Wednesday, September 16, 2015

நதி நீர் இணைப்பு - தமிழகத்தை முந்தியது ஆந்திரம்


நாட்டின் முதல் நதிநீர் இணைப்பு திட்டத்தை
மிகக் குறுகிய காலத்தில்
ஆந்திரம் அமைதியாக சாதித்து விட்டது...

தமிழகம் தடை, தாமதம் தாண்டுவது எப்போது....


அமைதியாக சாதித்த ஆந்திரம்...

இந்தியாவில் கங்கை நதிக்கு பிறகு 2வது நீளமான நதி கோதாவரிதான். கிருஷ்ணா நதி மகாராஷ்டிரம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக வங்க கடலில் சென்று சேர்கிறது.மஹாராஷ்டிர மாநிலத்தில் உற்பத்தியாகி ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை வளம் கொழிக்க வைக்கும் கோதாவரி நதி சுமார் 1465 கிலோ மீட்டர் தொலைவு ஓடி வங்கக் கடலில் கலக்கிறது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நதிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ் ஆந்திராவின் முக்கிய நதிகளான கோதாவரி, மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். 

கடந்த ஜனவரி 1ஆம் தேதி திட்டம் அறிவிக்கப்பட்டு, மார்ச் 9ஆம் தேதி திட்டப்பணிகள் தொடங்கின. அதன்படி கோதாவரியில் இருந்து வாய்க்கால் வழியாக தண்ணீர் கொண்டு வந்து  ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள  பட்சீமா கிராமத்தில், கிருஷ்ணா நதியில் வந்து இணையும் படி திட்டம் தீட்டப்பட்டிருந்தது. இதற்காக 124 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாய்க்கால் வெட்டப்பட்டது. 

இந்த பணிகள் அனைத்தும் 5 மாதம் 15 நாட்களிலேயே நிறைவடைந்தது.  இதையடுத்து  கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த திட்டம்,  நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று இந்த திட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் தொடங்கி வைத்தார். 

கோதாவரியில் இருந்து வாய்க்கால் வழியாக வந்த தண்ணீர், பட்சீமா கிராமத்தின் வழியாக ஓடும் கிருஷ்ணா நதியில் திறந்து விடப்பட்டது.  இந்த திட்டத்தின் மூலம் 80 டிஎம்சி தண்ணீர் வீணாவது தடுக்க முடியும். அதோடு இரு நதிகளும் இணையும் பட்சீமா கிராமமும் சுற்றுலாத்தளமாக மாற்றப்பட உள்ளது.

இரு நதிகளை இணைப்பது நாட்டிலேயே இதுதான் முதல் முறை. ஆந்திர அரசு இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளது.


இப்போது தமிழகத்திற்கு வருவோம்...'

'இந்தியாவிலேயே தமிழகம்தான் நதி நீர் இணைப்புக்கு முன்னோடி , இதோ நாங்கள் நதி நீர் இணைப்பை தாமிரபரணியில் 'வெள்ள வடிகால் திட்டம்" மூலம் ஆரம்பிக்கிறோம்,' என்று  அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட, தாமிரபரணி -கருமேனி  ஆறு - நம்பி ஆறு இணைப்பு திட்டம் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.369 கோடியாகும். 2009ல்  ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2010ல் ரூ.41 கோடியும் அதற்கு அடுத்த ஆண்டு ரூ.107 கோடியும் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் இரண்டு  கட்ட பணிகள் முடிவடைந்தன. அதன்படி தாமிரபரணி ஆற்றிலிருந்து மூலக்கரைப்பட்டி வரை கால்வாய் வெட்டும் பணி முடிவடைந்தது. 


மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட பணிகளுக்காக தமிழக பட்ஜெட்டில் 2012-13ம் நிதி ஆண்டில் ரூ.100 கோடியும் 13-14ம் நிதி ஆண்டில் ரூ.156 கோடியும் 14-15ம்  ஆண்டில் ரூ.119 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த பணிகள் மேம்படுத்தப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. இதில் 24.8 கோடி மட்டுமே  செலவிடப்பட்டது. மீதமுள்ள தொகையை பொது பணித்துறை அரசுக்கு திரும்ப அனுப்பியுள்ளது. தாமிரபரணி ஆற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை  வறண்ட பகுதிக்கு திருப்பி விடும் இந்த திட்டத்தை செயல்படுத்துமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்  . என்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் தலைமை நீதிபதி சஞ்சய் கிசன் கவுல், நீதிபதி சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது


இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், திட்டத்தின் மூன்றாம் கட்ட பணி எதற்காக நிறுத்தப்பட்டது. பணியை எப்போது மீண்டும் தொடங்குவீர்கள். எவ்வளவு காலத்திற்குள் பணியை முடிப்பீர்கள். இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை எதற்காக மீண்டும் திரும்ப அனுப்பினீர்கள்.  இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்கு யார் பொறுப்பேற்பது' என்று அடுக்கடுக்காக அரசுக்கு கேள்விகள் எழுப்பி உரிய பதிலை மூன்று வார காலத்திற்குள் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தனர். ஓராண்டிற்கு மேலாகியும் வழக்கு குறித்து மேல் கொண்டு தகவல்கள்  ஏதும் இல்லை.

தாமிரபரணி - கருமேனியாறு இணைப்பு திட்டம் வெற்றி அடைந்தால் நெல்லை மாவட்டத்தின் வறண்ட பகுதிகளான ராதாபுரம் வட்டாரப்பகுதிகளில் நிலத்தடி நீர் வளம் பெருகி
 தரிசு நிலங்கள் விளைநிலங்கள் ஆகும். மக்களின் வாழ்வாதாரமும், விவசாயமும் சிறக்கும். வரும் காலங்களில் பல தமிழக நதிகள் இணைக்கப்படுவதற்கு முன்னோடித் திட்டம் ஆகவும் இருக்கும். 


இரண்டு நாள் மாநாட்டில் இரண்டு லட்சம் கோடி அன்னிய முதலீடு திரட்டியதாக விளம்பரம் செய்யும் தமிழக அரசு தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் தீரும் வகையில் நதிநீர் இணைப்பு திட்டங்களிலும் முனைப்பையும், முழு முயற்சியையும் காட்டினால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.  

6 comments:

nimiththigan said...

ரஜினிகாந்த் ஒரு கோடி எப்போது கொடுப்பார்?

KILLERGEE Devakottai said...


தமிழர்கள் ஒன்று சேர்ந்தால் ? ? ?

கரூர்பூபகீதன் said...

வணக்கம் நண்பரே! தங்கள் தளத்திற்கு புதியவன்!! இனி தொடர்கின்றேன் நன்றி!!!

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே

துபாய் ராஜா said...

// nimiththigan silappathikaram said...

ரஜினிகாந்த் ஒரு கோடி எப்போது கொடுப்பார்? //

முதல் வரவிற்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே...

// தாமிரபரணி -கருமேனி ஆறு - நம்பி ஆறு இணைப்பு திட்டம் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.369 கோடியாகும். 2009ல் ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2010ல் ரூ.41 கோடியும் அதற்கு அடுத்த ஆண்டு ரூ.107 கோடியும் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் இரண்டு கட்ட பணிகள் முடிவடைந்தன. அதன்படி தாமிரபரணி ஆற்றிலிருந்து மூலக்கரைப்பட்டி வரை கால்வாய் வெட்டும் பணி முடிவடைந்தது.

மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட பணிகளுக்காக தமிழக பட்ஜெட்டில் 2012-13ம் நிதி ஆண்டில் ரூ.100 கோடியும் 13-14ம் நிதி ஆண்டில் ரூ.156 கோடியும் 14-15ம் ஆண்டில் ரூ.119 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த பணிகள் மேம்படுத்தப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. இதில் 24.8 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. மீதமுள்ள தொகையை பொது பணித்துறை அரசுக்கு திரும்ப அனுப்பியுள்ளது.//

திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணமே முறையாக செலவழிக்கப் படாத போது அவர் தந்து என்ன ஆகப்போகிறது நண்பரே....

துபாய் ராஜா said...

// கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே //

தொடர் வரவிற்கும், கருத்த்துரைக்கும் நன்றி ஐயா...