மறுநாள் பயிற்சியின் இறுதிநாள். அவள் வீட்டருகே அழைக்கச்செல்லும் போது வழக்கத்தை விட அதிக உற்சாகத்துடன் காத்திருந்தவள் தூக்கமில்லாமல் சிவந்திருந்த என் கண்களைப் பார்த்து முகம் வாடி “என்ன இன்னும் தலைவலி சரியாகவில்லையா” என்றாள். நான் என்ன சொல்ல என்று தெரியாமல் “ம்.ம்” என்றேன். ”சாப்பிட்டிங்களா,இல்லையா?. இல்லைன்னா வாங்க வீட்டுல தோசை மாவு இருக்கு. தோசை சுட்டு தர்றேன்” என்றவாறு வீட்டினுள் அழைத்தவளிடம் “பரவாயில்லை. நேரமாயிடுச்சு. கெளம்புவோம்“ என்று கூறி அழைத்து சென்றேன்.
எனது திடீர் மாற்றத்தைப் பார்த்து மிகவும் குழம்பியவளாய் இருந்தாள். வண்டியில் வரும்போதுகூட இருவரும் ஏதும் பேசவில்லை. பயிற்சியின் போது என்னை அடிக்கடி திரும்பி திரும்பி பார்த்து கொண்டேயிருந்தாள். அவள் மனம் கோணாமல் அவளிடம் இருந்து விலகுவது பற்றி எப்படி விளக்குவது என்றே என் மனம் யோசித்து கொண்டேயிருந்தது. சரி நேரம் கிடைக்கும்போது பேசலாம் எனப்பார்த்தால் தகுந்த நேரமும் வாய்க்கவே இல்லை. நேரம் கிடைத்தபோது அவள் முகம் பார்த்து பேச கஷ்டமாய் இருந்தது. இப்படியே அன்றைய பொழுது முழுதும் மிகவும் தவிப்பாகவே கழிந்தது.
தொடர்பயிற்சிகள் முடிந்து நிகழ்ச்சியின் இறுதியாக ஒருவர் பின் ஒருவராக எல்லோரையும் பேச அழைத்தபோதும் ஏதோ ஒப்பிற்கு பேசி வந்தமர்ந்தேன். அவளும் அப்படியே பேசியதாக உணர்ந்தேன். எல்லோரும் கிளம்பும்முன் உற்சாகமாக பேசி விடைபெற்றபோது கூட மற்றவர்களோடு இயல்பாய் பேசமுடியவில்லை.எல்லாம் முடிந்து ஒருவழியாக கிளம்பினோம். அவளை எங்காவது அழைத்து சென்று பேசலாம் என்றாலும் அவள் அதை எப்படி புரிந்து கொள்வோளோ என்ற தயக்கமும்,குழப்பமும் கூடி கும்மி அடித்தன.
வண்டியில் திரும்பும்போது “அப்போ நாளையில இருந்து மறுபடியும் உங்க ஆபிஸ் செட்டுங்க கூட போய் சேர்ந்திடுவீங்க. ஜாலிதான்” நானே மவுனத்தை உடைத்தேன். “அப்பாடி ஒரு வழியா இப்பவாது பழைய ஆளா மாறினீங்களே” என்றவள் குரலில் ஏதேதோ உணர்ச்சிகள். அவளை மேலும் பேச விடாதவாறு ”நல்லா படிங்க. எப்படியாவது கஷ்டப்பட்டு M.B.A முடிச்சிடுங்க. உங்க அம்மா உங்க மேல வச்சுருக்கிற நம்பிக்கையை உண்மையாக்குங்க. சொந்தக்காரங்க முன்னாடி ஒரு நல்ல நிலைமைக்கு வந்திடுங்க” என்றேன்.
”என்ன ஏதோ இதுக்கப்புறம் சந்திக்கவே மாட்டோம்கிற மாதிரி பேசுறீங்க” என்று ஏமாற்றமான குரலில் கேட்டவளிடம், ”உண்மைதானே. நாளையில இருந்து அவங்கவங்க வேலையில பிசியாயிடுவோம்ல” என்றபின் ஏதும் பேசாமல் அவள் மவுனமானாள். அவள் வீடு வந்தபின் அமைதியாக இறங்கியவள் முகத்தைப் பார்த்தேன். மேல்கொண்டு ஏதும் பேசினால் அழுதுவிடுவாள் போலிருந்தது. சரி பார்ப்போம். அம்மாட்டயும் கேட்டதாக சொல்லிடுங்க” என்று விருட்டென கிளம்பிவிட்டேன். மனபாரம் குறைந்ததால் அன்று இரவு நிம்மதியாக உறங்கினேன்.
அதன்பின் அவளை சந்திப்பதை தவிர்க்க சைதாப்பேட்டையிலிருந்து சூளைமேட்டிற்கு அறை மாறினேன். சேகர் அக்காவின் திருமணத்திற்கு சென்றிருந்தபோது அவளையும்,அவளது அம்மாவையும் சந்தித்தேன். அவள் அம்மா இயல்பாகப் பேச அவள் ஏதும் பேசவில்லை. பின் காலசூழ்நிலையில் பணி மாறி, ஊர் மாறி பல ஆண்டுகளுக்குப் பின் இதோ இப்போது மீண்டும் சென்னை. பரபரப்பான வாழ்க்கை.
தொலைபேசியில் பேசி முடித்தவள் “என்ன எப்படி இருக்கீங்க. வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா. நிச்சயம் கல்யாணம் ஆகியிருக்கும் எத்தனை குழந்தைங்க” என்று கேள்விகளாக அடுக்கினாள். ”எல்லாரும் நல்லா இருக்காங்க.கல்யாணம் ஆகி ஒரு பெண்குழந்தை இருக்கு”. “நீங்க எப்படி இருக்கீங்க. அம்மா எப்படி இருக்காங்க ” என்றேன். “அம்மா நல்லாயிருக்காங்க. எனக்கு நல்லவேலை கிடைச்சவுடனே அவங்களை வேலைக்கு போக வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். அப்பப்ப உங்களை பத்தி சேகர் அண்ணாட்ட கேட்போம். அவரும் தொடர்பு விட்டுப்போயிடுச்சுன்னார்.” என்றவளை உற்றுப்பார்த்தேன். முகமலர்ச்சியுடன், இயல்பாக, தெளிவாக பேசிக்கொண்டிருந்தவளிடம் திருமணம் ஆன அறிகுறிகள் ஏதுமில்லாததை கண்டு “இன்னும் கல்யாணம் பண்ணலையா” என்று குற்றஉணர்ச்சியுடன் கேட்டேன்.
என்னை நிமிர்ந்து பார்த்தவள் “ஒரு நிமிசம்” என்றவள் தொலைபேசியில் யாரையோ “கண்ணன் கொஞ்சம் என்னோட ரூமுக்கு வாங்களேன். ஒரு முக்கியமானவரை அறிமுகப்படுத்தணும்” என்றழைத்தாள். ”எனக்கு என்னமோ கல்யாணத்துல விருப்பமில்லை.அம்மாவும் பலமுறை சொல்லிப்பார்த்து அலுத்துப்போயிட்டாங்க” என்றபோது “டக்.டக்” என்று அறைக்கதவை தட்டும் சத்தம் கேட்டது.“யெஸ்.கம் இன்” என்று அவள் அழைக்கவும் முப்பது வயது மதிக்கத்தகுந்த ஒரு இளைஞர் உள்ளே வந்தார். ”இவர்தான் கண்ணன். உங்க கேள்விக்கு பதில்” என்றவளை நான் புரியாமல் பார்க்க அவரிடம் “சார்தான் ராஜா“ என்று அறிமுகப்படுத்தினாள். அவரும் “சார்,இவங்க உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்காங்க” என்று கை குலுக்கியவாறு சொல்ல நான் மேலும் ஒன்றும் புரியாமல் விழித்தேன்.
ராதா சிரித்தவாறே “இவர் கண்ணன்.எங்க கம்பெனில குவாலிட்டி மேனேஜரா இருக்கார். நானும்,இவரும் மனசு ஒத்துப்போய் கல்யாணம் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கோம். ரெண்டு பேர் வீட்டுலயும் பரிபூரண சம்மதம்” எனவும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்து “வெரிகுட்.கங்கிராஜுலேசன். கண்ணன் ராதா பெயர் பொருத்தமே அருமையா இருக்கு. எப்போ மேரேஜ்” என்று கேட்டேன். ”கண்ணனும் எங்களை மாதிரி கஷ்டப்பட்ட குடும்பம்தான். அப்பா இல்லை. ரெண்டு தங்கச்சிங்க. எப்படியோ போராடி ஒரு நல்ல நிலைக்கு வந்திருக்காரு. இப்போதான் அடுத்தடுத்து தங்கச்சிங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி முடிச்சாரு. அதான் எங்க கல்யாணத்தை ஒரு நாலு மாசம் தள்ளி பண்ணலாம்ன்னு இருக்கோம். இன்னும் நாள் முடிவு பன்ணலை” என்றாள்.
“கல்யாணநாள் முடிவு பண்ணவுடனே தெரியப்படுத்துங்க. பத்திரிக்கை கூட அவசியமில்லை. வாயால சொன்னாலே போதும். முதல் ஆளா குடும்பத்தோடு வந்து நிற்பேன்” என்று கூறி இருவரிடமும் விடைபெற்று வெளிவந்த எனக்கு உலகமே உற்சாகமாக இருப்பதுபோல் தெரிந்தது.
( முற்றும் )
தொடர்ந்து எனதிந்த ஆக்கத்திற்கு ஊக்கம் தந்து வந்த உற்சாகப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.நன்றி.நன்றி.
8 comments:
அருமையான தொடர்கதை. ஒரு இடத்தில் கூட அலுப்பு தட்டவில்லை. தொடர்ந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.. எழுதுங்கள்..
*********
எனக்கு இந்த கண்ணன் கேரக்டர் வந்ததில் உடன்பாடு இல்லை.. அவங்க கல்யாணம் பண்ணாமலையே இருக்காங்க அப்படின்னு முடுச்சு இருந்த அபாரமான சோக கதை கிடைச்சிருக்கும்.
அப்பாடா,ஒரு வழியா பூசணிக்காய் உடைச்சாச்சா..?
எல்லாமே சுபமாயிடுச்சு உங்க கதையில.
சுபம்..! அருமைங்க.. !
நல்லா விரு விருப்பா போச்சு கதை. பாராட்டுக்கள் ராஜா
நல்ல கதை. வாழ்த்துகள்.
அடுத்த தொடர் எப்போது?
வாவ், அற்புதம் ராஜா. அழகாய் முடித்திருக்கிறீர்கள்... கலக்கல். இதமான இனிமையான முடிவு..
பிரபாகர்.
தல,
கதை நல்லா விறுவிறுப்பா போச்சி.. ஆனா ஒவ்வொரு பகுதியும் ரொம்ப சின்னதாக இருப்பதாக தோன்றியது.. உங்களோட அடுத்த சாகசம் சே தொடர் எப்ப?
ரொம்ப நல்லவரா ஆக்ட் கொடுத்தீங்களா?
போங்கய்யா போங்க!
Post a Comment