Tuesday, February 23, 2010

குழியில் தள்ளிய குட்டிச்சாத்தான்.... – பாகம் 5


எல்லோரையும் அனுப்பிவிட்டு கணேஷும் அவனது அப்பாவும் நான் எவ்வளவோ “வேண்டாம், வேண்டாம்” என்று மறுத்துக்கூறியும் கேட்காமல் என்னோடு பஸ்ஸ்டாண்டு வரக்கிளம்பினர். ஏற்கனவே பஸ்ஸ்டாண்டிற்கு செல்ல வேண்டும் என நிறுத்தி வைத்திருந்த அவரது மூன்று நண்பர்களின் பைக்குகளில் ஆளுக்கொருவராக ஏறி அமர்ந்து பஸ் ஸ்டாண்டை அடையும் போது மணி இரவு 11.15 மணி ஆகிவிட்டது. நள்ளிரவு நேரம் ஆகிவிட்டதால் பஸ்ஸ்டாண்டில் கூட்டமேயில்லை. சில ஊர்களுக்கு செல்லும் ஒரு சில கடைசி பஸ்கள் மட்டுமே நின்று கொண்டிருந்தன.

அம்பை பஸ் நிற்கும் இடத்திற்கு சென்றதும் எங்களை கண்ட கட்சிக்கார நண்பர்கள் “அண்ணாச்சி, நல்லவேளை கரெக்ட்டா நாங்க வரும்போதுதான் பஸ்ஸ்டாண்டுக்கு உள்ளே பஸ் வந்தது. உடனே ஏறி தம்பிக்கு சீட் போட்டுட்டோம். 11.30க்கு தான் எடுப்பாங்களாம். “ என்று தகவல் கூறினர்.

“சரி, இன்னும் கால்மணி நேரம் இருக்கு. வாங்க எல்லோரும் டீ சாப்பிடலாம்” என்று அழைக்க “அண்ணாச்சி, நீங்க எல்லோரும் சாப்பிட்டு வாங்க. எனக்கு டீ, காபி சாப்பிடும் பழக்கமில்லை” என மறுத்தேன். “அட,நீங்க பைசா கொடுக்க வேண்டாம். நான் கொடுக்கேன். சூடா ஏதாவது குடிச்சா கொஞ்சம் தெம்பா இருக்கும் பாலாவது சாப்பிடுங்க” என்று கூறி அழைத்து சென்று எல்லோருக்கும் டீயும், எனக்கு பாலும் வாங்கி தந்தார் கணேஷ் அப்பா.

“தம்பி, எந்த ஊரு” என்று கேட்டவரிடம் என் ஊர்ப்பெயரை கூறியவுடன் எங்கள் ஊரைச்சேர்ந்த் சில கட்சிகாரர்கள் பெயர்களை கூறி விசாரித்தார். அவர்கள் அனைவரும் சொந்தக்காரர்கள் என நான் கூறவும், “சரியாப்ப் போச்சு. ரொம்ப நெருங்கிட்டியளே.. நாங்கெல்லாம் “கானா’ குரூப்புல்லா... “ என்று மாவட்ட அளவிலான உட்கட்சி பூசலை போட்டுடைத்தார்.

சட்டை ரொம்ப கிழிந்திருந்ததால் அந்த நேரத்திலும் பஸ்ஸ்டாண்டு அருகில் அன்றைய வியாபாரக் கணக்கு முடிப்பதற்காக திறந்திருந்த துணிக்கடையில் சென்று ஒரு டீ-சர்ட் வாங்கி அணிந்து கொண்டு சட்டையை ஒரு கவரில் போட்டு கையில் வைத்துக்கொண்டேன்.

சிறிது நேரம் மற்ற விஷயங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டு பஸ் கிளம்பும் நேரம் ஆகிவிட்டபடியால் “சரி, நீங்க பஸ்ல்ல ஏறி உட்காருங்க. நாளைக்கு ஒரு வேலையாய் நம்ம தொகுதி எம்.எல்.ஏ கூட சங்கரன்கோவில் போகவேண்டியிருக்கு. ஊத்துமலை வழியாத்தான் கார்ல போவோம். வேலை முடிந்து திரும்பி வரும்போது நீங்க விழுந்த வழியா வந்து அந்த ரோட்டையும், பாலத்தையும் எம்.எல்.ஏ.ட்ட காமிச்சு ரிப்பேர் பண்ண ஏற்பாடு செய்யச் சொல்றேன். லைட்டுக்கும் ஏற்பாடு பண்ணிடுவோம். இனிமேலாவது இந்த மாதிரி யாரும் விழாம இருப்பாங்கல்லா..” என்று கூறியபோது “பணம் சம்பாதிப்பது மட்டுமே கொள்கையாக கொண்ட கட்சிக்காரர்களுக்குள் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று உழைப்பவர்களும் இருக்கிறார்களே“ என்ற எண்ணம் என் மனதில் எழுந்தது.

கடைசி பஸ் என்பதாலும், ஆலங்குளம் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் போட, வாங்க வந்த விவசாயிகள், வியாபாரிகளால் பஸ் நிரம்பி வழிந்தது. ஏற்கனவே இடம் போட்டு வைத்திருந்ததால் நிற்க வேண்டிய கஷ்டமில்லாமல் இருக்கையில் சென்று அமர்ந்தேன். ''கசமுசா'' ''கசமுசா" என்று ஆள்கள் பேசிக்கொண்டு வந்தாலும் நேரம் ஆகிவிட்டது மற்றும் எனக்கு இருந்த உடல் அலுப்பினாலும் டிக்கெட் எடுத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தவாறே அசந்து தூங்கி விட்டேன். அம்பை வந்ததும் ஏற்பட்ட பரபரப்பில் கண்விழித்து பஸ்சை விட்டு இறங்கி வீட்டை அடையும் போது சரியாக இரவு 12 மணி.

தூங்காமல் கண்விழித்திருந்த என் மனைவி தலையில் பெரிய கட்டுடன் வந்த என்னைப்பார்த்து “என்ன ஆச்சு, என்ன ஆச்சு” என்று பதறினார். அந்த நேரத்தில் பைக்கில் வந்து விழுந்த கதையை கூறி மேலும் அவரை கலவரபடுத்த விரும்பாமல் “ ஊத்துமலைல இருந்து ஆலங்குளத்துக்கு வரும்போது பஸ்ல சடார்ன்னு பிரேக் போட்டதால முன்சீட்டு கம்பில முட்டி நெத்தில லேசா வெட்டிட்டு. ஆலங்குளம் வந்து காமிக்கப் போன ஆஸ்பத்திரில்ல ஒரே கூட்டம். அப்புறம் பஸ்ஸ்டாண்ட் வந்தா பஸ்சும் இல்லை.அதான் லேட்டு” என்று கூறி சமாளித்தேன்.

“நான் எவ்வளவு நேரம் உங்க மொபைலுக்கு டிரை பண்ணினேன் தெரியுமா.. உங்க டீம் ஆள்களுக்கு போன் பண்ணி கேட்டா நீங்க ஊருக்கு கெளம்பி வந்துட்டதா சொன்னாங்க.. நீங்களும் போன் பண்ணலை..எனக்கு எப்படி இருந்திருக்கும்...” என அங்கலாய்க்க ஆரம்பித்தவரை “செல் பேட்டரில சார்ஜ் இல்லை. அதான் போன் பண்ண முடியலை. சரி,சரி, ஏற்கனவே நேரம் ஆயிட்டு. சாப்பாடு எடுத்துவை. காலைல சீக்கிரம் வேலைக்கு போகணும்” என்று கூறி தலைக்கட்டில் தண்ணீர் பட்டுவிடாமல் கழுத்திற்கு கீழ் குளித்துவந்தேன்.

அதற்குள் இடியாப்பம்- சொதியை சூடு பன்ணி வைக்க சாப்பிடும்போது “ம்ம்ம்..இன்னைக்கு சொதி நல்லா இருக்கே..” என்று பாராட்டி அவரை சகஜ நிலைக்கு கொண்டு வந்தேன். உணவிற்கு பின் டாக்டர் கொடுத்து இருந்த மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு “காலைல நேரா ஊத்துமலை போகணும். த்ரூ பஸ் 7 மணிக்கு.. தூங்கிட்டா எழுப்பிடு” என்று கூறி உறங்கச்சென்றேன்.

மறுநாள் காலை “என்னங்க ஆறரை மணி ஆகுது. வேலைக்கு போகப்போறீங்களா... இல்லையா... “ என்றவாறு என் மனைவி எழுப்ப திடுக்கிட்டு விழித்த என்னால் எவ்வளவோ முயற்சித்தும் கண்களைத் திறக்கமுடியவில்லை.

( தொடரும் )

6 comments:

Ananya Mahadevan said...

இன்னொரு பார்ட்டா? அது எப்போ வரும்? ரொம்பத்தான் அராஜகம் பண்றீங்க!சூப்பர் போங்க

லோகு said...
This comment has been removed by the author.
லோகு said...

ம்ம்ம்.. அடுத்த பாகத்தை எதிர்நோக்கும் ஆவல் அதிகரிக்கும் வகையில் இருக்கிறது.

vasu balaji said...

டென்ஷன் தாங்கல சாமி: செம ஃப்ளோ

பிரபாகர் said...

முடிக்கும்போது டென்ஷன அதிகமாக்கி தொடரும்னு போட்டிருக்கீங்க... நல்லாருக்கு ராஜா...

பிரபாகர்.

சிநேகிதன் அக்பர் said...

தல கலக்கலா போகுது அடுத்த பாகத்தை படிக்க போறேன்.