Wednesday, February 24, 2010

குழியில் தள்ளிய குட்டிச்சாத்தான்.... – இறுதி பாகம்





படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்து எவ்வளவோ முயற்சித்தும் என்னால் கண்களைத் திறக்கமுடியவில்லை. இமைகள் மீது பெரும்பாறை இருப்பது போல் மிகவும் பாரமாக இருக்கவே கைகளால் தடவிப்பார்த்தேன். வீக்கமாக இருப்பது போல இருந்தது. படுக்கையை விட்டு நான் எழாமல் இருப்பதை பார்த்து “என்னங்க, முடியலைன்னா லீவு போட்டு ரெஸ்ட் எடுங்க” என்றவாறு அடுப்படியில் இருந்து படுக்கை அருகே வந்தார் என் மனைவி.

“இல்லைம்மா. கண்ணு திறக்கமுடியலை. ரெண்டு இமைக்கு மேலயும் பாரமா வீங்கினாப்புல இருக்கு. என்னன்னு பாரு..” என்று நான் கேட்கவும் “ஆமாங்க, முகமே வீங்கினாப்புல இருக்கு. ரெண்டு இமைக்கு மேலயும் கோலிக்குண்டு மாதிரி வீங்கி இருக்கு... “ என்று மிகவும் பதட்டமாக கூறினார் என் மனைவி. முந்திய நாள் இரவு தையல் போட்ட பின் “இன்னைக்கு ராத்திரியோ, நாளைக்கோ தலை சுத்துற மாதிரி இருந்தாலோ வாந்தி அடிக்கடி வந்தாலோ உடனே தலையை ஸ்கேன் பண்ணி பார்த்திடுங்க” என்று டாக்டர் சொல்லி விட்டது வேறு நினைவிற்கு வந்து கிலியை கிளப்பியது.

சரி இதற்கு மேலும் மனைவியிடம் மறைக்ககூடாது என முடிவு செய்து என் அருகே அழைத்து அமரச்செய்து “நான் சொல்றதை கேட்டு பதறக்கூடாது” எனக்கூறி முந்தியநாள் ஊத்துமலையில் கிளம்பியது முதல் பைக்கில் வந்தது, பள்ளத்தில் விழுந்தது, ஆலங்குளம் வந்து ஆஸ்பத்திரியில் தையல் போட்டது, டாக்டர் ஸ்கேன் எடுக்கச் சொன்னது வரை அனைத்தையும் சொல்லி முடித்தேன். என் நிலைமை புரிந்த அவரும் “அதுல்லாம் ஒண்ணும் இருக்காதுங்க.. நம்க்கு கடவுள்தான் துணை. நீங்க மனசை போட்டு குழப்பிகிடாதீங்க..” என்று ஆறுதல் கூறினார்.

“சரி நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்க. நான் டிபனை ரெடி பண்றேன். சாப்பிட்டுட்டு டாக்டரை பார்த்துட்டு வருவோம்.” என்று கூறிவிட்டு அவர் வேலையில் இறங்க மேலும் தூங்கப்பிடிக்காமல் சும்மா படுத்துகொண்டு வீங்கியிருந்த இமைகளின் மீது விரல்களால் மெதுவாக தேய்த்து தேய்த்து மென்மையாக மசாஜ் செய்ய ஆரம்பித்தேன். பத்து நிமிடங்கள் தொடர்ந்து மசாஜ் செய்த பின்.இமைகளின் மீது சிறிது பாரம் குறைந்தாற்போல் தோணவே கண்களைத் திறக்க முயற்சி செய்தேன். இலேசாக திறக்க முடிந்தது.

அன்று அலுவலகம் செல்ல முடியாதது என உறுதியாக தெரிந்ததால் மேலதிகாரிக்கு போன் செய்து உடல்நிலை சரியில்லாததால் இன்று வேலைக்கு வரமுடியாது என தெரிவித்தேன். எனது டீமின் சப்லீடர் குமாருக்கும் போன் செய்து, “எப்பா, உடம்பு சரியில்லை. இன்னிக்கு வரமாட்டேன். பார்த்து பத்திரமா வேலை பாருங்க.” என்று கூறினேன்.


“என்ன சார், என்ன ஆச்சு. நேத்து ராத்திரி மேடம் வேற ரெண்டு மூணு தடவை போன் பண்ணி எப்போ கிளம்புனீங்க... போன் ஏதாவது பண்ணீங்களான்னு கேட்டாங்களே...” என்று குமார் கேட்க விழுந்த விபரம் கூறினால் அவன் கம்பெனியில் அனைவரிடமும் சொல்லி வரிசையாக போன் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்பதால“ஆமாம்பா.. சொன்னாங்க. நைட்டு பஸ் பிரேக்டவுண். அதான் லேட்டாயிடுத்து. செல்லுல பேட்டரி சார்ஜ இல்லை. அதான் வீட்டுக்கு தெரியப்படுத்த முடியலை” என்று கூறி சமாளித்தேன்.

டிபன் ரெடியான பின் சாப்பிட்டுவிட்டு தலைக்கட்டும், கண்வீக்கமும் தெரிந்தால் எல்லோரும் “என்ன, என்ன” என்று கேட்பார்கள் என்பதால் தொப்பியும், கருப்பு கண்ணாடியும் அணிந்து கொண்டு குடும்ப டாக்டரிடம் சென்றோம். அடிபட்ட விபரம், தையல் போட்டது, ஆலங்குளம் மருத்துவமனையில் கொடுத்த மருந்து சீட்டு எல்லாம் கேட்டறிந்த டாக்டர் தலைக்கட்டை பிரித்து காயத்தை சுத்தம் செய்து புதிதாக மருந்து வைத்து கட்ட சொன்னார்.

கண்வீக்கம் பற்றி கேட்டபோது “கார்களில் விபத்து ஏற்பட்டால் அடிபடாமல் தடுக்கும் பொருட்டு காற்றுப்பைகள் இருப்பது போல் நமது முகத்தில் அடிபட்டால் கண்மணிகள் பாதிக்கப்படாமல் இருக்க இதுபோன்ற பாதுகாப்பு படலம் ஏற்படும். நான் தரும் மருந்து மாத்திரைகளை சாப்பிடுங்கள். ரெண்டு நாளில் சரியாகி விடும். மண்டை ஓட்டில் அடிபட்டிருந்தால் ரத்தம் உறைந்து பெரிய பாதிப்பாகி விடும் என்பதால் தலைசுற்றல், வாந்தி இருந்தால் ஸ்கேன் எடுத்து பார்ப்போம். பயப்படவேண்டாம். உங்களுக்கு நெற்றியில் மட்டும்தான் லேசான காயம். ஸ்கேன் எடுக்க தேவையில்லை. தினமும் மருத்துவமனை வந்து காயம் சுத்தப்படுத்தி மருந்து வைத்து செல்லுங்கள். காயம் ஆறிவிட்டால் ஒரு வாரத்திற்குள் தையல் இழை பிரித்து விடலாம்” என்று டாக்டர் தெளிவான விளக்கம் தந்தபின் தான் நாங்கள் நிம்மதி அடைந்தோம்.

சம்பவம் நடந்தது வெள்ளி இரவு என்பதால் சனி, ஞாயிறு இரண்டு நாள் ஓய்வு எடுத்துவிட்டு திங்களன்று அலுவலகம் செல்ல முடிவு செய்தேன். மறுநாள் ஞாயிறு மாலை மருத்துவமனை சென்றபோது தலைக்கட்டையும் பிரித்து சிறிய பேDண்ட் எய்டு மட்டும் போட்டு விட்டார்கள். மருந்து, மாத்திரைகளினால் கண் வீக்கமும் வடிந்து சரியாகி விட்டது.

திங்களன்று அலுவலகம் சென்றபோது நெற்றியில் பேண்ட் எய்டு பார்த்து என்ன என்ன என்று கேட்டவர்களிடம் பஸ்சில் சடன் பிரேக் போட்டதால் இடித்த காயம் என்றே சொல்லிவிட்டேன். கணேஷ் கண்ணிலே தட்டுபடாததால் விசாரித்ததற்கு “சார், கணேசும் சனிக்கிழமை வரலை. போன் ஏதும் பண்ணலை. நானும் வேலை பிசியில மறந்துட்டேன். உங்களுக்கு ஏதும் போன் பண்ணினானா...” என்று குமார் கேட்கவும் கணேஷிற்கு போன் செய்து “என்னப்பா, என்ன ஆச்சு “என்று கேட்டேன்.

“சார், எங்கப்பா வேலையை விடச்சொல்லிட்டார். “என்று அவன் கூறவும் அதிர்ச்சியடைந்த நான் “ஏன்ப்பா , என்ன ஆச்சு” என கேட்க, சார், எங்கப்பா சொன்ன மாதிரி சனிக்கிழமை சாயங்காலம் எம்.எல்.ஏ.வோட போய் அந்த பாலத்தை பார்த்திருக்காங்க. எம்.எல்.ஏ.வும் புதிய பாலம் போட்டு, ரோடு,லைட்டை எல்லாம் சரி பண்ணிடலாம் ன்னு சொல்லி இருக்கார். அப்போதான் உள்ளூர்காரங்க ஒரு குட்டிச்சாத்தான் கதையை சொல்லி குழப்பிட்டாங்களாம்” என கணேஷ் கூறவும் நான் மேலும் அதிர்ச்சியடைந்து “அது என்னப்பா குட்டிச்சாத்தான்...” என்று இடைமறித்தேன்.

'' சார், அந்த ஊர் ஆளு ஒருத்தர் கேரளா போய் மாந்திரீகம் படிச்சுட்டு வந்து குட்டிச்சாத்தானை வச்சு பில்லி, சூனியம் வைக்கிற கெட்ட தொழில் பன்ணிகிட்டு இருந்திருக்கார். அம்மாவாசை, பவுர்ணமி அன்னைக்கு ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்க அந்த பாலத்துல வச்சு தான் பூஜை பண்ணுவாராம். அவரால் பாதிக்கப்பட்டவங்க சிலபேரு சேர்ந்து ஒரு அமாவாசை அன்னைக்கு அந்த பாலத்துல கண்ணை மூடி பூஜை பண்ணிகிட்டு இருந்தவரை அடிச்சு கொன்னுட்டாங்களாம். அதுல இருந்து மந்திரவாதி கட்டுபாடு இல்லாத அந்த குட்டிச்சாத்தான் அந்த பாலம் வழியா ராத்திரி நேரம் போறவங்ககிட்டே சேட்டை பண்ணுமாம்.” கணேஷ் சொல்ல சொல்ல அன்று இரவு நான் மட்டுமே பார்த்த அந்த கருப்பு உருவமும், “ஏ... இன்னைக்கு மூணுல்லா கெடக்கு... நிக்காதே...நிக்காதே... வெரசாப் போ... வெரசாப் போ...” என்றவாறு நிற்காமல் சென்ற லோடு ஆட்டோவும் நினைவிற்கு வந்தது.

மேலும் தொடர்ந்த கணேஷ் “ஆனா எம்.எல்.ஏ. அதையெல்லாம் நம்பலையாம் சார். அப்படியே ஏதாவது இருந்தாலும் பாலம் கட்டி பூஜை போடும்போது எல்லாம் சரியாயிடும்ன்னு சொல்லி டெண்டர் விட ஏற்பாடு பண்ணச் சொல்லிட்டாராம். அந்தப்பாதை மோசமா இருந்ததால நின்னு போன மினிபஸ்சையும் ரோடு, பாலத்தை சரிபண்ணவுடனே விடவும் ஏற்பாடு பண்றதா சொல்லியிருக்காராம்.. எனக்கும் இப்போதைக்கு டெம்ப்ரவரியா P.W.D. ல வேலை வாங்கி தந்திருக்கார். போஸ்ட்டிங் போடும்போது பெர்மணண்ட் ஆக்கிடுறேன்னும் சொல்லியிருக்கார். அதான் வேலையை விட்டுட்டேன் சார். நாளைக்கு ஆபிசுக்கு வந்து ரிசைன் லெட்டர் கொடுக்கணும்” என்று கூறி முடிக்கவும் எனக்கும் சீக்கிரம் இந்த வேலையை விடவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

( முற்றும் )

14 comments:

vasu balaji said...

அருமை ராஜா! சின்ன வயசுல படிச்ச பி.டி. சாமி நினைவுக்கு வரார்:) nice

அ. நம்பி said...

கதை நன்று.

உங்களுக்கும் உங்கள் நண்பர் கணேஷுக்கும் அந்த விபத்தால் ஏதும் விபரீதமோ பின்விளைவோ ஏற்படாதது உண்மையில் மகிழ்ச்சி தருகிறது ஐயா.

பிரபாகர் said...

அந்த மூனாவது உருவம் குட்டிச்சாத்தான் என்பது தெரிந்தாலும் நம்பமுடியாத விஷயம்போல் தோன்றினாலும் சொன்னவிதம் அருமை ராஜா. ஆறு பாகமா சொல்லி அசத்திட்டீங்க!

பிரபாகர்.

துபாய் ராஜா said...

//வானம்பாடிகள் said...
அருமை ராஜா! சின்ன வயசுல படிச்ச பி.டி. சாமி நினைவுக்கு வரார்:) nice//


தொடர் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி பாலா சார்.

துபாய் ராஜா said...

//அ. நம்பி said...
கதை நன்று.

உங்களுக்கும் உங்கள் நண்பர் கணேஷுக்கும் அந்த விபத்தால் ஏதும் விபரீதமோ பின்விளைவோ ஏற்படாதது உண்மையில் மகிழ்ச்சி தருகிறது ஐயா.//

பாராட்டிற்கு நன்றி நம்பி ஐயா.

அந்த விபத்திற்கு பின் தலைக்கவசம் அணியாமல் பைக் ஓட்டுவதே இல்லை ஐயா...

துபாய் ராஜா said...

//பிரபாகர் said...
அந்த மூனாவது உருவம் குட்டிச்சாத்தான் என்பது தெரிந்தாலும் நம்பமுடியாத விஷயம்போல் தோன்றினாலும் சொன்னவிதம் அருமை ராஜா. ஆறு பாகமா சொல்லி அசத்திட்டீங்க!

பிரபாகர்.//

தொடர் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி நண்பரே... அவர்கள் இருட்டில் பார்த்த அந்த மூன்று உருவங்கள் நான், கணேஷ் மற்றும் பைக் ஆக இருக்கும் என்பது என் எண்ணம். :))

பிரபாகர் said...

//தொடர் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி நண்பரே... அவர்கள் இருட்டில் பார்த்த அந்த மூன்று உருவங்கள் நான், கணேஷ் மற்றும் பைக் ஆக இருக்கும் என்பது என் எண்ணம். :))
//
இன்னிக்கு மூனுள்ள கிடக்குது என பார்த்தவர்கள் ஒதுங்கி செல்வதாய் எழுதியதால் கொஞ்சம் குழப்பம்... இப்போ கிளியர்...

பிரபாகர்.

அண்ணாமலையான் said...

நல்லா அருமையா சொன்னீங்க...

சிநேகிதன் அக்பர் said...

கலக்கல் பாஸ். நான் கூட இதெல்லாம் சும்மான்னு கடைசில சொல்லுவிங்கன்னு நெனச்சேன்.

Prathap Kumar S. said...

அப்பா ஒரு வழியா எல்லாபாகத்தை ஒரேயடியா படிச்சுமுடிச்சேன்...

நீங்களுமா நம்பறீங்க அது குட்டிச்சாத்தான்னு.? ரோடு சரியா இல்லாததால வண்டி கவுந்துச்சு தல அவ்ளோதோன், குட்டிசாத்தானாவது பெரிய சாத்தானவது...

அது ஏன் இந்த பேய் குட்டிச்சாத்தானெல்லாம் இந்த மாதிரி ஒதுக்குபுறமாவே சுத்துது, சேட்டைபண்ணணும்னா ஊருக்குள்ள வரவேண்டியதுதானே.. என்னாத்தல என்ஜியினியரா இருந்துட்டு இதெல்லாம் நம்பிக்கிட்டு....:))

சாமக்கோடங்கி said...

உங்கள் ஊர் பாஷை மிகவும் அருமை... படிக்க படிக்க அலுப்பே தெரியவில்லை..அவ்வளவு சுறுசுறுப்பு..

தொடர்ந்து எழுதுங்கள்.. ஓட்டு போட்டாச்சு. தொடர்ந்து பாலோ பண்ணுவேன்..

நன்றி...

ஆடுமாடு said...

நல்லா எழுதியிருக்கீங்க அண்ணாச்சி, ஆனா, இப்படி முடிப்பீங்கன்னு நினைக்கலை.

ஊருக்கு போயிட்டு வந்தாச்சா?

DREAMER said...

திகில் அனுபவங்களை கேட்கும்போது சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இருக்காது. அதுவும் உங்களது எழுத்துநடை அந்த அனுபவத்திற்கு மேலும் சுவாரஸ்யம் கூட்டுகிறது. 6 பாகத்தையும் இப்போதுதான் படித்து முடித்தேன். மிகவும் அருமை..! பகிர்வுக்கு நன்றி!

-
DREAMER

குலவுசனப்பிரியன் said...

நல்லா சுவாரசியமா சொல்லியிருக்கீங்க. வலது காதோரம் குளிர்தாக்கினால் மன பிரம்மை ஏற்படும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். மருத்துவர்கள் மேல் விபரம் த்ரக்கூடும்.

முந்தைய படைப்புகளுக்கு போவது சிரமமாக உள்ளது கவனிக்கவும்.