பாகம் 7 - நியாயம் , அநியாயம்
எல்லா விவசாயிகளையும் போலவே பயிர் இட்டிருந்தாலும்,
இல்லாவிட்டிலும் தினம் காலை எழுந்தவுடன் வயலைச் சென்று பார்வையிடுவது புலியாண்டியின்
வழக்கம். அப்படி மறுநாள் காலை வயலுக்கு சென்று பார்த்தவனுக்கு மிக்க அதிர்ச்சி. முந்தைய
நாள் அவ்வளவு கஷ்டப்பட்டு, பதிக்கப்படிருந்த குழாய்களும், அவற்றின் மேல் பூசப்பட்டிருந்த
சிமெண்ட் பூச்சும் உடைக்கப்பட்டு, அவற்றை மூடி இருந்த மண்ணும் தாறுமாறாக தோண்டி எடுக்கப்பட்டு இருந்தது. மிகவும் வேதனைப்பட்டு
வீடு திரும்பிய புலியாண்டி நேராக சுக்காண்டி வீடு சென்று பார்த்தால் ஆள் நடமாட்டமில்லாமல்
வீடு பூட்டித்தான் இருந்தது என்றதும் புலிமுத்துவை அலைபேசியில் அழைத்து விபரம் தெரிவித்தான்.
தந்தை உட்பட வீட்டில் உள்ள யாரிடமும் எந்த விபரமும்
கூறாமல், பல் கூட விளக்காமல் உடனடியாக நேரே பைக்கை எடுத்துக்கொண்டு முத்துசாமி வீடு
சென்ற புலிமுத்து, வீட்டு வாசலில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினான். கதவைக்கூட திறக்காமல்
எட்டிப்பார்த்த முத்துசாமி என்ன என்று கேட்க, “ ஒன்பது மணிக்கு திருப்பி வர்றேன். என்கூட
நீங்க ஊருக்கு வரணும். இல்லைன்னா இனிமே நான் வரமாட்டேன். போலிஸ்தான் உங்களைத் தேடி
வரும். எப்படி வசதின்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க…” என்று கூறிவிட்டு வீடு திரும்பி
விட்டான் புலிமுத்து.
வீடு வந்து குளித்து, சாப்பிட்டு, அலைபேசியில் புலியாண்டியிடம்
முத்துசாமியை அழைத்து வரும் விபரம் கூறிவிட்டு, ஒன்பது மணிக்கு நேராக முத்துசாமியின்
வீடு சென்றால் அவர் அங்கு இல்லை. “ என்ன இந்த ஆளு. இவ்வளவு சொல்லியும் இப்படி பண்றாரே…
“ என்று எண்ணியவாறே வரும்போது அம்பை பேருந்து நிலையத்தில் முத்துசாமி நிற்பதைப் பார்த்து
அருகே சென்று பைக்கை நிறுத்தினான் புலிமுத்து. “ நீ முன்னாடி பைக்ல போ. நான் பின்னாடி
பஸ்ல வர்றேன்.” என்ற முத்துசாமியை, “ பரவாயில்லை. பைக்லே கூட்டிட்டுப் போயி திருப்பி
கொண்டு விட்டுடுறேன். “ என்று கட்டாயப்படுத்தி ஏற்றி நேரே புலிப்பட்டி ஊருக்கு வந்து
சேர்ந்தார்கள் இருவரும்.
ஊருக்குள் வந்தவுடன் வேகத்தை குறைத்து பைக்கை நிறுத்தும்போது
முத்துசாமியைப் பார்த்த சிலர் அருகே வந்து, “ சுக்காண்டிதான் அறிவு கெட்டுப் பண்றான்னா…
சொக்காரன் நீயும் இப்படிப் பண்ணலாமா…” என ஆதங்கப்பட, “ என்னைப் பார்த்தா என்ன பைத்தியக்காரன்
மாதிரி இருக்கா… ஆளாளுக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு நான் தகுதி இழக்கலை. நான் விஸ்வரூபம்
எடுத்தா யாரும் தாங்க மாட்டிங்க…” என்று கண்ணை மூடிக்கொண்டு காச்மூச்சென்று கத்தியவரை,
“ கெடுவான் கேடு நினைப்பான். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை..” என்று கூறி காறித்
துப்பியவாறு கலைந்து சென்றனர் நல்லது சொல்ல வந்தவர்கள். முத்துசாமியின் தரம்கெட்ட குணத்தால்
கோபம் வந்தாலும் நாமும் அவர்போல் தாழ்ந்து போகக்கூடாது என்பதால் அடக்கிக் கொண்ட புலிமுத்து
ஆக்சிலேட்டரை முறுக்கி பெருங்கால் வழியாக சென்று அடையாமடை அடைந்து கரை அருகே வண்டியை
நிறுத்தி விட்டு வரப்புகள் வழியாக, வயல்கள் பல கடந்து தங்கள் வயலை அடைந்தனர்.
அவர்களைக் கண்ட்தும் அக்கம்பக்க வயல்காரர்களோடு அங்கு
நின்று கொண்டிருந்த புலியாண்டி முத்துசாமி அருகில் வந்து, “ மாமா, இந்த சுக்காண்டி
பண்றது ஒண்ணும் சரியில்லை. நாளுக்கு நாள் அவன் நடவடிக்கை மோசமாகுது. வயல் உங்களுதா…
அவனுதா… என்ன இருந்தாலும் நம்ம சொந்தக்காரங்க.., பிரச்சினை ஏதும் வராதுங்கிற நம்பிக்கையிலதானே
எங்க தாத்தா உங்க அப்பாவுக்கு வயல் சும்மா கொடுத்தாங்க… நீங்களே இப்படிப் பண்ணா ஊர்க்காரன்
மதிப்பானா… என்று வருத்தப்பட்டுப் பேச, “ நீ தான்டா இவ்வளவுக்கும் காரணம். பண்ற பாவத்தை
எல்லாம் நீ பண்ணிட்டு, இல்லாததையும், பொல்லாத்தையும் எல்லார்ட்டயும் சொல்லிட்டுத் திரியுற..
