Monday, October 12, 2009

ஒரு வரலாற்றுப்பயணம் – பாகம் 3 – பாலைவனப் பயணம்.



18.09.2009 – வெள்ளி

வாகனம், ஓட்டுநர் எல்லாம் தயார். இரவு எட்டு மணிக்கு கிளம்பலாம் என நேரம்கூட குறித்தாயிற்று. ஆனால் எத்தனை பேர் என்பது மட்டும் இறுதியாகவில்லை. மூன்றுபேர் ஆர்வமாக ஆரம்பித்தோம். பின் இருவர் இணைந்தனர். மற்ற நண்பர்கள் பயணதூரத்தை நினைத்து பயந்தனர். யாரையும் வற்புறுத்தவில்லை. விருப்பமிருந்தால் வாருங்கள். சொல்லவில்லை எனக் கூறக்கூடாது என்பதற்காகத்தான் தெரிவித்தோம் என கூறிவிட்டோம். கெவின் சின் எனும் மலேசிய சீனர் இடமிருந்தால் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என அவரோடு அறுவர், ஓட்டுநர் இருவர் மொத்தம் எண்மர் என உறுதியானது.

பயணத்திற்கு தேவையானவற்றை இரண்டு சிறிய பைகளாக பிரித்து எடுத்து கொண்டு எடை அதிகமோ என யோசித்து கொண்டே இரவு எட்டுமணிக்கு கீழே வந்தால் பெரியபெரிய பொதிப்பைகளோடு நண்பர்கள் ஒவ்வொருவராக வந்தனர். டிஜிட்டல் காமெராக்கள்,லேப்டாப்கள், பயணத்தின் போது பயன்படுத்த இணைய இணைப்பு கருவி, சரியான பாதையில் செல்ல உதவும் செயற்கைகோள் இணைப்பு கொண்ட GPRS அலைபேசி என அனைத்தும் அல்ட்ரா மாடர்ன் ஏற்பாடுகளோடு தங்குமிடத்தில் இருந்து கிளம்பினோம்.

கெய்ரோவிலிருந்து அஸ்வான் செல்ல நைல் நதிக்கரையின் வழியாக ஒரு சாலையும், பாலைவனத்தின் வழியாக ‘டிசர்ட் ரோடு’ எனப்படும் விரைவுச்சாலை என இரண்டு பாதைகள் உள்ளன. போக்குவரத்து அதிகம் இல்லாத பாலைவன விரைவுச்சாலையையே நாங்கள் பயணத்திற்கு தேர்ந்தெடுத்தோம். போகும்வழியில் கேரிஃபோரில் நிறுத்தி இரவு உணவு மற்றும் சினாக்ஸ் வாங்கிகொண்டு கிளம்பும்போது இரவு மணி பத்து ஆயிற்று.

வண்டியில் சென்றுகொண்டே சாப்பிட்டுவிட்டு, ஒருவரையொருவர் கதை பேசி கலாட்டா செய்து கொண்டிருந்தபோதே ஒவ்வொருவராக உறங்க ஆரம்பித்தனர். ஓட்டுநர் இருவரும் முன்னாலே அமர்ந்திருந்ததாலும், பதினைந்துபேர் செல்லும் வாகனத்தில் ஆறுபேர் மட்டும் இருந்ததாலும் ஒவ்வொரு சீட்டிலும் ஒவ்வொருவராக நீட்டி படுத்துவிட்டோம். அமைதியான இரவு, அழகான பயணம், திருப்தியான உணவு, இனிமையான மெல்லிய இசை எல்லோருமே நன்றாக உறங்கிவிட்டோம்.

19-09-2009 - சனி

காலை கண்விழித்தபோது நண்பர்கள் அனைவருமே எழுந்திருந்தனர். சுற்றி பார்த்தபோது மணல் குன்றுகளும் , பாறைகளூம் மட்டுமே சூழ்ந்த பாதையில் எங்கள் வாகனம் மட்டுமே சென்று கொண்டிருந்தது.

பாலைவனப்பாதை சிலபடங்கள்..











அழகான மணல்குன்றுகள் நிறைந்த அந்த இடம் எல்லோர் மனதையும் கவர வண்டியை நிறுத்தி சில புகைப்படங்கள் எடுத்தோம்.









மீண்டும் பயணம் தொடர்ந்த பொழுது நடுபாலைவனத்தில் ஒரு குடில். அதில் ஒரு குடும்பம். நான்கு சிறிய குழந்தைகள். வண்டியை ஓரம் கட்டி உணவு ஏதாவது இருக்குமா என விசாரித்தோம். வண்டிக்கு தேவையான டீசல் மட்டுமே அங்கு இருப்பதாகவும் சிறிது தொலைவு சென்றால் உணவகம் இருக்கும் எனவும் குடும்பத்தலைவர் கூற அந்த குழந்தைகளுக்காக வண்டிக்கு மட்டுமாவது டீசல் போட்டுகொள்ள முடிவு செய்தோம்.






எந்த நாடு, என்ன விவரம் என விசாரித்தவர் கெவின் சின்னைப் பார்த்து பிலிபைன்சா எனது மனைவியும் பிலிப்பைன்ஸ் தான் என்றார். அந்தப்பெண்ணும் எங்களுடன் ஆர்வமாக ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார். நான் இதுவரை இவ்வளவு மோசமான நிலையில் எந்த பிலிப்பைன்ஸ் பெண்ணையும் பார்த்ததில்லை. அடுத்தடுத்து ஐந்து குழந்தைகள் பெற்று மெலிந்து சோகமாய் காணப்பட்ட அந்த பெண்ணை பார்த்த என்னுள் இருந்த கதாசிரியன் இந்த பெண்ணைப்பற்றிய விபரம் கிடைத்தால் வெற்றிகரமாக ஒரு இருபது பாகம் கொண்ட தொடர் எழுதிவிடலாமே என யோசிக்க ஆரம்பித்தான்.


அங்கிருந்து அரைமணி நேரம் பயணம் செய்தபொழுது உணவகம் கண்ணில் தென்பட வண்டியை ஓரம் கட்டினோம்.



பாலைவனப் பயணக்காட்சிகளும், பயணக்குறும்புகளும் – வீடியோ காட்சிகள்....





( பயணம் தொடரும் )


Sunday, October 11, 2009

ஒரு வரலாற்றுப்பயணம் – பாகம் 2 - பயண ஏற்பாடு




பல நண்பர்களும் கேட்டு கேட்டு அலுத்துவிட்டார்கள். இனிமையான பயணப்பகிர்வுகளை இறைவன் அருளால் இதோ தொடங்கிவிட்டேன்.

எகிப்தில் நாங்கள் இருக்கும் இடம் அலெக்சாண்டிரியா எனும் அழகான கடற்கரை நகரம். மாவீரன் அலெக்சாண்டரால் போர் வெற்றியின் சின்னமாக உருவாக்கப்பட்டது. மத்தியதரைக்கடல் கரையில் அமைந்துள்ளதால் தலைநகர் கெய்ரோவை விட எப்போதும் வெப்பநிலை ஐந்தாறு டிகிரி குறைவாகவே இருக்கும்.

தலைநகர் கெய்ரோவிலிருந்து 300 கிலோமீட்டர் தூரத்தில் அலெக்சாண்டிரியா நகரம் உள்ளது. மக்கள் உருவமைப்பு, கட்டிடங்கள், வாகன பரபரப்பு எல்லாம் நமது மும்பையைப் போன்றே இருக்கும். ஆனால் ‘அப்பர் எகிப்து’ என்றழைக்கப்படும் அஸ்வான், லக்சூர் போன்ற நைல் நதிக்கரை நகரங்கள் பசுமையாகவும், மக்களும் தோற்ற அமைப்பில் தென்னிந்தியர்களை போன்றே இருப்பார்கள். பல வரலாற்று புராதான இடங்கள் அனைத்துமே அப்பர் எகிப்தில்தான் உள்ளன.

அலெக்சாண்டிரியா நகரம் – எனது அறையிலிருந்து சில அழகான காட்சிகள்






ரமழானுக்கு நான்கு நாட்கள் விடுமுறை என்று உறுதியாகிய நிலையில் அஸ்வான் செல்ல எல்லா நண்பர்களும் திட்டமிட்டனர். பயணதூரம் 3000 கிலோமீட்டர் போக வர என்றால் மொத்தமாக 7000 கிலோ மீட்டருக்கு மேலாகிவிடும் என்பதால் யோசனையாகவே இருந்தது. சில நண்பர்கள் மட்டும் மற்றவர்களிடம் ஏதும் சொல்லாமல் பேக்கேஜ் டூர் புக் செய்துவிட்டார்கள்.

பேக்கேஜ் டூர் மொத்தம் நான்கு நாட்கள். தலைநகர் கெய்ரோவிலிருந்து விமானம் மூலம் அஸ்வான் சென்று பின் அங்கிருந்து நைல்குரூஸ் எனப்படும் உல்லாசக்கப்பல்கள் மூலம் நைல்நதி வழியாகவே எல்லா இடங்களையும் சென்று பார்ப்பது. கப்பல்களிலே எல்லோருக்கும் தனித்தனி அறை, மூன்று வேளையும் விருப்பப்பட்ட் சைவ/அசைவ சாப்பாடு என எல்லா வசதியும் இருக்கும். கட்டணத்தொகை மொத்தமாக அமெரிக்க பணம் 1000 டாலர் ஆகும். எல்லா இடங்களுக்கும் தேவையான நுழைவுச்சீட்டு கட்டணம் எல்லாமே உள்ளடக்கம்.

சொகுசு ரயில் வசதியும் இருக்கிறது. ஆனால் எல்லா இடங்களுக்கும் செல்ல அங்கங்கே வண்டி வாடகைக்கு எடுக்கவேண்டும். தங்கவும் இடம் பார்க்க வேண்டும். எப்படி செல்ல என ஒரே குழப்பமாக இருந்தது. உள்ளூர் நண்பர்களிடம் விசாரித்தாலும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் எங்கள் ஓட்டுநர் இங்கிருந்தே வண்டியில் சென்றால் எல்லா இடங்களையும் பார்ப்பது எளிதாக இருக்கும் என்று ஒரு யோசனை சொன்னார்.

