Wednesday, February 10, 2010

குழியில் தள்ளிய குட்டிச்சாத்தான்.... – பாகம் 2


”இல்லை சார், ஊத்துமலையிலிருந்து ஆலங்குளம் அரைமணி நேரம் கூட ஆகாது. அதனால இன்னைக்கு வீட்டுக்கு போயிடலாம்ன்னு பார்க்குறேன். என் பிரெண்டுகிட்ட பைக் கேட்டிருக்கேன். என் கூட பைக்ல ஆலங்குளம் வந்திடுங்க. அங்கிருந்து அம்பை அரைமணி நேரம்தான். இவங்க தேவர்குளம் போறதுக்குள்ளே நாம வீட்டுக்கு போயிடலாம்” என்றான் கணேஷ்.

இரவு நேரம் தெரியாத வழியில் பைக்கில் செல்லவா என யோசித்துக் கொண்டிருந்தபோது, “ஆமா சார், இன்னும் செக்சனுக்கு போய் ரிப்போர்ட் பண்ணிட்டு, ஸ்டோர்ல மெட்டீரியல் ரிட்டர்ன் போட்டுட்டு கெஸ்ட் ஹவுஸ் போறதுக்கு எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகிடும். அதனால நீங்க கணேஷ் கூட கிளம்பறதுதான் நல்லது. நாங்க எல்லாம் பார்த்துகிடுறோம். காலையிலே கூட நீங்க நேரா இங்க வந்திடுங்க.” என்றான் எனது டீமின் சப்லீடர் குமார்.

“இல்லைப்பா. பைக்ல ராத்திரி போகவான்னுதான் யோசிக்கிறேன்.” என்று கூறிய என்னை இடைமறித்த கணேஷ் “சார், ஆலங்குளம் வரை என்கூட வந்திட்டு அதுக்கப்புறம் பஸ்ல அம்பை போயிடுங்க. காலையிலும் ஆலங்குளம் வந்திட்டிங்கன்னா நாம ரெண்டு பேரும் பைக்ல சேர்ந்தே ஊத்துமலை வந்திடலாம்” என்றான்.

மாலை ஆறு மணி அளவில் வேலை இருப்பதால் வரமுடியாது என்பதை தெரியப்படுத்த வீட்டிற்கு போன் செய்த போது அன்று இரவு வீட்டில் டிபன் “இடியாப்பம்-சொதி” என்று சொன்னது வேறு அநியாயத்திற்கு மனதில் வந்து ஆசையை தூண்டியது. சரி வீட்டுக்கே போய்விடலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

“சார், நாங்க எல்லாத்தையும் ஓரம் கட்டுறதுக்குள்ள நீங்களும், கணேசும் முதல்ல கீழே போயிடுங்க. உடனே சுமோவில ஊத்துமலைல போய் இறங்கிட்டு வண்டியை திருப்பி அனுப்பிச்சுடுங்க“ என்ற குமாரிடம், “சரிப்பா. பார்த்து பத்திரம்”. என்று கூறிவிட்டு நானும், கணேசும் மெஷினை விட்டு கீழே இறங்கி சுமோவில் பஸ்ஸ்டாண்டு அருகேயிருந்த அவன் நண்பன் வீட்டருகே வந்து விட்டு வண்டியை திருப்பி அனுப்பி விட்டோம்.

கணேஷ் ஏற்கனவே அவன் நண்பனை அலைபேசியில் அழைத்து வந்து கொண்டிருக்கும் தகவலை சொல்லி விட்டதால் அவனும் மெயின்ரோட்டிலே பைக்கோடு நின்று கொண்டிருந்தான். “சார், ஒரு நிமிஷம்” என்றவாறு அவனருகே சென்ற கணேஷ் ஏதோ கிசுசிசுப்பாக பேசிக்கொண்டிருக்க, “சரி வயசுப்பசங்க.. ஏதோ பேசுகிறார்கள்” என நானும் அலைபேசியை எடுத்து அன்று இரவு வீட்டிற்கு வருவதை தெரியப்படுத்தியவாறு சிறிது தள்ளி வந்து நின்றேன்.

“சரிடே.சரிடே” என்றவாறு வந்த கணேஷ் “சார், வண்டியை நீங்களே எடுங்க. போகலாம்” என்றான். “ஏன்ப்பா நீ ஓட்டணும்ன்னா ஓட்டு. நான் உடகார்ந்திட்டு வரேன்” என்றதும் “இல்லை சார் என் சைசுக்கு பின்னாடி இருந்தாதான் வண்டிக்கு பேலன்ஸ் கிடைக்கும்” என்றான். ஆமாம் கணேஷ் கட்டையாய்,குண்டு குண்டுன்னு ஒரு ஷேப்பில்லாமல் இருப்பான்.

புதிய சிகப்பு நிற ஸ்பெலண்டர் பைக். ஸ்டார்ட் செய்து ஊத்துமலை ஊரை தாண்டும் முன் இருந்த பெட்ரோல் பங்கில் “பெட்ரோல் போட்டுட்டு போலாம்பா” என்றவாறு நிறுத்தினேன். “ வேண்டாம் சார். என் பிரெண்டுட்ட பைக்கு வாங்கும்போதே கேட்டுட்டேன். சாயந்திரம்தான் அவன் பெட்ரோல் போட்டனாம்” “சரிப்பா, இருந்தாலும் ராத்திரி நேரம் ஏன் ரிஸ்க் எடுக்கணும். ஒரு லிட்டர் மட்டுமாவது போட்டுகிடலாம். நாளைக்கு காலையில திரும்பி வரதுக்கும் சரியா இருக்கும்.” என கணேஷ் மறுக்க மறுக்க ஒரு லிட்டர் பெட்ரோலும் போட்டு கொண்டு கிளம்பியாயிற்று. வண்டி நல்ல கண்டிஷனோடு ஓட்ட அருமையாக இருந்தது. ஹெட்லைட் மட்டும் ஆக்ஸிலேட்டரை குறைக்கும் போது வெளிச்சம் மங்கியது.

“பரவாயில்லையேப்பா, உன் பிரெண்டு புது பைக்கை கொடுத்திருக்கானே.. ரொம்ப நல்லவனா இருப்பான் போலிருக்கே..உனக்கு எப்படி பழக்கம்... “ என்று கணேசிடம் கேட்டேன். “சார், என்கூட பாலிடெக்னிக் படிச்சான். நல்ல வசதி. ஒரே பிள்ளை. படிக்கும் போதே எல்லோருக்கும் தாராளமா செலவு செய்வான். தோட்டம்லாம் நிறைய இருக்கு. ரைஸ்மில் ஒண்ணும் இருக்கு. அதுவுளை பார்த்திட்டு ஊரிலே இருக்கான்.” என்றான்.

சோலைச்சேரி ஊருக்குள் நுழைந்தவுடன் பாதை இரண்டாக பிரியவும், “சார்,சார், லெஃப்ட்ல போங்க.அதான் ஷார்ட்டுன்னு என் பிரெண்டு சொன்னான்”. எனவும் அவன் சொன்ன பாதையில் வண்டியை திருப்பினேன். வெளிச்சமே இல்லாமல் குண்டும் குழியுமாக ரோடு மிகவும் மோசமாக இருந்தது கண்டு அதிர்ச்சியுற்ற நான் “என்ன கணேஷ், ரோடு இவ்வளவு மோசமா இருக்கு.. வெளிச்சமும் இல்லை. இன்னும் எவ்வளவு தூரம் இப்படி இருக்கும்” என்று கேட்டேன்.

“தெரியலயே சார்” என்று அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த நான் “என்னது இந்த பாதையைப் பத்தி தெரியாதா” என்றேன்.

“சார், தப்பா நினைச்சிக்காதீங்க. நானும் உங்களை மாதிரி திருநெல்வேலி வழியா வந்துதான் பழக்கம். இதுக்கு முன்னாடி இந்த பக்கம் வந்ததேயில்லை. இன்னைக்குதான் முதல் முதலா வர்றேன். அதான் பிரெண்டுகிட்டே வழி கேட்டுட்டு வந்தேன்”. என்று அவன் கூறிய பதில் எனக்கு மேலும் அதிர்ச்சியை தந்தது.

“ஏம்பா, இதை முன்னாடியே சொல்லியிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன். உனக்கு துணைக்கு ஆள் வேணும்கிறதுக்காக என்னையும் இழுத்துட்டு வந்துட்டியே” வாய் வரை வந்த வார்த்தையை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கி கொண்டு வண்டி ஆக்சிலேட்டரில் கோபத்தை காட்டினேன். என் கோபத்தை உணர்ந்த கணேஷும் எதுவுமே பேசவில்லை.

அம்மாவாசைக்கு இரண்டொரு நாட்களே இருந்ததால் கீற்றாய் கூட தேய்பிறை நிலவின் வெளிச்சம் தென்படவில்லை. நட்சத்திரங்கள் கூட தெரியாமல் மேகங்கள் அடர்ந்து கரிய போர்வை கொண்டு வானத்தை போர்த்தியது போல இருந்தது. வீடுகளே இல்லாத வெட்டவெளியில் கருப்பு வர்ணம் பூசியது போல இருட்டு அடர்த்தியாக அப்பியிருந்தது. ஏதேதோ பூச்சிகள் பைக் லைட் வெளிச்சத்தால் கவரப்பட்டு கண்ணை மறைத்து பறந்தன. எங்கள் பைக்கின் சன்னமான உறுமல் சத்தத்திற்கு எங்கெங்கோ ஓடும் பம்ப்செட்டு மோட்டார்கள் எதிர் இரைச்சல் ராகம் பாடின. ரோட்டோரம் வளர்ந்திருந்த வேலிக்கருவை மரநிழல்களின் அசைவில் ஏதேதோ உருவங்கள் தோன்றி அச்சமூட்டின.அந்த மரங்களில் வசிக்கும் பறவைகளில் சிலவும் கலைந்து சடசடவென பறந்தன.

பொட்டல் வெளியில் சில்லென்ற தென் பொதிகை மலைச்சாரல் காற்று அவ்வப்போது வேகமாக வீசி குளிரினால் உடலை சிலிர்த்து, நடுங்கச் செய்தது. தோட்டங்களில் காவலுக்கு கொண்டு வந்து விடப்பட்டிருந்த சில நாய்களும் அவ்வப்போது காலருகே ஓடிவந்து குரைத்துக் கொண்டே துரத்தவே இன்னும் ஆக்ஸிலேட்டரை முறுக்கி வேகத்தை கூட்டினேன்.

சிறிது தூரம் கரடுமுரடான பாதையில் சென்ற போது ஒரு தாம்போதி வந்தது. கிராமப்புறங்களில் மழைக்காலங்களில் மட்டும் தண்ணீர் வரும் ஓடைகள் சாலையை கடக்கும் இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினரால் கான்கிரீட் சிமெண்டினால் தரைமட்டத்தில் அமைக்கப்பட்ட பாலத்தை தாம்போதி என்று கூறுவார்கள். அந்த தாம்போதி எந்த காலத்தில் போடப்பட்டதோ தெரியவில்லை சிமெண்டெல்லாம் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

சென்ற வேகத்தில் சடாரென தரைப்பாலத்தில் இறங்கியதால் பின்னாலிருந்த கணேஷின் மொத்த எடையும் என் முதுகில் இறங்கி என்னை நிலைகுலையச் செய்தது. பைக்கின் சக்கரங்கள் வேறு பாலத்தில் இருந்த குழிகளில் கன்னாபின்னாவென்று விழுந்து குதித்தன. பிரேக்கை அழுத்தி வேகத்தை குறைக்க முயற்சி செய்ததால் ஹெட்லைட்டின் வெளிச்சமும் குறைய என் கண்முன்னே பாலத்தின் நடுவே தரையோடு தரையாக கருப்பாக ஒரு உருவமில்லாத உருவம் தெரிந்தது.

( தொடரும் )


18 comments:

பழமைபேசி said...

தொடருங்கள்....

துபாய் ராஜா said...

வரவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றி பழமை அண்ணா....

அ. நம்பி said...

இரவு நேரம்; சாலை; மோட்டார் சைக்கிள் பயணம்; பாலம்; `...ஏதோ ஓர் உருவம்'!

ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஓர் அனுபவம் எனக்கு ஏற்பட்டது.

அது... சரி, முதலில் உங்கள் தொடர் நிறைவடையட்டும்; பின்னர் நான் எழுதுகிறேன்.

Anonymous said...

"குழியில் தள்ளிய குட்டிச்சாத்தான்" அடுத்த பாகம் எப்போ?

vasu balaji said...

ம்ம்ம். ஆரம்பிச்சாச்சா டெர்ரர். ரைட்டு:) தொடருங்கள்.

துபாய் ராஜா said...

// அ. நம்பி said...
இரவு நேரம்; சாலை; மோட்டார் சைக்கிள் பயணம்; பாலம்; `...ஏதோ ஓர் உருவம்'!

ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஓர் அனுபவம் எனக்கு ஏற்பட்டது.

அது... சரி, முதலில் உங்கள் தொடர் நிறைவடையட்டும்; பின்னர் நான் எழுதுகிறேன்.//

அய்யா, உங்கள் வருகைக்கும், ஊக்க வார்த்தைகளுக்கும் நன்றிகள் பல.

மனிதவாழ்வில் நாம் சந்திக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் ஆயிரமாயிரம். உங்களை போன்ற பெரியோர்கள் அனுபவங்களையும் அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறோம்.

Unknown said...

எல்லாரும் ஓ.....டுங்க... அது வருது...

Asir said...

பேநா மூடி said...
எல்லாரும் ஓ.....டுங்க... அது வருது...


Repeat

சாந்தி மாரியப்பன் said...

ம்.. அப்புறம் என்னாச்சு?

சுவாரஸ்யமா இருக்கு.

லோகு said...

இந்த பாகத்தின் தொடக்கத்தில் வழவழன்னு ஏகப்பட்ட ஊர் பேர் வருவதால், கொஞ்சம் குழப்பமாத்தான் இருந்தது.

அதன் பின் கதை நல்லா போகுது. நல்ல சஸ்பென்ஸ் அடுத்த பாகத்துக்கு வெயிட்ட்டிங்.

அண்ணாமலையான் said...

ஃபுல் ஸ்பீட்ல போகுது..

ஆடுமாடு said...

ஆஹா, தொடர்கதையா? சூப்பரு எழுதுங்க...

பயங்கர சஸ்பென்ஸா இருக்கும் போலிருக்கே!

வாழ்த்துகள்.

துபாய் ராஜா said...

// nanrasitha said...
"குழியில் தள்ளிய குட்டிச்சாத்தான்" அடுத்த பாகம் எப்போ?//

கூடிய சீக்கிரம் நண்பரே...

Ananya Mahadevan said...

இன்னுமா அடுத்த பகுதி எழுதல? ரொம்ப மோசம் போங்க. சீக்கிரம் எழுதவும். அனாவஸ்யமா ஆட்டோ செலவை தவிர்க்கவும்.

Jawahar said...

ஆஹா, நல்லா கெளப்பராங்கய்யா பீதிய!

http://kgjawarlal.wordpress.com

Jerry Eshananda said...

துணைக்கு ஆள வச்சுகிட்டு தான் படிக்கணும் போல

Thenammai Lakshmanan said...

இந்த ஐவரையுமே படித்து இருக்கிறேன் ஜெரி நல்ல பகிர்வு அஷோக்கின் மீன் குழம்பு கவிதையும் இட்லி கவிதையும் படித்துப் பாருங்கள் மயங்கி விடுவீர்கள்
துபாய் ராஜாவின் என்னவளே பாலகுமாரின் உரையாடல் போட்டிக்கான அப்பா கவிதை கமலேஷின் இலக்கணக் கனவு கருணாரசுவை இப்பதான் படிக்கிறேன் அவருடைய செல்லமே இந்த ஐந்தும் நான் விருப்பிப் படித்தவை ஜெரி ரொம்ப நன்றி என் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் நிஜமாவே சிங்கங்கள்தான்...congrats Dubai Raaja

சிநேகிதன் அக்பர் said...

சாரி பார் த லேட்.

இனிமே லேட்டா ஊருக்கு கெளம்புவீங்க.