பலன்
எதிர்பாராத அன்பு மற்றும் நன்றிக்கு சிறந்த உதாரணமாகிய பிராணிகளுடனான எனது நினைவுகளும்,
நிகழ்ச்சிகளும் ‘மாடல் ஹவுஸ்’ எனப்படும் தாழையூத்து சுந்தரா காம்பவுண்டின் மணி, பிரவுனியில்
இருந்து ஆரம்பிக்கிறது. மொத்தம் பதினைந்து வீடுகள் கொண்ட சுந்தரா காம்பவுண்டிற்கு அவை
எப்படி வந்து சேர்ந்தன. யார் கொண்டு வந்து விட்டார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. எல்லோர்
வீட்டிலும் சாப்பாடு வைப்பார்கள் என்பதாலும்,
தங்குவதற்கு எவர் தொந்திரவும், இடப்பிரச்சினை இல்லாத காரணத்தாலும், அவைகளும் குடியிருப்பின் நிரந்தர உறுப்பினர்களாக
அந்நியர் யாரும் அனாவசியமாக உள்ளே நுழைந்து விடாமல் பொறுப்பாய், ஒற்றுமையாய் காவல்
காத்து வந்தன. அப்படி மீறியும் ஆடு,மாடு, அன்னிய மனிதர்கள் புகுந்து விட்டால் இரண்டும் சேர்ந்து விரட்டி,விரட்டி துரத்தி குரைத்து,
கடித்து மறுபடியும் அந்தப்பக்கம் வராதபடி செய்து
விடும். 'நாய்க்கு நாய் ஆகாது' என்றாலும் அவை இரண்டும் எப்போதும் சண்டை போட்டதே கிடையாது.
காம்பவுண்ட்டின் சிறுகுழந்தைகள் அனைவரும் அவற்றின்
வாலை பிடித்து இழுப்போம். மேலே ஏறி உட்கார்ந்து காதுகளைப் பிடித்து கொண்டு சவாரி செய்வோம்.
மேலே விழுந்து அமுக்குவோம். எப்போதுமே எங்களிடம் உறுமியதோ, குரைத்ததோ, யாரையும் கடித்ததோ
கிடையாது என்பதை இப்போது நினைத்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது.
பக்கத்தில் ஆடு,மாடு வளர்த்து வந்த மேரி என்பவர் ஒரு பிளாஸ்டிக் குடத்தை பொதுவான ஓரிடத்தில் வைத்து
குடியிருப்போர் வீடுகளில் சாதம் வடிக்கும் கஞ்சி, மற்றும் மிஞ்சும் உணவுப்பொருள்களையும்
அதில் போட்டு வைக்குமாறு எல்லோரிடமும் சொல்லி ஏற்பாடு செய்திருந்தார். ஒரு நாள் விட்டு
ஒரு நாள் மற்றொரு குடத்தை வைத்து விட்டு நிறைந்த குடத்தை எடுத்துச் சென்று அவர் வீட்டிலுள்ள
ஆடு,மாடுகளுக்கு தீவனமாக அளித்து வந்தார். ஒருமுறை மதியம் பசி தாங்க முடியாத பிரவுனி
அந்தக் கஞ்சிப் பானையில் கிடந்த உணவை உண்ண தலையை விட குடத்தின் வாய்ப்பகுதியில் தலை
மாட்டிக் கொண்டு விட்டது. பின் மணிதான் சத்தம் போட்டு குலைத்து ஆள்களை அழைத்து நண்பனை
காப்பாற்றியது. அந்திமக்காலம் நெருங்கி விட்டால் வளர்த்தவர் கண்படாமல் நாய்கள் மறைந்து
விடும் என்பதை உறுதிப்படுத்துவது போல முதலில் மணியும், பின் பிரவுனியும் யார் கண்ணிலும்
படாமல் எங்கோ சென்று விட்டன.
