Friday, November 27, 2015

கிடா வெட்டு - பாகம் 8


பாகம் 8 - காது குத்தும், படையல்களும்…

காதுகுத்து தினமான ஞாயிறன்று காலை எட்டு மணிக்கு அம்பை ஆசிரியர் குடியிருப்பிற்கு இரண்டு வேன்களும் வந்துவிட குடும்ப உறுப்பினர்கள், முந்திய தினமே வீட்டிற்கு வந்திருந்த சொந்தக்காரர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் செல்லும் வழியில் சில உறவினர்களையும் ஏற்றிக் கொண்டு மணிமுத்தாறு வனச்சோதனை தாண்டி கோயிலை அடையும்போது காலை மணி ஒன்பது தாண்டிவிட்டது. புலிப்பட்டியிலிருந்து வரும் வேன்களும் ஒன்றன்பின் ஒன்றாய் வர அம்பையிலிருந்து வந்தவர்கள், புலிப்பட்டி உறவினர்கள் அனைவரையும் காலை உணவு உண்ண ஏற்பாடு செய்தான் புலிமுத்து.

காலை உணவாக பொங்கல், சாம்பார், கேசரி செய்திருந்தார்கள். தனித்தனி இடங்களில் சைவ சமையல் குழு காய்கறிகளை அரிந்து கொண்டும், அசைவ சமையல்குழு ஏற்கனவே வெட்டப்பட்டு, தோல் உரிக்கப்பட்டிருந்த கிடாக்களை துண்டு போடும் பணியிலும் பரபரப்பாக இருந்தனர். காலை உணவு பந்தி, சாமிகள் அலங்காரம், சமையல் மேற்பார்வை என அனைத்து இடத்திலும் வளைய வந்து கொண்டிருந்த புலியாண்டி, காலை ஆறரை மணிக்கெல்லாம் கோயிலுக்கு வந்துவிட்டதாகவும், வந்தவுடன் சமையல் சாமான்களையெல்லாம் பிரித்து கொடுத்துவிட்டு, ஆற்றில் கிடாக்களை குளிப்பாட்டி, புலியாண்டிக்கு பூஜை போட்டு மூன்று கிடாக்களையும் ஒன்றன்பின் ஒன்றாக தொங்கல் விழாமல் ஒரே வெட்டாக  வெட்டி விட்டதாகவும் தெரிவித்தான்.

சொந்தமாக பைக், ஆட்டோ, கார் என வந்திருந்த அனைத்து உறவினர்களும்,நண்பர்களும் காலை உணவு சாப்பிட்டு முடித்த நேரத்தில் நாவிதரும், தட்டரும் வந்துவிட குழந்தைக்கு மொட்டை அடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பத்தரை மணி அளவில் மொட்டை அடித்து சுடுநீரில் குழந்தையை குளிப்பாட்டியபின் பதினொரு மணிக்கு புலியாண்டி கோயில் வளாகத்தில் வைத்து காதும் குத்தியாயிற்று. மொட்டை அடிக்கும்போது சிரித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காது குத்தும்போது அலறித் துடித்துவிட்டான்.

காது குத்தி கம்மல் போட்டபின் காயம் ஆகாமல் இருக்க, இரு காதுகளிலும் சுண்ணாம்பு தடவி, மொட்டைத் தலையிலும் சந்தனம் தடவி, அழுத குழந்தையை சமாதானப்படுத்தியபின் வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவருடனும்  தனித்தனியாகவும், குழுக்களாகவும் போட்டோவும், வீடியோவும் எடுக்கப்பட்டது. அதற்குள் சைவச்சாப்பாட்டு வகைகள் தயாராகி விட்டதால் சிவலிங்கத்திற்கும், விநாயகருக்கும், முருகருக்கும் அகத்தியருக்கும் வடை, சுண்டல், கொழுக்கட்டை, சர்க்கரைப் பொங்கல் மற்றும் சைவச்சாப்பாட்டு வகையறாக்களோடு தனித்தனியாக சைவப்படையல் போடப்பட்டு தீபாரதனையோடு, விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு முடிக்கும்போது நேரம் மதியம் ஒன்று தாண்டிவிட்டது.

அடுத்து புலியாண்டி சுவாமிக்கு அசைவப்படையல் இடுவதற்காக புதிய  வேட்டியை விரித்து, அதன்மேல் பெரிய, பெரிய இலைகள் இட்டு சாதத்தை கொட்டி, மூன்றடி நீளம், இரண்டடி அகலம், ஒரு அடி உயரத்திற்கு செவ்வக வடிவில் பரப்பி, அதன் மேல் வெள்ளைச்சோறு வெளியே தெரியாத அளவு கிடாக்கறி, குழம்பு, அவியல், பூசணிக்காய் கூட்டு, அகத்திக்கீரைப் பிரட்டல், இரத்தப்பொரியல் வகையறாக்களை இட்டு அவித்த முட்டைகள் அடுக்கி, தயிர்,நெய் விட்டு நெய்ப்பந்தங்கள் ஏற்றி படையலைச் சுற்றி பூமாலைகள் அணிவிக்கப்பட்டன. 

தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைத்து ஊதுபத்தி ஏற்றி பஞ்சவாத்திய முழக்கங்களோடு, புலியாண்டி சுவாமிக்கு அபிஷேக, அலங்காரங்கள் முடித்து தீபாரதனையோடு சிறப்பு பூஜை செய்து முடித்தபோது பலரும் அருள் வந்து ஆடினர். கோயிலுக்கு வந்திருந்தவர்கள், சாமியாடியவர்களிடம் திருநீறு பூசி, ஆசி வாங்கி அருள்வாக்கு கேட்டுக்கொண்டும், ஆங்காங்கே அமர்ந்து பேசிக் கொண்டும் இருந்தனர்.

சைவ, அசைவ சாப்பாட்டு வகைகளை தனித்தனி இடங்களில் பரிமாற ஏற்பாடு செய்து கொண்டு இருக்கும்போதுதான் புலிபதி தந்தை புலியாட்சியுடன் பைக்கில் வந்து இறங்கினான். வயலில் மருந்து இடும் வேலை நடந்து கொண்டு இருந்ததால் முடித்துவிட்டு வர நேரமாகிவிட்டதாக கூறியவர்கள் புலியாண்டியும், அவனது மகன்களும் அங்கும், இங்கும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டு இருப்பதை வெறுப்புடன் பார்ப்பதை புலிமுத்து கவனித்தான். 

பந்திக்கு இலை போட்டு அனைவரையும் சாப்பிட அழைத்து அணி, அணியாக சாப்பிட்டு முடிக்க, முடிக்க சைவ, அசைவ பந்திகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. சாப்பிட்டு முடித்து கிளம்புவர்களை வழி அனுப்ப கோயிலுக்கு வெளியே புலிமுத்து நின்று கொண்டிருந்தபோது அசைவப்பந்தி நடைபெறும் இடத்தில் கூச்சல், குழப்பமாக இருந்தது. சில நிமிடங்களில் புலியாட்சியோடு, புலிபதி விருட்டென பைக்கில் ஏறிக் கிளம்பிச் சென்றதை தள்ளி நின்று பேசிக்கொண்டிருந்த புலிமுத்து கவனிக்கத் தவறவில்லை.

கிளம்பியவர்களை வழி அனுப்பிவிட்டு நேராக பந்தி பரிமாறும் இடத்திற்கு சென்று என்ன பிரச்சினை என்று விசாரித்தபோது புலியாட்சியும், புலிபதியும் புலியாண்டியிடம் தகராறு செய்ததாக அருகிலிருந்தவர்கள் கூற பந்திக்கு சாப்பாட்டுச் சாமான்களை வழங்குவதில் பரபரப்பாக இருந்த புலியாண்டியிடம் விசாரித்தபோது அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்று கூறிவிட்டான்.

( தொடரும் )

பாகம் 9

2 comments:

'பரிவை' சே.குமார் said...

அப்ப இனி பிரச்சினையில் கிடாவெட்டா...

துபாய் ராஜா said...

// பரிவை சே.குமார் said...

அப்ப இனி பிரச்சினையில் கிடாவெட்டா...//

ஆம் நண்பரே... கதை முடிவை நெருங்கி விட்டது.