படித்து விட்டு இங்கே தொடருங்கள்.
மெஷினை விட்டு சிறிது தூரம் தள்ளி வந்திருந்த என்னை நோக்கி “சார்,சார்” என கைதட்டி அழைத்தவாறு ஒற்றையடிப்பாதையில் ஓட்டமும்,நடையுமாக வந்தவரை அருகில் வரவர அடையாளம் தெரிந்தது. மாரிச்சாமி. உள்ளுர்காரர். எங்கள் செக்சனில் செக்யூரிட்டியாக வேலை பார்ப்பவர்.
எங்கள் நிறுவனத்தில் பத்து மெஷின்களுக்கு ஒரு செக்யூரிட்டி.ஒரு ஷிப்ட்டிற்கு ஒருவர். இரவு நேரப்பணிக்கு இருவர். பத்து மெஷின்களுக்கும் தொடர்ந்து சுழற்சி முறையில் சென்று கண்காணித்து கொள்ளவேண்டியது அவர்கள் பணி. பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் அலுவலகம் வந்து கையெழுத்து இட்டு செல்ல வேண்டும் என்பதால் அனைவரையுமே எனக்கு நல்ல அறிமுகம்.
ஓடி வந்ததால் என்னருகே நின்று மூச்சு வாங்கியவாறு, ‘என்ன சார், காட்டுக்குள்ளே போறீங்க, வயிறு ஏதும் சரியில்லையா” என்று கேட்டவரிடம், “இல்லை.பக்கத்து தோட்டத்துல நல்ல பதனியா இருக்குன்னாங்க. அதான் வாங்கிட்டு போகலாம்ன்னு இவங்க கூட வந்தேன்.” என்றவாறு பின்னே கைகாட்டினேன்.
என் பின்னே பார்த்தவர் “யார் சொன்னா, யார் கூட வந்தீங்க” என்றவரிடம் “ இதோ,இவங்க தான்” என்று திரும்பி பார்த்த என் கண் படும் தூரம் வரை அந்த பெண் இல்லை. “ஆம்பிளை ஆளா, பொம்பிளை ஆளா, பார்க்கறதுக்கு ஆளு எப்படி இருந்தாங்க சார்” என்று பரபரப்பாய் கேட்டார் மாரிச்சாமி.
“பொம்பிளை ஆளு. சின்ன வயசுதான். கருப்பா, ந்ல்ல லெட்சணமா, நாட்டுடை உடுத்தி இருந்தாங்க” என்றதும் அதிர்ச்சியடைந்தவர், “சரியாப் போச்சு, சந்திராவைப் பார்த்திருக்கீங்க.” என்றார். “சந்திரா யார்“ என்று நான் விடாமல் கேட்டும் “சார் முதல்ல ஆபிஸ் போங்க. அப்புறம் விவரம் பேசிகிடலாம்” என்று கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார்.
மதிய உணவு நேரம் என்பதால் பைக்கை ஸ்டாண்டில் விட்டு விட்டு நேராக உணவரங்கம் சென்று சாப்பிட்டுவிட்டு இருக்கைக்கு வந்தவன் அலுவலகத்திற்கு வெளியே பலரது பேச்சுக்குரலும் கேட்கவே என்ன என்று பார்க்க வெளியே வந்தேன்.
அங்கு மாரிச்சாமியுடன் என்னுடன் பணிபுரிவோர், மற்ற செக்யூரிட்டிகள், டிரைவர்கள் என பலரும் நின்று பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தனர். ”சார்,சந்திராவை பர்த்தாராம், சந்திராவை பர்த்தாராம்” என எல்லோரும் பேசிக்கொண்டிருக்க நான் புரியாமல் விழித்தேன்.
என்னருகே வந்த மாரிச்சாமி, “என்ன சார் பாரின்லாம் போய்ட்டு வந்துருக்கீங்க. பதனி சீசன் தெரியாதா. காத்தடி காலத்துல எப்படி பதனி கிடைக்கும்ன்னு யோசிக்க வேண்டாமா.நல்ல நேரத்துல நான் வந்தேன். இல்லைன்னா சந்திரா என்னமாவது பண்ணியிருந்தா என்ன செய்ய முடியும். வீட்டுக்குப் போனா திருநார் போடுங்க.இல்லைன்னா இங்கேயே திருநார் போட ஆள் இருக்கு” என்றார்.
ஒன்றும் புரியாததால் அவர் பேசப் பேச கடுப்பான நான் “ மாரிச்சாமி, மொட்டை மொட்டையா பேசாம சந்திரா யாரு, என்னன்னு விபரம் சொல்லுங்க.இல்லைன்னா பேச்சை விடுங்க” என்றேன்.
என் கோபம் கண்டு மிரண்டவர் சொல்லிய விபரம்.
சில காலத்திற்கு முன் அந்த மெஷின் இருக்கும் இடத்தில் ஒரு ஆலமரமும், பாழடைந்த கிணறும் இருந்ததாம். உள்ளூர் சண்டியர்கள் எல்லாம் அங்குதான் பணம் வைத்து சீட்டு ஆடுவார்களாம். சந்திரா என்ற இளம் விதவைப்பெண் பலரது தோட்டங்களுக்கும் சென்று காய்கறி,கிழங்கு, மாங்காய்,புளி, பதநீர் என சீசனுக்கு ஏற்றவாறு கிடைக்கும் பொருட்களை வாங்கி பக்கத்து ஊர்களில் விற்று பிழைப்பு நடத்தி கொண்டு இருந்தாளாம்.
அவள் மேல் வெகுநாட்களாக கண் வைத்திருந்த உள்ளூர் மைனர் ஒருவர் ஒருநாள் குடிபோதையில் காட்டுப்பாதையில் தனியாக வந்தவளை மடக்கி கற்பழித்து அந்த பாழடைந்த கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டாராம்.
போலீஸ் அங்கு விளையாடச் சென்ற அனைவரையும் கைது செய்து விசாரித்ததால் அதன்பின் அந்தப்பக்கம் யாரும் செல்வதே கிடையாதாம். அந்த பக்கமாக மாடு தேடியோ மற்ற ஏதும் காரணங்களுக்கோ தனியாக சென்றவர்கள் முன் சந்திரா தோன்றுவதாக அவ்வப்போது ஊருக்குள் பரபரப்பு ஏற்படுமாம்.
இந்த விபரம் தெரியாமல் காலப்போக்கில் அந்த ஆலமரம் பட்டு,கிணறும் தூர்ந்த இடத்தில் எங்கள் நிறுவனத்தார் மெஷின் போட்டு விட்டார்களாம். இந்த கதை அறிந்த எங்கள் செக்சனிலும் அந்த மெஷினுக்கு “சந்திரமுகி மெஷின்” என்றே அடையாளப் பெயர் வைத்து விட்டார்களாம்.
இன்னொரு செக்சனில் இருந்து பதவி உயர்வில் மாற்றலாகி வந்த அந்த செக்சனுக்கு புதியவனான எனக்கு இந்த விபரங்கள் தெரியாததால் தனியே சென்று “சந்திரமுகியை சந்தித்தேன்”. அதன்பின் எங்கள் செக்சனில் என்னை “வேட்டையன் ராஜா” என்றுதான் அழைத்தார்கள்.
(முற்றும்)
ஹஸ்கி : பகலில் வேலை அதிகமாக இருந்ததால் இரவு வீட்டிற்கு வந்து இறுதிபாகம் எழுதி பதிவேற்றும் போது நள்ளிரவு 12 மணி.
7 comments:
சந்திரா அழைத்த இடத்துக்கு அவளோடு சென்று திரும்பி இருந்தால் இன்னும் சுவையான (திகில் நிறைந்த) அனுபவம் கிடைத்திருக்கும்.
உண்மையாவா சொல்றீங்க. கால் இருக்கான்னு பார்த்தீங்களா ராசா...
ரா.ரா...சரசக்கு ரா...ரா ன்னு பதனிபேரை சொல்லிகூப்பிடும்போதே யோசிக்கவேண்டாமா... நீங்க என்னங்க .. பதனிசீசன் கூட தெரியாம...என்ன என்ஜீனியரு.
எப்படித்தான் கரண்டு உண்டாக்கபோறிகளோ...
அப்போ--- இருக்கிறது உண்மையா ?
முதல் முறையா உங்க பக்கத்துக்கு வர்றேன் .. ஒரே மூச்சில எல்லா திகில் அனுபவங்களையும் படிச்சாச்சு :-) .. எளிமையா சுவாரசியமா எழுதுறீங்க.. எனக்கென்னமோ >மாரிச்சாமி< தான் பேயா இருப்பாரோன்னு சந்தேகம் ;-)))
திகில் அனுபவத்தோட.. வேற சுவாரசியமான அனுபவத்தையும் எழுதுங்களேன் .. :-)
அப்போ துபாய் ராஜா இல்லயா...?
வேட்டைய ராஜா பராக்..பராக்..ப்ராக்.
எங்க ஒரு தடவை லகலகலக் சொல்லுங்க பார்க்கலாம்..ச்சே..கேக்கலாம்.
நல்ல வேளை..
தப்பிச்சது ஏதோ போன ஜென்மத்து புண்ணியம்தான். அவரு மட்டும் வரலைன்னா என்னாயிருக்கும்??
சந்திராவோட நிலைமை.. :)
என்னா தலைவரே திகில கெளப்பிட்டீங்க..
Post a Comment