Wednesday, March 25, 2015

காலை உடைத்த காஞ்சனா…. - பாகம் 4


உருண்டோடும் இந்த பூமிப்பந்தில் ஆச்சரியங்களும், அதிசயங்களும் மட்டுமல்ல அமானுஷ்யங்களும் நிறைந்ததுதான் பாச,பந்தங்களால் பிணைக்கப்பட்ட மானிட வாழ்க்கை. ஏற்றம், இறக்கம் எத்தனையோ கொண்ட வாழ்வின் பல கட்டங்களில் நான் சந்தித்த பல அசந்தர்ப்பமான சம்பவங்களை ஏற்கனவே

போன்ற பதிவுகளில் பகிர்ந்துள்ளேன். கடந்த பத்தாண்டிற்கு முன் என் வாழ்வில் நடந்த இத்தனை காலமாக தைத்த முள்ளாய் என் மனதில் தழும்பேறியிருந்த இந்த நிகழ்ச்சியும் மேலே குறிப்பிட்டவை  போன்ற ஒரு அனுபவப் பகிர்வே ஆகும்.

பாகம் 2 ஆராய்ச்சி நிறுவனமும், அரசாங்கவிதிகளும்

பாகம் 3 - பாதியில் திரும்ப வேண்டியதுதானா பாலாப்பூரிலிருந்து….

மேலே உள்ள முதல் மூன்று பாகங்களை படித்துவிட்டு பின்  இங்கு தொடரவும்.


பாகம் 4 - காணாமல் போன காஞ்சனா….


காஞ்சனா ஆராய்ச்சியகத்தின் தோட்ட பராமரிப்பு மற்றும் சுகாதாரத்துறை ஒப்பந்த நிறுவனத்தில் மேஸ்திரியாக பணிபுரியும் பக்கத்து ஊர்ப்பெண். அவளுக்கு கீழ் ஆண், பெண் என இருபாலருமாக முப்பது பேருக்கும் மேல் வேலை செய்கிறார்கள். அன்றாடம் அனைத்து டிபார்ட்மெண்டுகளிலும் இருக்கும் வேலைகளின் அளவைப் பொறுத்து இருவர், மூவர் என பல குழுக்களாக பிரித்து வேலை பார்க்க அனுப்பிவிட்டு பின் எல்லா இடத்திற்கும் சென்று மேற்பார்வை செய்து அந்தந்த துறைத்தலைவரிடம் கையெழுத்து வாங்கி வரவேண்டியது இவள் பணி.


எங்களது சப் ஸ்டேசனுக்கும் தினம் வந்து செல்லும் போது என்னிடம் கையெழுத்து வாங்கிச் செல்வதால் அறிமுகம் உண்டு. பார்த்தால் சிரிக்கும் அளவு பழக்கம்.  பார்ப்பதற்கு பழைய நடிகை ஒய்.விஜயா போல் களையான சிவந்த நிறமும், செழிப்பான உடல்கட்டும், கவர்ச்சியான முகவெட்டும் கொண்டவள். எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசி பழகுபவள் என்பதால் ஆராய்ச்சியகத்தின் அடிமட்டத் தொழிலாளர்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை அனைவருக்கும் அவள் மீது ஒரு கண். 


திருமணம் ஆகி கணவரைப் பிரிந்தவள் என்பதாலும், பணிக்கு வரும் போதும், போகும் போதும் தினம் அந்த நேரத்தில் கண்ணில் படும் ஆராய்ச்சியக ஊழியர்கள் அல்லது ஒப்பந்த தொழிலாளர்கள் யாராவது ஒருவருடன் பைக் அல்லது காரில் வந்து செல்வதாலும், எப்போதுமே பகட்டான சேலை கட்டி கைகளில் அடுக்கடுக்கான தங்க வளையல்கள், விரல்களில் வித்தியாசமான மோதிரங்கள், தினம், தினம் கழுத்தில் பெரிய பெரிய புதிய மாடல் செயின்கள் , காதுகளில் தொங்கட்டான்கள், கம்மல்கள் என வித விதமான தங்க நகைகள் அணிந்து ஆராய்ச்சியகம் முழுதும் பந்தாவாய் பவனி வருவதாலும் அவளைப் பற்றி ஏதேதோ கதைகள்.
ஞாயிறன்று காஞ்சனாவிற்கு விடுமுறை என்பதாலும், எதிர்பாராத இடத்தில் திடீரென அவளைப் பார்த்ததுமே எனது அதிர்ச்சிக்கு காரணம். ’இன்னைக்கு லீவாச்சே. இந்த நேரத்தில், இந்த காட்டுப்பகுதியில் உனக்கு என்ன வேலை’ என்று எனது மனதில் பட்டதை அவளிடம் கேட்டும் விட்டேன். ‘இல்லை சார். என்னோட அம்மாவிற்கு உடம்பு சரியில்லை. அதான் கஷாயம் வைக்க பச்சிலை பறிக்க வந்தேன்’ என்றாள்.


‘தனியாகவா வந்தாய். இந்த நேரத்தில் இந்த இடத்திற்கு இவ்வளவு நகைகளை அணிந்து வந்திருக்கிறாயே. பயமாக இல்லையா உனக்கு’ என்று கேட்டதற்கு, ‘தெரிஞ்ச இடம். பழகுன ஆள்கள். எனக்கு என்ன சார் பயம்.’ என்று கூறியவள் 'இதையா தேடி வந்தீங்க' என்றவாறே அவள் கையிலிருந்த பந்தை என்னிடம் தந்தாள். அதற்குள் விளையாட்டு முடிந்து விட்டதற்கு அடையாளமாக ஆரவாரக் குரல்களும், விசில் சத்தங்களும் கேட்க நான் மைதானம் நோக்கி திரும்பி விட்டேன்.அன்று அமாவாசை தினம் என்பதால் சீக்கிரம் இருட்டி விட நானும், மணியும் பணி முடிந்து பாலாப்பூர் செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்த இரண்டு காவலர்களின் மோட்டார் பைக்குகளில் ஏறி சாரஸ்தா வந்திறங்கி மணி அவன் அறைக்கு செல்ல நான் தங்குமில்லம் வந்து சேர்ந்தேன்.


மறுநாள் ஞாயிறு ஓய்வு தினம் என்பதாலும், மதியத்திற்கு மேல் கோட்டி நகருக்கு சென்று வரலாம் என முந்தைய தினமே மணி சொல்லியிருந்ததாலும் மெதுவாக எழுந்து தேசிங்கு செய்த சமையலுக்கு சிறு உதவி செய்துவிட்டு குளித்து சாப்பிட்டு கிளம்பிக் கொண்டிருந்தபோது மணியும், சாஜனும் வர நான், பாண்டே, தேசிங்கு ஆக ஐவரும் கோட்டி கிளம்பிச் சென்றோம். சென்னையின் தியாக.நகரைப் போல இல்லையென்றாலும் 'ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை' என்ற அளவிலே கோட்டி நகரில் சில துணிக்கடைகளும், வணிக வளாகங்களும் இருந்தன.இரவு ஏழு மணி வரை சுற்றி விட்டு பின் அங்கு உள்ள ‘கோகுல் சாட்ஸ்’ என்னும் பிரபலமான சிற்றுண்டி கடைக்குச் சென்று விதவிதமான சாட்ஸ் வகை உணவுகளை சுவைத்து பின் அங்கிருந்து கிளம்பி பேருந்து மூலம் பாலாப்பூர் சாரஸ்தா அடைந்து தங்குமில்லம் வந்து சேரும்போது இரவு மணி ஒன்பது ஆகிவிட்டது. சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு மணியும் சாஜனும் கிளம்ப நாங்களும் உறங்கச்சென்றோம். 

திங்கள் வழக்கம் போல் அலுவலகம் சென்று பின் பணிகளுக்காக ஆராய்ச்சி நிறுவனத்தின் உள் சென்றபோது அங்கு சுகாதாரத்துறையின் வாயில் கதவருகே நிறைய கூட்டமாக இருந்தது. ’வாங்க சார். என்னன்னு போய் பார்ப்போம்’ என மணி அழைக்க அருகில் சென்றோம். ஒப்பந்த ஊழியர்களோடு பக்கத்து கிராம முக்கியஸ்தர்கள் சிலரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். மணி அவனுக்கு பழக்கமான ஊழியர் ஒருவரை அழைத்து ‘என்ன ஏது’ என்று விசாரிக்க அவர்கள் சொன்ன விபரம் அதிர்ச்சியாக இருந்தது. ‘ஆம். காஞ்சனாவைக் காணோமாம். சனி மாலை பச்சிலை பறிக்க வந்தவள் அதன்பின் வீடு திரும்பவில்லையாம்’. சனி இரவும், ஞாயிறு முழுதும் அக்கம்பக்க கிராமங்களிலும், சொந்தக்காரர்கள் வீட்டிலும் தேடிய ஊர்க்காரர்கள் திங்கள் காலை ‘அவள் வேலை செய்யும் இடத்தில் விசாரித்து ஏதும் விபரம் கிடைக்கிறதா’ என்று பார்க்க வந்துள்ளார்கள்.


அலுவலகத்திலும், உடன் பணிபுரிபவர்களிடமும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதால் காவல்நிலையம் சென்று புகார் கொடுக்கலாம் என்று வந்தவர்கள் கிளம்பிச் சென்றார்கள். தேவையில்லாமல் ஏதும் குழப்பம் வரக்கூடாது என்பதற்காக சனி மாலை அவளைப் பார்த்த விபரத்தை மணியிடமும், மற்ற யாரிடமும் கூறவில்லை. அதன்பின் வந்த நாட்களில் எங்கள் துறையில் பணிபுரியும் உள்ளூர்க்காரர் மூலம் அவ்வப்போது காஞ்சனா பற்றி ஏதாவது தகவல் வந்து கொண்டுதான் இருந்தது. ஏற்கனவே திருமணமாகி கணவனைப் பிரிந்து இருந்த காஞ்சனா யாருடனோ ஓடிப்போய் இருக்கலாம் என்பது போன்ற யூகங்களும், யாருடன் சென்றிருக்கலாம் என்பது போன்ற ஆராய்ச்சிகளுமே அவற்றில் முக்கியமானவை.


நான்கைந்து நாட்களுக்குப் பின் ஒரு நாள் காலையில் பணிக்கு ஆராய்ச்சி நிறுவன பேருந்தில் செல்லும் போது மைதானத்தில் போலீஸ் வாகனங்களும், ஆம்புலன்சும் நின்று கொண்டிருந்ததை பார்த்தோம். உள் நுழைவு வாயிலின் அருகில் இருந்த செக்யூரிட்டி அலுவலகத்தில் கையெழுத்து போடும் இடத்திலும் ஒரே பரபரப்பு. விசாரித்தால் முந்தியநாள் இரவு மைதானத்தை ஒட்டிய காட்டுப்பகுதியில் நாய்கள். கூட்டமாக குரைத்து சண்டை போட்டு கொண்டிருந்தனவாம். திருடர்கள் யாரும் நுழைந்து விட்டார்களா, என்ன, ஏது என்று பார்க்கச் சென்ற இரவுக்காவலர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி தரக்கூடியது. கொன்று புதைக்கப்பட்டிருந்த காஞ்சனாவின் பிணத்தை நாயோ, நரியோ வெளியே இழுத்து போட்டிருந்தனவாம். அதன்பின் செக்யூரிட்டி இன்சார்ஜ் மூலம் போலீசுக்கு தகவல் கொடுத்து, ஆம்புலன்ஸ் வந்து அங்கேயே பிரேதப்பரிசோதனை செய்ய முடிவெடுத்து அரசு அதிகாரிகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்களாம். 


இரண்டு நாட்களுக்கு பின் வந்த தகவல் மிகவும் அதிர்ச்சியானது. ஆம். காஞ்சனா அணிந்திருந்த தங்க நகைகளுக்கு ஆசைப்பட்டு யாரோ அவளை பின்புறமாக தாக்கி தலையில் பலமாக அடித்துக் கொன்றிருக்கிறார்கள். ஆராய்ச்சி நிறுவனத்தின் உள் நடந்ததாலும், ராணுவ வீரர்கள் அல்லது போலீஸ்காரர்களே சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதாலும் மூலிகை பறிக்கச் சென்றவள் காட்டுவிலங்கு தாக்கி இறந்துவிட்டதாக கேஸை முடித்துவிட்டார்களாம். சம்பவம் நடந்த அன்று இரவுப்பணியில் இருந்த அனைத்துக் காவலர்களையும் கோல்கொண்டா கோட்டைப் பணிக்கு அனுப்பி விட்டு ஆராய்ச்சி நிறுவனக் காவல் பணிக்கு வேறு ஆள்களை மாற்றிவிட்டார்களாம்.


அடுத்து வந்த வாரங்களில் வேலைகளின் பரபரப்பில் காஞ்சனா குறித்த பேச்சுக்கள் குறைந்து, சில நாட்களில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே அனைவரும் மறந்து விட்டனர் என்றாலும் சனி, ஞாயிறுகளில் மைதானத்தில் விளையாடப்போவதை பலரும் குறைத்துக்கொண்டனர். காஞ்சனா காணாமல் போன சம்பவம் நடந்து சரியாக ஒரு மாதத்திற்கு பின் ஒரு நாள் மாலை மைதானத்தை தாண்டி காட்டுக்குள் இருந்த வாட்ச் டவரில் லைட் எரியவில்லை என்று புகார் வந்ததால் எங்கள் டிபார்ட்மெண்டில் இருந்து சாகரும், சங்கரும் தேவைப்படும் உபகரணங்களை எடுத்துக் கொண்டு கோளாறு சரி செய்ய ஆறு மணி அளவில் கிளம்பிச் சென்றனர். எப்போதுமே இரவு பணிக் குழு இரவு ஏழு,ஏழரை மணிக்கு வந்தபின்னே பகல் குழு கிளம்புவது வழக்கம் என்பதால் நாங்களும் காத்துக் கொண்டிருந்தோம். சுமார் ஏழு  மணி அளவில் செக்யூரிட்டி அலுவலகத்தில் இருந்து போனில் எங்களை அழைத்து சங்கரும், சாகரும் காட்டுப்பகுதியில் மயங்கிக்கிடப்பதாக கூற ஐந்து மணிக்கே வீட்டிற்கு சென்று விட்ட கவாண்டேவிற்கு போன் மூலம் தகவல் கூறி விட்டு இரண்டு பேரை மட்டும் டிபார்ட்மெண்டில் வைத்து விட்டு அனைவரும் ஜீப்பை எடுத்துக்கொண்டு, மிகுந்த பதட்டத்தோடு சென்றோம். வழியெல்லாம் கும்மிருட்டாக இருக்க என்ன காரணம் என்று யோசித்த போதுதான் அன்று அமாவாசை என்பது நியாபகத்திற்கு வந்தது.

 ( தொடரும் )

2 comments:

KILLERGEE Devakottai said...


நிறைய இருக்கிறது நண்பா, நாளைக்கு படிக்கிறேன்.

Anonymous said...

Anna going thrill waiting for next episode.