ஐந்து கரத்தனை
யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை
ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே. ..
எந்த ஒரு காரியத்தையும் பிள்ளையாரை வணங்கிட்டு தொடங்கணும்னு பெரியவங்க சொல்லுவாங்க. அப்படிப்பட்ட பிள்ளையாரின் பிறந்தநாள் சிறப்புகளையும் வழிபாட்டு முறைகளையும் பற்றிதான் இந்த பதிவு.
விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம். இதில் எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடைய காரிய சித்திமாலையின் விளக்கம் தரப்பட்டுள்ளது. கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இத்துதியை விநாயகர் முன் அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பங்கள் எளிதில் நிறைவேறும். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும்(காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும். எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம் பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.
*உயிர்களை இயல்பாகப் பற்றி இருக்கும் பந்த பாசங்களை நீக்கும் இயல்புடையவரும், அனைத்து உயிர்களையும் தம்மிடம் இருந்து தோற்றுவிப்பவரும், வேதங்களையும், ஆகமங்களையும் வெளிப்படுத்தி அருள் செய்தவருமாகிய விநாயகப்பெருமானின் திருவடிகளை அன்புடன் போற்றுகின்றோம். *கண்களால் காணப்பெறும் உலகமுழுவதும் நீக்கமற நிறைந்துஇருப்பவரும், விருப்பு வெறுப்பு இல்லாதவரும், நாம் செய்கின்ற செயல்களின் பலனை நமக்குத் தருபவரும், களைபவருமான முழுமுதற்பொருளான கணபதியை உவந்து சரணடைந்து போற்றுகின்றோம். * தீயில் விழுந்த பஞ்சுபோல இடர்களை முழுவதும் நீக்குபவரும், தன்னை அன்புடன் தொடரும் உயிர்கள் அனைத்தையும் நற்கதிக்கு இட்டுச் செல்பவரும், எடுத்த செயல்களை எளிதாகவும், இனிதாகவும் நிறைவு செய்து அருள்பவரும் ஆன ஒற்றைக்கொம்பன் விநாயகரின் திருவடிகளைச் சரணமாகப் பற்றுகின்றோம்.*திருத்தலங்கள் தோறும் கோயில் கொண்டிருப்பவரும், கங்கை முதலான தீர்த்தங்களாகத் திகழ்பவரும், உயிர்களின் அறியாமையை அறிவினைத் தருபவரும், கருணை நிறைந்த வருமாகிய கணபதியின் திறத்தினைப் புகழந்து பாடி திருவடிகளைச் சரண் அடைகிறோம். *உயிர்கள் செய்யும் வினையின் முதலாகவும், செய்யப்படும் பொருளாகவும், செய்வினையின் பயனாகவும், அந்த பயன் விளைவிக்கும் விளைவைப் பயன்பெறச் செய்பவனும் திகழ்கின்ற மெய்ப்பொருளான கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று அடைக்கலம் புகுகின்றோம்.*வேதங்களாலும் அறியமுடியாதவரும், வேதத்தின் முடிவாக விமலனாகத் திகழ்பவரும், எங்கும் பரந்து விளங்கும் பரமானந்த வடிவாக வீற்றிருப்பவரும், எண்குணங்களை உடையவரும் ஆகிய கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று பற்றுகின்றோம்.*நிலத்தில் ஐந்து குணங்களாகவும், நீரில் நான்கு குண்ங்களாகவும், தீயில் மூன்று குணங்களாகவும், காற்றில் இரண்டு தன்மையுடையவனாகவும், வானில் ஒன்றாகவும் திகழும் அண்ணல் கணபதியின் அன்புத்திருவடிகளை அடைக்கலமாகப்புகுகின்றோம்.'*பாச அறிவினாலும், பசு அறிவினாலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருளாகவும், பாச அறிவையும், பசு அறிவையும் அறியச் செய்யும் இறைவனாகவும், பாச, பசு அறிவினைப் போக்கி ஞானஅருள் வழங்கும் தலைவனாகவும் திகழும் கணபதியைச் சரண் அடைந்து போற்றுகின்றோம்.
