Tuesday, January 08, 2019

ஊத்துக்குழி - இறுதி பாகம்











பாகம் 12 இதுவும் கடந்து போகும்...


மேலே இருக்கும் கதைப் பாகங்களை சொடுக்கிப் படித்துவிட்டு பின் இங்கே தொடரவும்.




ஆழிசூழ் உலகானது மூன்று பங்கு நீராலும், ஒரு பங்கு நிலத்தாலும் நிறைந்திருந்தாலும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகை நிலங்களாக பிரிந்து இருப்பது போல அலைகடலும் பலவிதமான குணங்கள் கொண்டுள்ளது. ஓயாது அலையடிக்கும் கரைப்பரப்பு போல் இல்லாமல் எப்போதும் அமைதியாக காட்சியளிக்கும் ஆழ்கடலே பெருநாசம் விளைவிக்கும்  பேரலைகளை உருவாக்குகிறது.. சிப்பிகள், பவளப் பாறைகள், சிறு மீன்கள் முதல் பெருந்திமிலங்கள் என பலவகையான உயிரினங்கள் கடலிலும், , எறும்பு, கொசு முதலான சிறுபூச்சிகள் முதல் கொடும் மிருகங்கள் வரையான பலவாழினங்கள் ஐவகை நிலங்களிலும் இருப்பது போலவே மனிதர்களிலும் பலவிதமான குணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஐந்தறிவு மிருகங்கள் குணநலன் அறிந்து கொள்ள முடிந்தாலும் ஆறறிவு படைத்த மனிதர்கள் எப்போது, எப்படி மாறுவார்கள் என்பதை மட்டும் யாரும் கணிக்கவே முடியாது. பலவிதமான குணம் படைத்த நமது கதை மாந்தர்களின் மன மாறுதலால் புலிப்பட்டி ஊரின் போராட்ட களமும் ஒரு பகல் பொழுதில் மாறிப்போனதை இந்த இறுதிபாகத்தில் காண்போம்.

தனது குடும்பக் குழந்தைகளும், ஊர்க்குழந்தைகளோடு சேர்ந்து கிறித்துவ மதப்பாடல்களை பாடி, விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டும், மரைக்காயரின் மலையாள மந்திரத்தை அனைவரும் பெருமையாக பேசுவது கேட்டும் மனம் குழம்பிப் போயிருந்த பூசாரி ஏதேதோ சிந்தனைகளால் பீடிக்கப் பட்டு, இரவெல்லாம் தூக்கம் வராமல் தவித்தார். காலையில் எழுந்து வழக்கம் போல அகத்தியர் கோயில் சென்று நடை திறந்து நித்திய பூஜை வேலைகளில் ஈடுபட்டிருந்தவரின் புத்தியை மேலும் குழப்பும் விதமாக உற்றார், உறவினர்கள் புடை சூழ, பல விதமான பொருட்களோடு போத்தி குடுமபத்தார் வந்தனர்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்களது எறிபந்தங்களால் ராமசாமிப் போத்தி வீட்டுக் கூரை எரியாததாலும், போத்தி குடும்பத்தாரின் இடையறாத எதிர் தாக்குதலாலும் தளர்ந்திருந்த ஈணா, சோணா இருவரும் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்று பல திட்டங்களை யோசித்தவாறு இருந்து பின் விடிகாலைப் பொழுது நேரத்தில் அயர்ந்து தூங்கிப் போயினர். எட்டு மணி அளவில் சின்னப் பண்ணையார் வெளியே செல்ல தயாராகி விட்டதாக பண்ணையாள் வந்து குரல் கொடுத்ததும் அடித்துப் பிடித்து எழுந்து ஓடி, மாடுகளையும், வண்டியையும் தயார் செய்து  ஓட்டிக் கொண்டு ஈணா வர சோணாவையும் தம்முடன் வருமாறு பண்ணையார் கூறவே, குழப்பத்துடன்  முன் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டான். பண்ணைவீட்டை விட்டு வெளியே வந்ததும் ஊரின் முக்கிய நாற்சந்தியான ராந்தக் கல் (லாந்தர் கல்விளக்குத் தூண்) வழியாக அகத்தியர் கோவில் நோக்கி போகச் சொல்ல, அதிர்ச்சியில் மாடுகளை இழுத்துப் பிடித்த இருவரையும் அதட்டி ஆற்றுவழிப் பாதையில் வண்டியை திருப்பச் சொன்னார் பண்ணையார்.  
    
ராந்தக் கல் நாற்சந்தி வழியாக செல்லும் போது வண்டியில் இருந்தவாறே போத்தி வீட்டையும், தொழுவத்தையும் பார்த்த பண்ணையார், ஆற்றுச்சாலையில் செல்லும் போது போத்தி வயலருகே நிறுத்தச் சொல்லி வண்டியை விட்டு இறங்கி, நடந்து, இடிக்கப்பட்ட சுற்றுச் சுவரின் வழியாக நுழைந்து எரிக்கப்பட்ட வயல்களையும், ஆங்காங்கே அடித்துக் குவிக்கப் பட்டிருந்த மணல் குவியலையும் சுற்றிப் பார்த்தார். பின் எதுவுமே பேசாமல் வண்டியில் ஏறி அமர்ந்தவர் அகத்தியர் கோயிலை அடைந்ததும் அமைதியாக இறங்கி உள்ளே செல்ல, வண்டியை நிழலில் நிறுத்தி, மாடுகளை அவிழ்த்துக் கட்டி விட்டு, அவசரமாக அவரை பின் தொடர்ந்து ஓடிச் சென்றனர் எதுவும் புரியாத ஈணா, சோணா இருவரும்.

கோயிலுக்குள் சென்ற பண்ணையார், சுற்றும், முற்றும் பார்த்தும் போத்தி கண்ணில் படாமல் போகவே, வழிபாட்டிற்கு வாங்கி வந்த பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டும், நைவேத்தியப் பிரசாதங்களான சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம், வடை ஆகியவை தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக இருந்த   போத்தி குடும்பத்தாரை அணுகி, “போத்தி எங்கே…” என்று விசாரிக்க, அடுப்பு எரிக்கத் தேவையான ஓலை, மட்டை, சுள்ளி எடுக்க சென்று இருப்பதாக தகவல் கிடைத்தது. மூலஸ்தான சுவாமிகள், உற்சவர் மற்றும் சுற்றுப் பிரகார மூர்த்திகளுக்கான வழக்கமான பூஜை வேலைகளை முடித்து விட்டு, பூக்கட்டிக் கொண்டிருந்த பூசாரி,  திடீரென கோயிலுக்கு வந்த பண்ணையாரைப் பார்த்து எழுந்து ஓடி வர, போத்தி குடும்பத்தார் செய்ய உள்ள அனைத்து நைவேத்தியப் பிரசாதங்களையும் கோயில் மடப்பள்ளியிலேயே தயார் செய்து கொடுக்குமாறும், தூக்குத்துரை ஐயா சிலைக்கும் அபிஷேக, ஆராதனை அலங்காரங்கள் செய்ய உதவுமாறும் சொல்லிவிட்டு போத்தியை தேடிச் சென்றார் பண்ணையார். கோயிலுக்கு பின்னால் இருந்த நந்தவனத்தின் ஒரு பக்கத்தில் இருந்த தென்னந்தோப்புக்குள் விறகு சேகரித்துக் கொண்டிருந்த போத்தியை பார்த்த பண்ணையார், விறுவிறுவென்று அருகில் சென்று, “போத்தி…” என்று அழைத்தவாறு கையைப் பிடித்துக் கொண்டார்.

திடீரென்று எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத இடத்தில் பண்ணையார் தன்னை தேடி வந்து ஆதரவாக கையைப் பிடித்து அன்போடு அழைத்ததால் என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்த போத்தியிடம், “நடந்த தவறுக்கெல்லாம் நானே பொறுப்பேத்துகிடுறேன். பெரிய மனசு பண்ணி என்னை மன்னிச்சிடுங்க…” என்று எடுத்த எடுப்பில் இறங்கிப் பேசியதால் மனம் இளகிய போத்தி, “இதுவரை உங்க குடும்பத்திற்கு எதிரா வீம்புக்காக நான் எதுவும் பண்ணலை. நான் கத்துக்கிட்ட கலைகளை பலபேருக்கு கத்துக் கொடுக்கணும்ன்னு என் குருநாதர் சத்தியம் வாங்கியிருந்தார். உங்க பண்ணையில காவல்கார பொறுப்பு ஏத்துகிட்டா அந்த சத்தியத்தை காப்பாத்த முடியாதேன்னுதான் உங்கப்பாட்ட மறுத்தேன். பிள்ளையில்லாத நான் சிஷ்யர்களை பிள்ளைகளாக நினைத்ததால் தான் உங்களையும் அவர்கள் கூட வந்து கத்துக்க கூப்பிட்டேன். என் பிள்ளைகளா நினைச்சுதான் தப்பு பண்ண ஈணா, சோணா கை பெருவிரல்களையும் உரிமையோடு வெட்டினேன். என் பிள்ளைகளை கண்டிக்க நான் யார்ட்ட அனுமதி வாங்கணும்ன்னு நினைச்சது தப்பா…” என்று அடக்கி வைத்திருந்த அத்தனை வருட ஆதங்கத்தையும் கொட்டி விட்டார்.