நீ ஒழிஞ்சா தான் எனக்கு நிம்மதி… “ என அவனிடமும் கோபக்கனலை அள்ளி வீசினார் முத்துசாமி.
அருகிலிருந்த புலிமுத்து ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு,
“ மாமா, உங்க வயலுக்கு இன்னொரு வயல் வழியாத்தானே வண்டி வரணும். இப்படி உங்க வயலுக்கு
வர, போக முடியாம இன்னொருத்தன் வண்டித்தடம் மறிச்சா நீங்க விவசாயம் பண்ண முடியுமா… என்
வயல் முன்னாடியும், உங்க வயல் பின்னாடியும் இருந்து நான் வழித்தடத்தை மறிச்சா, நீங்க
பொறுப்பீங்களா…” என அமைதியாக கேட்க, “ ஏ… என்ன மிரட்டுறியா… உங்க தாத்தா, பெரியப்பா,
அப்பா மாதிரி ஆளு இருக்கு… பணம் இருக்குன்னு ரொம்ப ஆடாதே… நான் சாபம் கொடுத்தா சங்கடப்பட்டுப்
போயிடுவீங்க… உங்க பணபலத்துக்கு பயந்த ஆளு நான் இல்லை. நல்லா கேட்டுக்கோ. இந்த வயலை
சுக்காண்டிக்குத் தான் கொடுக்கப் போறேன். அதுவும் பணம், காசுக்கு இல்லை. சும்மாதான்
கொடுக்கப் போறேன். ஒருக்காலும் உங்களை நிம்மதியா விவசாயம் பண்ண விடமாட்டேன். பயிர்
வைக்க முடியாம, நீங்களா இந்த வயலை வித்துட்டு ஊரை விட்டு போற வரை நான் ஓயவும் மாட்டேன்,
உறங்கவும் மாட்டேன். “ என சூளுரைத்தார் முத்துசாமி.
அநியாயம் செய்தது மட்டுமல்லாமல், தன்தரப்பு தவறை உணராமல்,
அவரது துர் எண்ணத்தையும், நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தி, ஊர்க்காரர், உறவினர், தனக்கு, தந்தைக்கு, தாத்தாவிற்கு,
தமையன் புலியாண்டி என அனைவருக்கும் சாபம் கொடுத்து சங்கல்பம் செய்த முத்துசாமியை இதற்கு
மேல் பேச விட்டால் சரிவராது என முடிவு செய்த புலிமுத்து, “ இப்படி சின்னத்தனமா பேசுறியே… நீ எல்லாம் ஒரு பெரிய மனுசனா… இவ்வளவு வஞ்சத்தையும் மனசுல வச்சுகிட்டு
தானே எல்லாரையும் உறவாடிக் கெடுத்திருக்கே… நீ நியாயமானவனா இருந்தா தானே உன் சாபத்துக்கு,
சங்கல்பத்துக்கு நாங்க பயப்படணும்… உரக்கப் பேசுனா நீ சொல்றதெல்லாம் உண்மையாப் போயிடுமா…
நீ எப்படிப்பட்ட சதிகாரன்னு எல்லாருக்கும் எப்பவே தெரிஞ்சு இருந்தாலும், எனக்கு இப்பதான்
தெரிஞ்சுது. உன் காட்டுமிராண்டித்தனத்தை கண் முன்னாடி காமிச்சுட்டே…. இப்ப மட்டுமில்லே…
எப்பவுமே எங்களுக்கு உன் சகவாசமும் வேண்டாம். சங்காத்தமும் வேண்டாம்… நீங்க பண்ற அநியாயத்தை
எல்லாம் அந்த ஆண்டவன் பார்த்துகிட்டு தான் இருக்காரு… யாரு சங்கடப் படப்போறாங்க… யாரு
சந்தோஷப்படப் போறாங்கன்னு எல்லாரும் பார்க்கத்தான் போறாங்க….. “ என ஆங்காரம் கொண்டு
ஓங்காரக் குரல் உயர்த்தி கர்ஜனை செய்தது கண்டு சப்தநாடியும் ஒடுங்கி ஓரமாய் ஒதுங்கி
வந்த வழியே திரும்பி நடக்கத் தொடங்கினார் முத்துசாமி.
முத்துசாமியின் அநியாயப் பேச்சு கண்டு ஆவேசம் அடைந்த
தம்பியை தடவிக் கொடுத்து, தண்ணீர் குடிக்க வைத்து புலியாண்டி ஆசுவாசப்படுத்த தன்நிலைக்கு
திரும்பிய புலிமுத்து, “ என்னதான் அந்த ஆளு தப்பு பண்ணாலும், தவறாப் பேசுனாலும் நாம
தர்மநியாயம் தாண்ட கூடாது. கூட்டிக் கொண்டு வந்தது போல் கொண்டு போய் விடறேன்னு வாக்கு கொடுத்த மாதிரி நடக்க
வேண்டியது நம்ம கடமை.” என்று எல்லோரிடமும் கூறிவிட்டு முத்துசாமியை பின் தொடர்ந்து
ஓடினான்.
( தொடரும் )
No comments:
Post a Comment