காட்டிக் கொடுத்த விநாயகர் : காட்டிக் கொடுத்த விநாயகர் என்றதும் தப்புக்கணக்கு போடாதீர்கள். தொலைந்த பொருள் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்தவர் இப்பிள்ளையார். ஒருமுறை சுந்தர மூர்த்தி சுவாமிகள் தன் நண்பரான சேரமான் பெருமாள் நாயனாரிடம் பொன்னும் பொருளும் மிகுதியாகப் பெற்றுக் கொண்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். சுந்தரருடன் திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார் ஈசன். சிவகணங்களை வேடர் வடிவில் அவரிடம் அனுப்பி, அவரிடமிருந்த பொன்னையும், பொருளையும் பறித்துச் மறைத்து வைக்கும்படி ஆணையிட்டார். திருமுருகன் பூண்டி என்ற தலத்துக்கு சுந்தரர் சென்றபோது, பொருள்களை வேடர்களிடம் இழந்தார். இதுபற்றி இறைவனிடம் முறையிட்டார். அங்கிருந்த விநாயகர் சுந்தரரை பெயர் சொல்லி கூப்பிட்டு, பொருளை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டி அருளினார். அதனால் இவ்விநாயகருக்கு "கூப்பிடு விநாயகர்' என்ற சிறப்புப் பெயர் உண்டானது. கையில் இருக்கும் பொருள்களை தவறுதலாகவோ அல்லது தீயவர்களாலோ இழந்தவர்கள் கூப்பிடு விநாயகரை வழிபட்டால் அவர் அருளால் தொலைந்த பொருள் மீண்டும் வந்து சேரும்.
தொப்பையப்பனுக்கு தோப்புக்கரணம் : ""அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே'' என்று இவர் முன் நின்றவுடன் தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் இடுவது என்பது நம் மரபு. ஏன் இப்படி குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் இடவேண்டும் என்பதற்கு புராணக்கதை ஒன்று உள்ளது. ஒருமுறை தவமுனிவரான அகத்தியர் கமண்டலமும் கையுமாக வந்து கொண்டிருந்தார். அப்போது காக உருவெடுத்து வந்த விநாயகப் பெருமான் அக்கமண்டல நீரை தட்டி விட்டு ஓடி விட்டார். காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஓடிவந்தது. காகம் தட்டியதால் விரிந்து பரந்த நீராக ஓடியது என்பதால் "காவிரி' என்ற பெயர் அந்நதிக்கு உண்டானது. அகத்தியர் தட்டி விட்ட காகத்தைத் திரும்பிப் பார்த்தார். அதைக் காணவில்லை. காகம் நின்ற இடத்தில் கொழு கொழு என்று ஒரு சிறுவன் நின்றிருந்தான். அவன் தான் தொப்பைக் கணபதி. செய்த செயலுக்காக முனிவரைப் பார்த்துச் சிரித்தான்.
கோபமடைந்த அகத்தியர் அச்சிறுவன் தான் கமண்டல நீரை கவிழ்த்தவன் என்ற எண்ணத்தில் அவனது தலையில் குட்ட முயன்றார். ஆனால், அச்சிறுவன் விநாயகப் பெருமானாக அகத்தியர் முன் நின்றான். குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர், அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு, மன்னிக்குமாறு வேண்டினார். மற்றொரு கதையும் இதற்கு காரணமாக உள்ளது.கஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்களுக்கு கொடுமைகள் செய்து வந்தான். தேவர்களை தன்னைக் கண்டால், தோப்புக்கரணம் இடவேண்டும் என்று நிர்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் இச்செயலைச் செய்து வந்தனர். அவனைச் சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர். விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும் அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள் விநாயகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர். அதுமுதல் விநாயகருக்கு தோப்புக்கரணம் இடும் முறை உண்டானது.