எங்கள் அலுவலகத்தில் ஒப்பந்தமுறையில் நிறைய வாகனங்கள் உள்ளன. நான்கு நாள் விடுமுறை என்பதால் ஒரு வாகன உரிமையாளர் பயணத்திற்கு வாகனம் தர இசைந்தார். வாகனத்துடன் ஒரு ஓட்டுநர் என பணம் எல்லாம் பேசி முடிவாயிற்று. ஆனால் பயணதூரம் அதிகம் என்பதால் ஒரு ஓட்டுநர் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நண்பர்களிடம் மீண்டும், மீண்டும் என் கருத்தை வலியுறுத்தி எங்கள் வாகன ஓட்டுநரையும் உடன் அழைத்துச்செல்லலாம் என முடிவுசெய்தோம்.

(பயணம் தொடரும்)

Saturday, October 10, 2009

ஞானதிருஷ்டி


கடற்கரையில்
கட்டுமர மறைவில்
காதலியின் மடியில்
கவலை ஏதுமின்றி
கால் நீட்டிப் படுத்திருந்த
காதலனின் கண்ணுக்கு
காதலியின் அண்ணனை
பார்த்தவுடன்
கவர்மெண்ட் ஆஸ்பிட்டல்
தெரிந்தது.

Friday, October 09, 2009

வாழ்த்துக்களுக்கு நன்றி. நன்றி.. நன்றி...


நூறாவது பதிவிற்கு வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. மகிழ்ச்சியாகவும் அதே நேரம் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. உற்றார், உறவினர், ஊர், பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, மக்கள், நல்லது, கெட்டது அனைத்தையும் இழந்து வெளிநாடுகளில் வாழு(டு)ம் எங்களைப் போன்றோருக்கு உங்கள் அன்பும் ஆதரவுமே வேதனைகளை மறந்து நண்பர்கள் பலர் நம்மோடு இருக்கின்றனர் என்ற உவப்பையும் தொடர்ந்து எழுத ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.

பிரிவுத்துயர் குறித்த எனது கவிதைகள்
தூரமே காதலைப் பெருக்கும்...
பதிவுலற்கு வந்து ஆண்டுகள் ஐந்தானாலும், இந்த ஆண்டுதான் அருமையான ஆண்டாக தொன்றுகிறது. 25வது, 50வது, 100வது பதிவுகள் இட்டதும், புதிய, புதிய நண்பர்கள் அறிமுகமானது எல்லாமே இந்த ஆண்டில்தான். உங்கள் அனைவரது எதிர்பார்ப்பிற்கும் ஏற்றவாறு எழுதவேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி நிற்கிறது. மீண்டும் ஒருமுறை எனது வலைப்பூவிற்கு தொடர்ந்து வருகை தரும் அன்பு நண்பர்களுக்கும், வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. நன்றி. நன்றி.

என்றென்றும் அன்புடன்
அன்பன்
துபாய் ராஜா.

Tuesday, October 06, 2009

நூறாவது பதிவு – வாசிப்பும்,வலையுலகும்,வருங்காலமும்.....



இது எனது நூறாவது பதிவு. கடந்து வந்த பாதையை பார்க்கும் போது மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் இருக்கிறது.

சிறுவயதில் இருந்தே வாசிப்பு ஆர்வம் அதிகம். பத்து வயதுக்குள்ளே பட்டி விக்கிரமாதித்தன் கதைகள் ,திரு.இராஜாஜியின் வியாசர் விருந்து படித்தது வெள்ளியன்று வரும் சிறுவர் மலருக்காக உடன்பிறப்போடு சண்டை போட்டு கிழித்தது. சிறுவர் இதழ்களான அம்புலிமாமா,பாலமித்ரா,ராணி காமிக்ஸ், கோகுலம் என தேடித்தேடி படித்தது. பள்ளியில் அந்த கதைகளை நல்ஒழுக்க வகுப்புகளில் மேடையேறி பகிர்ந்து கொண்டது. என எல்லா நினைவுகளும் இன்னும் பசுமையாக மனதில் இருக்கின்றன. ம்ம்ம்...... அது ஒரு அழகிய கனாக்காலம்.

வயது ஏற ஏற ராணி முத்து, மாலைமதி, கிரைம் நாவல்கள், பாக்கெட் நாவல்கள் பழக்கம் ஆயின. அந்த கால ஆனந்த விகடன், குமுதம் வார இதழ்களில் தொடராக வந்த கதைகளை பலரும் “பைண்ட்” செய்து வைத்திருப்பார்கள். பலமுறை கேட்டாலும் பலத்த யோசனைக்குப்பின்தான் கிடைக்கும். கல்கி, சாண்டில்யன், ஜெயகாந்தன், ‘மோகமுள்’ ஜானகிராமன், சுஜாதா, ராஜேஷ்குமார், ‘ஞே’ ராஜேந்திரகுமார், சுபா எல்லாம் இப்போதும் மிகவும் ஆதர்ச எழுத்தாளர்கள். லஷ்மி, ராஜம் கிருஷ்ணன் போன்றோரின் குடும்ப நாவல்களும் பிடிக்கும். தொண்ணூறாம் வருட தீபாவளி மலராக ஆனந்த விகடனில் சுஜாதாவின் ஏன்,எதற்கு,எப்படி வெளியிட்டார்கள். பல அரிய அறிவியல் தகவல்களை எளிமையாக புரிய வைத்த அந்த புத்தகம் மூன்று பாகம் வந்தது.

குரல் கொஞ்சம் கணீரென்று இருப்பதால் பள்ளியின் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் வகுப்பாசிரியர்களால் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டேன். எனது தமிழாசிரியர்களும் என் மீது தனிப்பிரியம் கொண்டு இலக்கியமன்றங்களில் ஈடுபடுத்தினர். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பள்ளி ஆசிரியர் விடுப்பில் சென்றபோது ஒருமாதம் மட்டும் வந்த பயிற்சி தமிழ் ஆசிரியை கதை,கவிதைகள் எழுத தூண்டி பல கத்துக்குட்டி கவிதைகள் எழுதிக்காட்டியபோது பாராட்டியமை மிகவும் குறிப்பிடத்தக்கது. தணியாத தமிழார்வத்தால் தமிழ் இலக்கியம் படித்த எனது தமக்கையாரின் அகநானூறு, புறநானூறு முதல் நவீன இலக்கியம் வரையான பாடங்களை அவருக்கு முன் நான் படிப்பேன். எனது தமக்கையார் தற்போது தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

பள்ளியில் படிக்கும்போது விடுமுறைக்காக எந்த ஊருக்கு சென்றாலும் தேடும் முதல் இடம் நூலகமே. இந்த பழக்கம் இன்னும் தொடர்கிறது. நூலகம் இல்லாத ஊருக்கு சென்றால் மிகவும் நொந்து போய்விடுவேன். பணிவிஷயமாக பல மாநிலங்களுக்கு சென்றபோது தமிழ் படிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன். தொடர்பு கொள்ள, செய்திதாள் படிக்க என்ற அளவிலே பயன்படுத்திவந்த இணையத்தில் ஏதோ தேடுதலின் போது எதிர்பாராதவிதமாக வலையுலகம் அறிமுகமானது. பலவிதமான பகிர்வுகள் நிறைந்த பதிவுலகம் இனிதே ஈர்த்தது.

முதலில் பதிவுகளை மட்டும் படித்து வந்தவன் பின் அனானியாக ஆங்கிலத்தில் பின்னூட்டங்கள் இடவும் ஆரம்பித்தேன். அனானி ஆப்சனிலும் கீழே எனது பெயர் குறிப்பிட்டே பின்னூட்டங்கள் இட்டு வந்தேன். பல நண்பர்களும் அறிமுகமானார்கள். அவர்கள் மூலம் ஈ கலப்பை பற்றி அறிந்து தரவிறக்கம் செய்து தமிழிலே பின்னூட்டங்கள் இட்டு வந்தேன். நட்பு வளையம் பெருகியது. பின் தனியே இந்த வலைப்பூவையும் 2006ல் பதிவுலக நண்பர்கள் மூலம் உருவாக்கி பதிவுகள் இட ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் கவிதைகள் மட்டுமே எழுதிவந்தேன். என்னைப் பாதித்த செய்திகளையும் சொந்த கருத்துகளோடு பதிவாக இட்டுள்ளேன். எங்க ஊரு பாட்டுக்காரிகள் என்பதே நான் முதல் முதல் எழுதிய அனுபவ நிகழ்ச்சி. பின் எழுதிய கவிதைகள் அனைத்தும் எனக்கு மிகப்பிடித்தமானவை. உங்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

நான் எழுதிய சொந்த திகில் அனுபவங்களான மோகினியைக் கண்டேன், முறுக்கு முனி போன்றவற்றிற்கு கிடைத்த வரவேற்புகளால் ஏதோ மோகம் தொடர்கதை எழுதவும் துணிந்தேன். பாராட்டுக்களும், மிகச்சிறிய பாகங்கள் என விமர்சனங்களும் ஒருங்கே குமிந்தாலும் ஒவ்வொரு பாகமுடிவிலும் ட்விஸ்ட் வைத்து முடித்ததில் எனக்கே என் எழுத்து பிடித்திருந்தது. இன்னும் எவ்வளவோ பெரிய தொடர்கள் எழுதவும் ஊக்கம் தந்திருக்கிறது.

அடுத்து ஒரு வரலாற்றுப் பயணம் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டு கவிதைகள்,கதைகள் என தொடர உத்தேசித்துள்ளேன். தமிழ்த்தாயின் தயவும், ,காலதேவனின் கருணையும்,அன்பு நண்பர்கள் உங்கள் ஆதரவும் இருந்தால் எழுத்துலகில் இன்னும் எவ்வளவோ சாதிக்கலாம் ......

