Thursday, November 19, 2015

கிடா வெட்டு


புலி உறுமுது…. புலி உறுமுது…




”வாட்லா… வேர் ஹி கான்லா… ஹவ் மெனி டைம்ஸ் ஐ ரிமைண்டட்…. யு ப்யூப்பிள் மார்னிங், மார்னிங் மேக்கிங் டென்ஷன்…” அட்மின் மேனேஜரிடம் காலையிலேயே கொதித்து குமுறிக் கொண்டிருந்தான் புலி முத்து .  மலேஷியாவில் ஜே.பி என சுருக்கமாக அழைக்கப்படும் ஜோகூர் பாகுர் மாநிலத்தில் கட்டுமான நிறுவனத்தில் திட்ட மேலாளாராக பணி புரியும் அவன்   ஆறு மாதத்திற்கு பின் அன்று இரவு மலேஷியத் தலைநகரான கே.எல் என்னும் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் வழியாக சொந்த ஊருக்கு போகிறான்.

புலிமுத்து வேலை செய்யும் திட்டப்பணி மலேஷிய தீபகற்பத்தின் தென் முனையான குக்குப் என்னும் இடமாகும். அங்கிருந்து பொந்தியான், பர்க்ககனாஸ் வழியாக ஜே.பியின் ‘டூனா மினா’ பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் கே.எல் விமான நிலையம் செல்ல பேருந்தில் முன் பதிவு செய்திருந்தான். வழக்கமாக ஜே.பி.யின் சினாய் விமான நிலையத்தில் இருந்து கே.எல். விமான நிலையத்திற்கு விமானம் மூலமே செல்வான். ஆனால் இம்முறை நீண்ட நாட்களுக்குப் பின் செல்வதால் லக்கேஜ்கள் அதிகம். பேருந்து என்றால் அவற்றை ஏற்றி இறக்குவது எளிது என்பதால் பேருந்துப் பயணத்தை தேர்வு செய்திருந்தான்.

திட்ட மேலாளர் என்பதால் வெள்ளிக்கிழமையான அன்று காலை பணிக்கு வந்து விட்டு, ஒரு சில முக்கியமான வார இறுதி கிளையன்ட் மீட்டிங்குகளை முடித்து விட்டு கிளம்பலாம் என்பது புலி முத்துவின் திட்டம். உலகெங்கும் பல நாடுகளில் உள்ள நடைமுறைப் படியே மலேஷியாவிலும் கட்டுமான திட்டங்களில் வழக்கமாக காலை ஏழு மணிக்கெல்லாம் வேலை ஆரம்பித்து விடும். பாதுகாப்பு துறையினரால் முறையான பாதுகாப்பு எச்சரிக்கைகள் அறிவிக்கப்பட்டு, அனைவராலும் உறுதி மொழிகளும் எடுக்கப்பட்டு தொழிலாளர்கள்  பணிக்குச் சென்றவுடன், அதிகாரிகளுக்கான மீட்டிங் தொடங்கி எட்டு மணிக்குள் முடிந்து விடும். எனவே எட்டரை மணிக்கு கிளம்பினால் பதினொரு மணி பேருந்தைப் பிடிக்க சரியாக இருக்கும் என்று திட்டமிட்டு அட்மினில் சொல்லி டிரைவரை தனது காரிலேயே தயார் நிலையில் இருக்குமாறு கூறியிருந்தான். காலையில் வேலைக்கு வரும் போதே பிரயாணப் பெட்டிகளை காரில் ஏற்றி கொண்டு வந்துவிட்டதால் டிரைவர் விச்சுவும் கிளம்ப வேண்டிய நேரத்தை அறிவான்.

பெரும்பான்மையான  ஓட்டுநர்கள் மதிய ஓய்வு நேரத்தில்தான் உறங்குவார்கள் என்றால் விச்சுவோ காலை, மாலை, மதியம், இரவு, வெயில், மழை என காலம் பார்க்காமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தூங்கக்கூடியவன். ஒரு நிமிடம் தனியாக இருந்தால் கூட உட்கார்ந்த இடத்திலே உறங்கி விடுவான். அப்படி ஒரு அசதி நோய் அவனுக்கு. மற்றபடி சூது, வாது இல்லாதவன். வண்டி ஓட்டுவதிலும் கெட்டிக்காரன் என்பதாலே இன்னும் இந்த வேலையில் நீடித்துக் கொண்டிருக்கிறான். புலி முத்துவை அலுவலகத்தில் விட்டு விட்டு காலை உணவிற்காக பிராஜக்ட் சைட்டின் வெளியே இருந்த தனியார் உணவகத்தின் ஒதுக்குப்புறமான இருக்கையில் அமர்ந்து உணவருந்திய விச்சு அப்படியே உறங்கி விட்டான். மீட்டிங் முடித்து கிளம்பத் தயாரான புலி முத்துவும், அட்மின் மேனேஜரும் மாறி, மாறி அலைபேசியில் அழைத்தும் எடுக்கவே இல்லை. மணியோ ஒன்பதை தாண்டி விட்டது. மற்ற இரு டிரைவர்களும் ஆட்களை ஏற்றிக் கொண்டு சைட்டினுள் சென்று இருந்தனர். புலி முத்துவின் கோபக்கடி வார்த்தைகள் தாங்க முடியாமல் அட்மின் மேனேஜர் ஒரு வாகனத்தை எடுத்துக் கொண்டு விச்சுவை தேடிச் சென்றார்.