சொந்தக்கிராமத்தில்
வயல் காவலுக்காக வீட்டுக்கு வீடு நாய் வளர்ப்பார்கள். ஒரு பெரியப்பா வீட்டில் அமுதா
என்று பெயரிட்டு செந்நிற புல்டாக் இன பெண்நாய் ஒன்று வளர்த்தார்கள். குலைத்தால் எட்டூருக்கு
கேட்கும். குளிப்பதற்கு ஆற்றுக்கோ, வாய்க்காலுக்கோ போகும் போது அதனையும் குழந்தையை
போல இடுப்பில் பெரியம்மா தூக்கி செல்லுவது வேடிக்கையாக இருக்கும். வீட்டில் அனைவரும்
சாப்பிடும் பொழுது அதற்கும் தனித்தட்டு வைத்து என்ன சாப்பிடுகிறோமோ அதை வைக்க வேண்டும்.
இல்லையென்றால் சாப்பிடுபவர் முன் அமர்ந்து குலைக்கும். சாப்பிடுபவர் கையை முன்னங்கால்களினால்
சாப்பிட விடாமல் தடுக்கும். ஊருக்கு செல்லும் போதெல்லாம் அதற்கு பொறையும், பிஸ்கட்டும்
வாங்கிப்போடுவதால் மிக பிரியமாக இருக்கும். அதற்கு ஜோடி வேண்டும் என்பதற்காக சத்யராஜ்
என்னும் ஆண் புல்டாக் நாய் பெரியம்மாவின் தம்பி வீட்டில் வளர்க்கப்பட்டது. பேருக்கேற்றார்
போல் வில்லத்தனம் பல செய்யும் நாயது.
சிறுவயதில்
குடும்பத்தில் மூத்தவரான பெரிய பெரியப்பா மகன் திருமணத்திற்கு சென்றிருந்தபோது உறவினரொருவர்
வீட்டில் சடைநாய் (பொமரேனியன்) குட்டி போட்டிருப்பதை பார்ப்பதற்காக சொந்தக்கார மழலைப்பட்டாளங்களோடு
அண்ணனும், நானும் சென்றோம். முதல் மாடியிலிருந்து இரண்டாவது மாடிக்கு செல்லும் படிக்கட்டின் கீழ் அமைந்துள்ள கதவில்லா அறையில் நாயும், குட்டிகளும்
மூங்கிலான கோழிக்கூட்டை வைத்து மூடப்பட்டு மேலும் பாதுகாப்புக்கு தகரம் வைத்தும் அடைக்கப்பட்டிருந்தது.
கோழிக்கூட்டை தூக்கி பார்க்கும் போதே தாய் நாய் குலைக்க ஆரம்பித்துவிட்டது. யாரோ ஒரு
குறும்புக்காரன் தகரத்தையும் எடுத்து விட நாய் பயங்கர கோபத்துடன் எல்லோரையும் துரத்த
சிலர் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்ள, சிலர் மாடிப்படியில் பாய்ந்து ஏற பழக்கமில்லாத
இடத்தில் தப்ப வழியில்லாமல் மாட்டிக்கொண்ட நானும், எனது அண்ணனும் செய்வதறியாமல் பதினைந்தடி
உயரமான மாடியில் இருந்து தரைக்கு குதித்து விட்டோம். சப்பென்று தரையோடு தரையாக உட்கார்ந்ததால்
அண்ணனுக்கு பிட்டியிலும், , சக்கென்று தரையில் கால்களை ஊன்றி உட்கார்ந்ததால் எனக்கு
இரண்டு கால்களிலும் சரியான அடி. கிராமம் என்பதால் உடனே கை வைத்தியம் செய்பவரை அழைத்து
தடவி கால் சுளுக்கு மற்றும் ரத்தக்கட்டுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.