Monday, October 05, 2009

ஏதோ மோகம்... – இறுதி பாகம் (தொடர்கதை)



மறுநாள் பயிற்சியின் இறுதிநாள். அவள் வீட்டருகே அழைக்கச்செல்லும் போது வழக்கத்தை விட அதிக உற்சாகத்துடன் காத்திருந்தவள் தூக்கமில்லாமல் சிவந்திருந்த என் கண்களைப் பார்த்து முகம் வாடி “என்ன இன்னும் தலைவலி சரியாகவில்லையா” என்றாள். நான் என்ன சொல்ல என்று தெரியாமல் “ம்.ம்” என்றேன். ”சாப்பிட்டிங்களா,இல்லையா?. இல்லைன்னா வாங்க வீட்டுல தோசை மாவு இருக்கு. தோசை சுட்டு தர்றேன்” என்றவாறு வீட்டினுள் அழைத்தவளிடம் “பரவாயில்லை. நேரமாயிடுச்சு. கெளம்புவோம்“ என்று கூறி அழைத்து சென்றேன்.


எனது திடீர் மாற்றத்தைப் பார்த்து மிகவும் குழம்பியவளாய் இருந்தாள். வண்டியில் வரும்போதுகூட இருவரும் ஏதும் பேசவில்லை. பயிற்சியின் போது என்னை அடிக்கடி திரும்பி திரும்பி பார்த்து கொண்டேயிருந்தாள். அவள் மனம் கோணாமல் அவளிடம் இருந்து விலகுவது பற்றி எப்படி விளக்குவது என்றே என் மனம் யோசித்து கொண்டேயிருந்தது. சரி நேரம் கிடைக்கும்போது பேசலாம் எனப்பார்த்தால் தகுந்த நேரமும் வாய்க்கவே இல்லை. நேரம் கிடைத்தபோது அவள் முகம் பார்த்து பேச கஷ்டமாய் இருந்தது. இப்படியே அன்றைய பொழுது முழுதும் மிகவும் தவிப்பாகவே கழிந்தது.


தொடர்பயிற்சிகள் முடிந்து நிகழ்ச்சியின் இறுதியாக ஒருவர் பின் ஒருவராக எல்லோரையும் பேச அழைத்தபோதும் ஏதோ ஒப்பிற்கு பேசி வந்தமர்ந்தேன். அவளும் அப்படியே பேசியதாக உணர்ந்தேன். எல்லோரும் கிளம்பும்முன் உற்சாகமாக பேசி விடைபெற்றபோது கூட மற்றவர்களோடு இயல்பாய் பேசமுடியவில்லை.எல்லாம் முடிந்து ஒருவழியாக கிளம்பினோம். அவளை எங்காவது அழைத்து சென்று பேசலாம் என்றாலும் அவள் அதை எப்படி புரிந்து கொள்வோளோ என்ற தயக்கமும்,குழப்பமும் கூடி கும்மி அடித்தன.


வண்டியில் திரும்பும்போது “அப்போ நாளையில இருந்து மறுபடியும் உங்க ஆபிஸ் செட்டுங்க கூட போய் சேர்ந்திடுவீங்க. ஜாலிதான்” நானே மவுனத்தை உடைத்தேன். “அப்பாடி ஒரு வழியா இப்பவாது பழைய ஆளா மாறினீங்களே” என்றவள் குரலில் ஏதேதோ உணர்ச்சிகள். அவளை மேலும் பேச விடாதவாறு ”நல்லா படிங்க. எப்படியாவது கஷ்டப்பட்டு M.B.A  முடிச்சிடுங்க. உங்க அம்மா உங்க மேல வச்சுருக்கிற நம்பிக்கையை உண்மையாக்குங்க. சொந்தக்காரங்க முன்னாடி ஒரு நல்ல நிலைமைக்கு வந்திடுங்க” என்றேன். 


”என்ன ஏதோ இதுக்கப்புறம் சந்திக்கவே மாட்டோம்கிற மாதிரி பேசுறீங்க” என்று ஏமாற்றமான குரலில் கேட்டவளிடம், ”உண்மைதானே. நாளையில இருந்து அவங்கவங்க வேலையில பிசியாயிடுவோம்ல” என்றபின் ஏதும் பேசாமல் அவள் மவுனமானாள். அவள் வீடு வந்தபின் அமைதியாக இறங்கியவள் முகத்தைப் பார்த்தேன். மேல்கொண்டு ஏதும் பேசினால் அழுதுவிடுவாள் போலிருந்தது. சரி பார்ப்போம். அம்மாட்டயும் கேட்டதாக சொல்லிடுங்க” என்று விருட்டென கிளம்பிவிட்டேன். மனபாரம் குறைந்ததால் அன்று இரவு நிம்மதியாக உறங்கினேன்.


அதன்பின் அவளை சந்திப்பதை தவிர்க்க சைதாப்பேட்டையிலிருந்து சூளைமேட்டிற்கு அறை மாறினேன். சேகர் அக்காவின் திருமணத்திற்கு சென்றிருந்தபோது அவளையும்,அவளது அம்மாவையும் சந்தித்தேன். அவள் அம்மா இயல்பாகப் பேச அவள் ஏதும் பேசவில்லை. பின் காலசூழ்நிலையில் பணி மாறி, ஊர் மாறி பல ஆண்டுகளுக்குப் பின் இதோ இப்போது மீண்டும் சென்னை. பரபரப்பான வாழ்க்கை.




தொலைபேசியில் பேசி முடித்தவள் “என்ன எப்படி இருக்கீங்க. வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா. நிச்சயம் கல்யாணம் ஆகியிருக்கும் எத்தனை குழந்தைங்க” என்று கேள்விகளாக அடுக்கினாள். ”எல்லாரும் நல்லா இருக்காங்க.கல்யாணம் ஆகி ஒரு பெண்குழந்தை இருக்கு”. “நீங்க எப்படி இருக்கீங்க. அம்மா எப்படி இருக்காங்க ” என்றேன். “அம்மா நல்லாயிருக்காங்க. எனக்கு நல்லவேலை கிடைச்சவுடனே அவங்களை வேலைக்கு போக வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். அப்பப்ப உங்களை பத்தி சேகர் அண்ணாட்ட கேட்போம். அவரும் தொடர்பு விட்டுப்போயிடுச்சுன்னார்.” என்றவளை உற்றுப்பார்த்தேன். முகமலர்ச்சியுடன், இயல்பாக, தெளிவாக பேசிக்கொண்டிருந்தவளிடம் திருமணம் ஆன அறிகுறிகள் ஏதுமில்லாததை கண்டு “இன்னும் கல்யாணம் பண்ணலையா” என்று குற்றஉணர்ச்சியுடன் கேட்டேன்.


என்னை நிமிர்ந்து பார்த்தவள் “ஒரு நிமிசம்” என்றவள் தொலைபேசியில் யாரையோ “கண்ணன் கொஞ்சம் என்னோட ரூமுக்கு வாங்களேன். ஒரு முக்கியமானவரை அறிமுகப்படுத்தணும்” என்றழைத்தாள். ”எனக்கு என்னமோ கல்யாணத்துல விருப்பமில்லை.அம்மாவும் பலமுறை சொல்லிப்பார்த்து அலுத்துப்போயிட்டாங்க” என்றபோது “டக்.டக்” என்று அறைக்கதவை தட்டும் சத்தம் கேட்டது.“யெஸ்.கம் இன்” என்று அவள் அழைக்கவும் முப்பது வயது மதிக்கத்தகுந்த ஒரு இளைஞர் உள்ளே வந்தார். ”இவர்தான் கண்ணன். உங்க கேள்விக்கு பதில்” என்றவளை நான் புரியாமல் பார்க்க அவரிடம் “சார்தான் ராஜா“ என்று அறிமுகப்படுத்தினாள். அவரும் “சார்,இவங்க உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்காங்க” என்று கை குலுக்கியவாறு சொல்ல நான் மேலும் ஒன்றும் புரியாமல் விழித்தேன்.


ராதா சிரித்தவாறே “இவர் கண்ணன்.எங்க கம்பெனில குவாலிட்டி மேனேஜரா இருக்கார். நானும்,இவரும் மனசு ஒத்துப்போய் கல்யாணம் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கோம். ரெண்டு பேர் வீட்டுலயும் பரிபூரண சம்மதம்” எனவும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்து “வெரிகுட்.கங்கிராஜுலேசன். கண்ணன் ராதா பெயர் பொருத்தமே அருமையா இருக்கு. எப்போ மேரேஜ்” என்று கேட்டேன். ”கண்ணனும் எங்களை மாதிரி கஷ்டப்பட்ட குடும்பம்தான். அப்பா இல்லை. ரெண்டு தங்கச்சிங்க. எப்படியோ போராடி ஒரு நல்ல நிலைக்கு வந்திருக்காரு. இப்போதான் அடுத்தடுத்து தங்கச்சிங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி முடிச்சாரு. அதான் எங்க கல்யாணத்தை ஒரு நாலு மாசம் தள்ளி பண்ணலாம்ன்னு இருக்கோம். இன்னும் நாள் முடிவு பன்ணலை” என்றாள்.


“கல்யாணநாள் முடிவு பண்ணவுடனே தெரியப்படுத்துங்க. பத்திரிக்கை கூட அவசியமில்லை. வாயால சொன்னாலே போதும். முதல் ஆளா குடும்பத்தோடு வந்து நிற்பேன்” என்று கூறி இருவரிடமும் விடைபெற்று வெளிவந்த எனக்கு உலகமே உற்சாகமாக இருப்பதுபோல் தெரிந்தது.


( முற்றும் )

தொடர்ந்து எனதிந்த ஆக்கத்திற்கு ஊக்கம் தந்து வந்த உற்சாகப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.நன்றி.நன்றி.


Sunday, October 04, 2009

அடுத்து வேட்டியா ஐயா மருத்துவரே.....

எப்போதோ எதிர்பார்த்த செய்தி இன்று நடந்திருக்கிறது.......

செய்தியின் சுட்டி : http://www.dinamalar.com/new/fpnnewsdetail.asp?news_id=5181

திண்டிவனம் : அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பா.மக., நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க., நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சியின் வளர்ச்சிப் பணி, எதிர்கால திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பெரும்பாலான நிர்வாகிகள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேற முடிவு எடுக்கப்பட்டது. இதனை கூட்டம் முடிந்து வெளியே வந்த ராமதாஸ் நிருபர்களிடம் அறிவித்தார்.