ஊத்துக்குழி தண்ணி உடம்புல பட்ட உடனேயே எத்தனை நாள் பட்ட ஊத்தமும் இல்லாம போயிடுமேன்னுங்கிறதாலேயும், வயசானவங்க வந்து அலைய வேண்டாமேன்னும் தான் தண்ணி கோரி கொண்டு போய் கொடுக்கச் சொன்னேன். வேற எந்த உள்ளர்த்தமும் கிடையாது.” என்று மேலும் பொருமிய போத்தியின் ஆதங்க பேச்சை அனுசரணையோடு கேட்ட பண்ணையார் மேலும் பல ஆறுதல் வார்த்தைகளை கூறி அவரை ஆசுவாசப்படுத்தினார். பண்ணையார் பின்னாலே ஓடி வந்த ஈணா, சோணா இருவரும் போத்தி கூறிய வார்த்தைகளைக் கேட்டு மனமுடைந்து அவர் காலில் விழுந்து தாம் அறியாமல் செய்த தவறுகளையும், அவருக்கு தொடர்ந்து கொடுத்த தொல்லைகளையும் மறந்து மன்னிக்குமாறு அழுது தொழுதனர்.

என் பிள்ளைகளாக உங்களை நினைத்ததால்தான்  உங்களைப் பழிவாங்கும் எண்ணம் ஏதும் எனக்கு வரலை. அப்படி வஞ்சம் தீர்க்க நினைச்சிருந்தா என் வயலுக்கு தீ வச்ச முதல் நாளே உங்களை தேடி வந்து வெட்டியிருப்பேனேநீங்களா மனசு திருந்தி வரணும்ன்னு இத்தனை நாள் நான் பொறுமையா இருந்தேன்நீங்க செஞ்ச காரியங்களாலேயும் எனக்கு நல்ல பலன்தான் கிடைச்சிருக்குஎன் சொக்காரங்கல்லாம் எப்படிப் பட்டவங்க.. யாரு உண்மையான சொந்தக்காரங்கன்னு தெரிஞ்சுகிட்டேன்….” ஆபத்திற்கு உதவாத இந்த புலிப்பட்டி ஊருல இருக்கிற வீடு வயலையெல்லாம் வித்துட்டு என் பொண்டாட்டிங்க ஊரோட போயிடலாம்ன்னு இருக்கேன். எனக்கப்புறம் அவங்களை பார்க்க ஆள் வேணுமில்லா…. “ என்றவர் பண்ணையாரைப் பார்த்துவீட்டை என் தம்பி மவளே வாங்கிகிடுதேன்னு சொல்லியிருக்காஉங்களை பகைக்கப் பயந்து வயலை வாங்க யாரும் முன் வரலை. வயலை வாங்கற அளவிற்கு அம்புட்டு பணமும் இல்லைன்னு என் தம்பி மவளும் சொல்லிட்டாபெரிய மனசு பண்ணி என் எல்லா வயலையும் நீங்களே வாங்கிக்கோங்கஉங்க இஷ்டப்படி என்ன வேணும்ன்னாலும் பண்ணிக்கோங்க…. “ என்ற போத்தியிடம் பண்ணையார், “ஊரை விட்டு போக வேண்டாம்…” என்று எவ்வளவோ மன்றாடியும் போத்தி தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

