Thursday, October 13, 2011

செய்நன்றியில் சிறந்தவர் கர்ணனா…. கும்பகர்ணனா….

அறை நண்பரோடு ஏதோ ஒரு புள்ளியில் ஆரம்பித்து, என்னவெல்லாமோ பேசி கடைசியில் நின்ற இடம்தான் பதிவின் தலைப்பு. உங்களின் பார்வைக்கும் அந்த பகிர்வு.

செய்நன்றியில் சிறந்தவர் கர்ணனா…. கும்பகர்ணனா….


செய்நன்றியில் சிறந்தவர் கர்ணனா…. கும்பகர்ணனா…. – இது என்ன கேள்வி கும்பகர்ணன் அண்ணனுக்காக சண்டை போட்டு மாண்டதில் என்ன சிறப்பு… கர்ணன்தான் பாண்டவர்கள் தம் சகோதரர்கள் என்று தெரிந்தும் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க இறுதிவரை துஷ்டன் துரியோதனனுக்காக போராடி உயிர்நீத்தான் என்பதுதான் எல்லோருடைய கருத்தாகவும் இருக்கும்.


இனி விவாதத்திற்கு வருவோம்.


கர்ணன் : கன்னிப் பெண் குந்தி தேவிக்கும், சூரிய தேவனுக்கும் பிறந்து ஆற்றில் விடப்பட்டு, தேரோட்டியால் வளர்க்கப்பட்டு, வில்வித்தை கற்றுத்தேர்ந்து போட்டியொன்றில் அர்ஜுனனோடு மோதவரும்போது துரோணச்சாரியால் இழிகுலத்தான் என அவமானப்படுத்தப்பட்டவன். அந்த நேரம் துரியோதனன் எழுந்து அர்ஜுனனை விட திறமைசாலி என்பதால் கர்ணனின் வில்திறமைக்காக அவனை அங்கதேச அதிபதியாக்கி தன்னுடன் சேர்த்துக்கொண்டு எடுக்கவோ… கோர்க்கவோ… என்ற அளவில் நட்பு கொண்டான். நட்பிற்கு நன்றியாக தன் உடல், பொருள்,ஆவி அனைத்தும் துரியோதனனுக்கு அர்ப்பணம் என்று உறுதிமொழி கூறியவன் கர்ணன்.












குற்றம் 1 : இந்திரன் தன் மகன் அர்ஜுனனுக்காக கர்ணனது கவச,குண்டலத்தை தானமாக கேட்டபோது அறுத்துக் கொடுத்த கர்ணன் அவனது உடல், பொருள், ஆவிக்கு சொந்தக்காரனான துரியோதனனிடம் அனுமதி பெறாதது ஏன்…


குற்றம் 2 : உண்மையான நட்பிற்கும், உறவிற்கும் அழகு தவறு செய்யும்போது இடித்துரைப்பது… சூதாட்டத்தில் பாஞ்சாலியையும் தர்மர் வைத்து தோற்றவுடன் அவளை அவைக்கு இழுத்து வந்து துச்சாதனன் அவமானப்படுத்தும்போது ஆட்சேபிக்காததும்…. அந்த அநியாயத்தை தட்டிக்கேட்டு, தடுக்க முயன்ற கௌரவர்களில் கடைசியானவனான விகர்ணனை பெரியவர்களை எதிர்த்து பேசக்கூடாது என்று திட்டி சபையை விட்டு வெளியே அனுப்பியதும் நியாயமா…



குற்றம் 3 : கண்ணன் மூலம் கர்ணன் தன் மகன் என அறிந்த குந்தி தேவி அவனை பாண்டவர்களோடு வந்து சேர்ந்து கொள்ளுமாறு அழைக்கும்போது செஞ்சோற்றுக்கடன் கூறி மறுத்த கர்ணன், அர்ஜுனனை தவிர மற்ற பாண்டவர்களை கொல்லமாட்டேன் என்றும், அர்ஜூனன் மீது ஒரு முறை மட்டும்தான் கொடிய நாகபாணம் பிரயோகிப்பேன் என்றும் துரியோதனனிடம் அனுமதி பெறாமல் உறுதிமொழி கொடுத்தது சரியா… தவறா…



குற்றம் 4 : யுத்த தர்மபடி களத்தில் ஆயுதமின்றி நிற்கும் எவரையும் தாக்கக்கூடாது…. ஆனால் நிராயுதபாணியாக நின்ற அபிமன்யுவை அம்பு விட்டு கொன்றது யுத்ததர்மமா…..