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிர்வாகக்குழு கூட்டம் இன்று காலை முதலே நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முக்கிய நிர்வாகிகள் வந்திருந்தனர். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தெரிந்து கொள்ள ஏராளமான தொண்டர்களும் அங்கு திரண்டிருந்தனர். கூட்டம் நடந்த அறைக்குள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களை அனுமதிக்கவில்லை. கூட்டம் முடிந்த பின்னரே நிர்வாகக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை ராமதாஸ் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அப்போ அடுத்து வேட்டியா ஐயா மருத்துவரே.........

Saturday, October 03, 2009

ஏதோ மோகம்... – பாகம் 7



அடுத்த நாள் காலை 8 மணி அளவில் அவள் வீட்டிற்கு சென்றேன். வாசலிலே காத்திருந்தவள் “அம்மா 8 மணிக்கு வேலைக்கு போயிருவாங்க. அதுக்குள்ள நீங்க வரணுமேன்னு பார்த்துகிட்டேயிருந்தேன்” என்றாள். அவளது அம்மாவும் “வாங்க. வாங்க. ரெண்டு நாளா உங்க புராணம்தான் பாடிக்கிட்டுருக்கா. அவளுக்கு யாரையாவது ரொம்ப புடிச்சுப்போயிட்டுதுன்னா இப்படித்தான்” எனவும் ராதா முகத்தில் ஒரே வெட்கம். “சரி.எனக்கு நேரமாயிடுச்சு. நான் கெளம்பறேன். நீங்க சாப்பிட்டு அப்புறம் போங்க” என்றவாறு அவர் கிளம்பி சென்றார். வீடு ஆடம்பரமின்றி எளிமையாக இருந்தது.


“சேமியா உப்புமா சாப்பிடுவீங்கல்ல” என்றவாறே அவள் ஆளுக்கொரு தட்டில் சேமியா உப்புமா எடுத்து வந்தாள். பேச்சிலர் லைஃபுல எது கெடச்சாலும் அடிச்சு கெளப்ப வேண்டியதுதான்” என்றவாறே சாப்பிடத் தொடங்கினேன். ”ம்ம். லெமன்லாம் பிழிஞ்சு நல்லா டேஸ்ட்டா இருக்கே. யார் பண்ணது” என்று கேட்டவனிடம், “நான்தான் பண்ணினேன்னு சொன்னா நம்பவா போறிங்க” என்று குறும்பாக அவள் பதில் கூற “பரவாயில்லையே. சமைக்கல்லாம் தெரியுமா” என்றேன். அம்மா வேலைக்கு போறதால சாப்பாட்டுக்கு கஷ்டப்படக்கூடாதுன்னு சின்ன வயசுலே சமையல் கத்துகொடுத்திட்டாங்க” என்றாள்.


சாப்பிட்டுமுடித்து இருவரும் கிளம்பினோம். அன்றும் பயிற்சி பரபரப்பாய் இருந்தது. மற்றவர்கள் யாரோடும் நின்று பேசாத ராதா என்னோடு நெருங்கிப் பழகுவதை பலரும் பொறாமை கண்ணோடு பார்ப்பது நன்றாக தெரிந்தது. எனது பாஸும் வித்தியாசமாய் பார்ப்பது போல் இருந்தது.


அன்று மாலை திரும்பும்போது நான் ஏதும் பேசாமல் வந்த்தை கண்ட ராதா “என்ன டல்லா இருக்கீங்க” என்றதற்கு “தலைவலி.அதான்” என்றேன். அதன்பின் அவளும் ஒன்றும் கேட்கவில்லை. அவள் வீட்டருகே இறக்கி விட்ட போது “உள்ள வாங்களேன்.காபி, டீ தான் சாப்பிடமாட்டிங்க. கஷாயம் வைத்து தருகிறேன். குடித்து விட்டு போங்களேன்” என்றாள். “பரவாயில்லை. போய் நல்லா தூங்கினா சரியா போயிடும்” என்று கூறி விடைபெற்று சென்றேன்.


அன்று இரவு ஏதேதோ குழப்பமான யோசனைகள். அவளது அப்பாவித்தனமான முகமும், குறும்பு பேச்சும், சிறுபிள்ளை போன்ற சிரிப்பும் என்னை தூங்கவிடாமல் அலைக்கழித்தன. “ஒரு சின்னப்பெண்ணின் மனதில் தேவையில்லாத எண்ணங்களை ஏற்படுத்தும்படி நடந்துகொண்டோமோ” என குழம்பி கொண்டே இருந்தேன். எக்காரணத்தை கொண்டும் அவளது படிப்பும், வளர்ச்சியும் நம்மால் தடைப்படக்கூடாது என்பதால் ”சரி. எல்லாவற்றிற்கும் இன்றோடு முடிவு கட்டிவிடலாம்” என முடிவு செய்தேன்.


( தொடரும் )

Friday, October 02, 2009

மகான் காந்தி எமகான்....


காந்திஜியை பற்றி நினைத்தவுடன் முதலில் நினைவிற்கு வருவது “மகான் காந்தி எமகான்” பாடல்தான்.சிறுவயதில் ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டை ஒட்டிய வெள்ளியன்று இந்தபாடல்தான் ஒளியும் ஓலியும் நிகழ்ச்சியில் தவறாமல் இடம்பெறும்.ஏ.வி.எம்.மின் ‘நாம் இருவர்’ திரைப்படம் என நினைக்கிறேன். குமாரி கமலா அழகாக வளைந்து வளைந்து ஆடுவார்.

எனது தாத்தா அந்தகால காங்கிரஸ்காரர். எனவே எங்கள் அம்மா வீட்டின் வரவேற்பறையில் பெரிய சைஸ் காங்கிரஸ் தலைவர்கள் படங்கள் அழகாக பிரேம் செய்து மாட்டப்பட்டிருக்கும். அவற்றில் காந்திஜியின் முழு உருவப்படமும் முக்கியமான ஒன்று. காந்தி,நேரு போன்ற பெரிய தலைவரையெல்லாம் நேரில் சந்தித்த தொன்னூறு வயதை தாண்டிய என் தாத்தா இன்றும் கதராடைதான் அணிகிறார்.

“காந்தி” படம் ரிலீசானது எண்பத்தி மூன்றாம் ஆண்டு என நினைக்கிறேன். மூன்றாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் இருந்து வகுப்புவாரியாக நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழேயுள்ள பூர்ணகலா திரையரங்கிற்கு “காந்தி” படம் பார்க்க அழைத்து சென்றனர். தென்னாப்பிரிக்காவில் இனவெறியர்களால் புகைவண்டியில் இருந்து தள்ளப்பட்டதும், உப்புசத்தியாகிரகத்தின்போது தொண்டர்கள் அனைவரும் போலிசாரின் குண்டாந்தடி அடிகளுக்கு பயப்படாமல் சாரைசாரையாக சென்று எதிர்ப்பு காட்டாமல் அடிபட்டு மண்டை உடைந்து கீழே வீழ்வதும் இன்னும் நினைவில் நிற்கிறது.

விபரம் அறிந்தபின் வாசிப்பு கூட கூட காந்தி குறித்து எதிர்மறையான கருத்துக்களும் நிறைய படிக்க நேர்ந்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்தது, பகத்சிங்,ராஜகுரு,சுகதேவ் மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை எதிர்க்காதது போன்றவை குறிப்பிடத்தகுந்தவை.

அவரது கருத்துக்களில் பிடிவாதம் கொண்டவர் என்றாலும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். தொலைதொடர்பு கருவிகள் இல்லாத அந்த காலத்திலேயே மக்கள் சக்தியை திரட்டி எழுச்சி கொள்ளச்செய்தவர்.எல்லா நாடுகளிலும் விடுதலைப்போராட்டங்களை முன்னெடுத்தவர்களே அதிபர்களாக இருந்த காலத்தில் சுதந்திர இந்தியாவின் எந்த ஒரு பதவிக்கும் ஆசைப்படாதவர். அவருக்குப்பின் குடும்ப உறுப்பினர் எவரையும் முன்னிலைப்படுத்தாதவர். என அவரைப்பற்றி பாராட்டி கூற இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.

என்றென்றும் நினைவில் நிற்கும் மகான் காந்தி எமகான்......

ஏதோ மோகம் - பாகம் 6


ஸ்டேசன் சைக்கிள் ஸ்டாண்ட் அருகே இறங்கியவள் உள்ளே ஆண்களாக இருந்ததால் தயங்கி வெளியிலே நின்றாள். நான் வண்டியை விட்டு இறங்கி "எந்த சைக்கிள் சொல்லுங்க நான் எடுத்துட்டு வர்றேன்" என்று கூறி அவள் அடையாளம் காட்ட பூட்டியிருந்ததாலும், லேடிஸ் சைக்கிள் கனம் மிகவும் குறைவு என்பதாலும் அப்படியே அலேக்காக தூக்கி வந்தேன்.


அசாத்தியமாக அவளது சைக்கிளை தூக்கி வரும் என்னை வியப்போடு பார்த்து கொண்டிருந்தவள் “அப்ப காலைல சரியா எத்தனை மணிக்கு வருவீங்க சொல்லுங்க?” என்று கேட்டாள். ”நமக்கு 9 மணிக்குதானே கிளாஸ் ஆரம்பிக்குது, காலைல 8.30 மணி வாக்குல நாம இங்கிருந்து கெளம்புனா சரியா இருக்கும். நாளைக்கு வெள்ளிக்கிழமை நான் வழக்கமா காரணீஸ்வரர் கோயிலுக்கு போவேன்.” என்றவனை இடைமறித்து அப்ப நானும் சரியா 8.30 மணிக்கு காரணீஸ்வரர் கோயிலுக்கே வந்திடுறேன்” என்று கூறி விடைபெற்று சென்றாள்.



”சரி பார்ட்டி, உஷார் பார்ட்டிதான். வீட்டுக்குப் போனா அக்கம்பக்கத்துல இருக்கிறவங்க ஏதாவது நினைப்பாங்கன்னுதான் கோயிலுக்கே வந்த்திடுறேன்ன்னு சொல்லிட்டா” என மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.


