ரெண்டு வருஷம் முன்னாடி கோபாலசமுத்திரம் அம்மன் கோயில் கொடைக்கு போயிருந்தேன். எங்க அம்மா ஊர்.
அகன்ற ஆறும், குளமும், வயல்களுமாய் அழகாக இருந்த ஊர். இப்போது ஆற்று மண் முழுதும் அள்ளப்பட்டு, கரையெல்லாம் வயல்களாய் திருத்தப்பட்டு, அகோரமாய் ஆக்ரமிக்கப்பட்டு, அடையாளம் இழந்து ஆற்றின் ஓட்டமே மாறிப் போய் பார்க்கவே மனம் பதைபதைக்கிறது.
சிறுவயதில் கோடை விடுமுறைக்கும், கோயில் கொடைகளுக்கும் தவறாமல் சென்று விடுவோம். பின் படிப்பு, வேலை என வாழ்க்கையில் மாற்றங்கள் வர வர செல்லமுடியாத சூழ்நிலை. தாத்தா கொடைக்கு அனைவரும் வரும்படி வருடாவருடம் கடிதம் அனுப்பிவிடுவார். பல வருடங்களுக்கு பின் திடீரென கிளம்பி சென்றேன்.
நான் சென்ற நேரம் இருட்டிவிட்டது. என்னைப் பார்த்ததில் அனைவருக்கும் சந்தோசம். கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்துவிட்டு வந்து சாப்பிட்டு முடித்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது இரவு பாட்டுக்கச்சேரி என்றார்கள். வருடாவருடம் ஏதாவது நல்ல இசைக்குழுவை அழைத்து வந்து பாட்டுக்கச்சேரி வைப்பது பல ஆண்டுகளாக உள்ள பழக்கம். அக்கம்பக்க ஊர்களில் இருந்தெல்லாம் கச்சேரி பார்க்க வருவார்கள். நிச்சயம் சென்று பார்க்க வேண்டும் என முடிவு செய்தேன்.
கச்சேரி ஆரம்பிக்க எப்படியும் இரவு பத்து மணிக்கு மேல் ஆகும் என்பதால் எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது சின்னத்தாத்தா மகன் கோபாலு மாமா இரண்டு இளம்பெண்களை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.
எங்கள் பாட்டி, “எய்யா கோபாலு, யாருய்யா இவ்வொ ரெண்டு பேரும்” என்று கேட்க, “கச்சேரிக்கு பாடவந்தவங்க. சுத்தமல்லி விலக்குல வீடு. நான் அங்க வாடகைக்கு இருக்கும் போது பக்கத்து வீடு. நல்ல பழக்கம். கச்சேரி ஆரம்பிக்க நேரம் ஆகும். சீக்கிரம் வந்துட்டாங்க. அதான் இங்க கூட்டியாந்தேன் பெரியம்மா” என குழறி, குழறி சொன்னார்.
அவர் ஏற்கனவே ‘கச்சேரி’ முடித்துவிட்டு வந்திருந்தார். ”இவங்க இங்க இருக்கட்டும். நா இப்போ வாரேன்”.என்று கூறிவிட்டு விட்ட கச்சேரியை தொடரச் சென்று விட்டார்.
பாட்டி இருவரையும் அவர்கள் அருகே கட்டிலில் உட்கார வைத்து ‘பழக்கம்’ பேச ஆரம்பித்துவிட்டார். இருவருக்கும் 23 முதல் 25 வயதுக்குள் தான் இருக்கும். கல்யாணம் ஆன மாதிரி தெரியவில்லை. ஒருவர் நல்ல நிறமாக கொஞ்சம் குண்டாக இருந்தார். இன்னொருவர் கொஞ்சம் உயரம், கலர் கம்மி. இருவருமே கண்கூசும் நிறங்களில் சுரிதார் அணிந்து பயங்கர மேக்கப்போடு இருந்தார்கள். அப்போதுதான் மேடையில் இருக்கும்போது தூரத்தில் இருந்து பார்த்தால்கூட தெரியும் என பாட்டியிடம் காரணம் கூறினார்கள்.
பாட்டி அவர்களிடம் பழக்கம் விடுவதை கவனித்தபடி நாங்கள் அனைவரும் அடுத்த அறையில் இருந்து பேசிக்கொண்டு இருந்தோம். சினிமாவில் கண்பிப்பது போல கால்மணி, அரைமணி என நேரம் கடந்தவாறே இருந்தது. அவர்களூம் அவ்வப்போது கைப்பையில் வைத்திருந்த கண்ணாடியை எடுத்து, எடுத்து பார்த்து மேக்கப்பை சரி செய்துகொண்டிருந்தார்கள். ”ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிட்டாக, அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாகன்னு” அவ்வப்போது ‘பந்தா’ வேறு. இப்படியாக ஒன்றரை மணிநேரம் கடந்துவிட்டது. கச்சேரிக்கும் நேரம் ஆகிவிட்டது. கோபாலு மாமா வரவேயில்லை.
அவர்களிடம் பேசிப் பேசி பாட்டியே களைத்துவிட்டார். ”வீட்ல என்ன சாப்பிட்டு வந்திய ரெண்டு பேரும்” என்று கேட்டார். மாலையே வீட்டிலிருந்து கிளம்பி விட்டதாகவும், வீட்டிற்கு சாப்பிட வாருங்கள் என்று கூறித்தான் கோபால் அழைத்து வந்ததாகவும் அவர்கள் சொன்னதைக் கேட்டு பாட்டிக்கு மிகவும் பரிதாபமாகி விட்டது. ”அடடா அவன் ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருந்தா நான் கடைக்கு யாரையாவது அனுப்பிச்சு உங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரச்சொல்லியிருப்பேனே” என அங்கலாய்த்தார். அந்த பெண்களும் “பரவால்லை பாட்டி நேரம் ஆயிட்டுது. நாங்க கிளம்பறோம்” என்று மறுத்தவாறு இருந்தார்கள். பாட்டிக்கோ மனதே கேட்கவில்லை. ”நாங்க சந்தோசமா இருக்க பாட வந்துட்டு நீங்க சாப்பிடாம இருக்கிறதா” என வருத்தப்பட்டார்.
மறுகால் பஜாருக்கு ஆளனுப்பி ஏதாவது வாங்கி வருவதற்குள் கச்சேரி தொடங்கிவிடும். என்ற சூழ்நிலை. ”கடாச்சோறு” காலியாயிட்டு. வீட்டுல பழையதுதான் இருக்கு. சாப்பிடுதியளா” என பாட்டி கேட்கவும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி “சரி,கொஞ்சமா கொடுங்க” என்றனர். பழைய கறியும், சோறும் இலையில் வைத்து பரிமாறினார் பாட்டி. நல்ல பசி போல. இருவரும் பரபரவென்று சாப்பிட்டு விட்டார்கள். அவர்கள் சாப்பிடும் வேகத்தைப் பார்த்து வீட்டில் இருந்த பழையது, சுண்டக்கறி எல்லாவற்றையுமே பாட்டி அவர்களுக்கு பரிமாறிவிட்டார்.
நல்ல திருப்தியாக சாப்பிட்டு முடித்து நன்றி கூறி கச்சேரிக்கு பாடச்சென்றனர்.
மாமா பிள்ளைகளுக்கு ஒரே சிரிப்பு.”எப்படி பந்தா விட்டுட்டு இருந்தாளுங்க. இப்ப பழையதை வெளுத்துக் கட்டுதாள்வுளேன்னு” அவர்களுக்குள் கிண்டல் பண்ணி சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
கச்சேரியும் நன்றாகத்தான் இருந்தது. அந்தப்பெண்களும் மோசம் என்ற சொல்லமுடியாத அளவிற்கு ஓரளவு நன்றாகவே பாடினார்கள்.
மறுநாள் வீட்டுக்கு வந்த உறவினர்களெல்லாம் “கச்சேரி நல்லாயிருந்தது” என்று பாட்டியிடம் கூறிக்கொண்டிருந்த பொழுது “அதுக்கு பாட்டி வச்சுக்கொடுத்த பழையதும், சுண்டக்கறியும் தான் காரணம்” என்று கூறி குறும்பாகச் சிரித்தனர் மாமா பிள்ளைகள்.
8 comments:
:)
ஏலே மக்கா நீயும் நால்லாதாம்டே கதை சொல்லுத
நல்லாயிருக்கு....
நல்லாருக்குடே......
பாட்டி வச்சுக்கொடுத்த பழையதும், சுண்டக்கறியும் பெற்றோல் போல வேலை செய்திருக்கும் போலிருக்கிறது.
பாட்டி வச்சுக்கொடுத்த பழையதும், சுண்டக்கறியும் பெற்றோல் போல வேலை செய்திருக்கும் போலிருக்கிறது.
ராஜா ,கதை நல்லாயிருக்கு.
//“அதுக்கு பாட்டி வச்சுக்கொடுத்த பழையதும், சுண்டக்கறியும் தான் காரணம்”//
கதையைவிட சுண்டக்காய் கறியும் பழையதும்.நினைக்கவே ஆசையாய் இருக்கு.கிடைக்குமா ?
ராச சபை கலக்குதுங்கோ...
Post a Comment