குற்றம் 5 : அர்ஜூனனை அழிக்க நாகபாணம் விடும்பொழுது நெஞ்சுக்கு குறிவக்குமாறு பலகளம் கண்ட அனுபவசாலியான தேரோட்டிய சல்லியன் கூறியும் கேட்காமல் தலைக்கு குறிவைக்க கண்ணன் தன் காலால் தேரை ஒரு அடி கீழே அழுத்தி அர்ஜுனனை காப்பாற்றினான். அதனால் கடும்கோபம் கொண்ட கர்ணன், நிலத்தில் அழுந்திய தேரை தூக்க முயற்சித்துக் கொண்டிருந்த சாரதியும், பாரதப் போரில் ஆயுதம் தூக்கமாட்டேன் என சத்தியம் செய்திருந்தவனுமாகிய கண்ணனை அம்பால் அடித்து துன்புறுத்தினான். இச்சம்பவத்தையும், அபிமன்யுவை கொன்றதையும் கூறித்தான் நிராயுதபாணியான கர்ணனை கொல்ல மறுத்த அர்ஜுனனின் மனதை மாற்றினான் கண்ணன்.



குற்றம் 6 : கர்ணன் உயிர்பறிக்க அர்ஜூனன் விடும் அம்புகளெல்லாம் தர்மதேவதையால் மாலைகளாக மாறுவதை கண்ட கண்ணன் வயோதிக அந்தணர் உருவம் எடுத்து கர்ணன் செய்த தர்மத்தையெல்லாம் தானமாக கேட்க, அவனும் ரத்தத்தில் தாரை வார்த்து கொடுத்தான்.நெகிழ்ச்சியுற்ற கண்ணன் என்ன வரம் வேண்டுமென்றாலும் கேட்க சொல்ல ஈரேழு உலகம் இருக்கும் வரை கொடைவள்ளல் என்ற பட்டம் மட்டும் போதும் என்று கூறியதற்கு பதிலாக தன் நண்பன் துரியோதனன் போரில் வெல்ல வேண்டும் என்று கேட்டிருக்கலாமே…. 


குற்றம் 7 : இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியாது என்று எல்லோரும் சொல்ல வேண்டும் என்பதற்காக வாரி, வாரி வழங்கிய கர்ணன் அந்த பொன்னும்,பொருளும் துரியோதனன் கொடுத்ததே என்பததை எப்போதும் மனதில் கொண்டும், எல்லோரிடமும் சொல்லியும் அந்த புகழெல்லாம் துரியோதனனுக்கு கிடைக்கும்படி செய்திருக்கலாம் அல்லவா….




கும்பகர்ணன் : இராவணனின் தம்பி. மிகுந்த பலம் வாய்ந்தவன். தூக்கத்தில் ஆழ்ந்தால் ஆறுமாதத்திற்கு ஒருமுறைதான் விழிப்பான்.
அப்படியொரு நாள் விழித்திருக்கும்போது தான் இராவணன் சீதையை கவர்ந்து வந்தான். உடனே அச்செயலை கண்டித்த கும்பகர்ணன் சீதையை திருப்பி கொண்டுபோய் விட்டுவிடுமாறு அறிவுரை கூறி விட்டு தூங்கச் சென்று விட்டான்.



 சீதை இராவணனால் கடத்தப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டு இருப்பதை அறிந்த இராமன் வானரப்படை திரட்டி வந்து நடத்திய போரில் இந்திரஜித் மற்றும் முக்கிய தளபதிகள் மடிந்தவுடன் தூங்கிக் கொண்டிருந்த கும்பகர்ணனை எழுப்பச் சொன்னான் இராவணன்.






