Saturday, July 11, 2015

காலை உடைத்த காஞ்சனா - பாகம் 6


முதல் ஐந்து பாகங்களைப் படித்து விட்டு பின் இங்கே தொடரவும்.


பாகம் 3 - பாதியில் திரும்ப வேண்டியதுதானா பாலாப்பூரிலிருந்து….

பாகம் - காணாமல் போன காஞ்சனா….






பாகம் 6 – அடுத்த மூன்று வாரங்கள்



நான் அதிர்ச்சியடைந்ததற்கு காரணம் கவாண்டேவும், மற்ற நண்பர்களும் சாகரைப் பார்க்க அறைக்குள் சென்ற போது உடல் சோர்வு காரணமாக அவன் நன்றாக அயர்ந்து தூங்கி கொண்டிருந்தானாம். எனவே எவருமே அவனிடம் ஏதும் பேச வில்லையென்றும் சும்மா பார்த்து விட்டு மட்டும் வந்ததாகவும் கூறினார்கள். அப்படியென்றால் என்னுடன் மட்டுமே அவன் பேசி இருக்கிறான். பேசியது மட்டும் இல்லாமல் மிகுந்த அதிர்ச்சியான செய்தி ஒன்றையும் கூறினான். ஆம். முந்தைய நாள் இரவு சாகர், சங்கர் இருவரும் வாட்ச் டவர் அருகே சென்று பைக்கை நிறுத்தி விட்டு, சில உபகரணங்களை எடுத்துக் கொண்டு பழுது நீக்க சென்ற போது அங்கு மாலையில் மலரும் பலவிதமான காட்டுப்பூக்களின் மனதை மயக்கும் நல்ல  மணம் வந்திருக்கிறது. சில அசாதாரண சப்தங்களும் கேட்டிருக்கின்றன. என்ன, ஏது என்று இருவரும் சுற்றும், முற்றும் பார்த்திருக்கும் கொண்டிருக்கும் போது யாரோ சாகரை பிடித்து வேகமாக தள்ளி விட்டிருக்கிறார்கள். எதிர்பாராத நிகழ்வு என்பதால் சாகர், சங்கரையும் சேர்த்து தள்ளிக் கொண்டு பேனல் மேலே சென்று விழ மின் அதிர்ச்சி ஏற்பட்டு தூக்கி வீசப் பட்டிருக்கிறான். சங்கர் நல்ல வேளையாக பேனல் மீது விழாவிட்டாலும் சாகரை பிடித்து இழுத்து காப்பாற்ற முயற்சித்ததால் அவனுக்கும் மின் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

வழக்கமாக எங்கு மின்கோளாறு ஏற்பட்டாலும் முதலில் டெஸ்டரை வைத்து மின் கசிவு இருக்கிறதா என்று பார்த்து விட்டு கசிவு இல்லை என்று உறுதியாக தெரிந்த பின் தான் கை வைக்க வேண்டும் என்பது மின்னியலில் முதல் விதி. அவ்வாறு டெஸ்ட் செய்யும் முன்பே இருவருக்கும் மின் தாக்குதல் ஏற்பட்டது என்பது நடக்க முடியாத செயல் என்பதால் சாகர் கூறியதை நம்பத்தான் வேண்டியிருந்தது. எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தின் அதிர்ச்சி மற்றும் எடுத்துக் கொண்ட மருந்துகளின் வேகத்தில் அவன் மனம் குழம்பியிருக்கலாம் என்பதால் சாகர் கூறியதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சாகர் அறையை விட்டு நான் வெளியே வந்த போது உணவு நேரம் ஆகி விட்டபடியால் எங்கே உணவருந்த செல்லலாம் என அனைவரும் கூடிப் பேசி கொண்டிருந்தனர். சங்கருக்கும், சாகருக்கும் மருத்துவமனையிலே உணவு கொடுத்து விடுவார்கள் என்பதால் மற்றவர்கள் அனைவரும் மருத்துவமனை அருகில் இருந்த ‘ஷோஹைல் பிரியாணி’ என்ற பிரபலமான ஹைதராபாத் பிரியாணி கடைக்கு செல்லலாம் என முடிவு எடுக்கப்பட்டது.மணிக்கும் மொபைல் போன் மூலம் நேராக கடைக்கு வரச்சொல்லி தகவல் சொல்லி விட்டோம்.