விநாயகர் சதுர்த்தி பூஜை செய்வது எப்படி? சதுர்த்தியன்று மாலை 6.30 மணிக்கு மேல் மண் அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட விநாயகரை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். படமும் வைத்துக் கொள்ளலாம். வாசலில் கோலமிட்டு மாவிலை, வாழை தோரணம் கட்ட வேண்டும். பச்சரிசியைப் பரப்பி, அதில் விநாயகப்பெருமானின் சிலையை வைக்க வேண்டும். விநாயகரின் திருமேனியில் வெடிப்பு, விரிசல், குறை ஏதும் இல்லாதவகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். நிவேதனமாக அவல்,பொரி, கடலை, கொழுக்கட்டை, சுண்டல் என்று படையல் செய்தல் வேண்டும். விநாயகர் துதிகளான "சீதக்களப' எனத் தொடங்கும் விநாயகர் அகவல் மற்றும் காரியசித்தி மாலை பாடல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். தூப, தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். பூஜித்த விநாயகரை நீரில் கரைக்கும் வரை தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி நாளில் ஒருவேளை உணவு உண்டு, இரவில் பால், பழம் மட்டும் சாப்பிட வேண்டும். அன்று மாலையில் சந்திரனைப் பார்த்தல் கூடாது. ஆனால், விநாயகருக்கு பூஜை முடிந்த பின் சந்திரனையும் வணங்குதல் நல்லது.
உருவகத்தின் உன்னதம் விநாயகர் : உருவத்திற்கு உட்படுத்த முடியாத கடவுளான விநாயகர் பக்தர்களின் நலனுக்காக அற்புத வடிவம் தாங்கி நிற்கிறார். கணம் என்பது ஒரு குழுவைக் குறிக்கும். இந்த பிரபஞ்சமே அணுக்கள் மற்றும் வெவ்வேறு ஆற்றலின் கூட்டம்தான். வெவ்வேறு விதமான இந்த கூட்டங்களை நெறிப்படுத்த மேலான ஒரு விதிமுறை இல்லாவிட்டால் பிரபஞ்சமே குழப்பத்தில் ஆழ்ந்து விடும் . இந்த அணுக்கள் மற்றும் ஆற்றல் கூட்டத்தின் தலைவர் தான் கணேசர். அந்த மேலான சக்திதான் அனைத்திலும் வியாபித்திருந்து உலகத்தை ஒழுங்குபடுத்துகிறது. கணேசர் குறித்த தத்துவத்தை ஆதி சங்கரர் மிக அழகாக எடுத்துரைக்கிறார்.
யானைமுகம் கொண்ட கடவுளாக கணேசர் குறிக்கப்பட்டாலும் கூட அவர் உருவங்களை கடந்த பரம்பொருள் அவர் ""அஜம் நிர்விகல்பம் நிராகாரமேகம்''. அதாவது கணேசர் பிறப்பில்லாதவர் (அஜம்), குணபேதமற்றவர் (நிர்விகல்பம்) மற்றும் உருவமற்றவர் (நிராகாரம்) அவர் எங்கும் வியாபித்திருக்கும் பிரக்ஞையின் உருவகம். இந்த பிரபஞ்சம் எங்கிருந்து தோன்றியதோ, எங்கே ஒடுங்குகிறதோ அந்த ஆதார சக்திதான் விநாயகர்.யானையின் பெருந்தலை அதன் ஞானத்தையும் அறிவையும் குறிக்கும். யானை தடைகளை கண்டு விலகிச் செல்லாது. அவற்றை உடைத் தெறிந்து சர்வ சாதாரணமாய் முன்னேறக் கூடியது. ஆகவே நாம் விநாயகரை துதிக்கும்போது யானையின் நற்குணங்கள் நம்மிலும் தூண்டப்படுகின்றன. விநாயகரின் பெரு வயிறு பெருந்தன்மையையும், எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் குணத்தையும் வெளிப்படுத்துகிறது.
விநாயகரின் தூக்கிய திருக்கரம் ""அஞ்சாதே - நான் உனக்கு அபயம் அளிக்கிறேன்'' என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. வெளிப்புறமாக கீழ் நோக்கி இருக்கும் திருக்கரங்கள், முடிவற்ற வரங்கள் தருவதையும், பணிந்து நட என்பதையும் உண்ர்த்துகின்றன. விநாயகரின் ஒற்றைத் தந்தம் வாழ்வில் ஒரே குறிக்கோள் தேவை என்பதை தெளிவாக்குகிறது. அவர் கையில் இருக்கும் ஆயுதங்களான அங்குசம் மற்றும் பாசம் ஆகியவை முறையே விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாட்டின் அவசியத்தை தெரிவிக்கின்றன. கட்டுப்பாடு இல்லாத விழிப்புணர்வால் எந்தவித பயனும் இல்லை. யானைத் தலையை உடைய விநாயகர் பயணம் செய்ய ஏன் இத்தனை சிறிய சுண்டெலி? இது ஒரு முரண்பாடு அல்லவா? இதிலும் ஒரு பெரிய தத்துவம் உருவகப்படுத்தப் பட்டுள்ளது. எப்படி சுண்டெலி வலைகளை அறுத்து விடுகிறதோ. அதேபோல் அடுக்கடுக்கான அறியாமைகளினால் பின்னப்பட்ட வலையை மந்திர சக்தி மூலம் நாம் அறுத்து விட்டால் விநாயகரால் வெளிப்படுத்தப்படும் ஞானத்தை உணருவோம். இந்த ஞானத்துடன் விநாயகர் சதுர்த்தி விழாவை நாம் கொண்டாடுவோம்.
கணபதி பஞ்சாயதனம் : பிள்ளையார்,சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப் பெருமானை ஐந்து மூர்த்திகளில் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.
உத்திராடத்திற்கு உகந்தவர் : தைத்திரீய ஆரண்யகத்தில் இறைவனைக் குறிக்குமிடத்தில் "தந்தின்' என்று வருகின்றது. இது தந்தத்தை உடைய விநாயகரைக் குறிக்கும். இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தை வியாசர் சொல்ல விநாயகப் பெருமானே எழுதி அருள் செய்தார். ஜோதிடத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உண்டு. அதில் உத்திராட நட்சத்திரத்திற்குரிய அதிதேவதை விநாயகப் பெருமான் ஆவார்.
அருள் தரும் ஆவணிமாதம் : ஆவணி மாதம் மாதங்களில் முதன்மையானது என்பர். கேரளத்தில் ஆவணியே (சிம்ம மாதம்) கொல்லம் ஆண்டின் முதல் மாதமாகும். ஏனென்றால் இம்மாதத்தில் தான் முழுமுதற்கடவுளான விநாயகப்பெருமானுக்குரிய விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் நவக்கிரக நாயகரான சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சி பெறுவது குறிப்பிடத்தக்கது.
விநாயகருக்கான விரதங்கள்:
விநாயகப் பெருமானுக்குரிய விரதங்கள் பதினொன்று.
1. வெள்ளிக்கிழமை விரதம்
2. செவ்வாய்க்கிழமை விரதம்
3. சதுர்த்தி விரதம்
4. குமார சஷ்டி விரதம்
5. துருவ கணபதி விரதம்
6. சித்தி விநாயகர் விரதம்
7. துர்வாஷ்டமி விரதம்
8. நவராத்திரி விரதம்
9. வெள்ளிப்பிள்ளையார் விரதம்
10. செவ்வாய்ப்பிள்ளையார் விரதம்
11. சங்கட ஹர சதுர்த்தி விரதம்
இவ்விரதங்களில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி விரதமே மிகவும் முக்கியமானதாகும்.
மூல முதற்பொருள் : நம் வழிபாட்டில் எத்தனையோ கடவுள்கள் இருப்பினும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முதலில் வழிபாடு செய்வது விநாயகரைத் தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், பரீட்சை என்று வந்து விட்டால், ""பிள்ளையாரப்பா! எனக்கு அருள் செய்வாய்,'' என்று இவரிடம் போய் நிற்பார்கள். நம் மனதில் மட்டுமல்ல, நாம் செல்லுகின்ற வழியெல்லாம் நமக்குத் துணையாக இருப்பவரும் இவரே. ஆற்றங்கரை,அரசமரம், முச்சந்தி, தெருக்கோடி, முட்டுச்சந்து, ஊர்ப்பொது இடம் என்று எல்லா இடங்களிலும் இவருடைய அருளாட்சி தான் நடக்கிறது. பல நாடுகளிலும் இப்பெருமானுக்கு வழிபாடு சிறப்புடன் திகழ்கிறது. ஆறுஆதாரங்களில் மூலாதார மூர்த்தியாக இருந்து நம்மை கரைசேர்ப்பவரும் இந்த ஐங்கரத்து ஆனைமுகப் பெருமான் தான்.
பிடித்து வைத்தால் பிள்ளையார் : பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம்(நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும். இதனைத் தான் "பிடித்து வைத்தால் பிள்ளையார்' என்று வேடிக்கைப் பழமொழியாக நாட்டுப்புறத்தில் சொல்லுவர்.
நலம் தரும் நவக்கிரக விநாயகர் : ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நன்மையோ தீமையோ அவற்றை நிர்ணயிப்பது கிரகங்களே. நவக்கிரக சுழற்சியினால் வாழ்வில் ஏற்படும் சாதக,பாதகங்களைக் கட்டுப்படுத்தி நம்மை காத்தருள்பவர் நவக்கிரக விநாயகர். விநாயகரின் பலவிதமான அவதாரங்களில் நவக்கிரக விநாயகர் தனிச்சிறப்புடையது. ஒன்பது கிரகங்களையும் இவர் தன்னுள் அடக்கி இருப்பதால், சக்தி மிக்கவராக விளங்குகிறார். இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க்கையிலும், வியாழனைத் தலையிலும், வெள்ளியை இடதுகீழ்க்கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சியளிக்கிறார். நவக்கிரக விநாயகரை வழிபாடு செய்வதால் ஒரே நேரத்தில் நவக்கிரகங்களையும் வழிபாடு செய்த பலன் உண்டாகும்.
விநாயகர் கற்ற பாடம் : பால கணபதியின் முன் பூனையொன்று வந்தது. அதைத் துரத்திப் பிடித்து விளையாடினார். அப்போது பூனையின் முகத்தில் காயம் ஒன்று உண்டானது. விளையாட்டுக் கவனத்தில் விநாயகர் அதனைக் கவனிக்கவில்லை. பின்னர், தன் தாய் உமையவளிடம் சென்று அமர்ந்தார். தாயின் முகத்தில் சிறுகீறல் இருப்பதைக் கண்ட விநாயகர், ""அம்மா! கன்னத்தில் என்ன காயம்!'' என்று வாஞ்சையோடு கேட்டார். ""அதுவா! நீ தானப்பா காரணம்!'' என்று தன் பிள்ளையை மடியில் வைத்துக் கொண்டாள் அம்பிகை. விநாயகர், ""நான் ஒன்றும் செய்யவில்லையே,'' என்றார். தேவி தன் பிள்ளையிடம், ""நீ பூனையிடம் விளையாடும் போது நகக்கீறல் பட்டு காயம் உண்டானது,'' என்றாள்.
விநாயகப்பெருமானுக்குத் தேவி சொல்லிய இந்த அறிவுரை உலகவுயிர்கள் அனைத்தும் கடவுளின் வடிவமே என்பதை நமக்கு உணர்த்துகிறது.
எல்லோருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.