Tuesday, September 08, 2009

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இனி 10ம் வகுப்பு தேர்வு கிடையாது


புதுடில்லி : சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இனி 10ம் வகுப்பு தேர்வு கிடையாது. இதனால், இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர். மாநில அரசுகளும் இதைப் பின்பற்ற வேண்டும் என, மாணவர்களும், பெற்றோரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது:சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு, இனி 10ம் வகுப்பு தேர்வு கிடையாது. 2010-11ம் கல்வியாண்டில் இருந்து இது அமலுக்கு வருகிறது. அவர்கள் விரும்பினால், 10ம் வகுப்பு தேர்வை பொதுத்தேர்வாக எழுதலாம்.இந்த ஆண்டு 10ம் வகுப்பு படிக்கும் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மட்டும், 2010 மார்ச்சில் பொதுத்தேர்வை எழுத வேண்டும். அப்படி எழுதும் தேர்வுக்கான முடிவுகள், கிரேடிங் முறையில் அறிவிக்கப்படும்.

வரும் 2011ம் ஆண்டு முதல் தொடர்ந்து கிரேடிங் முறை அமலில் இருக்கும். 

ஆனாலும், 10ம் வகுப்பு தேர்வை பொதுத் தேர்வாக எழுதுவது அவர்களின் விருப்பத்தைப் பொருத்தது.பத்தாம் வகுப்பு தேர்வை தேர்வு வாரியம் நடத்துவது 2011ம் ஆண்டில், ஒழிக்கப்பட்டு விடும். அதன்பின், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் மற்றொரு பள்ளிக்கு மாற்றப்படுவர் அல்லது பல்கலைக்கு முந்தைய நிறுவனங்களில் சேர்ந்து தேர்வு எழுதுவர். ஒரே பள்ளியில் படிக்க விரும்பும் மாணவர்களும், விரும்பினால் 10ம் வகுப்பு தேர்வை, பொதுத் தேர்வாக எழுதலாம். அதே சமயம், சி.பி.எஸ்.இ., திட்டப்படி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில் தேர்வு நிச்சயம் உண்டு.

9 அம்ச கிரேடிங்: கிரேடிங் முறை விரிவான மதிப்பீடு கொண்டதாக இருக்கும். அது மாணவர்களுக்கு மிகவும் நல்லது. இருப்பினும், கிரேடுடன் தங்களின் மதிப்பெண் சதவீதத்தையும் மாணவர்கள் கேட்டுப் பெறலாம்.இந்த கிரேடிங் முறை ஏ1 ( 91 முதல் 100 மதிப்பெண்கள் வரை, அசாதாரணமானது), ஏ2 (81 முதல் 90 மதிப்பெண்கள் வரை, மிகச் சிறந்தது), பி1 (71 முதல் 80 வரை, மிகநன்று), பி2 (61 முதல் 70 வரை, நன்று), சி1 (51 முதல் 60 வரை, மிதமானது), சி2 (41 முதல் 50 வரை, சராசரி), டி (33 முதல் 40 வரை, சராசரிக்கும் குறைவு), இ1 (21 முதல் 32 வரை, கவனம் தேவை) மற்றும் இ2 (00 முதல் 20 வரை, திருப்தியில்லை ) வரை ஒன்பது அம்ச அளவுகோல்களை கொண்டதாக இருக்கும்.

கிரேடிங் விதிமுறைகளை சி.பி.எஸ்.இ., தலைவர் வினீத் ஜோஷி தலைமையிலான உயர்மட்டக் குழு இறுதி செய்துள்ளது. இந்த முறையில் மாணவர்கள் சான்றிதழ் பெற வேண்டும் எனில், 33 சதவீதத்திற்கு அதிகமாக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.இந்த முறை சிறப்பானது, மாணவர்களின் திறனை நல்ல முறையில் நிர்ணயிக்கும். மாணவர்களின் மேம்பாட்டை உறுதி செய்ய, பள்ளிகள் மட்டத்தில் அவர்களை மதிப்பீடு செய்யும் முறை சி.சி.எஸ்., என , அழைக்கப்படும், தொடர் மற்றும் விரிவான மதிப்பீடு முறை தொடர்ந்து நீடிக்கும். இந்த மதிப்பீட்டு முறை மாணவர்களை பாட ரீதியாக மட்டுமின்றி, இதர பல நடவடிக்கைகளிலும் அவர்களின் திறனை மதிப்பீடு செய்வதாக இருக்கும்.இவ்வாறு அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்தது போல, மாநில கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற ஆசை, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

1 comment:

இரும்புத்திரை said...

இப்போ வந்து என்ன பயன்..

நான் படிக்கும் போது இருந்தா எப்படி இருக்கும்..