எட்டாம்
வகுப்பு படிக்கும் போது அப்பா வேலை செய்த தொழிற்சாலையின் குடியிருப்பிற்கு மாறிய போது
அங்கு எங்களை முதல் ஆளாய் வரவேற்றது டாமிதான். வெள்ளை நிறத்தில் குட்டையாக, குண்டாக,
கப்பைக்கால்களுடன் பார்க்கும் போதெல்லாம் வாலை ஆட்டிக் கொண்டு இருக்கும் டாமிக்கு தினமும்
எங்கள் வீட்டில் சாப்பாடு வைப்போம் என்பதால் எங்கள் வீட்டு முன்வாசல், பின்வாசல் விட்டு
நகராது. பக்கத்து குடியிருப்பில் வளர்த்த டைகர் பார்க்க சாதுவாய் இருக்கும். ஆனால்
யாராவது புதிய நபர்கள் வந்தால் நைசாக பின்னாடி சென்று கடித்துவிடும். இது போக கம்யூனிஸ்ட்காரரான
கடைசி வீட்டிற்கு மாதமொரு முறை அவர்கள் பழைய வீட்டில் இருக்கும்போது வளர்த்த நாய் வந்து
செல்லும். அவர்கள் இருந்த பழைய வீட்டைச் சுற்றி கசாப்புக்கடைகள் நிறைய இருந்ததால் கறி
ருசி கண்டு பழகிய அந்த நாய் புதிய வீட்டில் மாதம் ஓரிரு நாட்களுக்கு மேல் தங்கியதேயில்லை.
தொழிற்சாலை உயரதிகாரியின் மிகப்பெரிய பங்களாவில் வளர்த்த உயர்ஜாதி வேட்டை நாய்களை இரவில்
காவலுக்காக அவிழ்த்து விட்டுவிடுவார்கள். அவ்வப்போது சத்தமில்லாமல் குடியிருப்பில்
புகுந்து விடும் நாய்கள் சத்தம் கேட்டு நாங்கள் விரட்டுவதற்குள் டாமியையும், டைகரையும்
குதறி எடுத்து குற்றுயிராக்கி விடும். ஏதோ காட்டுப்பூச்சி கடித்து டாமி இறந்துவிட பக்கத்து
வீட்டில் காவலுக்காக டாமி என்று இன்னொரு குட்டி எடுத்து வளர்த்தார்கள். பெயர் ராசியோ
என்னவோ அதுவும் கப்பைகால் கொண்டதாகவே இருந்தது.
படிப்பு,
முடித்து சென்னைக்கு வந்து வேலை செய்த கம்பெனியில் ஜானி என்னும் டாபர்மேன் நாய் இருந்தது.
கறுப்பு நிறத்தில் ‘விடாது கருப்பு’ போல பார்க்க பயங்கரமாக பிரமாண்டமாயிருந்தாலும் குழந்தை போல பழகும். பகல்
முழுதும் தனியறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜானி இரவில் அவிழ்த்து விடப்படும். வாரத்தின்
சில நாட்களின் மாலை நேரங்களில் பக்கத்தில் இருக்கும் மைதானத்திற்கு அழைத்துச் செல்வேன்.
பார்ப்பவரெல்லாம் அதன் பிரமாண்ட தோற்றத்தை கண்டு பயந்து ஒதுங்குவர். எகிப்தில் பணி
செய்த போது தங்கியிருந்த வில்லாவின் உரிமையாளர் வளர்த்த ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாயை
கண்டு நாங்கள் பயந்தால் அது எங்களை கண்டு பயந்து ஓடும்.
பாபநாசத்தில்
வீடு கட்டி குடியேறியவுடன் ரோட்டடி வீடு என்பதால் காவலுக்கு ஒரு நாய் வளர்க்க வேண்டும்
பலரிடம் சொல்லி இருந்தேன். பெரியப்பா பேரன்,அவர்கள் வீட்டில் வளர்க்கும் குட்டிநாயை
பிள்ளைகள் பாடய் படுத்துகிறார்கள் எனக் கூறி எங்கள் வீட்டில் விட்டுச் சென்றான். ஒரு
மாதம் கூட ஆகி இருக்காத குட்டி கறுப்பு வெள்ளை கலந்த நிறத்தில் பார்க்கவே பாவமாய் இருந்தது.
தினமும் பால் ஊற்றி, குளிப்பாட்டி பராமரித்ததில் ஓரளவு தேறியது. விடுமுறை முடிந்து
சிங்கப்பூர் திரும்பிய பின் போன் செய்யும் போதெல்லாம், ’குட்டி எப்படி இருக்கிறது,
என்ன பெயர், குலைக்க ஆரம்பித்து விட்டதா’ என்று கேட்க தவறுவதில்லை.
நான்கைந்து
மாதங்களுக்கு பின் மறுபடியும் ஊருக்கு சென்றபோது நன்றாகவே வளர்ந்திருந்தது. வீட்டில்
அதற்கு ‘அப்பு’ என்று பெயர் வைத்திருந்தார்கள். குட்டியிலிருந்து சிமெண்ட் தரையில்
கிடந்து வளர்ந்ததால் அதன் முன்னங்கால்கள் இரண்டும் சிறிது வளைந்து அபூர்வ சகோதரர்கள்
படத்தில் வரும் குள்ளக் கமல் வித்தியாசமாக
நடந்ததால் ‘அப்பு’ என்ற அந்த பெயரும் அதற்கு பொருத்தமாகவே இருந்தது. கழுத்திற்கு பட்டியும்
கட்டுவதற்கு சிறிய இரும்புச்சங்கிலியும் வாங்கி
கட்டியும் போட்டாகி விட்டது. தெருவில் யார் சென்றாலும் நன்றாக குலைத்தது. விடுமறை முடிந்து
திரும்பும் வரை தினமும் வீட்டின் அருகிலிருந்த ஓடையில் குளிக்க வைத்து நீந்தச் செய்தேன்.
அடுத்த
விடுமுறைக்கு சென்ற போது பார்த்தால் வளர்ந்திருந்ததால் சங்கிலியை இழுத்து அறுத்திருந்த
அப்பு உணவிற்காகவும், ஓய்விற்காகவும் மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே வீட்டிற்கு வரும்.
மற்ற நேரங்களில் வீட்டில் தங்குவதேயில்லை.
ஆனால் சீட்டி அடித்து அழைத்தாலோ அல்லது ‘அப்பு’ என்று குரல் கொடுத்தாலோ எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடும். காலையிலும், மாலையிலும் நடைப்ப்யிற்சி செல்லும்போது, விரட்டி,விரட்டி விட்டாலும் அதுவும் கூடவே வரும். தமிழ் வருடப்பிறப்பான சித்திரை விசுவிற்கு முந்திய நாள் வீட்டிற்கு விருந்தாள்கள் வந்திருக்க வி.கே.புரம் பஜாருக்கு சென்று பொருட்கள் வாங்கி வந்து பார்த்தால் ரோட்டில் அங்கும், இங்கும், ஓடிய
அப்பு பைக்கில் அடிபட்டு கால் உடைந்து பரிதாபமாகக் கிடந்தது. மறுநாள் காலையில் மெதுவாக
நடக்க ஆரம்பித்த பின்னே வீட்டில் அனைவருக்கும்
மனது சமாதானமானது. பின் உள்ளூர் அரசாங்க கால்நடை மருத்துவமனையில் இருந்து கம்பவுண்டரை
அழைத்து வந்து ஊசி போடப்பட்டது. அந்த வாரத்திலே அம்பை தாலுகா தலைமை மருத்துவமனைக்கும்
கொண்டு சென்று ரேபிஸ் தடுப்பூசியும், மற்றும் சத்து டானிக்குகளும் வாங்கி வந்து அறுந்திருந்த
சங்கிலியை சரி செய்து கட்டிப்போட்டு வேளாவேளைக்கு உணவும், மருந்தும் கொடுத்து
கொஞ்சம் தேறிய பின் மறுபடியும் சங்கிலியை
அறுத்து வேலி வழியாக நுழைந்து வெளியே சென்று விட்டது. சரி, பரவாயில்லை என்று விட்டால்
புது பழக்கமாக தெருவில் சைக்கிள் மற்றும் பைக்கில் செல்வோரை எல்லாம் துரத்த ஆரம்பித்து
விட்டது. 'பைக்கில் அடிபட்டதால் தான் பழிவாங்கும் விதமாக இப்படி செய்கிறது' என்று அக்கம்பக்கத்தில்
இருப்பவர்கள் கூறியதாலும், யாரையும் கடித்து விட்டால் பின் வரும் பிரச்சினைகளையும்
நினைத்து இது சரிப்படாது என்று எடை கூடிய பெரிய சங்கிலியாக வாங்கி கட்டிப் போட்டு விட்டு
நான் விடுமுறை முடிந்து திரும்பி விட்டேன்.