இப்படியாக அகத்தியர் கோயில் நந்தவனத்தில் நின்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கோயிலுக்குள் நைவேத்தியப் பிரசாதங்களும், தூக்குத்துரை ஐயாவிற்கான அபிஷேக அலங்காரங்கள் முடிந்து வழிபாட்டிற்கு தயாராகி விட்டதால், நெடுநேரமாகியும் போனவர்களை காணோமேஎன்று லெட்சுமணப் போத்தியும், ராமரும்  தேடி வந்து விட்டதால் அனைவரும் கோயில் நோக்கி திரும்பி வந்தனர். தூக்குத்துரை ஐயாவின் ஆளுயர சிலைக்கு புது வேட்டி, துண்டு, தலைப்பாகை கட்டி, பல வண்ண பூ மாலைகள் அணிவித்து, சந்தனப் பொட்டு, சாந்துப் பொட்டு இட்டு கம்பீரமாக காட்சியளிக்க அனைவரும் கை தூக்கி தொழுதனர். அவர் சிலை முன் தலை வாழை இலைகள் இட்டு நைவேத்தியப் பிரசாதங்களோடு, இளநீர், தென்னம்பூரி, வெற்றிலை, பாக்கு, வாழைக்குலை, பல விதமான கனிகள் அடுக்கப்பட்டிருந்தன.




போத்தியும்பண்ணையாரும் வந்ததும் மணி அடித்துகற்பூர ஆரத்தி காண்பித்துஅனைவரும் கண் ஒற்றிக் கொள்ள ராமரிடம் கொடுத்து விட்டுதூக்குத் துரை ஐயாவின் கழுத்தில் இருந்த இரண்டு மாலைகளை எடுத்து போத்தி கையில் ஒன்றும்பண்ணையார் கையில் ஒன்றுமாக கொடுத்து அவருக்கு இவரும்இவருக்கு அவருமாக அணிவிக்கச் சொன்னார் பூசாரிமேலும் பண்ணையார் தன் கையோடு கொண்டு வந்திருந்த இரண்டு பட்டு வேட்டிகளை வண்டியில் இருந்து எடுத்து வரச்சொல்லிபோத்திக்கு தலையில் பரிவட்டம் கட்டியும்தோளில் அணிவித்தும் மரியாதை செய்தார்மனம் மகிழ்ந்த போத்தியும் தனக்கு உடமையான ஒரு வயலை கோயில் கைங்கர்யங்களுக்கு அன்பளிப்பாக அளிப்பதாகவும்மற்ற வயல்களை பண்ணையாருக்கு மனமுவந்து விற்பதாகவும் அறிவித்தார்மனம் நெகிழ்ந்த பண்ணையாரும் போத்தியின் வயல்களுக்கு தகுந்த விலை கொடுத்து வாங்கிக் கொள்வதாகவும்ஆனால் தனது உடமையாக்கிக் கொள்ளாமல் அனைத்து வயல்களையும் கோயில்களின் பெயரிலே எழுதி வைக்கப் போவதாகவும் எல்லோர் முன்னும் தெரிவித்தார்.

ஒரு வழியாக பிரச்சினை நல்ல படியாக முடிந்ததால் மகிழ்ந்த அனைவரும் உற்சாகத்தில் ஆரவாரக் குரல் எழுப்பிய நேரத்தில் பூசாரி உடல் முறுக்கிகைகள் பின்னிகண்கள் மூடிபற்கள் நெறித்து அருள் வந்து ஆடத்தொடங்கியவுடன் கூட்டம் அமைதியானது.  “சந்தோசம்பா… ரொம்ப சந்தோசம்… என் மக்கள் எல்லாரும் ஒண்ணானதிலே ரொம்ப சந்தோசம்… எல்லார் மனம் போலயும் எல்லாம் நடக்கும்முடிஞ்சது முடிஞ்சு போச்சு… இனி நடக்கிறது நல்லதாவே நடக்கும்நீர் அடிச்சு நீர் விலகுமா… இருந்தாலும் என் மக்கள் சிலகாலம் விலகி இருந்தாதான் எல்லாருக்கும் விருத்தி… யாருக்கும் எந்த குறையும் வராது…” என்று பூசாரி மூலம் தூக்குத்துரை ஐயாவின் ஆன்மா பேசிய அர்த்தத்தை அனைவரும் உணர்ந்து கொண்ட விதமாய் தலையசைத்து ஆமோதிக்கவேஅனைவருக்கும் திருநீறு கொடுத்து ஆசிர்வதித்த பின்ஆவேசம் குறைந்து  அமைதியானார் பூசாரி

நைவேத்தியப் பிரசாதங்களை அங்கேயே எல்லோருக்கும் விநியோகித்து விட்டு மனநிறைவோடு அனைவரும் அவரவர் வீடு திரும்பினர்ஊருக்குள் சென்ற பின்னும் போத்தி வீட்டிற்கு சென்று சிறிது நேரம் அமர்ந்த பண்ணையார் அனைவருடனும் பேசிக் கொண்டு இருந்த போது ஒரு பேரனை பள்ளிவாசலுக்கு அனுப்பி மரைக்காயரை அழைத்து வரச்செய்து பண்ணையாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் லெட்சுமணப் போத்திபின் சிறிது நேரம் கழித்து பண்ணையாரோடு போத்தியும் வண்டி கட்டிக் கிளம்பி லெட்சுமணப் போத்திமரைக்காயர் மற்றும் ராமரை அழைத்துக் கொண்டு ஆரோக்கியம் ஐயாவைச் சந்திக்கச் சென்றார்ஞாயிற்றுக் கிழமை சபை தேவாலயத்தில் சிறப்பு பூஜை முடித்து ஓய்வாக இருந்த ஆரோக்கியம் ஐயா அனைவரும் ஒன்றாக வந்து கூறிய விஷயங்கள் அறிந்து மிக்க மகிழ்ச்சி கொண்டுபோத்தி மற்றும் பண்ணையாரின் பெருந்தன்மையைப் போற்றி வாழ்த்தினார்.

தம்பி லெட்சுமணப் போத்திமருமகன் ராமர்மரைக்காயர்ஆரோக்கியம் ஐயா மற்றும் பண்ணையாரோடு அனைத்து விஷயங்களையும் நன்கு கலந்தாலோசித்த பின் அனைவரும் ஒன்றாக கிளம்பி கல்லிடையில் இருந்த பத்திர எழுத்தரின் வீட்டிற்கு சென்று வயல்களை கோயில்களுக்கும்வீட்டை ராமர் பெயருக்கும் மாற்றி எழுத வேண்டிய விவரங்களை தெரிவித்தார்கள்ஞாயிற்றுக்கிழமை பதிவாளர் அலுவலகம் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த பத்திர எழுத்தர் இரண்டு நாட்களில் அனைத்து பத்திரங்களும் எழுதி தயார் செய்து எடுத்து வந்து காண்பிப்பதாகவும்திருத்தம் ஏதும் இல்லை என்றால் புதன்கிழமை அன்று பத்திரம் பதிவு செய்து விடலாம் என்றும் உறுதி கூறவே மனநிறைவோடு அனைவரையும் அழைத்துக் கொண்டு புலிப்பட்டி ஊர் திரும்பினார் போத்தி.

அன்று மாலை தொழுகையை முடித்து வந்த மரைக்காயரை பெரிய பண்ணையாரம்மாவின் உடல்நிலைமை சோதிக்க பண்ணையார் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்றார் லெட்சுமணப் போத்திநாடி பிடித்தும்பூசாரி கொடுத்த மருந்து குளிகைகளையும்கஷாயப் பொடிகளையும் வாங்கிப் பார்த்தும் சோதித்த மரைக்காயர் அனைத்தும் நல்ல மருந்துகளே என்றும், “தோலில் மினுமினுப்பு ஏறிவிட்டதால் அரிப்பு நோய் குறைந்திருக்குமே..” என்று கேட்க பெரிய பண்ணையாரம்மாவும் அதை ஆமோதித்தார்அந்தி பூஜைகள் முடித்து பிரசாதங்கள் கொடுக்க வந்த பூசாரியை அழைத்துப் பாராட்டிய மரைக்காயர் அவரது சிறப்பான சித்த வைத்திய மருந்துகளை வெகுவாகப் புகழ்ந்தும்தொடர்ந்து கொடுத்து வந்தால் விரைவில் குணமாகி விடும் என்று சொல்லவும் மனம் குளிர்ந்துமகிழ்ந்தனர் பூசாரியும்சின்னப் பண்ணையாரும்.

ராமசாமிப் போத்தி குடும்பத்தோடு ஊரை விட்டு போக இருப்பதால் தங்களுக்கு துணையாக புலிப்பட்டி ஊரிலே இருக்குமாறு சொல்லி தொடர்ந்து மகள் சீதையும்பேரன்களும்மருமகனும் வற்புறுத்தவே கூப்பு வேலையை விட்டுவிட முடிவு செய்தார் லெட்சுமணப் போத்திமறுநாள் காலை மலையேறும் வண்டிகளோடு மரைக்காயரை சேர்த்து அனுப்பும் பொழுது அடிக்கடி புலிப்பட்டி ஊருக்கு வந்து செல்ல வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டு பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தனர் போத்தி குடும்பத்தார்செவ்வாயன்று பத்திர எழுத்தர் தான் எழுதிய பத்திரங்களை புலிப்பட்டி ஊருக்கு எடுத்து வந்துபோத்தி குடும்பத்தினரோடு சென்று பண்ணையாரிடம் காண்பித்து ஒப்புதல் வாங்கிச் சென்றார். மறுநாள் புதன்கிழமை பத்திரம் பதிந்து முடித்து வந்தவுடன் தனது மனைவியரோடு அவர்கள் தாய்வழி ஊரான வைராவிகுளத்திற்கு கிளம்பிப் போன ராமசாமிப் போத்தியையும், அவரது இரண்டு துணைவியரையும் அவர்கள் காலம் முடியும் வரை ராமர் குடும்பத்தினர் அடிக்கடி சென்று பார்த்து வந்தனர்.  

போத்தி ஊரை விட்டுப் போவதற்கு தாங்கள் காரணமாகி விட்டோமே என்று இரண்டு இரவு, பகலாக மனம் புழுங்கிய ஈணா, சோணா இருவரும் செவ்வாய் கிழமை காலையிலே சென்று பண்ணையாரை சந்தித்து தாங்களும் புலிப்பட்டி ஊரை விட்டுப் போகப் போவதாக கூறவும் பண்ணையார் மறுத்தார். ஆனாலும் விடாது இருவரும் பலமுறை மன்றாடியதால் மனதை மாற்றிக் கொண்டவர் குற்றாலத்தில் இருக்கும் அவரது தோட்டத்தில் சென்று தங்கி மேற்பார்வை பார்த்துக் கொள்ளச் சொன்னார். பத்திரங்களை பண்ணையாரிடம் காண்பிக்க வந்த ராமசாமிப் போத்தியை பார்த்து மறுபடியும் ஒரு முறை அனைத்திற்கும் மன்னிப்பு கேட்டு விட்டு உடனடியாக ஊரை விட்டு கிளம்பிச் சென்ற ஈணா, சோணா இருவரும் ஆயுள்காலம் முடியும் வரை அதன்பின் புலிப்பட்டி ஊருக்குள் வரவே இல்லை.

பத்திரம் காண்பிக்க வந்திருந்த நேரத்தில் ஈணா, சோணா இருவரும் ஊரை விட்டு கிளம்பியதால் மனம் சோர்ந்திருந்த பண்ணையாரிடம் ஆறுதல், தேறுதல் வார்த்தைகள் கூறிய ராமசாமிப் போத்தி, “அன்பிலும், பண்பிலும், சிலம்பம், வர்மம் போன்ற தற்காப்புக் கலைகளிலும் தலைசிறந்த தனது சிஷ்யரான ராமரையும், அவரது மகன்களையும் வேண்டுமானால் பண்ணைக் காவலுக்கும், வயல் வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறவே பண்ணையாரும் உடனே ஒப்புக் கொண்டார். சீதையம்மாளையும் தினம் பண்ணை வீட்டிற்கு வந்து பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் தரச் சொல்லுமாறும், தன் தாய் மற்றும் மனைவிக்கு ஒத்தாசையாக அடிக்கடி வந்து செல்லுமாறும் லெட்சுமணப் போத்தியிடம் வேண்டி கேட்டுக் கொண்டார்.



அதன்பின் ராமரது குடும்பத்தினர் பண்ணையார் குடும்பத்தினாரோடு ஒன்றி, ஒத்துப் போய் தலைமுறை, தலைமுறையாக ஒத்துழைப்பாக இருந்து வந்ததால் புலிப்பட்டி ஊரில்  தனிப்பட்ட மரியாதை பெற்று பண்ணையார் குடும்பத்திற்கு அடுத்த படியாக இன்று வரை காலம், காலமாக ஊராரால் மதிக்கப் பட்டு வருகின்றனர். அவர்களது குடும்பமும் வாழையடி, வாழையாக ராமசாமிப் போத்தி வீடு இருந்த இடத்தில் வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். நமது கதையின் அனைத்து காட்சிகளுக்கும் சாட்சியாக ஊத்துக்குழியும், அகத்தியர் கோயிலும், அருவமான உருவமாக ஐயா தூக்குத்துரையும் சிங்கம்பட்டி ஊரில் ஆண்டாண்டு காலமாக அருள்பாலித்து வருகின்றனர்.

( முற்றும் )

நன்றி. வணக்கம்.

No comments: