Tuesday, February 02, 2010

இனி எல்லாம் சுகமே....


கனவுகள் பல நான் கண்டேன். அது தினம் தினம் கலைந்திட கண்டேன்.

இருட்டினில் எழுதினேன் என் சோகம். அதை யாரும் கண்டிடக்கூடாது என்றொரு தாகம்.

மணிக்கொரு ஆசையை நான் வளர்த்தேன். அவை நொடிக்கொன்றாய் உடைந்ததை அறிந்தே வாழ்ந்தேன்.

விட்டில்பூச்சிக்கு ஒளியின் மேல் ஆசை. கேட்கும் வழி இழந்த செவிக்கு ஒலியின் மேல் ஆசை.

கேட்டு கேட்டு ஓய்ந்து விட்டன என் காதுகள். இனி கேட்கவே கேட்காதோ என நெஞ்சுக்குள் கதறல்கள்.

அறிவியல் ஆயிரம் கண்டுபிடித்தது என கூறியது பல குரல்கள். என் வலி தீர வழி கண்டிருக்குமோ என மனதில் பல நாள் குமுறல்கள்.

நண்பர்கள் செய்யும் கேலியையெல்லாம் கேட்டு அதை எதிர்கிண்டல் செய்யும் நாள்தான் எனக்கில்லையோ என ஏங்கிடும் ஏங்கிடும் என் மனது. தினம் தூங்கிடும் தூங்கிடும் கண்கள் கனத்து.

நெஞ்சோடு அமைதி கொண்டேன் நான் இன்று. இறுதிமுடிவிற்கு வருகின்றது என் சோகம் என்று.

விடிகின்ற விடியல் எனக்காகத்தான். இனி எப்போதும் இந்த காதுகளில் இசைமழைதான்.

------------------------------------------

உடன் பணிபுரியும் அன்பு நண்பர் பாஸ்கர் எழுதிய கவிதை இது. நண்பர் கலைரசனை மிக்கவர். புகைப்படங்கள் எடுப்பதில் மிக்க ஆர்வம் கொண்டவர். எதிர்பாராத விபத்தில் செவித்திறன் குறைந்தமையால் பெரும் அவதிப்பட்டவர் சென்ற வாரம் இங்கு எகிப்திலே நவீன லேசர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். நான்கு நாட்கள் ஓய்வில் வீட்டில் தனியாக இருக்கும்போது எழுதிய கவிதை. என்னை மிகவும் பாதித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நண்பர் சீக்கிரம் நலம் பெற எல்லாம்வல்ல இறைவன் அருள்வானாக.

14 comments:

Anonymous said...

//கனவுகள் பல நான் கண்டேன். அது தினம் தினம் கலைந்திட கண்டேன்.

இருட்டினில் எழுதினேன் என் சோகம். அதை யாரும் கண்டிடக்கூடாது என்றொரு தாகம்.

ஆரம்பமே கலக்கல். அருமை நண்பரே.

சந்தனமுல்லை said...

/.நண்பர்கள் செய்யும் கேலியையெல்லாம் கேட்டு அதை எதிர்கிண்டல் செய்யும் நாள்தான் எனக்கில்லையோ என ஏங்கிடும் ஏங்கிடும் என் மனது./

:-(
விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்!

vasu balaji said...

/நண்பர் சீக்கிரம் நலம் பெற எல்லாம்வல்ல இறைவன் அருள்வானாக./

நானும் வேண்டுகிறேன். கவிதை அழகு.

Jawahar said...

ம்ம்ம்ம் சில சந்தர்ப்பங்களில் சத்தமே இசையாகிறது! நல்ல வெளிப்பாடு.

http://kgjawarlal.wordpress.com

லோகு said...

கவிதை அருமை. நண்பர் நலம் பெற வாழ்த்துகள்!!

கலகலப்ரியா said...

ரொம்ப நல்லா எழுதி இருக்காங்க உங்க நண்பர்..! பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றி ராஜா..!

ஹேமா said...

விடிகின்ற விடியல் நிச்சயம் அவருக்காகவே.இதில் என்ன சந்தேகம்.நலமைடைய பிரார்த்திக்கொள்கிறேன்.
குறையொன்றும் இல்லை இறைவன் கையில் நிறைவான குழந்தை அவர்.

Paleo God said...

விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்..:)

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

படமும் கவியும் அருமை! நண்பர் விரைவில் நலமடைய ஆண்டவன் அருள்செய்யட்டும்!

payapulla said...

நண்பருக்காக நீங்கள் இதை பதிவித்து இருப்பதே ஒரு கவிதைதானே

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையாக உள்ளது , நல்ல கவிதை நடை .

நண்பருக்கு வாழ்த்துக்கள் சொன்னதாக சொல்லுங்கள் ராஜா .

கிளியனூர் இஸ்மத் said...

உங்கள் நண்பர் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்திக்கின்றேன்

மாதேவி said...

நலம் பெற வேண்டுகிறேன்.

Prathap Kumar S. said...

உங்களை மாதிரி நல்ல நண்பர்கள் இருக்கறவரைக்கும் அவருக்கு ஒண்ணும் பிரச்சனையே இல்ல. சீக்கிரம் அவர் குணம்பெற பிராத்திக்கிறேன் தலைவா...