நிரந்தரமாக
கட்டி போட்டபின் சேட்டைகள் குறைந்திருந்தத அப்பு காலை ஒருமுறை, மாலை ஒரு முறை மட்டும்
நடை பயிற்சிக்கு மட்டும் வெளியில் சங்கிலியுடன் அழைத்துச் செல்லப் படுவதாக வீட்டில் கூறி அறிந்தேன்.
இரண்டு மாதங்களுக்கு பின் கழிச்சல் நோய் வர வந்து பார்த்து மருந்து கொடுத்த கம்பவுண்டர்,
‘இன்னொரு முறை வந்தால் பிழைப்பது கடினம்’ என்று கூறிவிட்டாராம்.அதன்பின் எத்தனையோ கவனமாக
உணவும், மருந்தும் கொடுத்து வந்தாலும் வயிற்றில் இருந்த பூச்சிகளின் காரணமாக மறுபடியும்
கழிச்சல் நோய் வந்து அப்பு மிகவும் கஷ்டப்பட்டதாக அலைபேசியில் அறிந்தேன். அக்கம்பக்கம்
நாய் வளர்ப்பவர்களிடம் விசாரித்தால், ‘நாயின் நோய்க்கு மருந்து நாய்க்கே தெரியும் அதுவே
தேவையான மூலிகையை தேடி தின்று சரி செய்து கொள்ளும்’ என்று கூறி உள்ளனர். வீட்டில் என்னை
அழைத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்க, ‘அதை
அவிழ்த்து விட்டால் தெருவில் வருவோர், போவோரை மறுபடியும் துரத்த ஆரம்பித்து
விடும், எனவே கொண்டு போய் மூலிகைகள் நிறைந்த தலையணைப்பகுதியில் விட்டுவிடுங்கள்.பின்
ஓரிரு வாரம் கழித்து அதன் உடல்நிலை தேறியபின் வீட்டிற்கே அழைத்து கொண்டு வந்து விடலாம்’
என்று கூறினேன். அதன்படியே அதனை தந்த பெரியப்பா
பேரனையே வீட்டில் அழைத்து பாபநாசம் தலையணைப்பகுதியில் கொண்டு விட்டு வரச்சொல்ல, அவன்
வந்து அழைத்துச் செல்லும் போது அப்பு திரும்பி, திரும்பி பார்த்து கொண்டே சென்றதாக வீட்டில்
கூறியபோது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
அந்த
மாதம் முடிவதற்குள்ளே விடுமுறையில் சென்ற நான் ஊருக்குச் சென்ற அன்றே பைக்கை எடுத்துக்
கொண்டு தலையணைக்கு அப்புவை தேடிச் சென்றேன். அடுத்தடுத்த நாள்களிலும் சென்று அலைந்து
திரிந்து தேடினாலும் அப்பு கண்ணில் படவில்லை. அப்புவை கொண்டு சென்று விட்டு வந்து ஏழெட்டு
மாதங்கள் ஆகிவிட்டாலும் அதன்பின் இப்போதுவரை மாதம்தோறும் விடுமுறையில் செல்லும் போதெல்லாம்
ஊர் திரும்பும் நாள் வரை தினமும் தலையணை சென்று தேடிக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனால்
கண்டு பிடிக்கவே முடியவில்லை. பாபநாசத்திலோ, தலையணைப் பகுதியிலோ உங்கள் யார் கண்ணிலாவது ‘அப்பு’ பட்டால் உடனே தெரிவியுங்கள்.
3 comments:
இவ்வளவு பிரியமாக வளர்த்த அப்பு உங்களுக்கு மீண்டும் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன் நண்பரே,,,
அப்பு விரைவில் கிடைப்பான் என்று நம்புவோம்...
// KILLERGEE Devakottai said...
இவ்வளவு பிரியமாக வளர்த்த அப்பு உங்களுக்கு மீண்டும் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன் நண்பரே,,,//
தொடர்வரவிற்கும்,வேண்டுதலுக்கும் நன்றி நண்பரே...
Post a Comment