மறுநாள் காலை குளித்து சாப்பிட்டு கிளம்பி கோயிலுக்கு சென்றேன். தரிசனம் முடித்து வெளியே வரும்போது அவள் பைக் அருகே நின்றுகொண்டிருந்தாள். “லேட்டாயிடுச்சின்னா விட்டுட்டு போயிடுவீங்கன்னு சீக்கிரமே கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டுட்டு உங்க பைக்கு கிட்ட வந்து நின்னுகிட்டேன்.” என்று சிரித்தவாறு கூறினாள். அங்கிருந்து கிளம்பி பயிற்சி அரங்கம் வந்து சேர மணி 8.50 ஆகிவிட்டது. அவள் என்னுடன் பைக்கில் வந்து இறங்குவதை மற்ற நிறுவனங்களை சேர்ந்த சில நண்பர்கள் வியப்போடு பார்த்த மாதிரி இருந்தது.


பயிற்சிகள் சரியான நேரத்திற்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தன.தேநீர் இடைவேளை மற்றும் உணவு இடைவேளைகளில் என்னுடனே இருந்தாள். சேகரும் உடன் இருக்குமாறு பார்த்து கொண்டாள். அவள் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூட “என்ன ராதா, அவங்க கம்பெனியிலே போய் சேர்ந்திடுவே போல இருக்கு” என்று அடிக்கடி அவளை கிண்டலடித்து கொண்டிருந்தனர்.


அன்று மாலை திரும்பும்போது என்னைப் பற்றியும்,குடுமபத்தினர்,நண்பர்கள் பற்றி ஏதேதோ கேட்டு கொண்டே வந்தாள்.”அம்மாட்ட நேற்று உங்களை பற்றி சொன்னேன்.நாளை காலை எங்க வீட்டுக்கு சாப்பிட வரச்சொன்னாங்க” என்றாள்.நான் என்ன பதில் சொல்ல என யோசித்து கொண்டிருக்கும்போதே “ஏன் இவ்வளவு யோசனை,சரியா காலைல எட்டு மணிக்கு வீட்டுக்கு வர்றீங்க.சாப்பிட்டு கெளம்ப சரியா இருக்கும்” என்று கண்டிப்பான குரலில் கூறினாள்.”அப்புறம் இன்னொண்ணு நான் உங்களை விட நாலைந்து வயது சின்னப்பொண்ணு தான்,அதனால இந்த வாங்க,போங்க எல்லாம் விட்டுட்டு சும்மா பேர் சொல்லியே வா,போன்னு கூப்பிடுங்க” என்றாள். “சரிங்க” என்றவன் அவள் “ம்ம்ம்” என முறைக்கவும் “சரி.சரி” என்றேன்.


இன்னைக்கு நேரா எங்க வீட்டுக்கிட்டே போங்க” என்று வழி கூறியவாறு வந்தாள். அவள் வீடு மாந்தோப்பு பள்ளியினருகே இருந்தது. எனது அறையிலிருந்து மிகப்பக்கம்தான். ”அப்ப நாளைக்கு காலையில சரியா 8 மணிக்கு வர்றீங்க” என்றவாறே விடைபெற்று சென்றாள்.


( தொடரும் )


Thursday, October 01, 2009

ஏதோ மோகம் - பாகம் 5



என் மனதில் தோன்றிய குழப்பமான எண்ணங்கள் முகத்திலும் பிரதிபலித்ததை கண்ட ராதா, “ஒண்ணுமில்லை நீங்களும் சைதாப்பேட்டை வெஸ்ட்லயிருந்துதான் வரதா சேகர் அண்ணன் சொல்லுச்சு. எங்க வீடும் உங்க வீட்டுக்கு பக்கத்துலதான்” என்றாள்.”புரியலீங்களே” என்றேன்.


”இல்லை எங்க ஆபிஸ் பாரிஸ்ங்கிறதால வழக்கமா சைக்கிளை சைதாப்பேட்டை ஸ்டேசன்ல போட்டுட்டு எலெக்ட்ரிக் டிரெயின்ல போயிடுவேன். ஆபிசும் பீச் ஸ்டேசன்ல இருந்து நடக்கிற தூரம்தான். ஆனா இங்க வரதுக்கு கிண்டி ஸ்டேசன்ல இறங்கி ரொம்ப தூரம் நடக்க வேண்டியிருக்கு. எதிர்வெயில் வேற. ரொம்ப கஷ்டமாயிருக்கு. அதான் காலையில லேட்டாயிடுச்சு. அதான் நீங்க தப்பா நினைக்கலைன்னா கோர்ஸ் முடியற வரை உங்ககூட பைக்ல வந்துடுவேன். நீங்க சரின்னு சொன்னப்புறம்தான் சேகர் அண்ணாட்டே சொல்லணும்.” என்றவளிடம் “உங்களுக்கு பிரச்சினையில்லைன்னா எனக்கொண்ணும் கஷ்டமில்லை” என்றேன்.


“ரொம்ப தேங்ஸ். நான் போய் சேகர் அண்ணாட்ட சொல்லி உங்ககிட்ட பேசச்சொல்றேன். நாம இதுகுறித்து பேசுன மாதிரி காட்டிக்கவேண்டாம்” என்று கூறிச் சென்றாள். ஐந்து நிமிடம் கழித்து சேகர் என்னிடம் வந்து அவள் கூறிய விவரங்களை கூறி “உதவமுடியுமா” என்றான். அவளிடம் கூறியவாறே அவனிடமும் சொன்னேன். உடனே அவளையும் அழைத்து வந்து “உனக்கு ஒண்ணும் பிரச்சினையில்லைன்னா சார் பைக்ல கூட்டிட்டு போறேன்னுட்டார்.” என்றான். “அவளும் ரொம்ப தேங்ஸ்ங்க” என்றாள். அதற்குள் தேநீர் இடைவேளையும் முடிய அனைவரும் அரங்கினுள் சென்றோம்.


அதன்பின் அவ்வப்போது அவளைப் பார்த்தபோது அவள் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது. மாலை ஐந்து மணிக்கு பயிற்சி முடிந்து அனைவரும் கிளம்பினர். அவளிடம் “நீங்க வாசல்ல வெயிட் பண்ணுங்க நான் பைக் ஸ்டாண்ட் போய் பைக்கை எடுத்திட்டு வந்திடுறேன்” என்று கூறி சென்றேன். அவளும் மற்றவர்களிடம் விடைபெற்று வாசலுக்கு வந்தாள்.பைக்கை நன்றாக துடைத்து எடுத்து வருவதற்குள் அனைவரும் சென்றுவிட்டனர்.அவள் மட்டும் வாசலில் நின்று கொண்டிருந்தாள்.

அவளருகே வந்து பைக்கை நிறுத்தியவுடன் ஏறி அமர்ந்தாள். முதல்முதல் பழக்கமில்லாத இளம்பெண்ணுடன் செலவது ஒரு மாதிரியாக இருந்தது. அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் போல. ஏதும் பேசாமல் வந்தவள் “சேகர் அண்ணா ஏதும் தப்பா நினைச்சிறக்கூடாதுன்னுதான் நாம பேசின மாதிரி காட்டிக்கவேண்டாம்னு சொன்னேன்” என்றாள். “அதுவும் சரிதான்” என்றவாறு சாலையை கவனித்தவாறு வண்டியை ஓட்டத்தொடங்கினேன். சின்னமலை, சைதை மேம்பாலம் தாண்டி ஜோன்ஸ் சாலை வழியாக சென்றேன்.

“ரயில்வே ஸ்டேசன் சைக்கிள் ஸ்டாண்ட்ல என்னோட சைக்கிள் கிடக்குது. போகும்போது எடுத்துட்டு போகணும். என்னைய ஸ்டேசன் பக்கத்துல விட்டுடுங்க” என்றாள்.

( தொடரும் )


Tuesday, September 29, 2009

ஏதோ மோகம் - பாகம் 4

“சின்ன வயசுலே அவங்க அப்பா தவறிட்டாங்க சார். இவளும்,இவ அக்காவுமா ரெண்டு பொண்ணு. அவங்கம்மா தான் வேலைபார்த்து ரெண்டு பேரையும் படிக்க வச்சாங்க. அவங்க அக்கா பத்து ஃபெயிலாகிடுச்சு. உடனே சொந்தத்திலே கல்யாணம் பண்ணி கொடுத்திட்டாங்க. இவ நல்லா படிப்பா. பிளஸ் டூலயும் நல்லா மார்க் எடுத்தா. குடும்ப சூழ்நிலை காரணமா மேல் கொண்டு படிக்க முடியலை. கம்யூட்டர் கோர்ஸ் முடிச்சுட்டு வேலைக்கு வந்திட்டா. அப்படியே கரெஸ்ல படிக்கிறா. எப்படியாவது ஒரு நல்ல நிலைக்கு வரணும்கிறதுக்காக கடுமையா போராடிட்ட்டிருக்கா சார்...” என்று ஒரே மூச்சில் சேகர் சொல்லி முடித்தான்.


தூரத்தில் அலுவலக நண்பர்களோடு கலகலப்பாக பேசிக்கொண்டிருந்த ராதாவை பார்த்தேன். இப்போது அவள் முகத்தில் எனக்கு ஏதோ ஒரு சோகம் தெரிந்தது.


மதிய உணவு வேளை முடிந்து பயிற்சிகள் பரபரப்பாக தொடர்ந்தன. ராதா அவ்வப்போது என்னைப் உற்றுப்பார்ப்பதும், நான் பார்த்தால் லேசாக முறுவலித்து விட்டு பயிற்சியை கவனிப்பதுவுமாக இருந்தாள். நான் அவள் பார்வையில் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தேன்.


மீண்டும் தேனீர் இடைவேளை.எல்லோரும் வெளியே சென்றனர். நானும் ஒரு மாற்றத்திற்காக வெளியே சென்றேன். ஆங்காங்கே தனித்தனி குழுவாக நின்று எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர்.

நான்கு பிஸ்கட்களை கையில் எடுத்துக்கொண்டு நான் தனியாக தள்ளி சென்று வெளியே சாலையை வேடிக்கை பார்த்தவாறு நின்றேன். அப்போது வேகமாக என் அருகில் வந்து நின்ற ராதா “என்ன டிரெய்னிங் எப்படி இருக்கு ? ” என்று கேட்டாள். ”நல்லாத்தான் போகுது” என்றேன்.

“நீங்கள்லாம் ஃபேக்டரி ஆளுங்க. அதனால சப்ஜெக்டோட கோர்ஸ் நடத்துறது நல்லா புரியும். நான் அக்கவுண்ட்ஸ் சைடுன்னால ஒண்ணும் புரியலை. எங்க மேனேஜ்மெண்ட்ல டாக்குமெண்டேசன் பண்ண ஆள் வேணும்கிறதுக்காக என்னையும் சேர்த்து அனுப்பிச்சிட்டாங்க.” என்றவளிடம் “ஐ.எஸ்.ஓ ன்னாலே டாக்குமெண்டேசன்தானே முக்கியம். அதான் உங்களை மாதிரி திறமையான ஆளுங்களையும் கூட அனுப்பிச்சிருக்காங்க” என்றேன்.

சிரித்துவிட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் “உங்ககிட்ட ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டிங்களே ? ” என்று கேட்டாள்..

( தொடரும் )


Monday, September 28, 2009

ஹாப்பி பூஜா ஹாலிடேஸ்


நண்பர்கள் அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள்.




பள்ளியில் படிக்கும் போது சரியாக காலாண்டு விடுமுறையில் தான் இந்த பூஜைகள் எல்லாம் வரும். சிறுபிள்ளையாக இருந்த போது வசித்த ஊரில் நிறைய பேர் வீட்டில் கொலு வைத்திருப்பார்கள். தினமும் புதிது புதிதாக படிகளையும், பொம்மைகளையும் மாற்றி அமைப்பார்கள். நாங்களும் தெரிந்த வீடுகளில் மலைகள், காடுகள், தெப்பகுளம் அமைக்க உதவுவோம். எங்களிடமிருக்கும் பொம்மைகளையும் கொண்டு வைப்போம். தினமும் மாலைநேரங்களில் எல்லோர் வீட்டு கொலுக்களையும் பார்த்தவாறு அப்படியே ஒரு ரவுண்டு வந்தால் நல்ல பொழுதுபோக்காக இருக்கும். விதவிதமான பலகாரங்களும் கிடைக்கும்.


பின் காலசூழ்நிலையில் வீடு மாறி, ஊர் மாறி...... ம்ம்ம் எல்லாம் விட்டுப் போச்சு. நாங்களும் சொந்த ஊரில் போய் செட்டில் ஆகிவிட்டோம். எங்கள் ஊரில் கொலு வைக்கும் பழக்கமெல்லாம் கிடையாது. ஆனால் ஊர் அம்மன் கோவிலில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், விசேச பூஜைகளும் நடக்கும்.ஒரு நாள் எங்கள் வீட்டு கட்டளையும் உண்டு. சென்ற வருடம் சரஸ்வதி பூஜை காலத்தில் ஊரில் இருந்தேன். தினமும் மாலையில் அம்மன் கோவிலில் பலவயது பெண்களும் பாட்டுகள் பாடியவாறு கும்மி,கோலாட்டம் என அழகாக, வித்தியாசமான அனுபவமாய் இருந்தது.




ஹாப்பி பூஜா ஹாலிடேஸ் நண்பர்களே....

Sunday, September 27, 2009

இன்று உலக இதய தினம்



ஆண்டுதோறும் செப்டம்பர் கடைசி ஞாயிறு உலக இதய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதய நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உலக இதய கூட்டமைப்பின் சார்பில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதயத்துடன் இணைந்து பணியாற்றுவோம் என்பது இந்த ஆண்டு இதய தினத்தின் நோக்கமாக முன்வைக்கப்பட்டுள்ளது.


அதிக உயிரிழப்புகள்: ஆண்டுதோறும் 1 கோடியே 75 லட்சம் பேர் இதயம் தொடர்பான நோய்களால் உயிரிழக்கின்றனர். உலகிலேயே அதிக உயிரிழப்புக்கு காரணமான நோயாக இதய நோய்களே கருதப்படுகின்றன. இந்தியாவில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் இதய நோய்களால் மரணமடைகின்றனர்.


பொருளாதார இழப்பு: இந்த ஆண்டு உலக பொருளாதார மன்றத்துடன் இணைந்து இதய ஆரோக்கியத்துக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த உலக இதய கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. இதய நோய் காரணமாக நடுத்தர வயதில் மரணமடைபவர்களால் அந்த குடும்பங்களுக்கு மட்டுமன்றி, அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கும் இழப்பு. இந்தியாவில் மட்டும் இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் புகையிலை தொடர்பான பழக்கங்களுக்கு தடைவிதிப்பது, உடற்பயிற்சி செய்ய ஊக்கப்படுத்துவது போன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என உலக பொருளாதார மன்றம், பெரிய நிறுவனங்களுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது.


நோய்களை தவிர்க்க...: முறையான உடற்பயிற்சி, சரியான உணவுப்பழக்கம் உரிய முறையில் மருத்துவம் எடுத்துக்கொள்வது இதய நோயிலிருந்து பாதுகாக்கும். கொழுப்பு இல்லாத மீன், பருப்பு வகைகள், பழங்கள், ஆலிவ் எண்ணெய் ஆகியன, ஓய்வின்றி உழைக்கும் இதயத்துக்கு பாதுகாப்பளிக்கின்றன.

கட்டுப்பாடான எளிய வழிகளை கடைப்பிடித்து காப்போம் இதயத்தை.....


அக்.,1 - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்!


அக்.,1 - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்!சென்னை அண்ணாசாலையில் உள்ள சாந்தி தியேட்டரின் முதன்மை நிர்வாகியும், சிவாஜிக்கு நெருங்கிய உறவினருமான வேணுகோபால், சிவாஜி பற்றிய பல சுவாரசியமான விஷ்யங்களை பத்திரிக்கையில் கூறியதை நண்பர்கள் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


சிவாஜியின் ஒரே சகோதரியான பத்மாவதியை நான் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். திருமணத்திற்கு முன்பே, எனக்கு சிவாஜியை நன்றாக தெரியும். உறவு முறை தான்.என்னை, "மாப்ளே' என்று சிவாஜி அழைப்பதால், அவரது சகோதரர்கள், உறவினர்கள், அவரது நெருங்கிய நண்பர்கள் அனைவரும் என்னை, "மாப்பிளே' என்றே அழைப்பர்.எனக்கு திருமணமாகும் போது, நான், இந்திய ராணுவத்தில், இ.எம்.இ., (எலக்ட்ரிகல் அண்டு மெக்கானிகல் இன்ஜினியரிங்) பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். நான், ராணுவத்தில் பணிபுரிவது, சிவாஜிக்கு ரொம்ப பெருமையான விஷயம்; நண்பர்கள், உறவினர்களிடம், நான் ராணுவத்தில் பணிபுரிவதைப் பற்றி பெருமையாக சொல்வார்.

சிவாஜிக்கு என் மேல், அளவு கடந்த பாசமும், முழு நம்பிக்கையும் எப்போதும் உண்டு. அவரது இரு மகன்கள், அவரது மூத்த சகோதரர் தங்கவேலுவின் மகன், தம்பி சண்முகத்தின் இரு மகன்கள், என் மகன்கள் இருவர், ஒரே மகள், ஆக, எட்டு குழந்தைகளும் என்னிடமே வளர்ந்தன.நான் மிலிடரிக்காரன் என்பதால், அந்த ஒழுக்கத்தோடு குழந்தைகள் வளர வேண்டும் என்பதற்காக, சகோதரர்கள் மூவரும், தங்கள் குழந்தைகளை என்னிடமே வளர்க்க விட்டனர். பிரபு, ராம்குமார் உட்பட ஐவரும், என்னை அன்போடு, "மாமா' என்று அழைப்பர்; அதே பழக்கத்தில், என் மகன்கள், என்னை, "அப்பா' என்று அழைக்காமல், "மாமா' என்றே அழைப்பர். வீட்டில் உள்ள ஏழு பையன்களும், பெங்களூரில், பிஷப் கார்டன் பாய்ஸ் உயர்நிலைப் பள்ளியிலும், என் மகள், பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியிலும் படித்தனர்.

பெங்களூரு கன்டோன்மென்ட் பகுதியில், பிரேசர் டவுன் என்ற இடத்தில், தனி வீட்டில் நாங்கள் இருந்தோம். ஏதாவது காரணத்திற்காக ஒரு நாள் படப்பிடிப்பு ரத்தாகி விட்டால், உடனே பிளைட் பிடித்து, சென்னையிலிருந்து, பெங்களூரு வந்து விடுவார் சிவாஜி. பசங்களுடன் சந்தோஷமாக பொழுதை கழித்து, இரவு, கடைசி விமானத்தில் சென்று விடுவார்.

சில சமயம், சிவாஜிக்கு, ஐந்து, ஆறு நாட்கள் சேர்ந்தாற்போல, ஊட்டி, கொடைக்கானலில் அவுட்-டோர் ஷ?75;்டிங் இருக்கும். அப்போதெல்லாம், எல்லாரும், காரில் அங்கு செல்வோம். அந்த விடுமுறைகளை, மிகவும் மகிழ்ச்சிகரமாக ஆக்கி விடுவார் சிவாஜி.ஆங்கில வழி பள்ளியில் படித்ததால், பிரபு, ராம்குமார் உட்பட அனைவருக்கும், ஆங்கிலத்தில் நல்ல புலமை உண்டு. 1967ல், ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, நான் சென்னைக்கு வந்து விட்டேன். பிரபு, லயோலாவிலும், ராம்குமார் விவேகானந்தா கல்லூரியிலும் படித்தனர். தன் விருப்பத்தின் பேரில், என் மகள் கண்ணம்மாவை, ராம்குமாருக்கு திருமணம் செய்து வைத்தார் சிவாஜி. அந்த திருமணத்திற்கு, தமிழ்த் திரைப்பட உலகமே திரண்டு வந்து தம்பதிகளை வாழ்த்தியது.

சென்னையில் அப்போதிருந்த ஒரே, "ஏசி' தியேட்டர் என்ற வகையில், ராஜ்கபூர், வைஜெயந்தி மாலா, ராஜேந்திர குமார் நடித்து, இந்தி நடிகர் ராஜ்கபூர் தயாரித்து, இயக்கிய, "சங்கம்' என்ற சூப்பர்ஹிட் இந்தி படத்தை, சாந்தியில் ரிலீஸ் செய்தார். இரண்டு இடைவேளைகளுடன், நான்கு மணி நேரம் ஓடிய படம். எனவே, அந்த நேரத்தில் வெளியான, சிவாஜியின், "புதிய பறவை' படத்தை, பாரகன் தியேட்டரில் ரிலீஸ் செய்தனர். இதற்காகவே, பாரகன் தியேட்டர், சிவாஜி செலவில் புதுப்பிக்கப்பட்டது.தன் மனைவி கமலா பேரிலும், தன் மகள் சாந்தியின் பேரிலும், தஞ்சாவூரில் இரண்டு தியேட்டர்களை கட்டினார் சிவாஜி. ஒரே கட்டடத்தில் கீழே சாந்தி - அதில் ஆயிரம் இருக்கைகள். முதல் தளத்தில் கமலா தியேட்டர் - ஐநூறு இருக்கைகள்.அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., இரு தியேட்டர்களையும் திறந்து வைத்து, சிவாஜி பற்றி பெருமையாக பேசினார். சாந்தி தியேட்டரில், முதல் படமாக, சிவாஜி - அம்பிகா நடித்த, "வாழ்க்கை' படமும், கமலாவில், பிரபு நடித்த, "சூரக்கோட்டை சிங்கக்குட்டி' படமும் திரையிடப்பட்டன.


சிவாஜியின் 175வது படம், ஏ.வி.எம்., தயாரித்த உயர்ந்த மனிதன். அதன் வெற்றி விழாவில் அண்ணாதுரை பேசும் போது, "மார்லன் பிராண்டோ சிறந்த நடிகர் என்று கூறுகின்றனர்... அவரைக் காட்டிலும், சிறப்பாக நடிக்கும் ஆற்றலைப் பெற்ற சிவாஜி மட்டும், இங்கு பிறக்காமல், அமெரிக்காவில் பிறந்திருந்தால், இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உலகின் சிறந்த நடிகராக இருந்திருப்பார். தமிழகத்தில் அவர் பிறந்ததற்கு, நாம் பெருமைப்பட வேண்டும்!' என்று பேசினார்.சிவாஜியின் 200வது படம் திரிசூலம். இப்படம், மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சாந்தி தியேட்டரில் 175 நாட்கள் ஓடின. 67 நாட்கள் வரை, அட்வான்ஸ் புக்கிங்கிலேயே டிக்கெட்டுகள் விற்பனை ஆயின. மொத்தம் ஒடிய 525 காட்சிகளில், 399 காட்சிகள் ஹவுஸ் புல்லாக ஓடியது, மிகப்பெரிய சாதனை.

ரஜினி, கவுண்டமணி, விஜயசாந்தி பங்கேற்ற காட்சி, "மன்னன்' படத்திற்காக, சாந்தி தியேட்டரில் ஒரு நாள் படமாக்கப்பட்டது. சாந்தி தியேட்டர் நிர்வாகியாக, நானே அந்தக் காட்சியில் நடித்தேன். சிறந்த நகைச்சுவை காட்சி என்பதால், பல, "டிவி' சேனல்களில் இந்த காட்சி, நிறைய தடவை ஒளிபரப்பப்பட்டிருக்கிறது.சென்னை தி.நகரில், செவாலியே சிவாஜி கணேசன் தெருவில் உள்ள அவரது அன்னை இல்லம் வீட்டில், மாடியில், ஹோம் தியேட்டர் வைத்திருந்தார். 16 எம்.எம்.புரொஜக்டரும் அங்கு உண்டு. 12 இருக்கைகள் கொண்டது அந்த ஹோம் தியேட்டர். அவர் பார்க்க விரும்பும் ஆங்கில படங்களின் 16 எம்.எம்., பிரதிகளை, வாடகைக்கு பெற்று, அவர் பார்க்க ஏற்பாடு செய்வது என் பொறுப்பு; சில சமயம், அவருடன் நானும் படங்கள் பார்ப்பதுண்டு.பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கும், சிவாஜிக்கும் இடையே, நெருங்கிய பாசம் எப்போதும் உண்டு. ஒவ்வொரு ஆண்டும், ரக்ஷா பந்தன் அன்று, சிவாஜிக்கு ராக்கி அனுப்புவார் லதா. ஒவ்வொரு பொங்கல் தினத்தன்றும், சகோதரனின் சீராக, லதாவுக்கு, அவருக்குப் பிடித்த பட்டுப்புடவையை பரிசாக அனுப்புவார் சிவாஜி.

கூட்டுக் குடும்பம் எங்குமே அரிதாகிவிட்ட காலத்தில், சிவாஜியும், அவரது சகோதரர்களும், கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து காட்டி சரித்திரம் படைத்தனர். இன்றும், சிவாஜி மறைவுக்குப் பின்னரும், அதே முறை தொடர்கிறது.தன்னை பராசக்தியில் அறிமுகப்படுத்தி, திரைப்பட உலகில் தனக்கு முகவரி கொடுத்த, பி.ஏ.பெருமாளை, என்றுமே மறந்ததில்லை சிவாஜி. பொங்கல் அன்று, விடியற்காலை, வேலூரில் வசித்து வந்த பெருமாளை, நேரில் சந்தித்து, பட்டு வேட்டி, புடவை கொடுத்து வணங்கி ஆசி பெறுவார். வேலூருக்குச் சென்று வந்த பிறகு தான், தன் ரசிகர்களை சந்திப்பார். சிவாஜி மறைந்த பிறகும், அதே பாரம்பரியத்தை, பிரபுவும், ராம்குமாரும் கடை பிடிக்கின்றனர். பெருமாள் இப்போது இல்லை; அவரது மனைவியை, பிரபுவும், ராம்குமாரும் பொங்கல் அன்று வேலூர் சென்று சந்தித்து, ஆசி பெறுகின்றனர். தன் நெருங்கிய நண்பர், நடிகர், தயாரிப்பாளர் கே.பாலாஜியை மட்டும், உரிமையாக பெயர் சொல்லி அழைப்பார் சிவாஜி. அவரை வைத்து படம் எடுக்கும் மற்ற எல்லா தயாரிப்பாளர்களையும், வயது வித்தியாசமின்றி, "முதலாளி' என்றே அழைப்பார்.

திரைப்படத்துறைக்கு சிறந்த சேவை செய்ததற்காக, இந்திய அரசு அளிக்கும் உச்சகட்ட விருதான, "தாதா பால்கே சாகிப்' விருது பெற்ற முதல் தமிழர் சிவாஜி தான். முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, சிவாஜிக்கு அந்த விருதை அளித்த போது, அரங்கம் முழுவதுமே எழுந்து நின்று கரகோஷம் செய்தது. எனக்கு, ஏராளமான பரிசுகள் கொடுத்திருக்கிறார் சிவாஜி. ஆனால், அவர் கொடுக்காமல் நானே எடுத்துக்கொண்ட ஒரு பொருளை இன்றும் என் வீட்டு கண்ணாடி ஷோகேஷில் பத்திரமாக பாதுகாத்து வருகிறேன். அவர் இறக்கும்போது அணிந்திருந்த வெள்ளைநிற செருப்புகள்தான் அவை.

Saturday, September 26, 2009

மீண்டு(ம்).......



படங்கள், பதிவு எல்லாம் ரெடி பண்ணி வச்சாச்சு. திடீர்னு ஒரு வைரஸ் வந்து ஆபிஸ்ல பாதிபேர் சிஸ்டத்தை காலி பண்ணிடுச்சு. மூணு நாளா ஒரே போராட்டம். பல தடவை ஃபார்மட் பண்ணியும் சரிவரலை. இப்போதான் பரவாயில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கணிணியில் எழுதி வச்சிருந்த பல கவிதைகள், அனுபவங்கள், கதைகளுக்கான குறிப்புகள், சேகரித்த படங்கள் எல்லாம் காலி. நல்லவேளை சில குறிப்புகள் டைரில எழுதி வச்சிருந்தாலும் இழந்தது ஏராளம்.


இப்போ எல்லாமே முதல்ல இருந்து தொடங்கணும். விடமாட்டம்ல......

சுற்றும் வரை பூமி.
சுடும் வரை நெருப்பு.
போராடும்வரை மனிதன்.

அதுவும் நாம தாமிரபரணி தண்ணி குடிச்ச தன்மானத்தமிழன். விடுவோமா. எத்தனை முறை விழுந்தாலும் வீறு கொண்டு எழுவோம்ல. விரைவில் விட்டதை எல்லாம் பிடிப்போம் நல்லபடியாக நண்பர்கள் உங்கள் ஆதரவோடு.....

Friday, September 18, 2009

எகிப்தில் ஒரு வரலாற்றுப் பயணம்.....


ஒரு வரலாறே
வரலாறு பேசுகிறதே
ஆச்சர்ய குறி.

ஆம். நெடுநாளைய பயணத்திட்டம். இப்போதுதான் ஈடேறியுள்ளது.

நமது இந்தியநாட்டின் கலாசாரம், பண்பாட்டிற்கு ஈடான நதிக்கரை நாகரிகம் கொண்டது எகிப்து. இங்கு வந்தவுடனே பிரமிடுகள் மற்றும் உலகப் புகழ்பெற்ற மியூசியம் , மம்மிகள் பார்த்தாயிற்று. தலைநகரம் கெய்ரோ, தங்கியிருக்கும் அலெக்சாண்டிரியா நகரம் எல்லாம் ஓரளவு சுற்றியாயிற்று. பண்டைய எகிப்தின் வரலாற்று ஆதார இடங்களான கோயில்கள், அரண்மனைகள் நிறைந்த அஸ்வான், லோக்சூர் போன்ற இடங்கள் பார்க்க வேண்டுமானால் குறைந்தது ஒரு வார காலம் தேவை. எதிர்பாராத விதமாக ரமலான் பண்டிகையை ஒட்டி தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்தது. நீண்ட நாள் கனவு கைகூடும் நேரம்.

