Monday, September 25, 2017

வண்டித் தடம் - பாகம் 6

பாகம் 6 - வண்டித் தடம்

சிறுவயதிலே தாய், தந்தை இழந்த முத்துசாமியின் தந்தை சொந்த அக்கா மாமாவான புலிமணியின் தாய், தந்தை அரவணைப்பிலே வளர்ந்தவர். மைத்துனருக்கு சொந்த தங்கையை கட்டிக் கொடுக்கும்போது தன்பங்கு சீராக அவரது வயலுக்கு கீழ்பக்கம் இருந்த வயலையும் கொடுத்தார் புலிமணியின் தந்தை. எல்லா ஊரையும் போல புலிப்பட்டியிலும் விவசாய காலங்களில் அவரவர் வயலுக்கு அடுத்தவர் வயல் வழியாகதான் ஏர், கலப்பை, விதை, சாணம், உரம், நாற்று போன்ற விவசாயத் தளவாடங்களையும் பின் அறுப்பு காலங்களில் அறுவடை செய்த நெல், வைக்கோல் போன்றவற்றையும் மாட்டு வண்டிகளில் ஏற்றிச் செல்வது வழக்கம். அப்படி தங்கள் பூர்வீக வயலுக்கு செல்லும் வழியாக, வண்டித்தடமாக இருந்த வயலைத்தான் தன் தங்கைக்கு சீராக கொடுத்தார் புலிமணியின் தந்தை.


சொத்து பிரிக்கும் போது புலிமணியின் பங்காக வந்த அந்த வயலை அவர் வெளியூரில் இருந்த காரணத்தால் மூத்த அண்ணன் ஆகிய புலியாண்டியின் தந்தையும், அவருக்குப்பின் அவர் மகன் புலியாண்டியுமாக மேற்பார்வை பார்த்து வந்தனர். காலம், காலமாக வழியாக இருந்த வண்டித்தடத்தையே அவர்களும் உபயோகித்து வந்தனர். முத்துசாமியின் தந்தையும், புலியாண்டியின் தந்தையும் இருந்த வரை எந்த பிரச்சினையும் இல்லை. முத்துசாமி ஏதாவது பிரச்சினை செய்ய முயன்ற போதெல்லாம் இருவரும் அதட்டி, அடக்கி வந்தனர். அவர்கள் மறைவிற்குப்பின் முத்துசாமி ஆட்டத்தை தொடங்கி விட்டார். அவர் வயல்வழியாக வண்டிகள் செல்வதை தடுத்தும், ஆட்களும், கால்நடைகளும் கூட செல்லக்கூடாது எனவும் முரண்டு செய்ததால் ஊராரால் அடிக்கடி கண்டிக்கப்பட்டார்.


இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஊராரால் ஒதுக்கி வைக்கப்பட்டவனும், புலிமணியை அறவே பிடிக்காதவனுமாகிய சுக்காண்டியிடம் தன் வயல் மேற்பார்வையை குத்தகை முறையில் ஒப்படைத்தார் முத்துசாமி. சுக்காண்டியும் அவனால் முடிந்த இடைஞ்சல்களை எல்லாம் செய்து வந்தான். அதில் ஒன்றுதான் இந்த ஓடைக்கரை சரிப்பு வேலை. ஓரிரு நாட்கள் புலியாண்டி ஊரில் இல்லாததும் அவனுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது. இரண்டு நாட்களுக்குப் பின் ஊர் திரும்பிய புலியாண்டி வயலுக்கு சென்ற போது கற்கள் நகர்த்தப்பட்டு, பாதி தூரம் ஓடைக்கரை சரித்து அளவு குறைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து அம்பை சென்று புலிமணியிடமும், அந்த நேரத்தில் விடுமுறையில் வந்து இருந்த புலிமுத்துவிடமும் முறை இட்டான்.  








இரண்டு வருடங்களுக்கு முன்னொரு முறை இப்படித்தான் புலிமுத்து விடுமுறையில் வந்திருந்த பொழுது, புலிமணியின் வயலுக்கு அறுப்பு இயந்திரம் முத்துசாமியின் வயல்வழியாக செல்லக்கூடாது என தடுத்து புலியாண்டியிடம் தகராறு செய்தான் சுக்காண்டி. தகவல் தெரிந்தவுடன் புலிமுத்து தந்தை புலிமணியையும் அழைத்துக் கொண்டு அம்பை ரயில்நிலையம் அருகே வசித்து வந்த முத்துசாமியின் வீட்டிற்கு புகார் கூறச் சென்றான். வீடு தேடி வந்தவர்களை மரியாதைக்கு கூட வீட்டிற்குள் அழைக்காமல் வாசலிலே நிறுத்திப் பேசிய முத்துசாமி, “ அவன் பாடு… உங்கள் பாடு.. “ என்று அலட்சியமாக கூறிவிட்டு அவசர வேலையாக வெளியே போவதாக சென்றுவிட்டார். கொதிப்பு அடைந்த புலிமுத்துவை புலிமணிதான் சமாதானப்படுத்தி அழைத்து வந்தார். அந்த முறை வேறுவயல் வழியாக அறுப்பு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டு அறுவடை செய்யப்பட்டு, நெல்லும் வியாபாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.