‘ஷோஹைல் பிரியாணி’ கடையில் அருமையான ஹைதராபாத் பிரியாணி மற்றும் அக்கடையின் ஸ்பெசல் அயிட்டங்களான சிக்கன், மட்டன் வகையறாக்களை ஒரு வெட்டு வெட்டி விட்டு பின் கோட்டி நகருக்கு சென்றோம்.சென்னையின் தி.நகர் போல இல்லையென்றாலும் ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்ற அளவிலே கோட்டியின் கடைகள் இருந்தன.சில மால்களில் சுற்றிவிட்டு தேவையான பொருட்கள் வாங்கிவிட்டு கிளம்பும் நேரம் ”கோகுல் சாட்ஸ்” போய்ட்டு போகலாம்” என அவர்கள் நால்வரும் ஒருமித்த குரலில் கூற “ போன வாரம் தானே அந்தக் கடைக்கு போய்ட்டு வந்தோம். கோட்டி வரும்போதெல்லாம் செல்லும் அளவிற்கு அந்தக் கடையில் அப்படி என்ன விசேஷம்” என நான் கேட்டதற்கு “அது பலவிதமான வடஇந்திய சாட்வகை உணவுகள் தயார்செய்து விற்பனை செய்யும்   கடை. அங்கே எல்லா சிற்றுண்டி வகைகளுமே விசேஷம்தான். அங்குள்ள பலதரப்பட்ட உணவுகளின் சுவைக்காகவும், தரத்திற்காகவும் ஹைதராபாத், செகந்திராபாத்தில் உள்ள வி.ஐ.பி.க்கள், பொதுமக்கள் அனைவரும் அடிக்கடி வந்து செல்வர்” என பதில் கூறினர். அவர்கள் கூறியது போல் அந்த கடை இருந்த சாலை பலதரப்பட்ட வாகனங்களாலும், பொதுமக்களாலும் நிறைந்து, நெருக்கடியாக காணப்பட்டது. மணி எப்படியோ அடித்து, பிடித்து உள்ளே செல்ல, நாங்களும் அவனைப் பின்தொடர்ந்து பலவகை உணவுகளை வாங்கிக்கொண்டு வெளியே வந்து உண்டு களித்தோம்.பின் ஏழு மணி அளவில் அங்கிருந்து கிளம்பி மறுபடியும் மருத்துவமனை வந்து சங்கர்,சாகரைப் பார்த்து விட்டு பேருந்து மூலம் பாலாப்பூர் சாரஸ்தா அடைந்து தங்குமில்லம் வந்து சேரும்போது இரவு மணி ஒன்பது ஆகிவிட்டது. சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு மணியும் கிளம்ப நாங்களும் உறங்கச்சென்றோம்.

