Monday, February 22, 2010

குழியில் தள்ளிய குட்டிச்சாத்தான்.... – பாகம் 4

கணேஷ் அலறியதால் அதிர்ச்சியடைந்த நான் ‘என்னப்பா, என்ன ஆச்சு..” என வினவ, “சார், உங்க சட்டை பேண்ட்ல்லாம் பாருங்க. முகமெல்லாம் ரத்தமா இருக்கு. என்னாச்சு சார்...” என்று அதிர்ச்சியுடன் கேட்ட பின் தான் என்னை கவனித்து பார்த்தேன் நான்.

பைக்கிலிருந்து கீழே விழுந்து தரையில் உருண்டதால் நான் அணிந்திருந்த முழுக்கை சட்டை இரண்டு முழங்கை அருகிலும் கிழிந்து கையெல்லாம் ஒரே சிராய்ப்புகள். சேஃப்டி ஷூ மற்றும் அன்று ஜீன்ஸ் பேண்ட் போட்டிருந்ததால் கால்களில் சிராய்ப்புகளோ, அடியோ படவில்லை. ஆனால் பேண்ட் முழுதும் காய்ந்த சேற்றின் புழுதி அப்பி விட்டது.

முகத்தை தடவிப்பார்த்தேன். கையில் பிசுபிசுப்பாக சூடான இரத்தம். எங்கே அடிபட்டு இரத்தம் வருகிறது என்றே தெரியவில்லை. இருட்டாக இருந்ததால் மொபைல் போன் வெளிச்சம் மூலம் பார்க்கலாம் என்று மேல் சட்டைப் பாக்கெட்டில் கைவிட்டால் பையில் மொபைல் இல்லை. வைத்திருந்த பணம், சில்லறை காசுகள், பேனா எதுவுமே இல்லை.

கணேஷ் அவனது பேண்ட் பாக்கெட்டில் மொபைலையும், பர்சையும் வைத்திருந்த்தால் அவை கீழே விழாமல் பத்திரமாக இருந்தன. அவனது மொபைல் வெளிச்சத்தில் தேடி அங்கங்கு கிடந்த எனது பணம், சில்லறைகளை எடுத்தான். மேலும் மொபைல் போனின் கவர் கழண்டு தனித்தனியாக சிதறி கிடந்த பேட்டரி, சிம் கார்டு, நம்பர் பட்டன் பகுதி எல்லாவற்றையும் தேடி எடுத்தோம்.

“சார் உங்க முகத்தை காமிங்க” என்று பரிசோதித்தவன் “சார், உங்க ரைட் கண்ணுக்கு மேல நடுநெத்தியில்தான் அடிப்பட்டிருக்குன்னு நினைக்கேன். அந்த இடத்துல இருந்துதான் ரத்தம் பொங்குது.” என்று கூறவும் எனது விரல்களால் தடவிப்பார்த்ததில் அந்த இடத்தில் வலித்தது. கர்ச்சீப்பை எடுத்து முகத்தை துடைத்துவிட்டு மேலும் இரத்தம் வராமல் தடுக்க நெற்றியில் வைத்து அழுத்தினேன்.

அதற்குள் கணேஷ் பைக்கை தூக்கி ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு சுற்றி வந்து பரிசோதித்தான். பைக்கின் ஹேண்ட்பாரில் இரண்டு பக்கமும் பொருத்தப்பட்டிருந்த ரியர் வியூ கண்ணாடிகள் உடைந்திருந்தன. மற்றபடி பெரிய பாதிப்புகள் இருப்பதாக தெரியவில்லை. ஸ்டார்ட் செய்து பார்த்தான். மக்கர் பண்ணாமல் உடனே ஸ்டார்ட் ஆகிவிட்டது.

ஊத்துமலைக்கு திரும்பி சென்றால் டாக்டர் இருப்பார் எனபது உறுதி இல்லை என்பதாலும், கம்பெனி ஆள்கள் யார் கண்ணிலாவது பட்டால் தேவையில்லாத பரபரப்பு ஏற்படும் என்பதாலும் நேராக ஆலங்குளமே சென்று விடலாம் என முடிவெடுத்தோம். கணேஷ் தொடர்ந்து வழி கூற பல சிறிய கிராமங்களை கடந்து வந்தோம். சில நேரம் தவறிப்போய் சில கிராமங்களின் உள்ளே சென்று விட கண்ணில் பட்டவர்களிடம் வழி விசாரித்து விசாரித்து ஒரு வழியாக ஆலங்குளத்தை அடைந்தோம்.

ஏற்கனவே கணேஷ் அவனது அப்பாவிற்கு விபத்து நடந்த விஷயத்தை செல்போன் மூலம் தெரியப்படுத்தியபோது அவர்கள் குடும்ப டாக்டரின் மருத்துவமனைக்கு நேராக வந்துவிடுமாறு கூறியிருந்ததால் நேராக மருத்துவமனை சென்றோம். எல்லா வசதிகளுடன் கூடிய பெரிய மருத்துவமனையாக இருந்தது. அவனது அப்பா ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் மருத்துவமனை வாசலில் அவருடன் ஒரு பெருங்கூட்டமே நின்றது. எங்கள் கோலத்தை கண்ட சிலர் ஓடி வந்து பைக்கை வாங்கி கொண்டு எங்களை மருத்துவமனை உள்ளே அழைத்து சென்றனர்.

என்னைப் பரிசோதித்த மருத்துவர் நெற்றியில் ஆழமாக வெட்டி இருப்பதால் கண்டிப்பாக தையல் போட வேண்டும் என்று கூறி விட்டார். நினைவு தெரிந்த நாள் முதல் தையல் போட்டதில்லை என்பதனாலும், முகத்தில் காயம் என்பதாலும் தயங்கிய என்னை கண்டித்த மருத்துவர் “இரண்டு இழை தையல்தான். காயமும் சீக்கிரம் ஆறிடும். தழும்பும் தெரியாது” என்று கூறி தையல் போட்டுவிட்டு நெற்றியை சுற்றி பெரிய கட்டும் கட்டிவிட்டார். தினமும் கட்டை பிரித்து புது கட்டு போட்டு கொள்ள அறிவுறுத்தினார்.

கணேஷையும் பரிசோதித்து சிறு சிறு சிராய்ப்புகள் மட்டும்தான். பயப்படும்படி ஒன்றும் இல்லை என்று கூற மருந்து, மாத்திரைகள் வாங்கி கொண்டு மருத்துவமனை விட்டு வெளியே வந்தோம்.

“கட்சி மீட்டிங்ல பேசிகிட்டிருக்கும் போது கீழே விழுந்துட்ட விபரம் சொல்லி கணேஷ் போன் செய்தான். என்னவோ ஏதோன்னு பதறிட்டேன். அதான் சொல்ல சொல்ல கேட்காம நிறைய பேரு வந்துட்டாங்க. தப்பா நினைச்சுகிடாதீங்க” என்ற கணேஷின் அப்பா “மணி 11 ஆகப்போகுது. பேசாம எங்க வீட்டுல தங்குங்க. காலையிலே மறுபடியும் வந்து டாக்டரை பார்த்துட்டு அப்புறம் ஊருக்கு போங்க” என்றார்.

“இல்லைங்க பரவாயில்லை. எப்படியும் கடைசி பஸ் போயிருக்காது. அதை பிடிச்சிட்டா போதும். வீட்டுக்கே போயிடுறேன்” என்றேன்.நேரமாகி விட்டதால் அவரும், கணேஷும் அவர்கள் வீட்டில் தங்கச்சொல்லி எவ்வளவோ வலியுறுத்தியும் நான் ஒத்துக்கொள்ளாததால், அவரது கட்சிகாரர்களிடம் “ரெண்டு பேரு பைக்கை கொண்டு போய் மெக்கானிக்ட்ட விட்டுடுங்க. இன்னும் ரெண்டு பேரு பஸ்ஸ்டாண்ட்டுக்கு வெரசாப் போய் பஸ் போயிடுச்சா இல்லைன்னு பாருங்க. போகலைன்னா நிறுத்திவைங்க. தம்பியை பஸ்ஸ்டாண்ட்ல கொண்டு போய் விடதுக்கு என்கூட ரெண்டு,மூணு பேர் இருங்க போதும். மத்தவங்கெல்லாம் கெளம்புங்க. நாளைக்கு காலைல மத்த விபரம் பேசிக்கிடுவோம்.” என்று வரிசையாக உத்தரவிட்டார்.

( தொடரும் )


3 comments:

சிநேகிதன் அக்பர் said...

கலக்கலா இருக்கு தல

கதையோட வேகமும், எழுத்து நடையும் அருமை

Ananya Mahadevan said...

சூப்பர் ஃப்ளோ. அருமை!சீக்கிரம் நெக்ஸ்டு சொல்லுங்க!

பிரபாகர் said...

ராஜா,

பயங்கரமான அனுபவம்தான் போலிருக்கு! ம்... அப்புறம்?

பிரபாகர்.