Tuesday, November 24, 2015

கிடா வெட்டு - பாகம் 5





பாகம் 5 –  வம்பு வழியில் நிற்கிறது…
                                                                                                                                                 
புலியாண்டி சாமியின் கதையையும், தனது சொந்த ஊர் வரலாற்றையும் கேட்டு சிறிது நேரம் எல்லாக் காட்சியையும் மனக்கண்ணில் ஓட்டிப்பார்த்தவாறு அமர்ந்திருந்த புலிமுத்து இரு கண்களையும் நாலாபுறமும் சுழலவிட்டு கோயிலின் சூழ்நிலையையும், சுற்றுப்புறத்தையும் மீண்டும் ஒரு முறை அளந்தான். 

கையில் கத்தி, கம்போடு ஆறடி உயரத்திற்கும் மேல் ஆஜானுபாகுவான கல்சிலையோடு அந்தக்கால கல்கட்டாய் கட்டப்பட்டிருந்த புலியாண்டி கோயிலின் முன்னே பூஜை செய்யும் போது ஆட்கள் நேர் வரிசையாய் நின்று சாமி கும்பிடவும், அமர்ந்து இளைப்பாறவும் வசதியாக  உயரமான சிமெண்ட் தளத்தோடு, நீண்ட, அகலமான தகர செட் போடப்பட்டிருந்தது. பக்கத்திலே வயிற்றுப் பிள்ளையோடு இறந்த புலியாண்டி சாமியின் மனைவிக்காக சுமைதாங்கி கல்லும் அமைக்கப்பட்டிருந்தது. பிள்ளையார், முருகர், சிவலிங்கம், மற்றும் பொதிகை மலை சித்தரான அகத்தியருக்கும் தனியாக ஆலயம் அமைக்கப்பட்டிருந்தது.

கோயிலுக்கு சற்றுத்தள்ளி ஆற்றங்கரையருகே சமையல் செய்வதற்காக அடுப்புக்கற்களோடும், தண்ணீர் தொட்டி வசதிகளோடும் ஒரு தகர செட்டும், பந்தி போட்டு பரிமாற வசதியாகவும், சமையல் சாமான்கள், சாப்பாட்டு வகையறா பொருட்களை குரங்குகள் தூக்கிச் செல்லாமல் பாதுகாப்பாக வைப்பதற்கு வசதியாக கதவுகளோடு கூடிய மூன்று அறைகளோடு ஒரு பெரிய தகர செட்டும் அமைக்கப்பட்டிருந்தது. கோயிலுக்கும், ஆற்றுக்கும் நடுவில் மற்ற சிறு தெய்வங்களின் பீடங்களும், உருவச்சிலைகளும் இருந்த இடத்திலும் மழை பெய்தாலும் பக்தர்கள்  நனையாமல் ஒதுங்கிக் கொள்ள வசதியாக ஆங்காங்கே அகலமான தகர  செட்டுக்கள் அமைக்கப்படிருந்தன.

அடிக்கடி மழை பெய்யும் மலைப்பகுதி என்பதாலும், ஆற்றில் வெள்ளம் வந்தால் பாதிக்காதவாறும், அனைத்து தகர செட்டுகளுமே நல்ல உயரமாகவும், எந்த திசையிலிருந்தும் மழை நீர் சாரல் அடிக்காதவாறும், உள்ளே இருப்பவர்கள் சிறிதும் நனைய வாய்ப்பே இல்லாத விசேஷமான கூரை அமைப்போடும், தரமான, உயர்ந்த சிமெண்ட் தளங்களோடும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்ததைக் கண்ட புலிமுத்து, ‘இந்த செட்டுவோ, ரூமெல்லாம் எப்போ கட்டுனதுண்ணே..’ என்று புலியாண்டியிடம் வினவினான்.

‘மணிமுத்தாறு செக்போஸ்ட்லயிருந்து மாஞ்சோலை வரை இருக்கிற ரோட்டை யார் போடறதுன்னு ரொம்ப காலமா ஃபாரஸ்ட்காரங்களுக்கும், ஈ.பி.காரங்களுக்கும், பி.டபுள்யூ,டிகாரங்களுக்கும், எஸ்டேட் காரங்களுக்கும் இருந்த பஞ்சாயத்து ரெண்டு வருஷம் முன்னாடிதான் தீர்ந்தது. அப்போ ரோடு போடவந்த காண்டிராக்டர் நம்ம புலியாண்டி கோயில்ல பூஜை போட்டு வேலை ஆரம்பிக்கிற அன்னைக்கு அவங்க ஆள்லே ஒருத்தர் சாமி வந்து ஆடி, ‘உன் ஆள்களுக்கோ, வேலைகோ எந்த பங்கமும் வராம நல்ல படியா முடிச்சுக் கொடுக்குறேன். என் பக்தர்கள் மழையில நனையாம நின்னு என்னைக் கும்பிட வசதி செஞ்சு தருவியா’ன்னு கேட்டு உறுதி வாங்கியிருக்கார்.

முதல்ல அவங்க ஆள்கள் தங்குறதக்கு ஆத்தங்கரையோரமா மூணு ரூமோடு இருக்க செட்டும், சமையல் பண்ற செட்டும் போட்டவர், யானை, புலி தொந்திரவு இல்லாமலயும், எந்த விபத்து ஏற்படாமலும் வேலை நல்ல படியா முடிஞ்சதாலே உசரமான சிமெண்ட் தளத்தோட மத்த செட்டுவளையும் தரமா போட்டுக் கொடுத்து பதினொரு  கிடாவும் வெட்டி புலியாண்டிக்கு படையல் போட்டு அன்னதானம் பண்ணிட்டுதான் போனாரு. இப்பவும் வேற எங்கே பெரிய வேலை கிடைச்சாலும் இங்கே வந்து கிடா வெட்டி பூஜை போட்டுட்டுத்தான் வேலைகளையே ஆரம்பிக்கிறாரு. சீக்கிரமே எல்லா கோயிலுக்கும், சமையல் செய்யற இடத்துக்கும், ஆத்துதண்ணி வர்ற மாதிரி மோட்டார், தண்ணித்தொட்டியோட பைப் லைன் போட்டுத்தர்றேன்னு சொல்லியிருக்காராம்.'

தன் குடும்பத்தை அழித்த கொடும்புலியால் ஊரில் வேறு யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தன் உயிரைக் கொடுத்து ஊரையும், உற்றார், உறவினர்களையும் காத்த புலியாண்டி சாமி உள்ளூர் மக்களுக்கு மட்டுமல்லாமல் அந்த வழியாக பயணிக்கும் எஸ்டேட் தொழிலாளர்களுக்கும், ஈ.பி, ஃபாரஸ்ட், பி.டபுள்யூ.டி, அணைக்கட்டு தொழிலாளர்களுக்கும், எங்கெங்கோ இருந்து வந்து வேலை எடுத்துச் செய்யும் காண்டிராக்டர்களுக்கும், மணிமுத்தாறு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் காவல் தெய்வமாக இருந்து அந்த காட்டையும், ஆற்றையும், வனவிலங்குகளையும் பாதுகாத்து வரும் அதிசயத்தை எண்ணி வியந்தவாறு இருந்த புலிமுத்துவை புலியாண்டி அண்ணன் ஓரிரு முறை உரக்க அழைத்து நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தார்.

‘சரி தம்பி. இப்ப சொல்லு. காது குத்து என்னைக்கு செய்யனும். எப்படி செய்யனும். எத்தனை பேர் வருவாங்க. நம்ம ஊர்ல யாருக்கெல்லாம் சொல்லனும்’ என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்க, ‘யண்ணே, நம்ம ஊர்ல சொந்தக்காரங்க எல்லாருக்கும் சொல்லிடுவோம். அம்மா கூடப்பிறந்தங்க, அவங்க பிள்ளைங்க, என் வீட்டுக்காரி வழில, அப்புறம் அம்பாசமுத்திரத்துல அக்கம்பக்கம் இருக்கவங்க எல்லாருக்கும் சொல்லனும்’ என்றவனிடம்,’அப்போ, மொத்தமா ஒரு முன்னூறு பேரு வருவாங்கன்னு வச்சுகிடுவோம். சரி என்னைக்குச் செய்வோம் எத்தனை கிடா பிடிக்கனும். சொல்லு.’ என்றவாறே அடுத்த பீடியை பற்ற வைத்தான் புலியாண்டி.

‘எண்ணே, பிள்ளையார், முருகர், சிவலிங்கம், அகத்தியருக்கு சைவப்படைப்பு போடணும். புலியாண்டிக்கும் கூட இருக்க மத்த எல்லா சாமிக்கும் அசைவப்படைப்புதான். எப்படியும் வர்ற ஆளுவோள்ல எழுபது, எம்பது பேரு சைவமாத்தான் இருப்பாங்க. அவங்க சைவப்படைப்பு சாப்பிட்டா, மீதி இருக்க ஆளுவளுக்கு இரண்டு கிடா போதுமா…இல்லை ஒத்தைப்படையா மூணு கிடா வெட்டிடுவோம்.’

‘ஆமா தம்பி, கறி யாருக்கும் நம்ம அளந்து வைக்க முடியாது. மூணு கிடா வெட்டினாத்தான் சரியா வரும்ன்னு எனக்கும் தோணுது.’

‘அப்புறம் என்ன செய்யுறதை சிறப்பா செஞ்சிடுவோம். இன்னைக்கு சனி. நாளைக்கு ஞாயிறு. வேலைக்குப் போறவுங்க, ஸ்கூல் புள்ளைங்க எல்லாரும் வர வசதியா அடுத்த ஞாயித்துக் கிழமை சாமிக்கு செஞ்சிடுவோம்.’

‘சரி.அப்படின்னா இப்பவே நேரா கல்லிடைக்குறிச்சிக்குப் போயி சமையல்காரனை பார்த்து சாமான் லிஸ்ட் வாங்கி மளிகைக் க்டையிலே கொடுத்திருவோம். அப்போதான் அவன் இல்லாத சாமானை வாங்கி ஏற்பாடு பண்ண சரியா இருக்கும். பூக்காரனுக்கும் அட்வான்ஸ் கொடுத்துடணும். இது ரெண்டும்தான் இருக்கறதுலயே முக்கியமான வேலை. இந்த ரெண்டு பயலும் வேறே எங்கேயும் அட்வான்ஸ் வாங்கிட்டான்னா நமக்குச் சங்கடமாப் போயிடும்’ என்றவாறே புலியாண்டி எழுந்து கிளம்பத் தயாராக இன்னொரு முறை எல்லா சாமியையும் வழிபட்டு விட்டு இருவரும் பைக்கில் ஏறி கிளம்பினார்கள்.

ஒரு பக்கத்தில் மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் தேங்கி கரையெங்கும் அலையடித்துக் கொண்டும், மறுபக்கத்தில் வானுயர்ந்த மரங்களோடு, ஏதேதோ பெயர் தெரியாத காட்டுச் செடிகளும், புதர்களுமாய் பச்சைப் பசேலென அடர்ந்த வனமாகவும் இயற்கைப்பேரழகு ஏதேதோ வர்ணஜாலம் காட்ட அந்த மலைச்சாலைப் பயணம் புலிமுத்துவின் மனதிற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தந்தது. வனச்சோதனை சாவடி தாண்டி எண்பதடி வாய்க்கால் சரிவான சாலையில் இறங்கும்போது பிள்ளையார் கோயில் அருகே இருந்த சுற்றுலா வாகனங்களிடம் கேளிக்கை கட்டண வசூல் செய்யும் செக்போஸ்ட்டில் இருந்து வெளிவந்த ஒரு உருவம் கைகாட்டி வண்டியை நிறுத்த யாரென்று பார்த்தால் புலியாண்டியின் அண்ணன் புலியாட்சியின் மகன் புலிபதி.

( தொடரும் )

பாகம் 6


2 comments:

KILLERGEE Devakottai said...

வரும் ஞாயிற்றுக்கிழமை நானும் கிடாவெட்டில் கலந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் நண்பா...

துபாய் ராஜா said...

// KILLERGEE Devakottai said...

வரும் ஞாயிற்றுக்கிழமை நானும் கிடாவெட்டில் கலந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் நண்பா... //

தங்கள் வரவு நல்வரவு. உற்றார்,உறவினர்,நண்பர்களோடு வாங்கஜி....