பத்து நிமிடத்தில் அட்மின் மேனேஜரோடு அலுவலகம் திரும்பிய விச்சுவின் முகம் வாடி, வதங்கியிருப்பதைப் பார்த்த புலி முத்துவிற்கு மேற்கொண்டு அவனைத் திட்ட தோன்றவும் இல்லை. அதற்கு நேரமும் இல்லை. ஏற்கனவே அட்மின் மேனேஜர் புலி முத்துவிடம் அவர் வாங்கிய ஏச்சுக்களையும், திட்டுக்களையும் சிறிதும் சூடு குறையாமல் விச்சு மீது கொட்டியிருந்தார். நேரம் வேறு ஒன்பதரையை நெருங்கி விட்டதால் பாஸ்போர்ட் , விமான டிக்கெட் , தேவையான பணம், கிரெடிட் கார்டு, அடையாள அட்டை மற்றும் பயணத்திற்கு தேவையான முக்கியமான பொருள்கள் வைத்திருந்த பையை தோளில் மாட்டிக் கொண்டு விருட்டென்று அலுவலகத்தை விட்டு வெளியே வந்து வேகமாக காரில் ஏறிய புலி முத்துவை தொடர்ந்து ஓடி வந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வண்டியைக் கிளப்பினான் விச்சு. சூழ்நிலை உணர்ந்தது போல் சீறிப்பாய்ந்து கிளம்பியது நிசான் நவேராவும்.

”விச்சு, போகும் போது லக்கேஜ்களை எடை போடணும். முனியாண்டி ஐயா கோயில்லயும் சாமி கும்பிட்டுட்டு போகணும்.” என்று ஏறும்போதே கூறி இருந்ததால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக பொந்தியான் ரோட்டின் இடதுபக்கத்தில் பரந்து விரிந்த ஆலமரத்தின் அடியில் அமைந்துள்ள முனியாண்டி சுவாமி கோயிலில் வண்டியை நிறுத்தினான் விச்சு. வழக்கமாக அந்த ரோட்டில் எப்போது சென்றாலும் முனியாண்டி ஐயாவை வணங்கி செல்வது புலிமுத்துவின் வழக்கம். எடை போட நிறுத்திய கடையில் ஐயாவிற்கு படைக்க வாங்கி இருந்த இரண்டு பீர் கேன்களையும்  சாமி சிலையின் முன் வைத்து நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி திருநீறு பூசி கிளம்பினார்கள். வழக்கமாக ஊர் சென்று திரும்பியபின்  முனியாண்டி சாமிக்கு ஊரில் இருந்து வாங்கி வந்த வேட்டி, துண்டுகளை வைத்து வழிபடுவது புலிமுத்துவின் வழக்கம். மலேஷியாவில் மதுரை வீரன், முனியாண்டி போன்ற சுவாமிகளுக்கு பீர் வாங்கி வைத்து வணங்குவது வழக்கம் என்றாலும் புலி முத்து முதல் முறையாக  இப்போதுதான் பீர் கேன்கள் வாங்கி வைக்கிறான்.

புலி முத்துவிற்கு வேகமாக செல்வதும், வண்டியை விரட்டுவதும் பிடிக்காது என்றாலும் அன்று நெருக்கடியான நேரம் என்பதால் ஏதும் சொல்லாமல் இருந்ததைப் பார்த்த விச்சு வண்டியை விரட்டு, விரட்டு என விரட்டினான். செல்லும் வழியெல்லாம் பல வண்டிகளை ஓவர்டேக் செய்து வளைத்து, வளைத்து ஓட்டிய விச்சு ஒரு வளைவில் ‘சார்’ என்று அலற ஏதோ சிந்தனையில் இருந்த புலி முத்து திடுக்கிட்டு நிமிர்ந்தான்.

( தொடரும் )

பாகம் 2 

6 comments:

Nagendra Bharathi said...

அருமை

கரந்தை ஜெயக்குமார் said...

எழுத்துக்களைச் சற்று சிறிதாக்கினால் நன்றாக இருக்கும் நண்பரே

KILLERGEE Devakottai said...


புலியை நானும் விரட்டி வருகிறேன் நண்பரே....

துபாய் ராஜா said...

// கரந்தை ஜெயக்குமார் said...
எழுத்துக்களைச் சற்று சிறிதாக்கினால் நன்றாக இருக்கும் நண்பரே...//

சரி செய்ய முயற்சிக்கிறேன் ஐயா. தொடர் வருகைக்கும்,ஊக்கக் கருத்துரைக்கும் நன்றி.

துபாய் ராஜா said...

// KILLERGEE Devakottai said...

புலியை நானும் விரட்டி வருகிறேன் நண்பரே....//

ஒரு புலியை விரட்ட இன்னொரு புலியால்தானே முடியும் நண்பரே... :))

தொடர் வருகைக்கும்,ஊக்கக் கருத்துரைக்கும் நன்றி கில்லர்ஜி.

துபாய் ராஜா said...

// Nagendra Bharathi said...

அருமை //

முதல் வரவிற்கும், முத்தான கருத்திற்கும் நன்றி நண்பரே...