை மடக்கமுடியாமலும் சரியான வலி.

அதற்குள் வெளியில் பேச்சு சத்தம் கேட்க எட்டிப் பார்த்த ஜான் இரண்டு செக்யூரிட்டிகள் வருவதாக கூறினான். கெஸ்ட் ஹவுஸ் வரை ரவுண்ட்ஸ் சென்று விட்டு வந்ததாக கூறிய செக்யூரிட்டிகள் அடிபட்ட விபரம் தெரிந்தவுடன் அறையில் இருந்த முதலுதவிப் பெட்டியை எடுத்து சிராய்ப்புக் காயங்களை துடைத்து மருந்து இடலாம் எனக் கூறிக் கொண்டிருந்த  வேளையில் ஜானை அழைத்த நான், ‘ஜான், நீ சின்னக் காந்தியையும், ஒரு செக்யூரிட்டியையும் அழைத்துக் கொண்டு சென்று உள்ளே வேலையில் இருப்பவர்களுக்கும், செக்யூரிட்டிகளுக்கும் உணவு, பழங்கள், இனிப்பு கொடுத்து விட்டு வந்து விடு. நான் இன்னொரு செக்யூரிட்டி துணையுடன் காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டு இருக்கிறேன். யாரிடமும் நான் உங்களுடன் வந்த விபரத்தையோ, காலில் அடிபட்ட விபரத்தையோ கூற வேண்டாம். ஏழரை மணி தாண்டி விட்டது. விருந்துக்கு எல்லோரும் எட்டு மணிக்கு வந்து விடுவார்கள். வருபவர்களை வரவேற்க நாம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து கிளம்ப வேண்டும்.” என்று கூறி அனுப்பி வைத்தேன்.

முதலுதவி செய்யக் கற்றிருந்த செக்யூரிட்டி நண்பர் அடிபட்ட காலை டெட்டால் ஊற்றி சுத்தப்படுத்தி அழுத்தி துடைத்த போது வலி உயிர் போனது. கணுக்காலுக்கு கீழே பெருவிரல் பக்கவாட்டுப்பகுதியிலும், விரல்களிலும் நிச்சயமாக எலும்புகள் முறிந்திருக்கும் என்று எனக்கு தோன்றியதை செக்யூரிட்டியும் உறுதிப்படுத்தி ‘டாக்டரை பார்த்து எக்ஸ்ரே எடுத்து விடுங்கள். எப்படியும் மாவுக்கட்டு போட வேண்டியிருக்கும்’ என்று கூறியதால் மணியை உடனே செல்லில் அழைத்து ‘எங்கிருக்கிறாய்’ எனக் கேட்டேன். ‘’பழங்கள், இனிப்பு வாங்கி விட்டு பஜாரில் இருந்து தங்குமில்லம் சென்று கொண்டிருக்கிறேன் எனக் கூறவே ‘ உடன் வந்த நண்பர்களிடம் பொருட்களை கொடுத்து அனுப்பி விட்டு நீ மீண்டும் பஜாருக்கு வந்து வழக்கமாக செல்லும் கல்யாண் டாக்டரிடம் டோக்கன் ஒன்று போட்டு வை’ என்று கூற ‘என்ன, ஏது’ என்று பதறியவனிடம் ‘பயப்படும் படி ஒன்றும் இல்லை.வந்து விபரம் கூறுகிறேன்’ என்று சொல்லி இணைப்பை துண்டித்தேன்.


‘எப்படி அடிபட்டது’ என்று உடனிருந்த செக்யூரிட்டி கேட்க ‘ஸ்கூட்டரில் வரும்போது வேகமாக அடித்த காற்றில் மூடிய கதவில் கால் மோதி அடிபட்டுவிட்டது’ என நான் கூற காஞ்சனா காணாமல் போய் பிணமாக கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் நடந்தது முதல் கடந்த சில மாதங்களாகவே அமாவசை தோறும் சுழல் காற்று அடிப்பதாகவும், மற்ற நாட்களில் இரவு நேரங்களில் சலங்கை ஒலி, மல்லிலிகை மணம் போன்ற அசாதாரமான, அமானுஷ்ய சப்தங்களும், சம்பவங்களும் நடப்பதாகவும் கூறியவர் எனவேதான் இப்போதெல்லாம் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் இரவு எட்டு மணிக்கு மேல் ஆராய்ச்சியகத்தின் உள்நுழைவு வாயிலில் இருக்கும் செக்யூரிட்டி அலுவலகம் சென்று உணவருந்தி விட்டு பின் அங்கேயே இருந்து விடுவதாகவும் கூறினார். சில சமயங்களில் ஆராய்ச்சியகத்தை ஒட்டிய மெயின் ரோட்டில் இரவு நேரங்களில் நேரம் தவறி செல்லும் அண்டை, அயல் கிராமத்துக்காரர்கள் கூட அமானுஷ்ய சக்தியால் தொந்திரவிற்கு உள்ளானதாக பரபரப்பான பேசுகள் அவ்வப்போது வருவதாகவும், எனவே அனுமந்தையா மற்றும் ஹாஜி அப்துல்லா மூலம் துஷ்ட சக்திகளை துரத்தும் விசேஷ பூஜை ஒன்று விரைவில் செய்ய இருப்பதாகவும் கூறினார்.

( தொடரும் )

பாகம் 14 


2 comments:

'பரிவை' சே.குமார் said...

காலை உடைத்த காஞ்சனா... பேய் உங்கள் காலை உடைத்து விட்டதா?

என்னாச்சு... எலும்பு முறிவா?

துபாய் ராஜா said...

ஆம் நண்பரே... என் வாழ்வில் நடந்த அமானுஷ்ய சம்பவம். நம்ப முடியாத ஆச்சர்யம் என்னவென்றால் நாங்கள் சென்ற ஸ்கூட்டரில் எனக்கு முன்னும், பின்னும் அமர்ந்திருந்த இருவருக்கும் சின்ன சிராய்ப்பு கூட இல்லை. வண்டியும் கீழே விழவில்லை. ஆனால் இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த எனக்கு மட்டும் கால் முறிவு என்றால் நம்பமுடிகிறதா....

வண்டி கதவின் இடைவெளி வழியாக பயணித்த அந்த நொடிப்பொழுது நேரத்தில் திடீரென வேகமாக காற்று அடித்தது, கதவு மூடி காலில் மோதியது எல்லாம் கண் மூடி கண் திறக்கும் நேரத்தில் நடந்து விட்டது.

மேலும் இந்த சம்பவம் நடந்தது 2005 பிப்ரவரி முதல் வாரம். அதன்பின் எழுத வேண்டும் என்று பல முறை முயற்சித்தும் முடியவில்லை. ஒரு வழியாக 2012ல் எழுத ஆரம்பித்ததும் மூன்று வருடமாகியும் இன்னும் முடிக்க முடியவில்லை.