Wednesday, September 30, 2015

வேண்டாம் வெளிநாட்டு மோகம்...



வகை-(4) புதுக்கவிதைப் போட்டி

முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை

வேண்டாம் வெளிநாட்டு மோகம்...

திரை கடலோடி திரவியம் தேடு  
பறையடித்துப் பாடிய 
பழந்தமிழர் பண்பாடு..

நரைகிழடாகும் முன் 
நல்செல்வம் சேர்த்திட
நாடு விட்டு நாடு சென்று
நாளும் நலிந்திடும் நம்
இளந்தமிழர் படும்பாடு...

கரித்திடும் கண்ணீர்
காளையர்தம் வாழ்க்கை
கசந்த சுவைபாடு..

எடுத்து கூறி இறக்கி வைக்கிறேன்
என் மனச்சுமைபாடு...

விளைநிலத்தை விலைநிலமாக்கி
வீட்டுப்பத்திரத்தை நோட்டெழுதி
காட்டும் இடத்தில் கையெழுத்திட்டு  
விசா என்னும் வெற்றுத்தாள் வாங்க
கையூட்டு கொடுப்பாய் கடன் வாங்கி..

உற்றார், உறவினர், நண்பரெல்லாம்
 விட்டுச் செல்வாய் மனசு நீங்கி...

விருப்பப்பட்டு வந்தாய் வெளிநாட்டிற்கு
விருந்தா கிடைக்கும் விமானம் இறங்கியதும்..

 அழையாவிருந்தாளி உன்னை
அழைத்துச் செல்வார் ஆளில்லா காட்டிற்கு... 

ஊரை விட்டு ஒதுக்குப்புறமாய் தங்க வைப்பார்
ஒரு வேளை உணவு மட்டுமே திங்க வைப்பார்

ஊருக்குள் நீ நுழைந்தால் ஒதுக்கி வைப்பார்
உன் உழைப்பை மட்டும் ஒரு குறை
 சொல்லாமல் பதுக்கி வைப்பார்...

படித்தவனே படாதபாடு படும்போது
படிக்காத பாமரன் உனக்கு பகட்டு வேலை
கிடைக்கும் என பகல்கனவு எதற்கு... 

விடைகொடுத்த வீட்டார் விழிநீர் மறந்து
வெளிநாட்டார் வரவேற்பு சரியில்லை
என  ஏன் வருத்தம்..

 குழம்பிக் கொள்வதில்
 இல்லை ஒரு அர்த்தம்... 

ஆலையில் வேலை  கிடைத்திட்டால் 
அதிஷ்டம் செய்தவன் நீ..

அல்லங்கில்
அதிகாலையிலே எழுப்பி
 ஆடு மேய்க்க அனுப்பிடுவார்..

ஓய்வில்லை மதியநேரம் 
கொளுத்தும் வயலில்
 ஒட்டகம் மேய்த்திட செய்வார்..

மாலை மங்கி இருட்டிய பின்னும்
 மாட்டுக் கொட்டகை 
சுத்தம் செய்திட சொல்வார்...

ஒருசாண் வயிற்றுக்கு 
நீ உழைப்பாய் பல ஆண்டு..

உயிரோடு ஊர் திரும்ப 
உன் முன்னோர் 
செய்திருக்க வேண்டும் 
பல திருத்தொண்டு...

கொடுத்திட்ட பணம் கூட
கிடைக்காது கூலியாய் உனக்கு..

குனிந்திட்டால்  நிமிரமுடியாது 
கொடுத்திடுவார் உன்னை
 பலியாய் உழைப்பிற்கு...

ஊருக்கு வந்தால்
 உரைப்பாயோ உண்மையை..

உள்ளூரிலே கிடைக்கும்
 பண்பாய் பல நன்மையை..

உணர்வாய் வெளிநாட்டு வேலையில் 
நல்லபலன் இன்மையை...

அடக்கிட வேண்டும்
அயல்நாட்டு மோகம்..

புண் பட்டிட வேண்டாம்
உன் அருமைத் தேகம்..

வாழ்வில்  முடிவெடுக்க வெண்டிய
முக்கியமானதொரு பொறுமை பாகம்..

புயல், மழையாய்  பொழிந்திடுமே
 மொழுது தவறாமல் 
நம் ஊர் மழை மேகம்..

வாழ்க்கை வீழ்ந்திடாமல்
எடுத்திடுவோம் இனி ஒரு வேகம்..

தயங்காது உழைத்திட்டால்
தணிந்திடுமே வறுமைத் தாகம்... 

காடு,கரை,ஏரி, குளம் காத்து
வீரிய விவசாயம் செய்வது
பழந்தமிழர் வழிவந்த பண்பாடு…

மாடு, மறை, குலம் சேர்த்து
இயற்கை விவசாயம் செய்து
 இழந்த செல்வம் மீட்போம்
இளந்தமிழா இதுவே
நம் புதுப்புறப்பாடு...

புத்துணர்ச்சி தந்திடும்
முப்பாட்டன் பறையோடு..

புகழ் கொண்டு வாழ்ந்திடுவோம் 
இனி பெருமனநிறையோடு...

--------------------------------------------------------------------------------------------------------

 " வேண்டாம் வெளிநாட்டு மோகம்... " எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் உறுதி அளிக்கிறேன்.

அன்பு நண்பர்களே, வலைப்பதிவர் சந்திப்பு விழா குறித்தான விவரங்களை அவ்வப்போது அறிந்து கொள்ள வலைப்பதிவர் திருவிழா-2015 என்ற தளத்தோடு இணைந்திருங்கள். தங்கள் பெயரும் விபரமும் வலைப்பதிவர் கையேட்டில் இன்னும் சேர்க்காத நட்புக்கள் நம்மைப் பற்றிய ஆவணப் பெட்டகம் அது என்பதை மறக்காமல் உடனே சேர்த்து விடுங்கள்... 

வலைப்பதிவர் விழா தொடர்பான தொடர்புகளுக்கு...



No comments: