பாகம்
2 – அலைபேசி – தொலைபேசி...
என்னவோ ஏதோ என திடுக்கிட்டுப் பார்த்த
புலிமுத்துவிடம் ‘சார்ஜன்ட் நின்னான் பார்த்தீங்களா சார். ஓவர் ஸ்பீடு சம்மன் எப்படியும்
வரும் பாருங்க’ என்றான் விச்சு. எவ்வளவு வேகத்தில் வண்டி செல்கிறது என்று பார்த்தால்
150 கிலோமீட்டர் வேகத்தில் வண்டி சென்று கொண்டிருந்தது. உயர்தரத்தில் மேம்படுத்தப்பட்ட
ஹைவேஸ் சாலை என்பதாலும், லிமிட்டட் எடிசன் ஃபோர் வீல் டிரைவ் வெஹிக்கிள் என்பதாலும்
வண்டி அலுங்காமல், குலுங்காமல் சென்று கொண்டு இருந்தது. சென்டர் மீடியனில் எப்போதாவது
வேகம் காட்டும் கருவியோடு மறைந்து அமர்ந்திருக்கும் போக்குவரத்து துறை ஊழியர் அன்று
அந்த இடத்தில் பணியில் அமர்ந்திருந்தார் போல. “சரி. உப்பு தின்னவன் தண்ணி குடிப்பான்.
தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான்” என நினைத்துக் கொண்டான் புலி முத்து.
ஒரு வழியாக பத்தே முக்கால் மணி
அளவில் ‘டுனா மினா’ பேருந்து நிலையத்தை அடைந்த போது, கே.எல். விமான நிலையம் செல்லும்
பேருந்து தயாராக நிற்கவே நடத்துனரிடம் டிக்கெட்டைக் காண்பித்து உறுதி செய்து விட்டு
விச்சுவின் உதவியோடு லக்கேஜ்களை மடமடவென வண்டியை விட்டு இறக்கி பேருந்தில் ஏற்றினார்கள்.
‘சீக்கிரம் வந்திருந்தா ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டிருக்கலாம். ஏதாவது சாப்பிட்டுப்
போ’ என்றவாறே விச்சுவின் பாக்கெட்டில் மறுக்க, மறுக்க ஐம்பது வெள்ளி மலேஷியப் பணத்தை
வைத்த புலி முத்து, ‘ சரிப்பா. நான் போயிட்டு வர்றேன். நீயும் பார்த்து மெதுவாப் போ.
ஏர்போர்ட் போனதும் போன் பண்றேன்.’ என்றவாறே பேருந்தினுள் ஏறி அமர்ந்தான். வண்டி கிளம்பும்
வரை காத்து நின்ற விச்சு பேருந்து கண் விட்டு மறையும் வரை கை ஆட்டிக் கொண்டே இருந்தான்.
பயணத்தின் இடையே நிறுத்திய இரண்டு
இடத்திலுமே உணவகம் ஏதும் இல்லாததால் கிடைத்த பழங்களை வாங்கி உண்டு ஒரு வழியாக மாலை
நான்கு மணி அளவில் கே.எல் விமான நிலையம் அடைந்தது பேருந்து. லக்கேஜ்களை ட்ராலி வண்டியில்
ஏற்றிக் கொண்டு டிக்கெட் செக்-இன் செய்ய கவுன்டருக்கு சென்றால் விமானம் எட்டு மணிக்குதான்
என்பதால் ஆறு மணி அளவில் வந்து செக் இன் செய்தால் போதும் என திருப்பி அனுப்பி விட்டார்கள்.
ஏதாவது உண்ணலாம் எனப்பார்த்தால் மதிய உணவு நேரம் தப்பி விட்டதால் அனைத்து உணவகங்களிலும்
சாட் அயிட்டங்களே இருந்தன. கே.எப்.சி, மெக்டெனால்டு கடை உணவு வகைகள் எப்போதுமே புலி
முத்துவிற்கு பிடிக்காது என்பதால் தோதான இடத்தில், இருக்கை பார்த்து அமர்ந்தான்.
என்ன செய்யலாம் என யோசித்தவன் வழக்கமாக
செய்வது போல் அவனது அலைபேசியில் இருந்த தொடர்பு எண்களை ஒரு பேப்பரை எடுத்து எழுத ஆரம்பித்தான்.
விமானம் கிளம்பும் முன் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விடுவதாலும், ஊருக்கு சென்றால்
வேறு போன், நம்பர் உபயோகப்படுத்துவதாலும், புலி முத்து எப்போது பயணம் செய்தாலும் போர்டிங்
போட்ட பின் வெயிட்டிங் ஹாலில் அமர்ந்திருக்கும் நேரத்தில் முக்கியமான எண்கள் அனைத்தையும்
ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்வான். ஊரில் இருந்து திரும்பும்போதும் இதே நடைமுறையை
கடைப்பிடிப்பான். நேரத்திற்கு, நேரமும் கடந்து விடும், விடுமுறை நாட்களில் அவசரமாக
யாரையாவது தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் எளிதாகவும் இருக்கும். அப்படி, இப்படி பராக்கு
பார்த்துக் கொண்டே எழுதிக் கொண்டும், அவ்வப்போது கவுன்டருக்கு சென்று செக் இன் செய்யலாமா என கேட்டு வந்தும் என பொழுது போக ஆரம்பித்தது.
இரண்டு, மூன்று முறை கேட்டும் ஆறு
மணிக்கு மேல் வரும்படியே கூறியதால், ‘வழக்கமாக நான்கைந்து மணி நேரம் முன் செக்-இன்
செய்திருக்கிறேனே. ஏன் இந்த முறை மட்டும் இரண்டு மணி நேரம் முன் வரச்சொல்கிறீர்கள்’
என்று கேட்டதற்கு, நீங்கள் பிஸினஸ் கிளாஸ் பிரயாணி என்பதால் இரண்டு மணி நேரம் முன்
சென்றால் போதும் என்று பதில் வந்தது. அப்போதுதான் அந்த முறை டிக்கெட் புக் செய்யும்
போது எக்னாமி கிளாஸிற்கும், பிஸினஸ் கிளாஸிற்கும் அதிக பண வித்தியாசம் இல்லாமல் இருந்ததால்
பிஸினஸ் கிளாஸ் புக் செய்தது நினைவிற்கு வந்தது. அப்படி, இப்படி என ஆறு மணி ஆகியதும்
லக்கேஜ்களோடு கவுன்டர் சென்று லக்கேஜ்களை எடை போட்ட போது டிக்கெட்டில் குறிப்பிட்டிருந்ததை
விட அதிகமான எடை இருந்தும் ஏதும் சொல்லவில்லை. இமிக்ரேஷன் என்னும் குடியுரிமைச் சோதனை
முடிந்ததவுடன் காத்திருக்கும் விமான நிறுவனத்தின் வண்டியில் ஏறினால் வெயிட்டிங் ஹாலில்
கொண்டு விடுவார்கள் என்று கூறிய தகவல்படி குடியுரிமைச் சோதனை முடித்து வண்டி ஏறி வெயிட்டிங் ஹால் சென்றால் அங்கும் ஒரு ஆச்சரியம்
காத்திருந்தது.
பிஸினஸ் கிளாஸ் பயணிகளுக்கான
வெயிட்டிங் ஹாலின் உள்ளே மதுபான அரங்கும், உணவகமும் இருந்ததைப் பார்த்த புலிமுத்து,
அவன் வெயிட்டிங் ஹாலில் நுழையும்போது டிக்கெட்டை செக் செய்து உள்ளே அனுப்பிய விமான
நிறுவன பணிப்பெண்ணிடம் இன்னொரு முறை சென்று, ‘இஸ் இட் ஃப்ரீ, ஆர் நீட் டூ பே அடிசனல்
மணி’ என்று கேட்க, ‘ ஆல் ஆர் ஃப்ரீ அண்ட் பஃபே சிஸ்டம் ஒன்லி சார்’ என்று அனைத்தும்
இலவசம் என்பதை அவள் உறுதி செய்ய இன்ப அதிர்ச்சி அடைந்தான். முன்பெல்லாம் அனைத்து விமான
நிறுவனங்களிலும், அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் இலவசமாக மதுபானமும், உணவும் கொடுப்பார்கள்.
ஆனால் சமீபத்திய காலங்களில் பட்ஜெட் ஏர்வேஸ் என்னும் சிக்கன விமானங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட
பின் மதுபானங்கள் கொடுக்கும் வழக்கமே வழக்கொழிந்து விட்டது. உணவு மற்றும் குடிநீர்
கூட பணம் கட்டினால் தான் கிடைக்கும். கூடிய விரைவில் கழிப்பறை சென்றால் கூட காசு வசூலிப்பார்கள்
என்பது போல் விமான நிறுவனங்களின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மாறி வருகின்றன. பிசினஸ்
கிளாஸில் முதல் முதல் பயணிக்கும் புலிமுத்துவிற்கு எல்லாம் இலவசம் என்பது பெரும் ஆச்சரியமாகவும்,
அதிசயமாகவும் இருந்தது.
காலையில் இருந்தே சரியாக சாப்பிடாததால்
கொலைப்பசியில் இருந்த புலி முத்து இரண்டு பியர் கேன்களையும், தட்டு நிறைய சிக்கன் மற்றும்
சிற்றுண்டி வகைகளை எடுத்துக்கொண்டு ஒதுக்குப்புறமான ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு
வேக, வேகமாக குடிக்கவும், கடிக்கவும் ஆரம்பித்தான். வயிறு காலியாக இருந்ததால், மேலும்
இரண்டு பியர்களையும், ஒரு பிளேட் சிக்கனையும் உள்ளே தள்ளிய பின்னே அவனது பசி வெறியும்,
வேகமும் அடங்கியது. இன்னும் கொஞ்ச நேரம் முன்னாடி வந்திருந்தால் பொறுமையாக குடித்துக் கொண்டே சாப்பிட்டிருக்கலாமே என்றும், பயணிகளை சீக்கிரம் அனுப்பினால் நிறைய சாப்பிட்டு விடுவார்கள் என்பதால்தான் சிக்கன நடவடிக்கையாக இரண்டு மணி நேரம் முன் அனுப்புகிறார்கள் போல என்றும் இரு விதமான எண்ணங்கள் அவன் மனதில் தோன்றின.
கை, வாய், முகம் கழுவி விட்டு இருக்கையில்
அமர்ந்தவன்,’ சரி.விச்சுவிற்கும், அட்மின் மேனேஜருக்கும் மற்றும் ஊருக்கும் ஏர்போர்ட்
வந்துவிட்ட விஷயத்தை தெரியப்படுத்திவிடலாம் என்று சட்டைப்பையில் கைவிட்டால் அலைபேசி
தட்டுப்படவில்லை. பேண்ட் பாக்கெட்டிலும் இல்லை. தோள்பையில் தேடினாலும் இல்லை. பக்கத்தில்
அமர்ந்திருந்தவரின் அலைபேசியில் இருந்து அவனது எண்ணை அழைத்தால் மணி அடிக்கிறது. அவனது
சட்டை,பேண்ட், தோள்பை பாக்கெட்டுகளிலும் அழைப்புச் சத்தம் கேட்க வில்லை.தொடர் அழைப்பு
செல்கிறது. ஆனால் எடுப்பார் யாருமில்லை.
4 comments:
ஆஹா செல்லை யார் எடுத்தது ஸ்கேனிங் மிஷினுக்குள் விழுந்து விட்டதா.... காத்திருக்கிறேன்
நல்லாயிருக்கு...
தொடருங்கள்.
// KILLERGEE Devakottai said...
ஆஹா செல்லை யார் எடுத்தது ஸ்கேனிங் மிஷினுக்குள் விழுந்து விட்டதா.... காத்திருக்கிறேன்...//
கில்லர்ஜியின் விமான பயண அனுபவங்கள் பேசுகிறது. அப்படியாக கூட இருக்கலாம் என்பதே எனது அனுமானமும்.
// பரிவை சே.குமார் said...
நல்லாயிருக்கு...தொடருங்கள். //
வரவிற்கும், வாழ்த்திற்கும் நன்றி நண்பரே...
Post a Comment