மறுநாளான திங்கள் முதல் பாண்டே,தேசிங்கு இருவருக்கும் பகல்நேர வேலை என்பதால் அனைவரும் ஒன்றாக கிளம்பி பணிக்குச் சென்றோம். அன்று காலை அலுவலகம் வந்த கவாண்டே மதியம் மூன்று மணிக்கு ஆராய்ச்சியக அரங்கில் புதிய திட்டம் பற்றிய ஆலோசனைக்கூட்டம் இருப்பதாகவும் அதற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்து கொள்ளுமாறும் கூறியதால் தேவையான எல்லாவற்றையும் தயார்செய்து வைத்தேன். ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிதாக நிறுவ இருந்த பெரிய அளவிலான கொதிகலன் பற்றிய ஆலோசனைக்கூட்டத்திற்கு கவாண்டே என்னையும் அழைத்துச் சென்றார்.அந்த கொதிகலனுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக சக்தி வாய்ந்த ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து ஒருங்கிணைத்து ஏற்ற இறக்க வேறுபாடு இல்லாமல் தரமாக தடையில்லா ஒரே அளவான மின்சாரம் வழங்கவேண்டியதே எங்கள் நிறுவனத்தின் பணி. அது தொடர்பான புதிய கட்டிடம் கட்டுதல், ஜெனரேட்டர்கள், கண்ட்ரோல் பேனல்கள் வாங்கி கட்டுப்பாட்டு அறையில் நிறுவி பராமரிப்பு பணி ஏற்றுக்கொள்வது வரை எங்கள் நிறுவனத்தின் பொறுப்பு.

அந்த வார இறுதிக்குள் புதிய கொதிகலன் கட்டுபாட்டறை திட்டத்திற்காக  புதிதாக ஜான்,செந்தில்,காந்தியின் தம்பி சின்ன காந்தி மற்றும் ஆறு உள்ளூர்க்காரர்கள் என மேலும் ஆள்கள் வந்து சேர்ந்தனர். ஏற்கனவே பராமரிப்பு பணியில் இருந்த பணியாளர்கள் காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணி வரை பின்  இரவு ஏழு மணி முதல் காலை ஏழு மணி வரை என பன்னிரெண்டு மணி நேர வேலை செய்து வந்ததால் புதிதாக வந்தவர்கள் மற்றும் ஏற்கனவே இருப்பவர்கள் எல்லோரையும் சேர்த்து பிரித்து என அனைவரும் எட்டு மணி நேரம் பணி பார்க்குமாறு புதிய அட்டவணை தயார் செய்து கவாண்டே மற்றும் சம்பந்தப்பட்ட எங்கள் நிறுவன பணியாளர்கள் அனைவரிடமும் கலந்து பேசி தேவையான மாறுதல்கள் செய்து ஆராய்ச்சியக அதிகாரிகளிடமும் ஒப்புதல் பெற்று என அடுத்து வந்த மூன்று வாரங்களும் முழுக்க பரபரப்பாக பணி சென்றது.

சங்கருக்கு உடல்நிலையில் பெரிய பிரச்சினை ஏதும் இல்லை என்பதால் அவனை அட்மிட் செய்த இரண்டு நாட்களுக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள் என்றாலும் அவனுக்கு விடுமுறை கொடுத்து ஊருக்கு அனுப்பிவிட்டார் கவாண்டே. அடுத்து வந்த வாரத்திலேயே சாகரையும் ICUல் இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றி விட்டார்கள். காயங்கள் ஆறுவதைப் பொறுத்து மருத்துவமனையில் இருந்து ஓரிரு வாரங்களில் சாகரை டிஸ்சார்ஜ் செய்து விடுவதாகவும் தெரிவித்து விட்டனர். வேலையைப் பொறுத்து நாங்களும், மற்றும் பழக்கமான ஆராய்ச்சி நிறுவன ஊழியர்கள், உள்ளூர் நண்பர்கள் என அவ்வப்போது ஆட்கள் மாறி ஆட்களாக மருத்துவமனை சென்று சாகரைப் பார்த்து வந்தோம். சாகரின் உடல்நிலை தேறியது போல் தெரிந்தாலும் அவன் ஏதோ மனக்குழப்பத்தில் இருப்பது போல் என்னைப் போலவே பார்த்து வந்த மற்றவர்களும் கூறினர்.


( தொடரும் )


பாகம் 7

2 comments:

'பரிவை' சே.குமார் said...

தொடருங்கள்.... மனக்குழப்பம் என்ன என்பதை அறிய ஆவல்.

துபாய் ராஜா said...

தொடர்வருகைக்கும்,ஊக்கம் தரும் கருத்துரைக்கும் நன்றி நண்பர் குமார்...