சுக்காண்டியும், முத்துசாமியும் மேலும் திருட்டுவேலை செய்யமுடியாமல் ஊரார் முன்னிலையில் ஓடையை மறுபடியும் அளந்து, மீதி இருக்கும் ஓடைக்கரை அளவான பழைய அளவிற்கே முழு ஓடைக்கும் குழாய் பதித்து சரிக்க முடியாமல்  செய்து விடலாம் என புலிமணி அறிவுரை கூற புலிமுத்துவும், புலியாண்டியும் ஒத்துக்கொண்டனர். முத்துசாமி ஏற்கனவே உங்கள் பாடு… அவன்பாடு என ஒதுங்கிக் கொண்டதால் புலிமுத்துவே நேராக புலிப்பட்டி சென்று சுக்காண்டியிடம், “ நாளை மறுநாள் ஒடையை அளந்து குழாய் பதிக்கப்போகிறோம். நீயும் வந்து சரிபார்த்துக் கொள் “ என்று கூற பதிலே சொல்லாமல் சென்றுவிட்டான் சதிகாரன் சுக்காண்டி.


மறுநாள் காலையிலே புலிமுத்து புலியாண்டியையும், கொத்தனாரையும் அழைத்துக்கொண்டு அம்பை முழுதும் சுற்றி இரண்டடி விட்டம், ஆறடி நீள அளவில் சிமெண்ட் குழாய்களையும், தேவையான செங்கல், மணல், ஜல்லி, சிமெண்ட் ஆகியவற்றை வாங்கி டிராக்டரில் ஏற்றி வயலிற்கு கொண்டு சென்று இறக்கி விட்டார்கள்.  அதற்கு மறுநாள் காலையிலே வீட்டில் இருந்து கிளம்பிய புலிமுத்து புலியாண்டி, கொத்தனார், கையாள்கள், அக்கம்பக்க வயல் உரிமையாளர்கள் மற்றும் ஊர்ப் பெரியவர்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு வயலை அடைந்தான். உடனே கொத்தனாரின் கையாள்கள்  ஜல்லி, மணல், சிமெண்ட் கலந்து கலவை தயார் செய்ய ஆரம்பித்தார்கள்.


வெகுநேரமாகியும் சுக்காண்டி வராத காரணத்தால்  கையோடு அழைத்து வரச்சொல்லி அனுப்பப்பட்ட ஆள் அவனும், ரெங்கம்மாவும்  வீட்டைப் பூட்டி விட்டு அதிகாலை முதல் பேருந்திலே எங்கோ கிளம்பி சென்று விட்டதாக கூறவே கடும்கோபம் கொண்ட காத்திருந்த ஊர்ப்பெரியவர்களும், அக்கம்பக்க வயல்காரர்கள் அனைவரும், “ இவ்வளவு பேரு இங்கே காத்துகிட்டு இருக்கோம். வேணும்கிட்டே இவன் இப்படி பண்றான். நம்ம ஓடையை அளந்து, குழாய் பதிக்கிற வேலையை முடிப்போம். அவன் வந்து ஏதும் பிரச்சினை பண்ணா பார்த்துக்கலாம். நீங்க வேலையை ஆரம்பிங்கப்பா… “ என உறுதி கொடுக்க, சரிக்கப்பட்ட ஓடை ஒழுங்காக அளக்கப்பட்டு, கரை வெட்டி திருத்தப்பட்டு, கலந்து வைத்திருந்த ஜல்லிக்கலவை ஓடை முழுதும் தண்ணீர் தேங்காமல் செல்லும்படி வாட்டச்சரிவோடு விரிக்கப்பட்டு, குழாய்களும் வரிசையாக பொருத்தி, பதிக்கப்பட்டு கல் கொண்டு அசையாமல் அடை கொடுக்கப்பட்டு , குழாய்களின் மீதும் செங்கல் அடுக்கி சிமெண்டுக் கலவை கொண்டு பூசப்பட்டு மண் கொண்டு மூடப்பட்டன.








ஓடைக்கரை அளந்து அளவுக்கற்கள் நடப்பட்டு, இருபுறமும் ஒழுங்குக்கயிறு கட்டப்பட்டு வேலை ஜரூராக நடந்து கொண்டு இருக்கும் போதே உச்சிப்பொழுது ஆகிவிட்டதால் ஊர்ப்பெரியவர்களும், அக்கம்பக்க வயல்காரர்களும் மதிய உணவிற்கு வீடு சென்று பின் காபி, டீ குடித்து விட்டு வெயில்தாழ சிலர் மட்டுமே திரும்பி வந்து பார்த்து சென்றனர். புலிமுத்துவும், புலியாண்டியும் கொத்தனார், கையாள்களுக்கு ஏற்பாடு செய்திருந்த காபி, டீ உணவையே சாப்பிட்டு விட்டு அங்கேயே இருந்துவிட்டனர். ஒருவழியாக வேலை முடியும் போது மாலை நேரம் முடிந்து இருளும் கவியத் தொடங்கி விட்டது. பின் அங்கிருந்த கொத்தனார் சாமான்கள் மற்றும் வேலை ஆட்களை ஏற்றவந்த டிராக்டரிலே புலிப்பட்டி ஊருக்குள் வந்து தன் இருசக்கர வாகனத்தில் ஏறி அம்பாசமுத்திரம் அடைந்து, குளித்து, இரவு உணவு அருந்தி, தந்தையான புலிமணியிடம் விபரங்களை கூறிவிட்டு, அலுப்பில் அயர்ந்து தூங்கிய புலிமுத்துவை மறுநாள் காலை ஏழு மணி அளவில் தலைமாட்டில் வைத்திருந்த அலைபேசிதான் இடைவிடாது அடித்து எழுப்பியது.


 ( தொடரும் )



No comments: