Sunday, September 13, 2015

காலை உடைத்த காஞ்சனா – பாகம் 14


பாகம் 14 - அறுவைச் சிகிச்சையா அல்லது மாவுக்கட்டு போதுமா….

முதல் பதிமூன்று பாகங்களைப் படித்து விட்டு பின் இங்கே தொடரவும்.












பாகம் 14 


ஆராய்ச்சியகத்தின் உள்ளே உணவு கொடுக்கச் சென்றிருந்த ஜான், சின்னக்காந்தி, செக்யூரிட்டி ஆகிய மூவரும் வந்து விட ‘நீங்கள் இன்னும் தொலைதூரம் போக வேண்டும். எனவே ஸ்கூட்டரை எங்களிடம் கொடுத்து விட்டு எனது ஸ்பெளன்டர் பைக்கை நீங்கள் எடுத்து செல்லுங்கள். நான் காலையில் உங்களது தங்குமில்லம் வந்து வாங்கி கொள்கிறேன். என்று என்னுடன் இருந்த செக்யூரிட்டி கூற நன்றி கூறி விடைபெற்று புத்தம் புதிய அவரது ஸ்பெளன்டரில் ஏறிப் புறப்பட்டு நேராக பாலாப்பூர் சாராஸ்தா வந்து சேர்ந்து கல்யாண் டாக்டர் கிளினிக்கை அடைந்தோம்.

எங்களுக்காக அங்கு காத்திருந்த மணி, ‘யாருக்கு என்ன ஆச்சு’ என்று விசாரிக்க ‘பதறாதே. எனக்குத்தான் லேசா காலில் அடிபட்டிருக்கிறது. அதான் டாக்டர்ட்ட காமிச்சுட்டு போயிடலாம்ன்னு வந்தேன்’ என நான் கூற ‘உங்களை யாருங்க இந்த ராத்திரியில் போகச் சொன்னது. ஊருக்கு போக வேண்டிய நேரத்தில் இப்படி கால்ல அடிபட்டுடுச்சுன்னு சொல்றீங்களே’ என்று உரிமையாக கோபித்தான். அதுவரை என்ன பேசுவது என்ற குழப்பத்தில் இருந்த ஜானும், ‘சாரிங்க. என்னால் தானே உங்களுக்கு இப்படி ஆச்சு’ என்று மிகவும் வருந்தினான். அட விடுங்கப்பா. அடி படணும்ன்னு இருந்தா எங்கே இருந்தாலும் எப்படியும் படத்தான் செய்யும் என்று ஆறுதல் கூறினேன் என்றாலும் ஊருக்கு கிளம்ப வேண்டிய நேரத்தில் இப்படி காலில் அடிபட்டு விட்டதே என எனக்கும் மனக்கிலேசம் தான்.

நாங்கள் சென்ற சில நிமிடத்திலே எங்கள் டோக்கன் முறையும் வந்து விட டாக்டர் அறையினுள் அனைவரும் நுழைந்தோம். டாக்டர் கல்யாண் எங்கள் எல்லோரையுமே அறிவார் என்பதால் புன்னகையுடன் வரவேற்று விபரம் கேட்டறிந்து என்னை படுக்கையில் படுக்க வைத்து காலைப் பரிசோதித்தார். அதற்குள் கணுக்காலுக்கு கீழேயான பாதத்தின் மேல் பகுதி சிறிது வீங்கிவிட்டது. ‘இப்போதைக்கு கட்டு கட்டிக்கொண்டு கோட்டி நகர் சென்று எக்ஸ்ரே எடுத்து விட்டு நான் சொல்லும் எலும்பு முறிவு டாக்டரை போய்ப் பாருங்கள். எக்ஸ்ரேயைப் பார்த்து விட்டு மேல்கொண்டு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமா அல்லது  மாவுக்கட்டு போதுமா என்பதை அவர் கூறுவார்’ என்றார்.

டாக்டரிடம் ‘மறுநாள் ஊருக்கு கிளம்பி செல்வதையும் அதற்காக இரவு விருந்து ஏற்பாடு செய்து இருப்பதையும்’ கூற ‘அப்படியானால் ரொம்ப நேரம் நிற்காதீர்கள். வீக்கமும், வலியும் அதிகமாகி விடும். இரவிற்கு மட்டும் மாத்திரை தருகிறேன். காலை எட்டு மணிக்கெல்லாம் கிளம்பி சென்று எக்ஸ்ரே எடுத்து விட்டு எலும்பு முறிவு டாக்டரை பார்த்து விடுங்கள்’ என்று அறிவுரை கூறி கம்பவுண்டரிடம் வீக்கத்தை கட்டுப்படுத்தும் ‘கிரிப் பேண்டு’ கட்டு போட்டு கொண்டு கிளம்பச் சொன்னார்.

