Saturday, June 30, 2012

நெல்லைக்கு பெருமை சேர்க்கும் இன்னொரு புத்திசாலி சிறுவன் சந்துரு.

தரணி புகழும் தாமிரபரணி தண்ணீருக்கு என தனித்துவமான குணங்கள் பல உண்டு. ஏற்கனவே நுண்ணறிவுத்திறனில் உலகசாதனை படைத்த சாதனைச் சிறுமி செல்வி விசாலினியைப் பற்றி உணவு உலகம் திரு.சங்கரலிங்கம் அவர்கள் பதிவிட்டு பெருமைப்படுத்தியிருந்தார்.







திருநெல்வேலி: இசை, மொழி, கம்ப்யூட்டர் ஆன்லைன் தேர்வு ஆகியவற்றில் சிறுவயதிலேயே சாதனை மாணவராக திகழும் நெல்லையை சேர்ந்த சந்துரு, தமது 10 வயதுக்குள் 20 ஆன்லைன் தேர்வுகளில் எழுதி வெற்றிபெற்றுள்ளார். நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள "இஸ்ரோ' விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் விஞ்ஞானியாகஇருப்பவர் கார்த்திக். இவரது மனைவி லதா, இவர்கள் பாளையங்கோட்டையில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் சந்துரு. 11 வயதாகும் சிறுவன் பாளையங்கோட்டை புஷ்பலதா, வித்யா மந்திர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவருகிறார். சிறு வயதில் இருந்தே கம்ப்யூட்டரில் ஆர்வமுடைய சிறுவன் , அமெரிக்க சாப்ட்வேர் நிறுவனங்களான மைக்ரோசாப்ட், சிஸ்கோ, ஆரக்கிள், ஜூனிபெர் போன்றவை
நடத்தும் ஆன்லைன் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றுள்ளார். வழக்கமாக கம்ப்யூட்டர் துறையில் பட்டப்படிப்பு படித்தவர்கள் எழுதும் திறன் கொண்ட சிசிஎன்ஏ நெட்வொர்க் தேர்வுகளையும், எம்.சி.பி., எம்.சி.டி.எஸ்., எம்.சி.பி.டி., ஆகிய ஆன்லைன் தேர்வுகளையும் தமது 10 வயதுக்குள்ளாக எழுதியுள்ளார். இது குறித்து நெல்லையில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்திவரும் சவுந்திரபாண்டியன் கூறுகையில், சிசிஎன்பி, சிசிடிபி எனப்படும் தேர்வுகளை இதற்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த 19 வயது நிரம்பிய இர்டாஷா ஹைதர் என்ற மாணவர்தான் குறைந்த வயதில் எழுதியுள்ளதாக தகவல்கள் உள்ளன. எனவே அந்த வகையில் அதைவிடவும் வயது குறைந்த மாணவராக சந்துரு ஆன்லைன் தேர்வில் வெற்றிபெற்றுள்ளது சிறப்பிற்குரியது என்றார்.
சந்துருவின் தாயார் லதா கூறுகையில், ""சிறுவயதில் இருந்தே கணிதத்தில் ஆர்வமுடையவனாக இருந்தான். அபாகஸ் கணிததேர்வின் எட்டு லெவல்களையும் தமது ஒன்பது வயதில் முடித்து தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்றான். தற்போது மொபைல் போனில் ஆன்ட்ராய்ட் தொழில்நுட்ப முறைகள் குறித்தும், கிளைவுட் கம்ப்யூட்டிங் குறித்தும் கற்றுவருகிறான். சந்துரு இசை, செஸ் விளையாட்டு களில் ஆர்வத்துடன் உள்ளான். மேற்கத்திய இசையில் லண்டன் இசைப்பள்ளியான டிரினிட்டியின் மூன்றாம் நிலை தேர்வில் வெற்றிபெற்றுள்ளான். தாமாகவே ஆர்வத்துடன் ஜப்பான், சீனா, பிரெஞ்ச் மொழிகளையும் கற்றுவருகிறான்'', என்றார்.

3 comments:

ராமலக்ஷ்மி said...

சிறுவன் சந்துருவுக்கு வாழ்த்துகள்!

துபாய் ராஜா said...

வரவிற்கும், கருத்திற்கும் நன்றி ராமலக்ஷ்மி மேடம்.

உணவு உலகம் said...

எனது வாழ்த்துக்களும் ராஜா.