முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை
பசுமைப் பண் பாடு….
கடவுள் கொடுத்தார்
காடு, மலை, அருவி வளம்..
ஆதிமனிதன் அழித்தமைத்தான்
ஆறு, ஏரி, குளம்...
அடுத்து கண்டான்
உணவுக்காக வேளாண்மை..
வளர்த்துக் கொண்டான்
ஆடு, மாடு மேலாண்மை...
கருவி பல
கண்டுபிடிக்கும் முன்னே..
பூச்சி அழிக்கும் பூச்சி தந்து
காட்சி அறிவு கண்முன் தந்து
தெளிய வைத்தது தாய்மண்ணே...
பூச்சியால் அழியா பூச்சி ஒழிக்க
சிட்டுக் குருவி, பறவை
தவளை, அயிரை
கூட உதவி செய்தது தன்னே...
பார் முழுதும் விவசாயம் போற்றி
புகழ்ந்து பாடியது பண்ணே….
அறிவியல், விஞ்ஞானம்
அதிரடியாய் வளர்ந்திட
எந்திர மயமானது
இயற்கை வேலைகள்…
அடிமாடாகி போனது
அருமையாக வளர்த்த காளைகள்…
பால் கொடுப்பதால்
தப்பின சில பசுக்கள்..
ஆயினும் பிரிக்கப்பட்டன
அருகிலிருந்த சிசுக்கள்...
ஒன்றுக்கும் உதவாமல்
போனது நாட்டு எருமைகள்..
புரியவில்லை ஒருவருக்கும்
அவை தந்த பெருமைகள்...
இயற்கை விவசாயம்
அழிந்து போய்
செழித்தோங்கியது
செயற்கை விவசாயம்….
பயிர் வளர்த்த நிலம்
தன் உயிர் விட்டது..
மரித்துப் போனது
மண்ணில் இருந்த
நுண்ணுயிர் எல்லாம்...
தவளை, மீன் செத்துப்போனது
செயற்கை மருந்து சாயத்தில்..
குருவி, பறவை
கொத்து கொத்தாய்
அழிந்து போனது
விஷ மருந்து வீரியத்தில்…
ஆற்று மண் அள்ளி, அள்ளி
நிலத்தடி நீர்மட்டம்
கீழே, கீழே போயாச்சு…
ஆயிரம் அடி தள்ளி
போர் போட்டாலும்
தண்ணீர் இல்லை என்றாச்சு…
ஏரி, குளம் மாறி
அடுக்குமாடி வீடு ஆயாச்சு...
காடு,மலை எரிக்கப்பட்டு
காபி.டீ. ஏலக்காய் என
எஸ்டேட் எத்தனையோ வந்தாச்சு...
கான மழை போய்
இப்போ கடும்புயல்
வந்தால்தான் மண் நனையும்
மழை,வெள்ளம் என்றாச்சு...
பேராசை பெருநஷ்டம் என்றுணர்ந்து
மனம் மாற வேண்டிய தருணம் இது..
மறுத்தால் இயற்கை தரும்
கொடும்பரிசு மரணம் அது..
மாநிலம் தோறும்
மனித குலம் பூமி மீது
பூச வேண்டிய வர்ணம்
பசுமை பண்பாடு…
மறந்திடாமல் எப்போதும்
நீ இயற்கைப் பண் பாடு…
-------------------------------------------------------------------------------------------------------
" பசுமைப் பண் பாடு…" என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் உறுதி அளிக்கிறேன்.
அன்பு நண்பர்களே, வலைப்பதிவர் சந்திப்பு விழா குறித்தான விவரங்களை அவ்வப்போது அறிந்து கொள்ள வலைப்பதிவர் திருவிழா-2015 என்ற தளத்தோடு இணைந்திருங்கள். தங்கள் பெயரும் விபரமும் வலைப்பதிவர் கையேட்டில் இன்னும் சேர்க்காத நட்புக்கள் நம்மைப் பற்றிய ஆவணப் பெட்டகம் அது என்பதை மறக்காமல் உடனே சேர்த்து விடுங்கள்...
வலைப்பதிவர் விழா தொடர்பான தொடர்புகளுக்கு...
1 comment:
வணக்கம் நண்பரே கவிதை மிகவும் ரசித்தேன் அருமை போட்டியில் வெற்றி பெற எமது வாழ்த்துகள்
Post a Comment