 கடும்போராட்டத்திற்குபின் உறக்கத்தில் இருந்து எழுப்பப்பட்ட கும்பகர்ணன் விவரங்கள் அறிந்து இராவணனிடம் சென்று, “ உன்னை அன்றே சீதையை கொண்டு விடச்சொன்னேனே…. அப்படிச் செய்திருந்தால் இந்த தேவையில்லாத போரே வந்திருக்காதே… இந்திரஜித் போன்ற ஒப்பிலா வீரர்களையே அழித்தவன் என்றால் அவனது பலம் இன்னும் புரியவில்லையா… இப்போதாவது மன்னிப்பு கேட்டு சீதையை இராமனிடம் ஒப்படைத்து விட்டு உயிர்பிழைக்கும் வழிபார் ”. என்று அறிவுரை கூறினான்.அதற்கு இராவணன் எனக்காக போரிட்டு மடியும் அளவு பாசம் கொண்ட மகன்களையும்,நண்பர்களையும் பெற்றும் உன்னையும், விபீஷணனையும் போன்ற துரோகிகளை தம்பிகளாக அடைந்ததற்காக வெட்கப்படுகிறேன் . வேதனைப்படுகிறேன் என்று கூறவும் உனது நன்மைக்காகவும், மீதியிருக்கும் நமது குலம் காக்கப்படவேண்டும் என்பதற்காகவும்தான் உன்னை திருந்தச்சொன்னேன். விதியை யாரால் வெல்ல முடியும். என்று கூறி கும்பகர்ணன் போருக்கு புறப்பட்டு சென்றான்.



கும்பகர்ணன் களத்தில் இறங்கி வானரப்படைகளை துவம்சம் செய்வதை கண்டு திகைத்த இராமன் யார் இந்த இராட்சதன் என விபீஷணனிடம் கேட்டு விவரம் அறிந்தான்.






இனியும் இவனை விட்டு வைத்தால் வானரப்படையை கூண்டோடு அழித்துவிடுவான் என்பதால் அம்பு விட்டு கும்பகர்ணனின் இரு கைகளையும் அறுத்தும் அங்கும், இங்கும் ஓடி அகப்பட்டவர்களை கால்களால் மிதித்து அழிப்பதை கண்ட இராமன் இரு கால்களையும் அறுத்தான்.




சகோதர பாசத்தால் பீடிக்கப்பட்டு மிகுந்த மனவருத்தத்துடன் மாமிசமலை போல் களத்தில் விழுந்து கிடந்த கும்பகர்ணனின் அருகில் சென்ற விபீஷணன் அவனது கண்களில் இருந்து தாரை, தாரையாக கண்ணீர் வடிவதை கண்டு மேலும் கலங்கி காரணம் கேட்க “ மிகுந்த பலசாலியும்,பெரும் உடலும் கொண்ட என்னையே இராமனது பாணங்கள் சிதைத்து சின்னாபின்னப் படுத்தி விட்டனவே..என்னை விட நூறு மடங்கு உருவத்தில் சிறிய இராவணன் மீது இந்த பாணங்கள் பட்டால் அவன் எவ்வளவு வலியும், வேதனையும் அடைவான் என்பதை நினைத்தே என் கண்கள் கலங்குகின்றன ” என்று கூறியவாறே உயிர் நீத்தான் கும்பகர்ணன்.


உங்களது கருத்துக்களையும் கூறுங்கள்….

செய்நன்றியில் சிறந்தவர் கர்ணனா…. கும்பகர்ணனா….

14 comments:

Raju said...

கேள்வியெல்லாம் கேட்டா சொல்லத் தெரியாதுண்ணே!

ஆனாலும், பதிவு படிக்கப் படிக்க சுவாரசியமா இருக்கு.

Vadielan R said...

கர்ணன் அல்ல என்பதில் பெயரிலே தெரியவில்லையா தோழரே கர்ணன் VS கும்பகர்ணன்

துபாய் ராஜா said...

// ♠ ராஜு ♠ said...
கேள்வியெல்லாம் கேட்டா சொல்லத் தெரியாதுண்ணே!

ஆனாலும், பதிவு படிக்கப் படிக்க சுவாரசியமா இருக்கு.//


பகிர்வைப் படித்ததற்கும், பதிவின் சுவை பிடித்ததற்கும் மிக்க மகிழ்ச்சி தம்பி ராஜூ...

