சீக்கிரம் கீழே இறங்கிய முருகனுக்கு தாங்க முடியாத பசி எடுத்திருக்கிறது. சரி பக்கத்து தோட்டங்களில் ஏதாவது சாப்பிட கிடைக்குமா என்று தேடிச் சென்றுள்ளான். அப்போது வயதான பெரியவர் ஒருவர் கண்ணில் பட்டாராம். “தம்பி யாரு,என்ன விபரம் “ என்று கேட்டிருக்கிறார். “தாத்தா காத்தாடில வேலை பார்க்கேன் . பசியா இருந்துச்சு. ஏதாவது திங்க கிடைக்குமான்னு தேடி வந்தேன். நீங்க யாரு“ என்று கேட்டிருக்கிறான்.
“நான் பக்கத்து ஊரு. ஊர் மாடுவளை மேய்க்கேன். அஞ்சாறு மாடுவளை காணோம். அதான் அதுவளை தேடி வந்தேன் “ என்றவர் “பக்கத்துல தோட்டம் ஏதுமில்லையே. என்ட்ட முறுக்கு இருக்கு. சாப்பிடுதியளா “ என்று கேட்டிருக்கிறார். நல்ல பசி என்பதால் அவரிடம் கதை பேசிக்கொண்டே அவர் முறுக்கு கொடுக்க கொடுக்க இவனும் வாங்கி வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்திருக்கிறான்.
அந்த நேரம் செக்யூரிட்டி,” முருகா, முருகா “ என்று சத்தம் கொடுத்தவாறு தேடி வர எழுந்து “இந்தா இங்க இருக்கேன் “ என்று குரல் கொடுத்திருக்கிறான். “இங்க என்னடே பண்ற, உன்னைய அங்க எல்லாரும் தேடிட்டு இருக்காங்க “ என்று சத்தம் போட்டவர் அவன் கையில் முறுக்கைப் பார்த்து “இது ஏதுடே “ என்று கேட்டிருக்கிறார். அப்போதுதான் பெரியவர் ஞாபகம் வந்து “ஒரு தாத்தா தந்தாரு. தாத்தா,தாத்தா “ என்று அக்கம் பக்கம் தேடியிருக்கிறான். யாருமே இல்லையாம். “சரியா போச்சு.முறுக்கு முனியப் பார்த்திருக்கே “ என்று கூறி அவனை கூட்டி வந்திருக்கிறார்.
பக்கத்து ஊரில் முனியாண்டி என்ற ஆதரவற்ற வயதானவர் இருந்தாராம். வேறு எந்த வேலைக்கும் செல்லமுடியாது என்பதால் ஊராரின் ஆடு, மாடுகள் மேய்த்து கிடைக்கும் பணத்தில் வாழ்ந்து வந்திருக்கிறார்.முறுக்கு என்றால் அவருக்கு கொள்ளை பிரியமாம். சாப்பாடு கூட தேவையில்லையாம். எப்போதும் பத்து, இருபது முறுக்கு கைவசம் வைத்திருப்பாராம்.
ஒரு நாள் அப்படி காட்டில் மேய்த்து கொண்டிருந்த பொழுது ‘மாடு களவாணிகள்’ அவருக்கு தெரியாமல் சில மாடுகளை ஓட்டி சென்று விட்டனராம். காணாமல் போன மாட்டு சொந்தகாரர்களால் பிரச்சினை போலிஸ் ஸ்டேசன் சென்று இவரையும் ஒருவாரம் உள்ளே வைத்துவிட்டார்களாம். வெளியே வந்தவர் அவமானம் தாங்காமல் காட்டுக்குள் சென்று பூச்சிமருந்து குடித்து இறந்து விட்டாராம்.அன்று முதல் நெடுங்காலமாக மாடுகளை மேய்த்த காட்டுக்குள் அவர் ஆவியாக அலைவதாக செக்யூரிட்டி கூறி முடித்தார்.
இந்த கதைகளை முருகனை அழைத்து வரும்போதே கூறி விட்டிருந்த படியால் அவன் திகிலடித்து போயிருந்திருக்கிறான். ”ஏண்டே உனக்கு முறுக்கு வாங்கி திங்க வேற ஆளே கிடைக்கலையா“ என்று வீடு வரும்வரை எல்லோரும் அவனை கிண்டலடித்து கொண்டே வந்தனர்.
மறுநாளிலிருந்து முருகன் வேலைக்கு வரவில்லை.
7 comments:
:-)))
ராஜா,
ஒரே மூச்சில் இரண்டையும் படித்தேன். நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் சுவராசியத்தை சேர்த்திருக்கலாமோ என தோன்றியது...
நல்ல முயற்சி.
பிரபாகர்.
முருகன் உயிரோடுதான இருக்காப்ல..,
பேய்க்கதை என்றாலே, சுவாரசியம்தான் போல..!
வித்தியாசமான பேய்கள்..!
அண்ணா என்ன ஒரே பேய்க்கதையா சொல்லி பயமுறுத்தறீங்க..
வலையுலக பி டி சாமி துபாய் ராஜா வாழ்க வாழ்க
கதை நன்று; பேய்க்கதைகள் தொடரட்டும்.
Post a Comment