விமானம், கப்பல் மூலம் சென்றால் குறிப்பிட்ட இடங்களை மட்டும்தான் பார்க்க முடியும். சாலை வழி பயணம் என்றால் நாம் விருப்பப்பட்ட இடங்களை எல்லாம் பார்க்கமுடியும் என்பதால் திடீர் ஏற்பாடாக நண்பர்கள் அறுவர் இதோ கிளம்பிவிட்டோம். இறைவன் அருளால் நல்லபடியாக பயணம் முடித்து வந்து அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்.

ஏதோ மோகம் - பாகம் 3




நானும் அவர்களருகே சென்று ரமேஷ் அருகே காலியாயிருந்த இருக்கையில் அமர்ந்தேன்.”சார்,இது ராதா” என்றான் சேகர். ”அதான் காலையிலே சொன்னாங்கள்ல” என்ற என்னைப் பார்த்து அவள் புன்னகைத்தாள். ”காலையில டீ பிரேக்ல நீங்க வெளியே வரலலை.அதான் உங்ககிட்ட அறிமுகப்படுத்த முடியலை.ராதா என்னோட தங்கச்சி.சித்தப்பா பொண்ணு” என்றதும் என் மனதில் ஏதோ இனம்புரியாத நிம்மதி.


”சார் பேரு ராஜா. எங்க ஃபேக்டரி இன்சார்ஜ். பாசுக்கு அடுத்தது இவர்தான். டிசைன், பிளானிங், புரொடக்சன், குவாலிட்டி, டெஸ்ட்டிங், டெஸ்பாட்ச் எல்லாம் பார்க்கிறார். இவருக்கு கீழேதான் நாங்க ஒரு பத்து இன்சினியர்ஸ் இருக்கோம்” என்று அவளிடம் என்னை சேகர் அறிமுகப்படுத்தினான்.”அப்போ ஆல் இன் ஆல் அழகு ராஜான்னு சொல்லுங்க” என்று அவள் கூறியதும் அனைவரும் சிரித்தோம்.சாப்பிட்டு முடிக்கும் வரை கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தாள்.


அவர்கள் முன்னமே வந்துவிட்டதால் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டனர்.கைகழுவச் செல்லாமல் எனக்காக காத்திருந்தவர்களை நீங்கள் போய் கை கழுவுங்கள் என்று அனுப்பி வைத்தேன்.ஐஸ்கிரீம் எடுத்துகொண்டு அவளும்,சேகரும் என்னருகே வந்தார்கள்.”நான் என் கம்பெனி ஆள்களோடு சென்று கொஞ்சம் டிஸ்கஸ் செய்கிறேன்” என்று கூறிவிட்டு சென்றாள்.


என் எதிரே அமர்ந்த சேகரிடம் “ரமேஷ், எங்கே ?” என்றேன்.”சார், அவனால சாப்பிட்டவுடன் சிகரெட் அடிக்காம இருக்க முடியாது.அதான் வெளியே போய் ஒரு தம் போட்டு வர்றேன்னு போயிருக்கான்” என்றான்.


நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மற்ற நிறுவனங்களை சேர்ந்த சிலருடன் பேசியவாறே ராதா அவள் கம்பெனி ஆள்களோடு சென்று அமர்ந்தாள். அவர்கள் அமர்ந்திருந்த இடம் கலகலப்பாக இருந்தது. அவ்வப்போது வெடிச்சிரிப்பும் கிளம்பியது. அதைக் கவனித்தவாறே சேகர் “பாவம் சார் அந்த பொண்ணு” என்றான்.”ஏன்ப்பா,நல்லா சந்தோஷமாத்தானே இருக்கு” என்ற என்னிடம் “இல்ல சார். வெளியேதான் அப்படி சந்தோஷமா இருக்கமாதிரி காமிச்சிக்கிறா” என்றவனை புரியாமல் பார்த்தேன்.

(தொடரும்)


Thursday, September 17, 2009

ஏதோ மோகம் - பாகம் 2




அனைவரது கவனத்தையும் ஒருங்கே திருப்பிய அந்தப் பெண்ணுக்கு இருபது வயதுக்குள்தான் இருக்கும். மாநிறம். நடுத்தர உயரம். நீண்ட கூந்தல். சிறந்த அழகி இல்லையென்றாலும் முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பு இருந்தது. குறிப்பிட்ட நிறுவனத்தை சேர்ந்தவள் என்று கூறியவள் தாமதமாக வந்தமைக்கு மன்னிப்பு கேட்டு கொண்டு அவள் நிறுவன நண்பர்களுடன் சென்று அமர்ந்து கொண்டாள். அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு இருந்தது. தடைப்பட்ட அறிமுகப்படலம் மீண்டும் தொடர்ந்தது. தொழில் நகரங்களான கோவை மற்றும் ஹோசூரிலிருந்தே பெரும்பாலான நிறுவனங்கள் வந்திருந்தன.


அவள் முறை வரும்போது பெயர் ராதா என்றும் பிளஸ் 2 படித்துமுடித்து விட்டு MS Office முடித்திருப்பதாக கூறினாள். அக்கவுண்ட்ஸ் அசிஸ்டெண்டாக அந்த நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் மேலும் கரெஸ்சில் BBA இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் கூறினாள்.


நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக கோர்ஸ் மெட்டிரியல் விநியோகமும்,அந்தந்த நிறுவனத்தின் M.R (Management Representative) தேர்வும், அறிவிப்பும் நடந்தது. அதன் பின் தேநீர் இடைவேளை. அரங்கிற்கு வெளியே ஹாலில் தேநீர்,பிஸ்கட்டுகள் வைத்திருப்பதாக அறிவித்தனர். அனைவரும் தேநீர் அருந்த அரங்கை விட்டு வெளியே சென்றனர்.


எனக்கு தேநீர் அருந்தும் பழக்கம் இல்லாத காரணத்தினாலும்,எனது பாஸ் என்னை எங்கள் நிறுவனத்தின் MR ஆக அறிவித்துவிட்டபடியாலும் வெளியே செல்லாமல் இருக்கையிலே அமர்ந்து சில குறிப்புகள் எடுத்து கொண்டிருந்தேன்.எனது அசிஸ்டெண்டான ரமேஷ் ‘சார்,பிஸ்கட்டாவது சாப்பிடுங்க; என்றவாறு எடுத்து வந்தவற்றை கொடுத்தார்.அதை கொறித்தவாறே கோர்ஸ் மெட்டிரியலில் MRக்கான கடமைகள் என்னென்ன என பார்த்து கொண்டிருந்தேன்.


அரைமணி நேர டீ பிரேக் முடிந்து அனைவரும் அரங்கிற்குள் வந்தனர்.கோர்ஸ் மெட்டிரியலில் இருந்து விளக்கமும்,செய்முறை பயிற்சிகளும் ஆரம்பித்தனர். முக்கியமான பயிற்சி என்பதால் வந்திருந்த எல்லா நிறுவனங்களுமே சிறப்பான நபர்களை தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்தமை எல்லோருடைய ஈடுபாடான செயல்களில் தெரிந்தது. அதற்குள் மதிய உணவு நேரமும் வந்துவிட்டது. ஒருமணி நேர உணவு இடைவேளைக்கு பின் அனைவரும் ஆஜராக வேண்டும் என அறிவித்தனர்.


எனது பாஸ் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து வருவதாக கூறிச்சென்றார்.நான் ஓய்வறைக்கு சென்று கை,முகம் கழுவி பின் உணவு அரங்கம் வந்தேன்.நூறு பேர் அமரக்கூடிய அளவு நல்ல பெரிய அரங்கம்.நல்ல காற்றோட்ட வசதியுடன் இருந்தது.பஃபே சிஸ்டம் என்பதால் அனைவரும் வரிசையில் நின்று அவரவருக்கு பிடித்த உணவு வகைகளை தேர்வு செய்து எடுத்து கொண்டிருந்தனர்.


நானும் வரிசையில் நின்று எனக்கு பிடித்த உணவினை எடுத்து கொண்டு அமர இடம் தேடிய பொழுது ‘ராஜா சார்,ராஜா சார்’,உங்களுக்கு இங்கே இடம் பிடிச்சி வச்சுருக்கேன். வாங்க” என சேகர் அழைக்கும் சப்தம் கேட்டு திரும்பினேன். இரண்டிரண்டு பேர் எதிரெதிராக மொத்தம் நான்கு பேர் அமரக்கூடிய மேஜையில் சேகரும்,அந்தப் பெண்ணும் அருகருகேயும் ,ரமேஷ் எதிரேயும் அமர்ந்து கலகலப்பாக பேசிக்கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

(தொடரும்)


கதை சொல்லியின் கதை




இதயநோயால் அவதிப்பட்டு வந்த, தென்கச்சி கோ.சுவாமிநாதன், நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.அரியலூர் மாவட்டம், தென்கச்சி பெருமாள்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோ.சுவாமிநாதன். சென்னை, மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார்.

கடந்த 1977ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை, திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில், வேளாண் துறை இயக்குனராகப் பணியாற்றி, "வீடும் வயலும்' நிகழ்ச்சி வழங்கினார். பிறகு, உதவி இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், "இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியில், மூன்று நிமிட நகைச்சுவை, சிந்தனைக் கதைகளைக் கூறி, பிரபலமானார்; கருத்துப் புத்தகங்களையும் எழுதியுள்ளார். ஏராளமான குழந்தைகள் நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார். "இலக்கணம்' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இதயநோயால் அவதிப்பட்ட சுவாமிநாதன், போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையில், கடந்த 14ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 12.40 மணிக்கு காலமானார்; அவருக்கு வயது 68.சுவாமிநாதனுக்கு மனைவி மகாலட்சுமி, மகள் செந்தமிழ்செல்வி, மருமகன் தமிழரசன், பேரன் நவீன் உள்ளனர்.


தென்கச்சி சுவாமிநாதனின் உடல், அவரது பூர்வீகமான தஞ்சாவூர் மாவட்டம், கஞ்சனூர் கிராமத்திற்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அவரது உடலுக்கு ஏராளமானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்குகள் இன்று நடைபெற உள்ளன.