துபாய் ராஜா said...

// Vadivelan R said...

கர்ணன் அல்ல என்பதில் பெயரிலே தெரியவில்லையா தோழரே கர்ணன் VS கும்பகர்ணன் //

முதல் வரவிற்கும், முத்தான கருத்திற்கும் நன்றி நண்பரே...

Ramesh said...

இன்று கர்ணன்,கும்பகர்ணன் மாதிரி கூட மனிதர்களின் குணங்கள் இல்லை. அதை விட கீழே போய விட்டோம். கும்பகர்ணன் சிறந்தவர் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அனால் கர்ணன் தான் செய்த ஈகைக்கு துரியோதனனை எதற்கு பெருமை படுத்தவேண்டும்.துரியோதனன் வெற்றி பெற்றால் நீதி வெற்றி பெறாது என்று தெரிந்துதான் இறக்கும்போது அப்படி கேட்கவில்லை. தான் வில்லன் கதாபாத்திரம் என்று தெரிந்தும் அதை செய்த கர்ணனும் நல்லவனே.

துபாய் ராஜா said...

//Ramesh said...

இன்று கர்ணன்,கும்பகர்ணன் மாதிரி கூட மனிதர்களின் குணங்கள் இல்லை. அதை விட கீழே போய விட்டோம். கும்பகர்ணன் சிறந்தவர் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அனால் கர்ணன் தான் செய்த ஈகைக்கு துரியோதனனை எதற்கு பெருமை படுத்தவேண்டும். துரியோதனன் வெற்றி பெற்றால் நீதி வெற்றி பெறாது என்று தெரிந்துதான் இறக்கும்போது அப்படி கேட்கவில்லை. தான் வில்லன் கதாபாத்திரம் என்று தெரிந்தும் அதை செய்த கர்ணனும் நல்லவனே.//

அருமையான முதல் வரவிற்கும், அழகான தெளிவான கருத்திற்கும் நன்றி நண்பரே...

அத்திரி said...

new look anne

vasu balaji said...

நல்லாருக்கு ராஜா.

துபாய் ராஜா said...

//FOOD said...

ஆஹா, இன்னைக்கு பதிவு வித்யாசமா இருக்கே. இதுவரை கர்ணன் மட்டுமே சிறந்தவர் என்றிருந்த பார்வை மாறும்.//

தமிழ்த்தாயின் தயவோடும், காலதேவனின் கருணையோடும் இது போன்ற வித்தியாசமான பதிவுகள் பல பதிவுகள் எழுத எண்ணம். அதற்கு உங்கள் அன்பும்,ஆதரவும் எப்போது இருக்கும் என்பது திண்ணம்.

துபாய் ராஜா said...

// அத்திரி said...

new look anne//

பகிர்வைப் படித்ததற்கும், பதிவின் சுவை பிடித்ததற்கும் மிக்க மகிழ்ச்சி தம்பி...

துபாய் ராஜா said...

// வானம்பாடிகள்said...

நல்லாருக்கு ராஜா.//

நன்றிங்க ஐயா...

ஹுஸைனம்மா said...

சுவாரஸ்யமான விளக்கங்கள் & கேள்விகள்.

துபாய் ராஜா said...

//ஹுஸைனம்மாsaid...

சுவாரஸ்யமான விளக்கங்கள் & கேள்விகள்.//

வரவிற்கும்,கருத்திற்கும் நன்றி ஹூஸைனம்மா....

Unknown said...

செய்நண்றியில் சிறந்தவர் கர்ணன்தான் ஏணென்றால் கும்பகர்ணன் இராவணின் உடண்பிறப்பு ஆதலால் தவறு எண்று தெரிந்தும் அண்ணனுக்காக போருக்கு செண்றாண். ஆணால் கர்ணன் தான் குந்தியிண் மகண் பாண்டவர்க்கு அண்ணன் என்று தெரிந்தும் கடைசிவரை துரியோதணனோடுதாண் இருந்தாண் இறக்கும்வரை அதணால் கர்ணன்தான் செய்நண்றியில் மிகமிகச்சிறந்தவண்