மருத்துவமனையை விட்டு கிளம்பும் போது மணியிடமும், மற்றவர்களிடமும், ‘அந்த இரவு நேரத்தில் ஆராய்ச்சியகத்திற்கு சென்றதையோ, கதவில் மோதி கால் முறிவு ஏற்பட்டதையோ யாரிடமும் சொல்ல வேண்டாம். எவராவது கேட்டால் கடையில் சாமான்கள் வாங்கி விட்டு இறங்கும் போது கடைப்படியில் கால் பிரண்டு, பிசகி விட்டதால் தற்காலிக கட்டு போட்டு இருப்பதாக மட்டும் சொல்லுங்கள்’ என்று கூறி விட்டேன். மணி கொண்டு வந்திருந்த மற்றொரு உள்ளூர் நண்பரின் பைக்கில் அவனோடு நான் ஏறிக் கொள்ள, ஜானும், சின்னக் காந்தியும் செக்யூரிட்டி நண்பரின் ஸ்பெளன்டர் பைக்கில் பின் தொடர விருந்து ஏற்பாடு செய்திருந்த தங்குமில்லத்தை அடையும் போது நேரம் இரவு எட்டரை மணியை நெருங்கி விட்டது.

மாடியில் அமர்ந்து சாப்பிடுவதற்கு வசதியாக  டேபிள், சேர்களை போட்டுக் கொண்டும், சாப்பாடு பாத்திரங்கள், பரிமாறத் தேவையான இலை, தண்ணீர், டம்ளர்கள், கரண்டி  எடுத்து வைத்துக் கொண்டும் என ஏற்பாடு வேலைகளில் பிஸியாக இருந்த மற்ற அறை நண்பர்கள், மற்றும் வந்திருந்த விருந்தினர் நண்பர்களோடு நாங்களும் கலந்து கொண்டோம். எனது சார்பான விருந்து என்பதால் நண்பர்கள் வர, வர எல்லோரையும் வரவேற்பது, உபச்சார வார்த்தைகள் பேசி இடம் பார்த்து அமர வைத்து, உண்பதற்கு ஏற்பாடு செய்வது, பின் சாப்பிட்டு விட்டு கிளம்பும் நண்பர்களை வழி அனுப்புவது என்று உட்கார நேரமில்லை. 

பாதப்பகுதியில் ‘கிரிப் பேண்ட்’ போட்டு இறுக்கமாக கட்டியிருந்ததால் காலை தரையில் பதித்து நடக்க முடிந்தது. கூடுமானவரை எவர் கண்ணையும் உறுத்துமாறு நொண்டி நடக்காமல் சமாளித்துக் கொண்டு இருந்தேன். அப்படியும்  காலில் கட்டு போட்டிருப்பதை கவனித்து கேட்டவர்களிடம் ஏற்கனவே பேசி வைத்திருந்தது போல் கடையில் சாமான்கள் வாங்கி விட்டு இறங்கும் போது கடைப்படியில் கால் பிரண்டு, பிசகி விட்டதால் தற்காலிக கட்டு போட்டு இருப்பதாக கூறி சமாளித்து கொண்டு இருந்தேன்.

ஒரு வழியாக விருந்து முடிந்து கவாண்டேயும், கடைசி விருந்தினரும் கிளம்பும் போது இரவு பத்து மணி தாண்டி விட்டது. அதன்பின் எங்கள் கம்பெனி நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, கலகலப்பாக பேசியபடி சாப்பிட்டு முடிக்க பதினொரு மணி ஆகி விட்டது. அன்று அங்கு நான் தங்கும் கடைசி இரவு என்பதால் சாப்பிட்டு முடித்த பின் பாத்திரங்கள், டேபிள், சேர் எல்லாவற்றையும் கீழே கொண்டு வந்து வைத்து விட்டு, டாக்டர் கொடுத்த மாத்திரையையும் போட்டுக் கொண்டு படுக்கையில் படுத்துக் கொண்டு, நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போதே கால் வலியிலும்,  மாத்திரையின் வேகத்திலும் கண்ணயர்ந்து தூங்கி விட்டேன்.

( தொடரும் )

பாகம் 15 


No comments: