Thursday, July 09, 2015

காலை உடைத்த காஞ்சனா - பாகம் 5


கடந்த பத்தாண்டிற்கு முன் என் வாழ்வில் நடந்த இத்தனை காலமாக தைத்த முள்ளாய் என் மனதில் தழும்பேறியிருந்த ஒரு அசாதாரண  நிகழ்ச்சியின் அனுபவப் பகிர்வே காலை உடைத்த காஞ்சனா….ஆகும்.


முதல் நான்கு பாகங்களைப் படித்து விட்டு பின் இங்கே தொடரவும்.


பாகம் 3 - பாதியில் திரும்ப வேண்டியதுதானா பாலாப்பூரிலிருந்து….


பாகம் - காணாமல் போன காஞ்சனா….பாகம் 5 -  நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்...
சங்கரும், சாகரும் மயங்கிக் கிடப்பதாக கூறப்பட்ட காட்டுப்பகுதிக்கு நாங்கள் செல்வதற்குள் காவல் பணியில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மெயின் கேட் அருகில் உள்ள செக்யூரிட்டி அலுவலகத்திற்கு தூக்கி கொண்டு வந்து விட்டனர். எங்கள் டிபார்ட்மெண்டின் இரவு பணிக்குழுவைச் சேர்ந்தவர்களும் அங்கு நின்று கொண்டிருந்தனர். நாங்கள் சென்று பார்க்கும் போது சாகர் முழு மயக்கத்தில் இருந்தான். அரை,குறை மயக்கத்தில் இருந்த சங்கரை விசாரித்த போது கோளாறை சரி செய்வதற்காக வாட்ச் டவர் லைட்டின் கீழ் இருந்த பேனல் போர்டை திறக்க முயன்ற போது இருவரும் தூக்கி வீசப்பட்டதாக கூறினான்.


கவாண்டேவும் சிறிது நேரத்தில் வந்து விட அவர்கள் இருவரையும் எங்கள் ஜீப்பில் ஏற்றி பக்கத்தில் உள்ள கோட்டியில் உள்ள மருத்துவமனை நோக்கி விரைந்து கொண்டு சென்று அட்மிட் செய்தோம். அவர்களை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் மின் அதிர்ச்சி போன்று இருப்பதாகவும், முழுமையாக பரிசோதித்து பார்த்தால்தான் என்ன அளவு பாதிப்பு என்பதை தெளிவாக அறிய முடியும் என்று கூறி தனி அறைக்குள் இருவரையும் கொண்டு சென்றனர். அடுத்த அரை மணி நேரத்திற்குள்ளாக விபரம் அறிந்து ஆராய்ச்சி நிறுவன மின்னியல் துறைத்தலைவரான திரு.மாதவராவ், அவர் உதவியாளர் சீனிவாசராவ், பாதுகாப்பு துறை அதிகாரி, மனிதவளத்துறை அதிகாரி போன்ற ஆராய்ச்சி நிறுவன உயரதிகாரிகள் அனைவரும் மருத்துவமனைக்கு வந்து விட்டனர்.


சம்பவம் எப்படி நடந்தது என்று அவர்கள் கவாண்டேவை விசாரிக்க “”அணில், எலி ஏதாவது கடித்து பேனல் பாக்ஸின் உள்ளே உள்ள ஒயர்கள் துண்டிக்கப்பட்டதனால் லைட் எரியாமல் இருந்திருக்கலாம். கோளாறு சரி செய்யச் சென்ற சங்கரும், சாகரும் பேனலை திறக்க முயற்சித்த பொழுது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டிருக்கலாம்”   என்று அவர்களிடம் என்ன நடந்திருக்கலாம் என்ற அவரது ஊகத்தை சொன்னார். அதன்பின் தலைமை மருத்துவரை பார்க்க திரு.மாதவராவும், கவாண்டேவும் சென்று அரைமணி நேரம் கழித்து வந்தனர். சங்கருக்கு லேசான காயங்கள்தான் என்றும், சாகர்தான் மின் அதிர்ச்சியால் அதிகம் தாக்கப்பட்டு கை, கால்கள் கருகி விட்டதாக தகவல் கூறினார்கள். மேலும் உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லையென்றும், குறைந்தது இரண்டு வாரங்களாவது மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர் கூறியதாக சொன்னார்கள்.


சிறிது நேரத்தில் ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் அனைவரும் சென்று விட மருத்துவமனையில் இரவு யாராவது ஒருவர்தான் நோயளிகளுக்கு உதவியாக தங்க முடியும் என்பதால் ஒருவரை மட்டும் வைத்துவிட்டு மற்றவர்கள் அனைவரும் கிளம்பலாம் என முடிவு செய்தோம். மணி அவனே இருப்பதாக கூற மற்றவர் அனைவரும் சென்று விட்டு மறுநாள் வருவதாக சொல்லி கிளம்பினோம்.


மணிக்கு உணவு வாங்கி கொடுத்து விட்டு நாங்களும் அங்கேயே ஒரு ஹோட்டலில் உணவு அருந்தி விட்டு அனைவரும் பாலாப்பூர் கெஸ்ட் அவுஸ் திரும்ப இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் ஆகி விட்டது. மறுநாள் ஞாயிறு என்பதால் மெதுவாக எழுந்து குளித்து கிளம்பி காலை பத்து மணி போல் சாகர், சங்கர் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றோம். எங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த மணி அறைக்குச் சென்று குளித்து, சாப்பிட்டு விட்டு வருவதாக கூறிச் சென்றான். சங்கருக்கு லேசான காயங்கள் மட்டும் என்பதால் நார்மல் வார்டில் தான் இருந்தான். இரவில் டாக்டர்கள் கொடுத்த மருந்துகளின் பலனாக நன்றாக தூங்கி விட்டதாகவும், மணியும், அவன் படுக்கையிலே உறங்கியதாகவும் கூறினான்.


சாகர் ஸ்பெசல் வார்டில் இருப்பதனால் காலை 11 மணி மற்றும் மாலை 7 மணி என்று குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பார்க்க முடியும் என்று ரிஷப்சனில் கூறியதால் அவனை பார்த்து விட்டுச் செல்லலாம் என்ற முடிவோடு சங்கரோடு நாங்கள் அங்கேயே காத்திருந்தோம். கவாண்டேவும் சிறிது நேரத்தில் வந்து விட 11 மணி ஆனவுடன் முதலில் கவாண்டே, பின் சங்கர், மற்ற நண்பர்கள் என ஒவ்வொருவராக சென்று சாகரைப் பார்த்து வந்தார்கள். கடைசியாக நான் சென்ற போது படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்த சாகரிடம் என்ன ஆச்சு, எப்படி ஆச்சு என நான் விசாரிக்கும் போது அவன் கூறிய தகவல்கள் அதிர்ச்சி தருபவனாக இருந்தன. அதற்குள் பார்வை நேரம் முடிந்து விட்டதாக நர்ஸ் வந்து தெரிவிக்க சாகரிடம் சொல்லி விட்டு வெளியே வந்த எனக்கு கவாண்டேவும், மற்ற நண்பர்களும் கூறிய தகவல் மேலும் அதிர்ச்சியை தந்தது.

 ( தொடரும் )

2 comments:

'பரிவை' சே.குமார் said...

பரபரப்பாய் நகர்கிறது...

துபாய் ராஜா said...

தொடர்வருகைக்கும்,ஊக்கம் தரும் கருத்துரைக்கும் நன்றி நண்பர் குமார்...