பாகம்
9 – என்னாச்சு…ஏதாச்சு…ஏதேதோ ஆயாச்சு…
ஒரு வழியாக சாப்பாட்டுப் பந்திகள்
முடிந்து வந்தவர்கள் எல்லோரும் அணி, அணியாய் அவரவர் வந்த வேன்களில் ஏறிக்கிளம்பிவிட
தான் மட்டும் சிறிது நேரம் கழித்து வருவதாக கூறி தனது குடும்பத்தவர்களையும் நான்கரை
மணி அளவில் வீட்டிற்கு அனுப்பிவிட்டான் புலிமுத்து. மீதமிருக்கும் சாப்பாடு, பாத்திரங்கள்
மற்றும் கோயிலையும், சுற்றுப்புறத்தையும் சுத்தப்படுத்துவது போன்ற காரியங்களுக்காக
இருந்த புலியாண்டி, அவனது இளையமகன் புலியான் மற்றும் சமையல் குழு உறுப்பினர்கள் வந்த
வேனைத் தவிர அனைத்து வாகனங்களும் சென்று விட்டன.
கோயிலில் படையல் போட்டு மீதமிருக்கும்
உணவுப் பொருட்களை வீட்டுக்கு கொண்டு போகக் கூடாது என்பதால் கொஞ்சம் சோற்றை மீன்கள்
சாப்பிடும் வகையில் ஆற்றில் கொட்டிவிட்டு, மற்றவற்றை காட்டில் வாழும் குரங்குகளும்,
மான்களும், காட்டுப்பன்றிகளும், ஆற்றில் நீர் அருந்த வரும் மற்ற விலங்குகளும் சாப்பிடும்
வகையில் ஆற்றங்கரையோரம் தட்டிவிட்டு எல்லாப் பாத்திரங்களையும் ஆற்றில் போட்டு நன்றாக
தேய்த்து கழுவினர் சமையல் குழுவினர்.
சமையல் செய்த இடத்திலிருந்து காற்றில் கங்குகள் பறந்து, காட்டில் தீ பரவிவிடக் கூடாது என்பதால் சமையல் செய்த அடுப்புக்கற்கள் அனைத்திலும் ஆற்றிலிருந்து குடம், குடமாக நீர் எடுத்து வந்து விட்டு கரி, கங்குகள் அனைத்தையும் நெருப்போ, புகையோ இல்லாமல் அணைத்து, பின் சூடு ஆறியவுடன் அள்ளி ஆற்றில் போட்டுவிட்டு இலை, தழை, குப்பைகள், சமையல் மற்றும் சாப்பாட்டுக்கழிவுகள் இல்லாமல் கோயிலையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக பெருக்கி, சிமெண்ட் தளங்களை தண்ணீர் விட்டு கழுவியும், மற்ற இடங்களில் நீர் தெளித்தும் விட்டனர் பரிமாற வந்தவர்கள்.
சமையல் செய்த இடத்திலிருந்து காற்றில் கங்குகள் பறந்து, காட்டில் தீ பரவிவிடக் கூடாது என்பதால் சமையல் செய்த அடுப்புக்கற்கள் அனைத்திலும் ஆற்றிலிருந்து குடம், குடமாக நீர் எடுத்து வந்து விட்டு கரி, கங்குகள் அனைத்தையும் நெருப்போ, புகையோ இல்லாமல் அணைத்து, பின் சூடு ஆறியவுடன் அள்ளி ஆற்றில் போட்டுவிட்டு இலை, தழை, குப்பைகள், சமையல் மற்றும் சாப்பாட்டுக்கழிவுகள் இல்லாமல் கோயிலையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக பெருக்கி, சிமெண்ட் தளங்களை தண்ணீர் விட்டு கழுவியும், மற்ற இடங்களில் நீர் தெளித்தும் விட்டனர் பரிமாற வந்தவர்கள்.
பாத்திர, பண்டங்களை வேனில் ஏற்றிவிட்டு,
எல்லோரும் ஏறி அமர்ந்தபின் புலியாண்டியும், புலிமுத்துவும், புலியானும் இன்னொரு முறை
சென்று அனைத்துக் கோயில்களிலும் சாமி கும்பிட்டு விட்டு, ஆற்றங்கரை, அடுப்பங்கரைகளில்
கங்குகள் சுத்தமாக அணைந்துவிட்டதா என்பதை மீண்டும் ஒரு முறை நன்றாகப் பார்த்து உறுதி
செய்துவிட்டு, புலியாண்டி சுவாமியின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, ஆசி பெற்று,
திருநீறு அள்ளி பூசி வேனில் ஏற வண்டி கோயிலை விட்டு கிளம்பும் போது இருட்டத் தொடங்கிவிட்டது.
வனச்சோதனைச் சாவடியில் வண்டி நின்றபோது
புலியாண்டியும், புலிமுத்துவும் மட்டும் இறங்கி சென்று, அவர்களுக்கு கொடுப்பதற்கு உணவுப்
பொருட்கள் ஏதும் இல்லாத காரணத்தால், ஐநூறு ரூபாய் பணம் அன்பளிப்பாய் கொடுத்து நன்றி
சொல்லி விடைபெற்று வந்தார்கள். மணிமுத்தாறு
அம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் புலியானின் பைக் கிடப்பதாகவும், அதிலே அவனுடன்
தானும் சென்று விடுவதாக புலியாண்டி கூறியதால், அவர்கள் இறங்கியதும் புலிப்பட்டி ஊருக்குள்
செல்லாமல் கல்லிடை செல்லும் புறவழிச்சாலை வழியாக அம்பை நோக்கி வண்டி விரைந்தது.
கல்லிடையில் சமையல்காரர்கள் மற்றும்
பரிமாற வந்தவர்கள் இறங்கும்போது அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கிப்பணத்தை கொடுத்துவிட்டு
வாடகைப் பாத்திரக்கடையில் பாத்திரங்களை ஒப்படைத்துவிட்டு வீடுவந்து சேரும்போது நேரம்
இரவு மணி எட்டை நெருங்கிவிட்டது. வீட்டில் வந்து மேல், கால் கழுவிவிட்டு, இரவு உணவையும்
முடித்தபின் ஓய்வாக அமர்ந்து குடும்ப உறுப்பினர்களோடு பேசிக் கொண்டிருந்த போது அலைபேசி
அழைக்க எடுத்துப் பார்த்தால் புலியாண்டி மகன் புலியான்.
போன் எடுத்தவுடன் பதட்டத்துடன்,
‘சித்தப்பா ,வீட்டுக்குப் போயிட்டீங்களா’ என்று கேட்க, ‘ஏண்டா, என்னடா..’ என்று புலிமுத்து
கேட்டான்.
‘இங்கே ஒரே பிரச்சினை…’
‘என்னடா பிரச்சினை…யார், யாருக்கு
பிரச்சினை…விபரமா சொல்லு….’
‘கோயில்லயிருந்து வந்த, நாங்க வீட்டுக்கு
வந்து பார்த்தா, வீட்டுல சாமான் எல்லாம் இறைஞ்சு கிடக்கு. வீட்டுக்கூரை, ஓடெல்லாம்
உடைஞ்சு கிடக்கு. என்ன விஷயம்ன்னு கேட்டா சாயந்திரம் அஞ்சரை மணி வாக்குல புலிபதி தண்ணி
போட்டுகிட்டு வீட்டுக்கு வந்து, எங்கம்மாட்டயும், அண்ணன்ட்டயும் தகராறு பண்ணியிருக்கான்.,
சாமானெல்லாம் அள்ளி வீசி, ஓட்டையெல்லாம் இழுத்து சரிச்சு விட்டு எங்கம்மாவையும், அண்ணனையும்
வேற அடிச்சிருக்கான். எங்க அண்ணன் தடுக்கும்போது குடிபோதையிலே புலிபதியே கீழே விழுந்துட்டு,
எங்கண்ணும், அம்மாவும் சேர்ந்து அவனை அடிச்சு
கீழே தள்ளிட்டதா போலிஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளைண்ட் கொடுத்துட்டானாம். ‘
‘எங்கண்ணனையும், அம்மாவையும் விசாரிக்க
வந்த போலிஸ் நடந்த கதையே வேறங்கிறதாலே, ஒடைஞ்ச ஓடு, சரிஞ்ச கூரை, வீட்டுச்சாமான் எல்லாத்தையும்
போட்டோலாம் எடுத்துக்கிட்டு இருக்கும்போதுதான் நானும் ,அப்பாவும் வீட்டுக்கு வந்தோம். வேற இடத்துக்கு ரவுண்ட்சுக்கு போயிருந்த இன்ஸ்பெக்டர்
விசாரிக்கதுக்காக எல்லாரையும் ஸ்டேஷனுக்கு வரச்சொன்னதனாலே குடும்பதோட ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க...'
‘சரிப்பா. நான் ஏதும் ஸ்டேஷனுக்கு
வரணுமா..’
‘வேண்டாம் சித்தப்பா. இன்ஸ்பெக்டர்
எங்களை விசாரிச்சுட்டு, கம்ப்ளைண்ட் கொடுக்கச் சொன்னவரு, ‘புலிபதியை விட்டு உடைஞ்ச
ஓடு, சாமானெல்லாம் மாத்தி கொடுக்கச் சொல்லி பேசுதேன். ஒத்து வந்தான்னா கேசில்லாம பேசி
முடிச்சுடலாம். எடக்கு, மடக்கா ஏதும் பேசினா ரெண்டு இழுப்பு இழுத்து கேஸ் பதிஞ்சி உள்ளே
தூக்கி போட்டுடறேன். உங்களுக்கு எப்படி வசதி’ன்னு கேட்டார். 'எங்கப்பாவும் நீங்க சொல்ற
மாதிரியே செஞ்சிடலாம்ன்னு சொல்லிட்டதனாலே நாளைக்குப் பகல்ல வாங்க பேசி முடிச்சுடுவோம்ன்னு
சொல்லி அனுப்பிச்சுட்டாரு..
சரி இப்போ எங்கே இருக்கீங்க….உங்கப்பாவை
எங்கே… கூட இருந்தா போனைக் குடு. நான் பேசுதேன்.
இல்லை சித்தப்பா. நான், அண்ணன்,
அம்மா ஸ்டேஷன்லயிருந்து வீட்டுக்கு வந்துட்டோம். எங்கப்பா கல்லிடையிலே ஒரு ஆளைப் பாத்துட்டு
வர்றேன்னு சொல்லுச்சு.
சரிப்பா…நா உங்க அப்பா நம்பர்லே
பேசிக்கிடுதேன்…
பலமுறை அழைத்தும் புலியாண்டி அழைப்பை
எடுக்காததால் சரி.காலையில் பேசிக் கொள்ளலாம் என முடிவு செய்து படுத்தவன் அலுப்பில்
நன்கு அசந்து உறங்கி விட்டான். மறுநாள் காலையில் தொடர்ந்து முயற்சி செய்தும் புலியாண்டியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால், புலியானை அழைத்து 'என்னப்பா, உங்கப்பா போன் பண்ணா எடுக்கவே மாட்டக்கு... ராத்திரி எப்ப வீட்டுக்கு வந்துச்சு..' என்று கேட்டதற்கு புலியான் கூறிய பதில் அதிர்ச்சியை தந்தது.
ஆம். ராத்திரியில் இருந்து
புலியாண்டியை காணவில்லையாம். புலியாட்சி, புலிபதியும் இரவில் இருந்தே யார் கண்ணில் படாததாலும்,
அவர்கள் வீடும் பூட்டப்பட்டு இருந்ததாலும், 'என்னாச்சோ..., ஏதாச்சோ...' என்று எல்லோருக்கும் போல் புலிமுத்துவிற்கும்
பதட்டம் ஏற்பட்டது.
2 comments:
எங்களுக்கும் பதட்டம் தொற்றிக்கிச்சு...
ஆமா... புலி,புலின்னு பேருகளை வச்சி எப்படி குழப்பமில்லாம எழுதுறீங்க..?
// பரிவை சே.குமார் said...
எங்களுக்கும் பதட்டம் தொற்றிக்கிச்சு...
ஆமா... புலி,புலின்னு பேருகளை வச்சி எப்படி குழப்பமில்லாம எழுதுறீங்க..? //
கதை நிகழ்ச்சிகளுடன் ஒன்றி விட்டதால் பெயர் குழப்பம் இல்லாமல் எழுத முடிகிறது நண்பரே...
Post a Comment